கண்மலரில் தன்னருளைக் காட்டும் கந்தன்!

நீயல்லால் தெய்வமில்லை! 20
ஆத்மார்த்திசில தருணங்கள் அழகானவை. அதைவிட மேலே ஒரு படி சென்று சொல்ல முனைந்தோமானால் சில தருணங்கள் உன்னதமானவை. மீண்டும் மீண்டும் நினைவின் திரையில் ஒளிபரப்புச் செய்து பார்த்துக் கொண்டே இருக்க விழையும் மனம். அப்படியான அற்புதத் தருணங்களை வார்த்தைகள் முழுவதுமாக விளங்கத் தராது.

எத்தனை சொற்களில் விவரித்தாலும் மழையின் மேன்மை குறித்துப் பெரிய காவியமே எழுதினாலும் ஒரு நிமிடம் மழையில் நனைவதற்கு ஈடாகுமா? அப்படியான அதே அனுபவத் தித்திப்புத்தான் பக்தி என்பதன் உள்ளே உறைவதும். நனைந்து திரும்புவோர்க்குத்தான் மழை. மற்றபடி வார்த்தைகள் ஈரமற்றவை. ஒருபொழுதும் மழையின் சிலிர்த்தலை உணரச்செய வார்த்தைகளால் முடியவே முடியாது.

பக்தியின் மேன்மை என்ன? இந்த உலகின் யதார்த் தங்கள் எல்லாவற்றின் பின்னாலும் கனிந்திருக்கக் கூடிய கருணையை தற்செயல்களின் பின்னே உணரக் கிடைக்கிற அபாரமான உள்ளுறை இன்பத்தை நாடுவோர்க்கு நசியாமல் கிடைத்துவிடுகிற நன்மை களின் பின்னேயெல்லாம் இருக்கக்கூடிய ஒழுங் கமைந்த துல்லியத்தை இன்னும் தெவ கடாட்சம் என்ற சொல்லின் முழு அர்த்தமும் விளங்குவதற்கு பிறவிகள் பல கிடைத்தாலும் போதாது என்கிற பேருண்மையின் சின்னஞ்சிறு துளியினும் சிறு துளியாம் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்தை என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு குழந்தை எதனால் எதைக் கண்டு எதன் நிமித்தம் புன்னகைக்கிறது என்பதை எவரால் விளக்கித் தர முடியும்? குழந்தையும் தெவமும் ஒன்றத்தானே அந்தப் புன்னகை? குழந்தையும் தெவமும் ஒன்று என்றாகையில் அந்தப் புன்னகை யின் வீர்யம் புரிபடுகிறதல்லவா? ‘தெவம் மனுஷ்ய ரூபேண’ என்பதைக் குழந்தைகளின் வருகையை விடவா வேறொன்று உணர்த்திடப்போகிறது?

முருகன் இஷ்ட தெவம். கேட்டவர்க்கெல்லாம் கேட்டவற்றை அள்ளித் தருகிற வள்ளல். வாழ்வின் அத்தனை தருணங்களிலும் தன்னை நிரப்பித் தருகிற உயிர்க் காற்றான முழுநிறை முதல்வன். முருகனுக்கும் பிற தெவங்களெல்லாவற்றுக்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. என் அறிதலுக்கு எட்டிய வரையில் முருகன் என்கிற முழு முதல்வனை மட்டும் லேசுபாசா வணங்கித் திரும்ப முடியாது. அவனை நினைத்தபொழுது துவங்கும் மாபெரிய கொண்டாட்டம். அவனை நினைக்க நினைக்க அந்த நினைப்பே பெருமரமா வளர்ந்தோங்கும். அவனை நினைப்பதே பெருவரமா மனசெல்லாம் மலர்ந்து குலுங்கும். ‘முருகா’ என்ற சொல்லைக் கூடச்சாதாரணமாச் சொல்லிட முடிவதில்லை. உள்ளே ஆழத்தில் தன்னை உணர்ந்து சுயத்தின் வேரிலிருந்து ஒரு பிடி உயிரள்ளி அழைத்தால்தான் அந்தப் பெயர்ச் சொல்லை உச்சரிக்கவே முடியும். அது உயிர்ச்சொல். உள்ளார்ந்த வேர்ச்சொல். நம் யாவர்க்குமான உளங் கழுவும் நீர்ச்சொல். உலகின் ஆகச்சிறந்த திருச்சொல். அதுவே முருகன் நாம கரணம்.

திருச்செந்தூர் வெறும் இடமல்ல. மேலும், அது ஒரு தலமல்ல... மாயங்களுக்கெல்லாம் மகராஜனாம் முருகன் நித்ய சக்கரவர்த்தியா வீற்றிருக்கும் அரண் மனை. அவனுடைய அரச பரிபாலனத்தில் கடலும் நிலமும் கலந்து நிறைகிற இடம். அண்ட சராசரங் களையும் தன் கண்மலர் கொண்டு நோக்கி அருள்கிற மகாவள்ளல் முருகப்பெருமான். அவனை நினைக்கை யில் மனமெல்லாம் உருகும். கண்கள் தானாக் கசியும். ஆனந்த மாரியென்று விழிநீர் உகுத்துப் பரவசத்தில் ஆழ்ந்து திரும்புகையில் மனமும் உடலும் வேறாகிப் புத்தம் புதிதாப் பிறந்தாற் போன்ற உணர்வெழுச்சி மிஞ்சும். உலகின் வேறெந்த தலமும் வாத்துத் தராத பேருவகை முருக தரிசனம் விளை வித்துத் தரும். அப்படி ஒரு ராஜ கோலமும் கனிவும் மனமெல்லாம் கசியும் உருக்கமும் நிறைதலும் எல்லா வற்றுக்கும் மேலான பரவசமும் எல்லோர்க்கும் பெயும் மழையா முருகன் அள்ளித் தருகிற உவகையை சென்று பார்த்தால் தெரியும்.

திருச்செந்தூரானை நினைத்தாலே பலம். முருகன் பேசும் தெவம். அவனை எண்ணி எடுத்து வைத்த ஒரு அடியும் பிசகியதில்லை. அருள்மழையில் நனைந் தோர்க்குத் துன்பம் சிறிதும் இல்லை. அப்படியான செந்தூரப்பனைப் போற்றியும் வாழ்த்தியும் எக்கச்சக்க மான பாடல்கள் புனையப்பட்டிருந்தாலும் தேவர் தயாரித்த, ‘தெவம்’ திரைப்படத்துக்காக இசைமேதை குன்னக்குடி வைத்யநாதன் இசையமைத்த, ‘திருச் செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங் கம்’ என்ற பாடல் எல்லாவற்றிலும் உயர்ந்தோங்கி ஒலிக்கிறது. ஆயிரம் பூச்சொரிந்து பூஜிக்கிற நேரத்தில் அவற்றில் ஒன்று மட்டும் தெவ விக்ரகத்தின் தோளில் அமர்ந்து கொள்ளுமல்லவா? அப்படியான அற்புதத் தோன்றலாகவே இந்தப் பாடலைப் பாடினர் சீர்காழி கோவிந்தராஜனும் டி.எம்.சவுந்தரராஜனும்.

‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் (திருச்செந்தூர்)

அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம்...அன்பர் திருநாள் காணுமிடம்... (திருச்செந்தூரின்...)

எத்தனை பலமான குரல்கள்? எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடிய திறனும் புகழும் கொண்ட இருவர் இந்தப் பாடலைப் பாடினர்? ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறாற்போன்ற உக்கிரம் ஒருபுறம் என் றால் ஒப்பிடவே முடியாத வல்லமை மிகுந்த அந்தக் குரல்கள் இரண்டையும் ஒருங்கமைத்து ஒரு பாடலைப் பாடச்செவதென்ன லேசுபட்ட காரியமா? டி.எம்.சவுந்தர்ராஜனின் குரல் வெண்கலத்தில் செத மணி போல் ஒலித்தது என்று சொன்னால் சீர்காழியாரின் குரலோ மத்தளத்தின் மத்திமத்தில் தோன்றுகிற பல மான இசைக்கு ஒப்பாக எழுந்தது என்று சொல்லலாம்.

அப்படியான குரல்கள் சேர்ந்தொலிக்கையில் ஒன்று மற்றதை அழுத்திக் கட்டுப்படுத்தி விட்டால் பாடல் கெடும். இரண்டில் ஒரு குரல் சற்றே குன்றி யொலித்துவிட்டால் பாட்டின் தொனி பிசகும். தண்ட வாளத்தின் இரண்டு பாளங்களின் மீதும் ஒருமித்துப் பயணிக்கிற ரயில் மாதிரி அந்தப் பாடல் இருந்தாக வேண்டும். குரல்கள் இரண்டும் சிறிதும் பிசிறாத தண்டவாளங்களாகவே மாறின என்பதுதான் இசையின் சாகசம். முருகனின் காருண்யமும் அதுவே.

‘கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்குமுகம் ஒன்று

ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று நோ நொடிகள் தீர்த்து வைக்கும்வண்ண முகம் ஒன்று

நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று....ஆறுமுகம் இன்று... (திருச்செந்தூரின்...)

எத்தனை யுகமோ அத்தனை முகம் முருகனுக்கு. அவனன்றி ஏது இவ்வுலகு? திரைப்பாடலுக்கு உண் டான நகாசு வேலைகள் ஜரிகைப் புனைதல்கள் எதுவு மின்றி செந்தூரில் என்ன காட்சியோ, எது காணக்கிட் டுமோ அதை அப்படியே படமாக்கியது இந்தப் பாட்டின் மேன்மை என்றால் அதையே அப்படியே வரிகளா வார்த்தைகளா கவியரசு கண்ணதாசன் வடித்தெடுத் தது அவரது மேதமை. குரலரசும் தொனியரசுமா அத னைப் பெற்றுக்கொண்டு பாடிய பாடகர்களின் ஒப்புக் கொடுத்தல் இன்னுமோர் ரசம் என்றால் இந்தப் பாட லுக்குத் தன் உயிர்த் துளிகளைத் தூவி யெடுத்து இசை யமைத்த குன்னக்குடி வைத்யநாதனின் இசை வல்லமை மெச்சத்தக்க மகத்துவம். மொத்தத்தில் முருகன் அருளித் தந்த இசைக் கதம்பம் இந்தப் பாடல்.

‘பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா வருவாய் அருள் தருவாய் முருகா’

இன்னும் ஆயிரம் பக்கங்களுக்குப் பேசிக் கொண்டே செல்லலாம். முருகப் பெருமானின் பெருமைகளை எடுத்தோதத் தமிழின் மொத்தச்சொற்களும் போதாது. கண்ணதாசனின் முருக சரணத் தின் மகத்துவத்தை விளக்கும் ஒரே ஒரு பதத்தைப் பிறவியெல்லாம் வியந்துகொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.

‘கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா’

இந்த ஒரு வரியை அழுத்தமாய் மனதில் இருத்துங்கள். இப்போது முருகனை, தமிழ் முதல்வனை அவன் திருமுகத்தை எண்ணுங்கள். மனத்திரையில் வந்துதிக்கும் அவன் முகத்தில் காணுங்கள். கண்மலர் தன்னருள் பெறுவோர்க்குக் குறையொன்றுமில்லை. திருச்செந்தூரில் அரசாளும் முருகா!

(நிறைந்தது)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :