அருணாசலத்துடன் ஐக்கியமான அருணை ஜோதி!

அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்! 8
ரேவதி பாலுபொதுவாக, ஞானிகள் என்றால் அவர்களுக்கு வீடு வாசல் கிடையாது. குடும்பம், உறவு போன்ற பந்தங்களும் கிடையாது. சொல்லப்போனால் அவர்களுக்கு தனக்கு தேகம் என்று ஒன்றிருக்கிறது என்கிற உணர்வே இல்லாமல் பரதேசியைப் போலத் திரியக் கூடியவர்கள்.

நினைத்த இடத்தில் படுத்து, கிடைத்ததை உண்டு வாழ்நாளைக் கழிக்கக்கூடியவர்கள். பல நாட்கள் ஊண், உறக்கமின்றியும் இருப் பார்கள். அவர்கள் ஆத்மா எப்போதும் இறை நிலை யோடு தொடர்பில் இருக்கும். அவர்கள் அருகில் நூறு மனிதர்கள் இருந்தால் கூட அதைப் பற்றிய பிரக்ஞை அவர்களுக்குத் துளியேனும் இருக்காது. சேஷாத்ரி சுவாமிகளும் இப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவர்தான். அவர் ஏதோ ஒரு திசையில் பார்த்துக்கொண்டு யாரிடமோ சம்பாஷிப்பதைப் போல ஒரு தோற்றம் அவ்வப்போது இருக்கும். ஆனால், பெரும் பாலும் அது சமஸ்கிருதத்திலோ அல்லது சுற்றிலுமுள்ளவர்களுக்குப் புரியாத மொழியிலேயோ இருக்கும்.

தீண்டாமை மிகுந்திருந்த அந்தக் காலத்தில் எல்லோருடைய தோள் களிலும் கை போட்டு எல்லோருடனும் சரிசமமாக அமர்ந்து உண்டு களித்தார். இறை அன்பைப் பற்றி இடைவிடாது எல்லோருக்கும் போதித்தார். தனது பக்தர் களை ஆன்மிக நிலையில் உயர்த்த தன்னாலான முயற்சிகள் யாவும் எடுத்தார். நம் தேகத்தை மறந்து விட்டால் நமக்கும் இறைக்கும் எந்த விதமான வேற்றுமையும் இல்லை என்று சொல்வார். அவரு டைய வாழ்க்கையே எல்லோருக்கும் ஒரு உதாரணமாக இருக்கும்படி வாழ்ந்தார்.

ரமண மகரிஷிக்கு ஒரு முறை பக்தர் ஒருவர் ஒரு சோஃபாவை வாங்கிக் கொடுத்து, அதில் அவரை உட்காரும்படி வேண்டிக்கொண்டார். ரமணர் சிரித்துக் கொண்டே சொன்னாராம், நானென்ன சேஷாத்ரியா...இது தெரியாமல் இருக்க? இது சோஃபா, உட்காருவதற் கானது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்!" காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் கூட ஒருமுறை ஆதங்கப்பட்டாராம்,என்னால் ஒருநாளும் சேஷாத்ரி போல ஆக முடியாது!" என்று. சேஷாத்ரி சுவாமி களின் உடல் உணர்வற்ற நிலை மிக உன்னதமானதாக, பிற ஞானிகள் கூட நினைத்து வியக்கும்படி அமைந்திருந்தது.

ஒரு பிரச்னையோடு அவரைத் தேடி வந்து சரணடைந்தவர்களை அவர் கை விட்டதே இல்லை என்று சொல்லும்படி அவர் வாழ்க்கையில் அநேக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவண்ணாமலையில் மிகவும் புகழ் பெற்ற பள்ளி டேனிஷ் மிஷன் பள்ளி. அதில் வெங்கட் ராமையர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மிகவும் சாதுவானவர். மிக நல்ல ஆசிரி யர் என்றும் பெயர் வாங்கியிருந்தார். அதனாலேயே அங்கே கூட வேலை பார்த்த சக ஆசிரியர்கள் சிலரின் பொறாமைக்கு ஆளானார். அவருடைய மேலதிகாரிகளுக்கும் அவரைப் பற்றித் தவறான செய்திகள் போயின. இதனால் வெகுண்ட மேலதிகாரிகள் இவரை மூன்று மாதத்துக்குத் தற்காலிக பணி நீக்கம் செய்து சம்பளத் தையும் பிடித்து வைத்துக்கொண்டனர். எப்படியும் மனம் நொந்து மூன்று மாதங்களுக்குள் அவராகவே வேலையை விட்டுச் சென்று விடுவார் என்பது அவர் களுடைய எண்ணமாக இருந்தது. பாவம் அப்பாவி யான வெங்கட்ராமையர் எப்போதும் போல தினமும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். வேலை நிலைத்து இருக்குமோ அல்லது போவிடுமோ, என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் மனதுக்குள் ஒரே திகிலாக இருந்தது.

ஒரு நாள் அவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த வழியில் பூதநாராயணர் கோயிலுக்கு அருகே சேஷாத்ரி சுவாமிகளைப் பார்த்தார். உடனே தனது செருப்புகளைக் கழற்றி விட்டு அவர் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செது தனது நிலைமையை நினைத்துக் கண்ணீர் உகுத்தார். மெதுவாக எழுந்து தமது நிலைமையை சுவாமிகளுக்கு விளக்கிச் சொல்ல முயன்றபோது, சுவாமிகள் அவர் கழற்றிப்போட்ட செருப்புகளை எடுத்து அவர் தலையில் ஓங்கிப் பல முறை அடித்தார். பிறகு செருப்பை தூக்கிப் போட்டு விட்டு தன் போக்கில் விரைந்து சென்று விட்டார்.

கீழே விழுந்து கிடந்த வெங்கட்ராமையர் மெது வாக எழுந்து உட்கார்ந்தார். அவருக்கு ஒன்றுமே புரிய வில்லை. தான் நமஸ்காரம்தானே செய்தோம்?

சுவாமிகள் ஏன் கோபமாகத் தன்னை அடிக்க வேண்டும்... அதுவும் செருப் பால்? தனது தலையெழுத்துப்படிதான் எதுவும் நடக்கும் என்று விரக்தியாக மெதுவாக நடந்து சென்று பள்ளியை அடைந்தார்.

அங்கே அவர் மேஜை மேல் ஒரு கடிதம் இருந்தது. அதைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘தான் நினைத்தது போலவே தனக்கு வேலை போ விட்டது. தன் கதி இனிமேல் நிர்க்கதிதான்’ என்று துக்கம் தாளாமல் அந்தக் கடிதக் கவரைத் தொடவே அஞ்சி சற்று நேரம் நின்று கொண்டிருந்தார். பிறகு, மெதுவாக தைரியத்தை வர வழைத்துக் கொண்டு அந்தக் கவரைப் பிரித்துக் கடிதத்தைப் படித்தவர், ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார். பணி நீக்க உத்தரவை எதிர்பார்த்தவருக்கு அதே பள்ளியிலேயே ஹெட்மாஸ்டராகப் பதவி உயர்வு என்ற உத்தரவைத் தாங்கிய அந்தக் கடிதத்தைப் படித்தவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. தனது தலையெழுத்தை நொடிப் பொழுதில் மாற்றி எழுதிய சேஷாத்ரி சுவாமிகளுக்கு அங்கேயே மானசீகமாக நமஸ்காரம் செய்தார்.

வள்ளிமலை சுவாமிகள் என்று பிற்காலத்தில் அறியப்பட்ட அர்த்தநாரி என்னும் துறவி ஒருவர் ரமணரிடம் ஏதாவது மந்திரோபதேசம் பெற வேண்டும் எனும் அதீத ஆவலால் திருவண்ணாமலை வந்தார். ஆனால், ரமணர் அவரை சேஷாத்ரி சுவாமிகளிடம் அனுப்பி வைத்தார். சேஷாத்ரி சுவாமிகள் தனது அருகில் அமர்ந்திருப்பதை உணராமல் அர்த்தநாரி திருப்புகழைப் பாடிக்கொண்டிருந்தார். சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகளைத் தட்டிக் கொடுத்து, இதை விட உனக்கு வேறு என்ன மந்திரோபதேசம் வேண்டும். வள்ளிமலைக்குப் போ! இதையே தொடர்ந்து செ!" என்று அனுப்பி வைத்தார். தானும் அவ்வப்போது வெவ்வேறு உருவங்களில் வள்ளி மலைக்குச் சென்று அவரை ஆசிர்வதித்து ஊக்குவித்தார். வள்ளிமலை சுவாமிகளால் அந்தக் காலத்தில் அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல்கள் எல்லா இடங்களிலும் பரவி பிரபலமடைந்தன.

நாற்பது ஆண்டுகளை திருவண்ணாமலையில் கழித்த சேஷாத்ரி சுவாமிகளுக்கு, தான் தன் தேகத்தை துறக்க வேண்டிய சமயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரிந்தது. ஒரு நாள் தனது பக்தை சுப்புலட்சுமி யிடம், நான் ஒரு புது வீடு கட்டிக்கொண்டு யோகாப்யாசம் செயலாம்னு பார்க்கிறேன். நீ என்ன சொல்றே?" என்று வினவினார். அவர் சொல்வதன் பொருள் அறியாத சுப்புலட்சுமி, எதுக்கு ஒங்களுக்கு புது வீடு? இங்கே நல்லாதானே இருக்கீங்க?" என்றாள். ஆனால், அதையே அவர் அடிக்கடி கேட்கவும், உங்களுக்கு அதுதான் வசதின்னா அப்படியே பார்த்துக்குங்க!" என்றாள். சேஷாத்ரி சுவாமிகள், ‘புது வீடு’ என்று சொன்னது உடம்பை உதறிவிட்டு இவ்வுலகை விட்டுக் கிளம்ப என்பது வெகுளியான சுப்புலட்சுமிக்குப் புரியவில்லை.

தனது பக்தை சுப்புலட்சுமி வாயால் வந்த வார்த்தைகளை தான் வணங்கும் பராசக்தியின் வாக்காகவே எடுத்துக் கொண்டார் சுவாமிகள். சரி! சரி! நானும் அதைத்தான் நெனச்சேன். நீயும் அதையே சொல்றே. புது வீட்டுக்கு ஏற்பாடு பண்ணி விட வேண்டியதுதான்!" என்று கூறி விட்டு விடுவிடு வென்று அந்த இடத்தை விட்டு வெளியே போ விட்டார் சுவாமிகள்.

சில தினங்கள் கழிந்திருக்கும். சுவாமிகளின் பக்தர்களுக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை. சுவாமி களுக்கு முடி திருத்தி, முகச் சவரம் செய்து குளிப்பாட்டி, பளிச்சென்று அவரை அலங்கரித்து உட்கார வைத்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று.

முகச் சவரத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய சுவாமிகள் குளிக்க வர மறுத்து விட்டார். அவர் உட்கார்ந்த இடத்திலேயே பன்னீர் பாட்டில்களை திறந்து அவர் தலையில் ஊற்றினார்கள். சுவாமிகள் மௌனமாக இருக்கவே, பக்தர்களுக்கு குஷி பிறந்து விட்டது. அவர் உட்கார்ந்திருந்த சின்ன குருக்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீரை சேந்தி சேந்தி அவர் தலையில் விட்டு பக்திப் பரவசமாக அபிஷேகம் செய்தார்கள். சுவாமிகள் அபிஷேகத்தை ஏற்றுக் கொள்கிறார் என்று தெரிந்ததும் ஊரே திரண்டு வந்து கிணற்று நீரே காலியாகி விடும்போல அந்தக் கிணற்றிலிருந்து நீரை எடுத்து எடுத்து சுவாமிகள் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்தது. பிறகு உடலை நன்றாகத் துடைத்து மாலையிட்டு, விபூதி பூசி போட்டோவும் எடுத்தார்கள். ஒரு வழியாக ஜனங்கள் திருப்தியடைந்து கலைந்து சென்றபோது சுவாமி களுக்கு குளிர் ஜுரம் வந்து விட்டது. ஆனால், அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

நாற்பது நாட்கள் தனது உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் எப்போதும் போல ஊரில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். நாற்பத்தியோராம் நாள் கடைசியாக கோயிலுக்குப் போ அண்ணாமலையாரை யும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து விட்டு, தான் விருப்பமுடன் அதிக நேரம் கழிக்கும் கம்பத்து இளையனார் சன்னிதியில் வந்து சிறிது நேரம் அமர்ந்தார். பிறகு உடல் உபாதை பொறுக்க முடியாமல் சின்ன குருக்கள் வீட்டுத் திண்ணையிலேயே சுவாமிகள் வாட்டியெடுக்கும் ஜுரத்துடன் படுத்து விட்டார். பக்தர்கள் ஓடி வந்து கதறினார்கள், சுவாமிகளே! உங்களை நீங்க குணப்படுத்திக்கக் கூடாதா? நீங்க இப்படி அவஸ்தைப்படுவதை எங்களால் பார்க்க முடியலையே!" என்று.

சுவாமிகள் பதில் ஏதும் பேசவில்லை.சுப்புலட்சுமி அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தாள். அவளை அருகே அழைத்த சுவாமிகள், வேற வீடு கட்டிக்கோன்னு சொன்னியோல்லியோ? வேற வீடு கட்டிண்டிருக்கேன். சீக்கிரம் குடி போ விடுவேன்!" என்று கூறி சிரித்தார் .சுப்புலட்சுமி கதறினாள். நான் சொன்னது இந்த வீட்டையா? அப்படியெல்லாம் சொல்ல எனக்குத் தெரியுமா? நீங்க வேற வீடு எங்கேயும் போக வேண்டாம். பேசாம எங்க வீட்டுக்கே வந்துடுங்கோ!" என்றாள்.

சுவாமிகள் மௌனமாக அவளைப் பார்த்துப் புன்னகைத்தார். 1920ஆம் வருடம் ஜனவரி மாதம் நாலாம் தேதி சேஷாத்ரி சுவாமிகள் தனது பூத உடலை நீத்தார். ரமண மகரிஷி முன்னின்று நடத்த, ஒரு மகானுக்குச் செய்ய வேண்டிய முறையில் குறைவின்றி பூஜைகள் நடைபெற்று மகாசமாதி நடந்தது. அருணை ஜோதி அருணாசலேஸ்வரரோடு கலந்தது. பக்தர்கள், ‘தங்களுக்கு இனி யார் வழிகாட்டுவார்?’ என்று எண்ணி ஏங்கிக் கதறினார்கள்.

சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்கள் தங்கள் பூத உடலை நீத்தாலும், என்றென்றும் சூட்சும ரூபத் தில் தனது பக்தர்களுக்கு அளவற்ற அருள் புரிந்து கொண்டுதானிருப்பார்கள் .‘சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே!’ என்னும் பக்தர்களின் கோஷம் எப்பொழுதும் எல்லா இடங் களிலும் ஒலித்துக்கொண்டேதானிருக்கும்.

(நிறைந்தது)
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :