அபயம் அருளும் ஸ்ரீ யோக ராமர்!

தரிசனம்
ராமசுப்புபெருமாள் என்றால் ஸ்ரீராமன்தான். பெரிய பெருமாள் என்றால் அது ஸ்ரீரங்கநாதர். அழைத்தால் மட்டுமே வருபவன் ஸ்ரீகிருஷ்ணன். ஆனால், நினைத்தாலே வருபவன் ஸ்ரீராமன். ஸ்ரீராமனின் அழகு எந்தத் தெய்வத்துக்கும் இல்லை. தாமரை மலரைவிட பன்மடங்கு பொலிவும், முகத்தில் சூரியனைப் போன்ற பிரகாச ஒளியும் அவனுக்கு மட்டுமே உண்டு.

பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் அந்த ஸ்ரீராமனின் அழகு, உலகின் பேரழகான அத்தனை அழகும் அந்த கோதண்டராமனிடத்திலே ஒன்றாய் திரண்டு உள்ளது. மனித வாழ்க்கையில் வந்து போகும் துன்பங்களும் துயரங்களும் ஏராளம். இந்தத் துன்பத்திலிருந்து விடுதலை பெற வேண்டு மென்றால் அதற்கு ஒரே வழி ஸ்ரீராமன் பெயரை உச்சரித்துக்கொண்டே, தியானம் செய்வது மட்டுமே.

சுக்ரீவனுக்கு வாலியிடமிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்து, அவனுக்கு அரசாட்சி அமைத்துத் தந்து, துன்பத்திலிருந்து அவனை மீட்டெடுத்தவன் ஸ்ரீராமன். தெரியாமல் தவறு செய்துவிட்டாள் அகலிகை, அதனால் முனி சாபத்துக்கு ஆளாகி, கல்லாகிப் போனாள். அவளை மீண்டும் பெண்ணாய் பூமிக்குக் கொண்டு வந்தவர் ஸ்ரீராமன். தான் ருசி பார்த்த எச்சில் பழத்தை சுவைக்கக் கொடுத்த ‘சபரிக்கு’ மோட்சத்தைக் கொடுத்தவர் ஸ்ரீராமர். விபீஷணனை இலங்காபுரிக்கு அரசானாக்கியவர் ஸ்ரீராமர். இதுபோன்ற பெருமைகளை உடைய ஸ்ரீராமனை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் பீஷ்மர் இப்படிக் குறிப்பிடுகிறார்.

‘ஆபாத மப ஹர்த்தாரம் தாதரம் ஸர்வஸம்பதாம் லோகிபிராம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்’

இவ்வளவு சிறப்புப் பெற்ற ஸ்ரீராமர் லங்காபுரியிலே ராவணனை வதம் செய்துவிட்டு தனது சொந்த நாடான அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடனே சீதா பிராட்டி, லட்சுமணன், ஆஞ்சனேய ரும் வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகள், நீரோடும் நதிகள், குளமும், வளமும் நிறைந்த ‘தீர்க்காஜமலை’ என்ற இடத்தை அடைந்தனர். அங்கே சுகப்பிரம்ம மகரிஷியை சந்தித்தனர். கருணையே வடிவான ஸ்ரீராமனிடம் சுகப்பிரம்ம மகரிஷி, ‘இந்த சுகமான மலைப் பிரதேசத்தில் ஒருநாள் தங்கி ஓய்வெடுத்துப் போகலாமே’ என்று கேட்டுக் கொண்டார்.

மகரிஷியின் விருப்பப்படி ஸ்ரீராமபிரான் தனது மனைவி சீதா தேவி, லட்சுமணன், ஆஞ்சனேயர் உட்பட அனைவரும் ஓர் இரவு அங்கே தங்கிவிட்டுச் சென்றனர். போகும்போது, ‘நாம் இங்கு தங்கியிருந்து பெற்ற சுகத்தையும், பேரின்பத்தையும் இந்த மலையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள மக்கள் இதே சுகத்தை அனுபவித்து நலமுடன் வாழக்கடவது’ என வாழ்த்திச் சென்றனர்.

ஸ்ரீராமர் தங்கிய அந்த இடம்தான் இன்று திருவண்ணாமலையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் நெடுங்குன்றம் என்ற கிராமமாகும். 1,400 ஆண்டுகளைக் கடந்த இந்த இடத்தில் அகன்ற ராஜ வீதியில், மேற்குப் புறமாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரமாண்டமான கோபுரத்துடனும், உயர மான மதில் சுவர்களுடனும், பஞ்ச பிராகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. 86,944 சதுர அடி பரப்பில், வடக்கு-தெற்காக 209 அடி அகலமும், கிழக்கு-மேற்காக 416 அடி நீளமும் கொண்ட இந்த மாபெரும் ஆலயத்தை செஞ்சி மன்னன் அச்சுத ராமபத்ர நாயக்கர் என்பவர் கட்டியதாக வரலாறு.

ஆலயத்தைச் சுற்றி வடக்கு, தெற்கு, மாடவீதி, ராஜ வீதி என்று தேரோடுவதற்கு வசதியாக அகலமாக அமைந்துள்ளது. இது தவிர, கோயிலில் அர்த்த மண்டபம், வசந்த மண்டபம், நூறுகால் மண்டபம், திருச்சுற்று மண்டபம் என்று பல மண்டபங்கள் உள்ளன. கருவறையில் கையில் கோதண்டம் இல்லாமல், சின் முத்திரையுடன், சாந்தமாக ஸ்ரீ யோக நிலை நித்திரையில் அமர்ந்த கோலத்துடன் ஸ்ரீராமர் காட்சியளிக்கிறார். சீதா பிராட்டி வலது கையில் தாமரை மலரையும், இடது கையை திருவடி சரணத்தை உணர்த்தும் அபய ஹஸ்தமாக அண்ணலின் இடப்புறம் அமர்ந்திருக்கிறாள். வலப்புறத்தில் தம்பி லட்சுமணன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். எங்கும் காணக் கிடைக்காத அற்புதக் காட்சியாக ஸ்ரீராமன் எதிரில் ஸ்ரீ அனுமன் ஏட்டுச் சுவடியைக் கையில் ஏந்தியபடி தரையில் அமர்ந்து வேதத்தைப் படிக்கும் அபூர்வ நிலையில் காட்சி தருகிறார்.

இவை தவிர, ஆழ்வார்களின் திருவுருவம் கற்சிலைகளாவும், திருமாலின் பத்து அவதாரங்கள், நுணுக்கமாகவும், அருமையாகவும் நிலைப்படுத்தப் பட்டுள்ளன.

இந்தக் கோயிலில் ஆடி மாத பவித்ரோத்ஸவம், காணும் பொங்கலன்று ஸ்ரீராமர் மலையைச் சுற்றி வரும் கிரிவல உத்ஸவம், வைகாசி மாதத்தில் கருட ஸேவை ஆகியவை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஸ்ரீராம நவமி திருவிழா பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று பெருமாள் திருக்கல்யாண வைபவம், திருத்தேர் ஊர்வலம், தீர்த்தவாரி என்ற மூன்று நிகழ்ச்சிகள் மனதை பகவான்பால் இழுத்து பக்தி மார்க்கத்தில் கொண்டு சென்றுவிடும்.

மூலவருக்கு பால், தயிர், மஞ்சள் பொடி, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம், திருமஞ்சனம், நெய் தீபம் ஏற்றி, துளசி மாலை சாத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி பலன் பெறுகின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலில் நடைபெறும் பிரம்மோத்ஸவத்தில் கலந்துகொண்டு தீர்த்தவாரி திருநாளில் மாவிளக்கேற்றி ஸ்ரீ யோக ராமரை வழிபட்டால் நோய்கள் தீரும்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஸ்ரீராமரிடம், குழந்தையின் எடைக்கு எடை நாணயங்கள், வெல்லம், பழங்கள், சர்க்கரை ஆகியவற்றை துலாபாரமிடுவதாக வேண்டிக்கொண்டால் நிச்சயம் குழந்தைப் பேறு கிடைக்கும். இக்கோயில் ஸ்ரீயோக ராமபிரானை வழிபட கணவன், மனைவி உறவு மேம்படும், நண்பர்களின் நட்பு பலமாகும். சகோதர ஒற்றுமை மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீராம நவமியன்று ஸ்ரீராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு, ஸ்ரீராம நாமத்தை நாள் முழுவதும் ஜபித்து உபவாசம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். அன்றைய தினம் வீட்டில் ஸ்ரீராமர் பூஜை செய்து நீர் மோர், பானகம் நிவேதனம் செய்து ஸ்ரீராமரை வழிபட வேண்டும். ஸ்ரீராம நவமியன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் செய்த பாவங்கள் நீங்கும். பாவ விமோசனம் கிட்டும்.

‘ஸ்ரீராமா’ என்றால் பாவம் தொலைகிறது. ‘சீதா ராமா’ என்றால் செல்வம் சேருகிறது.

‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!’ என்ற மஹா மந்திரத்தை ஜபித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :