கேள்வி நேரம்


ஞானகுருஅக்னி நட்சத்திர நாட்களில் வெயில் கடுமையாக இருப்பது ஏன்? இந்நாட்களில் செய்யவேண்டிய எளிய வழிபாடுகள் என்ன?- என். மல்லிகா, சிவகாசி

பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் அக்னி நட்சத்திரமாக மொத்தம் 21 நாட்கள் வருகின்றன. பூமி சூரியனுக்கு மிக அருகில் வருவதால் வெப்பம் மிகக் கடுமையாக இருக்கிறது. ஏப்ரல் 5ம் நாள் தொடங்கி, 21 நாட்கள் அக்னி நட்சத்திர தோஷ நாட்களாகக் கணக்கிடப்படுகின்றன. இதில் முதல் ஏழு தினங்களில் அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும். அடுத்த ஏழு தினங்கள் அதிக அளவில் தெரியும். கடைசி ஏழு நாட்களில் அதிக அளவில் வெப்பம் தெரியும்.

தை மாதம் 1ந் தேதி முதல் சூரிய பகவான் தனது பயணத்தை வடக்கு திசை நோக்கித் தொடங்கி சித்திரை 1ந்தேதி பூமிக்கு மிக அருகில் வந்து, ஆனி மாத கடைசியில் வடகோடி எல்லையை அடைந்து விடுவார். இந்த காலகட்டத்தில் முடிந்தவரை வெளியில் பயணம் செய்யாமல் இருப்பது நல்லது.

அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள் இருப்பதால் ஏழு நாட்கள் வழிபாடு செய்வது நல்லது. இந்நாட்களில்,‘ஓம் ருத்ரநேத்ராய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தந்நோ அக்னிஹ் ப்ரசோதயாத்’என்ற அக்னி தேவனுடைய காயத்ரியை தினமும் 21 முறை கூறலாம். ஆலயங்களில் நடைபெறும் கத்திரி வெயில் கால அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ளலாம்.

வீட்டில் திருஷ்டி ஏற்பட்டிருந்தால் அதற்கான அறிகுறிகள் என்ன? அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் எது?- கே.செந்தாமரை, நெல்லை

மனிதர்களது பார்வையால் திருஷ்டி ஏற்பட்டு, அதனால் கெடு பலன்கள் வந்துவிட்டது என்று கூறுவது ஏற்புடையது அல்ல. நம்முடைய மனம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். புதிதாக வீடு கட்டிக் குடிபுகுந்தவர்கள், வீடு கட்ட இயலாதவன் வந்து சென்றதும், தற்செயலாக பூனை குதித்ததால் மாடியில் உள்ள அறை பல்பு உடைந்துவிட்டால் கண் திருஷ்டி ஆகிவிட்டது என்றும், தனக்குப் பிறந்த குழந்தையைப் பிள்ளைப்பேறு இல்லாத பெண் வந்து நலம் விசாரித்து, கொஞ்சி விட்டுப்போனதும் இரவு ஜுரம் வந்துவிட, அவள் தூக்கி வைத்திருந்ததால்தான் இப்படி ஆனது என்று வீண் பழி போடுவது இயல்பாக நடப்பதுதான். கண் திருஷ்டி என்பது ஒருவகை மனக்கலக்கம் மட்டுமே.

வீட்டு வாசலில் பச்சைக் கற்பூரத்தை நீரில் கரைத்துத் தெளிப்பது நலம் தரும். வீடு முழுவதும் குங்கிலியப் புகை போடலாம். வீட்டுக்கு வந்தவரிடம், உடனடியாக தண்ணீர், காபி கொடுத்து உபசரித்து விட்டால் கண் திருஷ்டி வராது. துளசிச் செடியை தோட்டத்து முகப்பில் வைக்க, கண் திருஷ்டி ஏற்படாது என்பது வழக்கத்தில் உள்ளது.

ஒரு பெண்ணுக்கு வரன் (ஆண் மகன்) அமையும் திசையை கிரஹ நிலைகளால் அறிந்துகொள்ள முடியுமா?- சி.கார்த்திகேயன், சென்னை

திருமணம் செய்வதற்காக ஆண்-பெண் இருபாலரின் ஜாதகங்களை இணைக்க முற்படுகிற போது, தசவிதப் பொருத்தம் என்ற பத்து பொருத்தங் களைப் பார்ப்பது வழக்கம். அத்துடன் கிரஹங்களின் சாதக நிலை, நடக்கின்ற தசை வெவ்வேறாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஜோதிட சாஸ்திரத்தில் வரன் அமையும் திசையை மன திருப்திக்காகப் பொருத்தம் பார்ப்பவர்கள் கூறுவதுண்டு. காக்காய் உட்கார, பனம்பழம் விழுந்த கதையாக ஒரு ஜோதிடர் சொன்னது நடந்துவிடுவதால் அதையே பிடித்துக் கொண்டு மற்ற ஜோதிடர்களிடம் சொல்லும்படி வற்புறுத்தும் பழக்கம் சில பேரிடையே இருக்கிறது.

பெண்ணின் கிரஹ நிலைகளால் அவளது கணவரின் எதிர்கால இணைவு வாழ்க்கை, குழந்தைப் பேறு, குடும்ப ஒற்றுமை இவற்றைக் கூற முடியும். வரன் பார்ப்பவர்களைத் திருப்திபடுத்துவதற்காக சொல்லப்படுபவை நடந்துவிடும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. வரன் அமையும் திசையைச் சொல்வது பொருந்தாத விஷயம்.

கோயில்களில் சனி பகவான் தனித்திருக்கும்போது தென்முகமாகவும், நவநாயகருடன் வீற்றிருக்கும் போது மேற்கு முகமாகவும் இருப்பது ஏன்?- கா.சண்முகவேல், திருத்தணி

சனி பகவானை அவர் ஸ்தான இலக்கணப்படி பார்த்து வழிபடுவதற்கு, ‘பிரதிஷ்டா விதி’ என்று ஒரு சாஸ்திர முறை இருக்கிறது. இன்றுவரை இத்தகவல் பலருக்கும் தெரியாது. சிவாகம பிரதிஷ்டா விதியில், சனி பகவான் மேற்கு முகமாக நவக்ரஹ மண்டலத்தோடு ஒன்பது பேருடன் காட்சி தருவார். தனியாக இருக்கும்போது சனீஸ்வரன் தன்னுடைய அதிதேவதையான எமதர்மராஜனை பார்த்தவாறு அவரது திக்கான தெற்கு திசையைப் பார்த்து நிற்பார். மேலும், திருவாய்மூர் வாய்மூர்நாத சுவாமி கோயிலில் நவக் கிரஹங்களை ஒரே வரிசையாக மூலஸ்தான சிவனைக் காணும்படி பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த விதி ஆலய வரலாற்றுடன் தொடர்புடையது. திருநள்ளாறில் கிழக்கு பார்வையில் கோஷ்ட தேவதையாகக் காட்சி தருவார். ஆகம விதி, வைதீகப் பிரதிஷ்டை, ஆலய வரலாற்றுடன் ஒட்டிய பிரதிஷ்டை என்ற விதிகளால் இது வேறுபடுகிறது. சனி பகவான் எப்போதும் மேற்கு நோக்கியபடி நின்று நமக்கு ஆசி வழங்குவதே புராணங்களில் உள்ள தகவல்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :