தவமா? சத்சங்கமா?

ஆன்மிகக் கதை
கே.நிருபமாஅயோத்தியை ஆட்சி செய்த தசரதனின் அரசவையில் வீற்றிருந்த வசிஷ்டருக்கும் விஸ்வாமித் திரருக்கும் ஒரு நாள் தவத்தின் வலிமை சிறந்ததா? சத்சங்கத்தின் வலிமை சிறந்ததா? என்பதில் வாக்கு வாதம் உண்டாயிற்று. ‘தவத்தின் வலிமையே சிறந் தது’ என்று விஸ்வாமித்திரரும், ‘சத்சங்கத்தின் வலிமையே சிறந்தது’ என்று வசிஷ்டரும் வாதிட்டனர்.

அவையில் குழுமியிருந்தவர்களில் சிலர் தவம்தான் சிறந்தது என்றும் இன்னும் சிலர் சத்சங்கமே சிறந்தது என்றும் தங்கள் கருத்தைக் கூறினர். ஆனால், இறுதியான விடை கிடைக்காததால் தசரதன், நீங்கள் இருவரும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவனிடமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டு வர வேண்டும்" என்று கூறினார். அவ்வாறே இரு வரும் முதலில் பிரம்ம லோகம் சென்று நான்முகனிடம் முறை யிட்டனர். அதைக் கேட்டு, நான் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பதால் எனக்கு நேரமில்லை! நீங்கள் மஹா விஷ்ணுவை அணுகினால் உங்களுக்கு விடை கிடைக்கலாம்" என்று கூறி அனுப்பினார்.

அங்கிருந்து வைகுண்டம் சென்ற அவர்கள், மகா விஷ்ணுவிடம் தங்கள் பிரச்னையைக் கூறினர். நான் நிரந்தரமாக நடக்க வேண்டிய காத்தல் தொழிலில் ஈடுபட்டிருப்பதால் நீங்கள் சிவபெருமானிடம் சென்று விடை கேளுங்கள்" என்று கூறி விட்டார். கயிலாயத்தில் சிவபெருமான் தவத்தில் ஆழ்ந்திருந் தார். தவம் கலைந்து எழுந்த ஈசன், அவர்களின் பிரச்னையைக் கேட்டு, நான் தவம் செய்து கொண்டி ருப்பதால் உங்கள் பிரச்னைக்கு விடையளிக்க ஆதிசேஷனே சரி. பாதாள லோகத்துக்குச் சென்று அவரிடம் கூறி விடை பெறுங்கள்" என்றார்.

அங்கிருந்து பாதாளம் சென்ற இரு முனிவர்களும் சேஷ பகவானிடம் தங்கள் கோரிக்கையை விண்ணப் பித்தனர். அவர், ஆதியிலிருந்து இன்று வரை நானே பூமியைத் தலையில் தாங்கிக்கொண்டிருக்கிறேன். எனது கஷ்டத்தை யாரிடம் சொல்வேன்? அதனால் என் தலைமேல் இருக்கும் இந்த பூமி பாரத்தை உங்களிருவரில் யாராவது ஒருவரால் இறக்கி வைக்க முடியுமா?" என்று கேட்டார்.

அதைக் கேட்ட விஸ்வாமித்திரர், நான் இத்தனைக் காலம் செய்த தவத்துக்கு ஏதேனும் பலன் இருக்கு மானால் ஆதிசேஷன் தலையை அழுத்திக் கொண் டிருக்கும் பூமி பாரம் அவரது தலையை விட்டு மேலே போகட்டும்!" என்று கூறி, துளசி இலை மீது நீர் வார்த்துத் தர்ப்பணம் செய்தார். பூமி எள்ளளவும் அசையவில்லை! விஸ்வாமித்திரர் மௌனித்தார்.

அதையடுத்து வசிஷ்டர், இன்று வரையில் நான் செய்த சத்சங்கத்துக்கு ஏதேனும் பலன் இருக்குமானால் ஆதிசேஷனின் தலையை விட்டு இந்த பூமி பாரம் மேலே போகட்டும்!" என்று கூறி, அவரும் துளசி இலையில் நீர் வார்த்துத் தர்ப்பணம் செய்தார். உடனே பூமி ஆதிசேஷனின் தலையிலிருந்து சற்றே மேலேறி நின்றது! உடனே விஸ்வாமித்திரரை நோக்கி ஆதிசேஷன், உங்கள் கேள்விக்கு விடை கண்ணெதிரிலேயே தெரிவதால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை!" என்றார். வசிஷ்டரின் சத்சங்கத்தின் பலனால் மேலே உயர்ந்த பூமி விஸ்வாமித்திரரின் தவ வலிமைக்கு அசைந்து கொடுக்கவில்லை! விஸ்வாமித்திரர் வெட்கித் தலைகுனிந்தார்.

இறுதியாக இரு முனிவர்களும் தவம், சத்சங்கம் இரண்டுமே நல்ல பலன் கொடுப்பவைதான். ஆனால், எல்லோருக்கும் தவம் செய சாத்தியப் படாது. ஆனால், சத்சங்கம் அப்படியல்ல. அது எல்லோராலும் சுலபமாக அடையக்கூடியது. அதனால், சத்சங்கமே உயர்ந்தது எனும் முடிவுக்கு வந்தனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :