கதம்பமாலை-குரு வடிவில் திகழும் குகன்!

திருச்சி மாவட்டம், திண்ணியம் தலத்தில் அருளும் முருகப்பெருமான், வள்ளி, தெவானை ஆகியோர் தனித்தனி மயில் வாகனங்களில் காட்சி தருகின்றனர். இக்கோயில் சிவபெருமான்,‘ஸ்ரீ கோடீஸ்வரர்’ என்ற பெயரில், அம்பாள் பிருஹன் நாயகியுடன் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். சிவாலயங்களில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியே தென்திசை நோக்கி அமர்ந்திருப்பார். இத்தலத்தில் முருகப் பெருமானே குரு அம்சத்துடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இவரை வழிபட, கல்வி ஞானம் பெருகும் என்பது ஐதீகம்.

முருகன் கோயிலில் சண்டிகேஸ்வரர்!

சிவன் கோயில்களில்தான் சண்டிகேஸ்வரர் தனிச்சன்னிதிகளில் காட்சி தருவார். திருசெந்தூர் முருகன் கோயிலிலும் சண்டிகேஸ்வரர் தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். இங்கு முருகப்பெருமானுக்கு சாத்திய பூமாலையை சண்டிகேஸ்வரருக்கு சூட்டுவது வழக்கம்.

அம்பிகை கையில் குழந்தை முருகன்!

மயிலாடுதுறை மாவட்டம், நெகுப்பை என்ற ஊரில் அம்பிகை, கைக்குழந்தையாக முருகனை ஏந்தி நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

அனுமன் தாகம் தீர்த்த ஸ்ரீ சுப்ரமணியர்!

கோவை அருகே உள்ள அனுவாவி ஸ்ரீ சுப்ர மணியர் கோயில், மருதமலை கோயிலின் பின்புறம் உள்ளது. அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வரும்போது, அவரது களைப்பு தீர, முருகன் தனது வேலினால் சுனை ஒன்றை உருவாக்கி, அவரது தாகம் தீர்த்ததாகக் கூறப்படுகிறது.

- ஆர்.ராஜலட்சுமி, திருச்சி

பலன் தரும் பஞ்சமுக சிவ தலங்கள்!

சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் உண்டு. இவை ஐந்தும் ஐந்து திசைகளை நோக்கியுள்ளது பேல சில தேவாரப் பாடல் பெற்ற தலங்களும் அமைந்துள்ளன. அவற்றை தரிசிப்பதால் ஏற்படும் பலன்களும் அதிகம் என சிவாகமங்கள் கூறுகின்றன.

படியளந்த நாயகி!

திருவீழிமிழலை கடைத்தெருவாகிய ஐயன்பேட்டையில் உள்ள சிவாலயத்தில் சுவாமி செட்டியப்பர் எனவும், அம்பாள் படியளந்த நாயகி எனவும் அழைக்கப்பெறுகின்றனர். உத்ஸவ மூர்த்தி தராசு பிடித்த கரத்தோடும், படியைப் பிடித்துள்ள நிலையிலும் பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும் அரியதாகவும் அமைந்த கோலம் ரசிக்கத்தக்கது.

பெரிய பெருமாள்!

விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்த ஆதிதிருவரங்கத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீரங்கநாத பெருமாள் திருக்கோயில். திருமாலின் அவதாரங்களில் முதல் அவதாரம் மச்ச அவதாரம் ஆகும், முதல் யுகம் கிருதா யுகம் என்பதால் இவர் பெரிய பெருமாள் என பக்தர்களால் அழைக்கப்படுகிறார். ஆதியிலே தோன்றியதால் தமிழ்நாட்டில் உள்ள வைணவ தலங்களில் இதுவே முதன்மையானது என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரே கோயிலில் இரண்டு சண்டிகேஸ்வரர்கள்!

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் சண்டேஸ்வரருக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஆதிசண்டேஸ்வரர் வெள்ளை உடையுடன் உத்ஸ வராகவும், மற்றொருவர் எமசண்டேஸ்வரராகவும் அருள்பாலிக்கின்றனர். பிறக்க முக்தி தரும் தலமாகத் திருவாரூர் திகழ்வதால், இங்கு எமனுக்கு வேலை இல்லை. எனவே, எமசண்டேஸ்வரர் இத் தலத்தில் சிவபெருமானுக்கு தொண்டு செவதாக ஐதீகம்.

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்


Post Comment

Post Comment