சுயம்புவாய் அருளும் காரஞ்சி ஆஞ்சனேயர்!

வெளிமாநிலக் கோயில்
பா.கண்ணன்பெங்களூருவுக்குத் தென்பக்க வாயிலாக விளங்கும் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது பசவனா, பஸவப்பா என்றழைக்கப்படும் நந்திகேஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலமும் பசவனகுடி அல்லது பசவங்குடி எனும் பெயராலேயே அறியப்படுகிறது.

தொல்பொருள் ஆராச்சியாளர்களின் பார் வையில் மலைப் பாறைகளுக்கு மத்தியில் ஒரு பெரிய ஏரி இருந்ததாகக் கண்டறியப் பட்டு அவ்விடம், ‘காரஞ்சி’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. பசவனகுடி குன்றுக்குச் சற்றுத் தொலைவில் நகரின் புராதனமிக்க, பிரசித்திப் பெற்ற, ‘காரஞ்சி சுயம்பு வடிவ அனுமன்’ ஆலயம் அமைந்துள்ளது.

இந்த வீரபஜ்ரங்கபலி அனுமன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதற்கு ஒரு சுவாரசியமான பின்னணி வரலாறு உண்டு. இரிய கெம்பெ கவுடா என்பவர் விஜயநகரப் பேரரசின் கீழ் யெலயங்கா நாடு எனும் பிரதேசத்தை ஆண்டு வந்த குறுநில மன்னர். இவர் நன்கு படித்த வராகவும், ஆளுமைப் பெற்றவராகவும், பெரும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.

சிறு வயதிலிருந்தே ஹம்பி போன்றதொரு நகரை உருவாக்கக்கனவு கண்டார். தனது விருப்பத்தை பேரரசர் அச்சுதராயரிடம் தெரிவித்து அவரது சம்மதத்தையும் பெற்றார். ஆண்டுக்கு முப்பதாயிரம் வராகன் வருவா ஈட்டும் பன்னிரெண்டு கிராமங்களை அவற்றின் நிர்வாகச் செலவுக்கு மானியமாக மன்னர் அளித்தார்.

ஒரு நாள் மனச்சாந்தியுடன் கெம்பெ கவுடா உறங்கும்போது அவரது கனவில் தோன்றிய குல தெவம் வீருபொம் மக்கா (நாராயணி) அவர் தேர்ந்தெடுக்க வேண்டிய இடம், அங்கு நிகழ விருக்கும் அற்புத சம்பவங்களைக் கோடிகாட்டி மறைந்தாள். அந்த அடர்ந்த வனப்பிரதேசத்தைப் பார்வையிடச் சென்ற கவுடாவின் கண்ணெதிரே ஓர் அதிசயம் நடந்தேறியது.

ஆக்ரோஷமாகப் பாந்து வந்த ஒரு வேடனின் வேட்டை நாயை குறு முயலொன்று பயமின்றி எதிர்த்து நின்று துரத்துவதைக் கண்டு பிரமித்து, இதுவே தேவியின் சங்கல்பம் எனத் தீர்மானித்துக் காரியத்தில் முனைந்தார். அதனால் அப்பிரதேசத் துக்கு, ‘கந்து பூமி’ (பராக்கிரமசாலிகளின் பூமி) எனப் பெயரிட்டார். அவ்விடத்தில் ஒரு சுபவேளையில் நான்கு காளைகள் பூட்டிய ஏர் கலப்பையால் தானே பூமியை உழுது கட்டுமானப் பணியை மேற்கொண்டார். அடுத்த அதிசயம் அப்போது நிகழ்ந்தது.

மனத் துறவு ஏற்றவரும், விநயம், பெருந்தன்மை, சமயோசிதம், துணிவு மற்றும் தைரியத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் ராமபக்த ஆஞ்சனேயர் வீர சோரூபத்துடன் சுயம்பு வடிவமாக அங்கிருந்த சிறு குன்றின் அடிவாரத்தில் பூமிக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டார். அந்த சௌந்தர்ய ரூபத்தைக் கண்டதும், ‘ஹே, மாருதிராயா... அஞ்சனை புத்திரா! உன்னைப் பார்க்க என்ன தவம் செதேன்!’ என்று பக்திப் பரவசத்தில் மூழ்கிய ராஜா, பின்னாளில் அவ்விடத்திலேயே அனுமனுக்குக் கருவறை அமைத்துப் பிராணப் பிரதிஷ்டையும் செய்தார். எந்த இடையூறுமின்றி நாள்தோறும் வழிபாடு நடந்தேற தகுந்த ஏற்பாடுகளையும் செம்மையாகச் செய்வித்தார்.

கோயில் இருந்த இடத்துக்கு, ‘கல்யாண நகரா’ என்று பெயரிட்டார். இதன் பின்னர் நகர் நிர்மானமும் முழுவீச்சில் தொடங்கப்பட்டு, செங்கல் கலவைக் கோட்டை ஒன்றையும் நிறுவினார். பல ஏரி, குளங்களை வெட்டியுள்ள கெம்பெ கவுடா தனது ஆட்சியின்போது நந்திதுர்க், கவி கங்கா தேஷ்வரா, தொட்டா கணபதி, கொரமங்களா லட்சுமி, ஹல்சூரு சோமேஷ்வரா போன்ற ஏராளமான ஆலயங்களையும் நிர்மானித்துள் ளார். அந்த நகரமே புராதன கன்னட மொழியில், ‘பெங்கவால்-உரு’ (காவலர்களின் நகரம்) என்றழைக் கப்பட்டு, பின்பு தற்போதைய, ‘பெங்களூரு’ என மாறி விட்டது. துவாபர யுகத்தில், வீர அபிமன்யுவின் பேரன் ஜனமேஜயன், அனுமன் கண்டெடுக்கப்பட்ட குன்றின் மீதமர்ந்துதான், சர்ப்ப யாகத்தில் நடந்த தவற்றுக்காகக் கடும் தவமியற்றி பிராயச்சித்தம் செய்தானாம்.

மனதுக்கு இதமளிக்கும் சூழ்நிலையில், மரங்கள் அடர்ந்த பிரதேசத்தில், பரந்து விரிந்த நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. முன்புறத்தில் உயர்ந்து நிற்கும் கற்தூண் கருட ஸ்தூபி வரவேற்கிறது. நுழை வாயில் மேற்புறம் ராஜகோபுரமின்றி வெற்றுத் தளமாக இருந்து, ஆலயம் மேற்கு நோக்கி அமைந் துள்ளது. உள்ளே சென்றால் விசாலமான நிழற்கூரை வேந்த முன் மண்டபத்தின் கிழக்குப் பக்க மத்தியில் ஆஞ்சனேயர் கருவறை உள்ளது. அதன் மேற்புறம் பிறை மாடத்தில், கதாயுதத்தை இடது தோளில் சாய்த்து வடபுலம் வண்ணமிருக்கும் உக்ர அனுமன் சிலை, வலப்பக்கம் பிராட்டியாரிடமிருந்து சூடாமணி யைப் பெற்றுக்கொள்ளுவதும், இடப்பக்கம் அதை ஸ்ரீராமனிடம் சமர்ப்பிக்கும் நிகழ்வும் சுதைச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன.

கருவறையில் காணப்படும் அனுமன் அனைவரை யும் வியக்க வைக்கிறார். இந்த ஹனுமந்தராயன் ஒரே கல்லில் 22 அடி உயரமுள்ள சுயம்பு சிலையாகும். ராவணனின் அரக்க சைனியத்தால் துன்புறுத்தப்பட்ட தால் இலங்கையை துவம்சம் செது, ஒரு பகுதியை தீக்கிரையாக்கி, மேகநாதன் மற்றும் அவனது படைவீரர்களைக் கலக்கி, கட்டுக்கடங்காத கோபம் பொங்க வீராவேசத்துடன் இருக்கும் கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். அதே ரூபத்தில் தனது பிரபு ராம பிரானை சந்திக்க வடதிசை நோக்கிப் போகும் பாதை யான தனது பிரிய கிஷ்கிந்தைக்கு அருகில் பழமுதிர்ச் சோலையாக விளங்கிய இவ்விடத்தில் சிரமப் பரிகாரம் செதுகொள்ளத் தீர்மானித்து விட்டார் போலும்! ‘கண்டேன் சீதையை’ என்பதை ராமருக்கு உணர்த்த, சீதா பிராட்டி அளித்த சூடாமணியை இரு உள்ளங்கைகளிலும் பத்திரமா பொத்தி மூடியவாறு, தனது கண் பார்வையிலிருந்து அகலாதவாறு அதை முகத்தருகே வைத்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

சிங்கப்பல் எனும் கோரைப் பற்களை வெளியே நீட்டி, அள்ளி முடிந்த சிகை அவிழ்ந்துத் தொங்க, கௌபீணம் ஒட்டியாணத்தால் பிணைக்கப்பட்டு, இடையில் தொங்கும் வாளுடன், கையிலுள்ள கங்கணத்தில் அறுந்த எஞ்சியப் பிணைச் சங்கிலி களுடன், பாதங்களில் கிண்கிணி மணிகளுடன் கூடியத் தண்டையில் மாட்டிக்கொண்டிருக்கும் கால் விலங்கின் அறுபட்ட பாகங்களுடனும், நேராகப் போர்க்களத்திலிருந்து திரும்பிய கோலத்திலேயே தென்படுகிறார். இலங்கை அரக்கர்களுடன் போராடிய வீராவேசம் தெரிந்தாலும், சீதா தேவியின் அடையாள முத்திரையை தனது தலைவனிடம் காட்ட எடுத்துச் செல்கிறோம் என்பதால் உண்டானப் பரவசமும் அவர் முகத்தில் பளிச்சிடுகிறது.

அனுமனின் இந்தத் தோற்றம் நம்மையும் ஒரு பரமானந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது! மாருதி ராயரின் ஒரு கண், மூடியக் கைகளில் பொதிந்திருக்கும் சூடாமணியை தவறவிடாமல் பாதுகாப் பதிலும், மற்றொரு கண் கீழ் நோக்கி பக்தர்களுக்கு அருளளிக்கும் விதமாகவும் தோற்றமளிப்பது கண்களுக்கு விருந்து. அவரது காலடியில் பஞ்சலோக உத்ஸவ மூர்த்தி சிலை உள்ளது. கருவறை வடப்புற சுவற்றில் அனுமனின் பார்வை நேர்கோட்டில் விழுமிடத்தில் ஒரு பலகணி அமைந்துள்ளதற்கான அதிசய நிகழ்வையும் காணலாம்.

இந்தச் சன்னிதிக்கு வலப்பக்கம் நிர்மாணிக்கப் பட்டுள்ளது ராமர் பரிவார் தனிக் கோயில். முன்புறம் பலிபீடம், நெடிதுயர்ந்த கொடிமரம் அடுத்து பிறை மாடத்தில் கருடாழ்வாரை தரிசிக்கலாம். கொடி மரத்தில் மூலவரைப் போன்றே ஒரு சிறிய சிலாரூபம் காணப்படுவது மிகவும் விசேஷம். இங்கும் கருவறை விமானம் இல்லை. நுழைவாயில் மேல்தள மத்தியில் பிறைமாடத்துடன் கூடிய மூன்று கலசங்களுடனான சிறிய விமானம். ராமர் குடும்ப சமேதரா காணப்படு கிறார். சுற்றிலுமுள்ள பிற மாடங்களில் ராமாயணக் கதாபாத்திரங்கள் உள்ளனர். உள்ளே தசரத குமாரன், சீதா தேவி, லட்சுமணருடன் கோதண்டராமராக எழுந் தருளியுள்ளார். தென்திசை நோக்கிய சன்னிதி யிலிருந்து பார்க்க, எதிரே தெரியும் அனுமன் கோயில் பலகணி மூலம் அஞ்சனை மைந்தனை சேவிக்கலாம்! அவனுக்கும் இது பொருந்தும்!

சுயம்புவா காரஞ்சியில் தங்கிவிட்ட ஆஞ்சனேய ருக்கு ஒரு குறை இருந்ததா, சூடாமணியை ஸ்ரீ ராமரிடம் ஒப்படைக்க காலதாமதம் ஆகிறதே என்று. அப்போதுதான் மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது! காலப்போக்கில் இப்பிரதேசத்தை ஆண்ட மராட்டிய பாளையக்காரர் ஸ்ரீ முத்தஞ்சி ராவ் கனவில் அனுமனின் தெய்வக் கட்டளை பிறந்தது. தான் தரிசித்துக்கொண்டே இருக்க ஸ்ரீராமபிரான் ஆலயம் வேண்டும் என்று. அதைச் சிரமேற்கொண்டு, ஆகம விதி முறைப்படி தற்போது உள்ளவாறு ஒரு தனிக் கோயிலை நிர்மாணித்து, ஆஞ்சனேயர் சதாசர்வ காலமும் ஸ்ரீராமரைக் கண்டு மகிழத் தகுந்தவாறு பலகணியையும் அமைத்தான். மண்டபத்தின் மீது தசாவதாரக் காட்சிகள் அடங்கியச் சுதைச் சிற்பங் களைக் கொண்டு அலங்கரித்தான்.

கோதை நாச்சியார், குழலூதும் ராதாகிருஷ்ணன், பிரபல கர்நாடக இசை சாகித்ய கர்த்தா அன்னமாச்சாரியார் ஆகியோரது தனிச் சன்னிதிகளையும் தரிசிக்க முடிகிறது. சர்ப்ப தோஷம் விலக, பூஜிக்க அரச மரத்தின் கீழ் நாகர் மேடை உள்ளது. மாருதி விரும்பும் பலாப்பழம் தினமும் அவருக்கு நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

அனுமன் ஜயந்தி, ஸ்ரீராமநவமி உத்ஸவங்கள் இந்தக் கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. ஆஞ்சனேயர் விக்ரஹத்தை தரிசித் தாலும், வணங்கினாலும் பற்பல நற்பலன்கள் கிடைக் கப் பெறுவோம் என்பது நிதர்சனமான உண்மை!

அமைவிடம் : பெங்களூரு, பஸவனகுடி நந்திக் கோயில், கெம்பெகவுடா நகரப் பேருந்து நிலையம் - காந்தி பஜார் அருகில். ரயில் நிலையத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதி உண்டு.

தரிசன நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை. மாலை 5.30 முதல் 8.30 மணி வரை.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :