கள்ளழகராக மாறும் அழகர் பெருமாள்!

திருவிழா
மாலதி சந்திரசேகரன்ஒரு நகரம் ஆன்மிக ரீதியாக பிரசித்தி அடைய வேண்டும் என்றால், அதற்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற மூன்றும் ஒன்றுசேர அமைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான நகரம்தான் மதுரை மாநகரம்.

நான்மாடக்கூடல் நகரம், தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் இரண்டு திருவிழாக்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப் படுகின்றன. அவை ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும்தான்.

அழகர் மலை என்பது மதுரைக்கு வடக்கே சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இதில் அழகர் (சுந்தரராஜன்) என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால், இது அழகர் மலை என்று அழைக்கப்படுகிறது. இதற்கு, திருமாலிருஞ்சோலை, உத்தியான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், வனகிரி, விருஷபாத்திரி போன்ற பெயர்களும் உண்டு.

மதுரை மாநகரில் தினமும் ஏதாவதொரு திருவிழா நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது என்றாலும் சித்திரை திருவிழா என்று கூறப்படும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாட்கள் முன்ன தாகவே கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். முதல் இரண்டு நாட்கள் ஸ்ரீ அழகர் திருக்கோயிலில் சேவை சாதிப்பார். மூன்றாம் நாள் மதுரையை நோக்கி புறப்படுவார். அலங்காரநல்லூருக்கு வரும் பெருமாள், அங்கு அலங்காரத்தை முடித்துக்கொண்டு (அலங்கார நல்லூரே பிற்காலத்தில் அலங்காநல்லூர் என்று மாறியது.) தேனூருக்கு வந்து, வைகை ஆற்றில் இறங்குவார். அவரை மதுரை வரதராஜ பெருமாள் எதிர்கொண்டு சேவை செய்கிறார். இதுவே அழகர் ஆற்றில் இறங்குதல் என்று கூறப்படுகிறது. பிறகு வண்டியூர் வந்து, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதாக ஐதீகம்.

‘சுதபஸ்’ என்ற முனிவர் நூபுரகங்கையில் தீர்த்த மாடி பெருமாளை குறித்துத் தவமிருந்தபொழுது, துர்வாசர் தனது பரிவாரங்களோடு அவ்விடம் வந்தார். துர்வாசர் வந்ததை முனிவர் கவனிக்காமல் இருக்கவே, ஆத்திரமடைந்த துர்வாசர், ‘மண்டூகோ பவ’ (தவளை யாகப் போகக்கடவா!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன முனிவர், சாப விமோசனத்துக்கு வழிகேட்டபோது, வைகை நதிக்கரையில், தவம் செதபடி காத்திருந்தால், சித்ரா பௌர்ணமிக்கு மறு நாள் அழகர் வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப் பார்" என துர்வாசர் கூறினார். சுதபஸ் முனிவருக்கு விமோசனம் கொடுப்பதற்காக அழகர் மதுரைக்கு வந்துபோனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.

ஆனால், மற்றொரு புனையப்பட்ட கதையும் வழக்கில் உள்ளது. தனது தங்கை ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ சுந்தரேஸ்வர ருக்கும் கல்யாணம் நடக்கும் செதியைக் கேள்விப் பட்டு ஸ்ரீ கள்ளழகர் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து சகல கோலாகலமுடன் மதுரையை நோக்கி வருகிறார். வரும் வழி எங்கும் பக்தர்களுக்குக் காட்சி கொடுத்ததால், முகூர்த்த நேரத் தைத் தவற விட்டு விடுகிறார். தங்கையின் திருமணத் தைக் காண முடியாமல் போவிடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருளி, மீண்டும் அழகர் மலைக்கே திரும்பி விடுகிறார் என்றும் கூறப்படுகிறது.

எதற்காக அப்படி ஒரு கதை புனையப்பட்டது? மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்புவரை ஸ்ரீமீனாட்சி-ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக் கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் தனித்தனி மாதங்களில்தான் நடைபெற்று வந்தன. ஆனால், வைணவத்தையும், சைவத்தையும் இணைக் கும் நல்லெண்ணத்தில் திருமலைநாயக்கர் காலத்தில் இந்த இரண்டு திருவிழாக்களும் ஒருங்கிணைக்கப் பட்டன. அப்பொழுதிலிருந்து சித்திரை திருவிழா என்றால் ஸ்ரீமீனாட்சி-ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக் கல்யாணமும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ஒரே திருவிழாவாக நிகழ்கின்றன.

கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும்பொழுது, அவர் என்ன நிற பட்டு உடுத்தி வருகிறார் என்பது பக்தர்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பாகவே இருந்து வருகிறது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

பெருமாளின் ஆபரணங்கள், பல வண்ணத்தில் உள்ள பட்டு வஸ்திரங்கள் ஆகியவை ஒரு மரப் பெட்டியில் வைத்திருக்கப்படும். வைத்திருக்கும் பெட்டியில் இருந்து, மூத்த பட்டர் கையைவிட்டு எந்த நிற வஸ்திரம் எடுக்கிறாரோ, அந்த வஸ்திரம்தான் அழகர் ஆற்றில் இறங்கும்பொழுது அவருக்கு சாத்தப் படுகிறது. எந்த நிற வஸ்திரம் உடுத்தி வருகிறாரோ, அதன்படிதான் நாட்டின் வாழ்வியல் இருக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. (அதாவது, வெள்ளை நிறம் என்றால் நாட்டில் அமைதி, பச்சை நிறம் என்றால் நாட்டில் செழுமை, மஞ்சள் நிறம் என்றால் மங்கலகரமான நாட்டு நடப்பு, சிவப்பு நிறம் என்றால் இயற்கையின் சீற்றம்.) அழகர் பெருமாளை எதற்காக கள்ளழகராக அலங் கரிக்க வேண்டும்? கள்ளழகர் கொண்டை, அதில் ஒரு குத்தீட்டி, காதில் கடுக்கன், கையில் பூமராங், இடுப் பில் ஒரு கத்தி போன்ற பலவித ஆயுதங்களுடன் காணப்படும் அழகர், மலையிலிருந்து இறங்கி மதுரை தல்லாகுளம் வரை அதே அலங்காரத்தில் எழுந்தருள் வார். அதற்குப் பின்னர் கள்ளழகரின் அலங்காரம் கலைக்கப்பட்டு, அழகர் பெருமாளாக சேவை சாதிக்கிறார்.

பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் சேனை வீரர் களாக கள்ளழகர் சமூகத்தினர் பணிபுரிந்து கொண் டிருந்தார்களாம். பாண்டியர்களுக்கும் கள்ளழகர் சமூகத்தினருக்கும் நல்லபடியான இணக்கம் இருந்தது. ஆனால், நாயக்கர் ஆட்சி வந்த பிறகு அந்தப் பணி யிலிருந்து அவர்கள் விலக்கப் பட்டார்கள். அதனால் திருமலை நாயக்கர் காலத்தில் நாயக்கர்களுக்கும், கள்ளழகர் சமூகத்தினருக்கும் இடையே கருத்து வேறு பாடு நிறைய இருந்து வந்தது. திருமலை நாயக்கரால் கள்ளழகர் சமூகத்தினரை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. அதனால் அவர் மதுரை வீரனை அனுப்பி கள்ளழகர் சமூகத்தினரை ஒடுக்க முயன்று தோல்வி கண்டார். அதனால் திருமலை நாயக்கரால் பராமரித்து வந்த அழகர் கோயிலுக்கும் சில இடர்ப்பாடுகள் உண்டாயின. ஆனால், திருமலை நாயக்கர் தன்னுடைய கடைசி காலத்தில் கள்ளழகர் சமூகத்தினருக்கு சில முக்கியத் தளர்வுகளை உண்டாக்கிக் கொடுத்தார்.

அதன் பின்னர் கள்ளழகர் சமூகத்தினர், அழகர் கோயிலுக்கு நிறைய சேவைகள் செயத் தொடங்கி னார்கள். கள்ளர் சமூகத்தினருக்கு, அழகரானவர் உரிய தெவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறார். அதற்கு முக்கியத்துவம் கொடுத்தே அழகருக்கு கள்ளழகர் அலங்காரம் செயப்படுகிறது. திருமலை நாயக்கர் காலத்துக்குப் பிறகே அழகருக்கு, கள்ளழகர் என்ற திருநாமம் உண்டாயிற்று என்று அறியப்படுகிறது.

எது எப்படியோ, நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்றான அழகர் மலையில், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் (சித்திரைத் திருவிழா) பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை நேரில் தரிசிப்பவர்கள் அல்லது வீட்டிலிருந்தபடியே காணொலி மூலம் தரிசிப்பவர்கள், ஒரு சொம்பில் சர்க்கரையை நிரப்பி, வாழை இலையால் மூடி, அதன் மேல் கற்பூரம் வைத்து, ஆரத்தி எடுப்பது போல் எடுக்க வேண்டும். இப்படிச் செவதால் அழகரின் அனுக்கிர கம் பூரணமாகக் கிடைக்கும் என்று நம்பப்பட்டு, அதன் படி செயப்பட்டும் வருகிறது. ஸ்ரீ சுந்தரராஜப் பெரு மாள், எல்லோருக்கும் சுபிட்சத்தை அருளட்டும்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :