மது பழக்கத்திலிருந்து மீட்கும் மகேசன்!


தரிசனம்
பொ.பாலாஜிகணேஷ் -கடலூர் மாவட்டம்,சிதம்பரத்துக்கு அருகே கொடிப்பள்ளம் கிராமத்தில் ஆற்றின் கரையோரம் அமைந் துள்ளது ஸ்ரீ பள்ளமுடையார் திருக் கோயில். ஈசன் தனது பக்தனை சோதிக்கக் கள்வனா தோன்றி, அவனது தாக்குதலுக்கு உள்ளாகி சிரசில் காயத் தழும்போடு லிங்கத் திருமேனியரா இத்தலத்தில் காட்சி தருகிறார்.

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளம் உடையார் எனும் சிவ பக்தர் அண்ணாமலை நகரில் அமைந்த பாசுபதேஸ்வரர் கோயில் குளத்தில் நீராடி, அதன் பின்பு நற்கவந்தன்குடி எனும் கிராமத்தில் அமைந்த சிவாலய தீர்த்தத்தில் நீராடி விட்டு, வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, தாம் எங்கும் கண்டிராத அதிசயமாக இந்த கொடிப்பள்ளம் கிராமத்தைக் கண்டார். எல்லா ஊர்களை விடவும் இந்த ஊர் மிகவும் பள்ளமாக இருந்ததே அந்த அதிசயம்.

இந்தத் தலம் அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே, இங்கு ஓடும் ஆற்றின் கரையில் சில காலம் தங்கி அவர் தவம் புரிந்து வந்தார். ஒரு நாள் அவரது கனவில் வந்த சிவபெருமான், இந்த ஊர் மக்களுக்கு எந்த இடர்பாடும் இல்லாமல் நீதான் காவல் புரிய வேண்டும்" என்று கூறி மறைந்தாராம்.

அதைத் தொடர்ந்து அந்த பக்தர் அங்கே ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செது வழிபட்டார். தாம் வழிபடும் அந்த சிவலிங்கத்துக்கு என்ன பெயர் வைப்பது என்று அவர் குழம்பியிருந்த நேரத்தில், உனது பெயரையே இதற்கும் வை" என்று அசரீரியாக உரைத்தாராம். அதன்படி தனது பெயர் பள்ளமுடையார் எனும் பெயரையே அந்த சிவலிங்கத்தும் சூட்டி, அந்த ஊரைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன் பிறகு, அவ்வூர் மக்கள் அந்த லிங்கத் திருமேனியைச் சுற்றி ஒரு கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர்.

ஒரு சமயம் இந்தக் கோயிலில் நள்ளிரவு நேரத்தில் திருடன் ஒருவன் நுழைந்து விட்டான். இது சிவபக்தர் பள்ளமுடையாருக்கு தெரிய வர, உடனே தான் வளர்த்த குதிரையில் ஏறி வந்து திருடனை தலையில் ஒரு தடியால் அடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்தத் திருடன் அங்கிருந்து ஓடிவிட்டான். மறுநாள் பள்ளமுடையர் வழக்கம்போல் காலை யில் லிங்கத்துக்கு அபிஷேகம் செயும்போது லிங்கத்தின் மேல்பகுதியில் ஒரு தழும்பு காணப் பட்டது. அதைக் கண்ட அவருக்கு வியப்பு மேலிட, ‘இத்தனை நாள் இல்லாத இந்தத் தழும்பு இன்று எப்படி வந்தது இறைவா? இது என்ன சோதனை?’ என்று மண்டியிட்டு கதறினாராம்.

அன்று இரவு ஊர் மக்கள் அனைவரிடமும் இதைப் பற்றிக் கூறிய அவர், மன சங்கடத்துடன் உறங்கச் சென்றுள்ளார். அப்போது, அவரது கனவில் வந்த பள்ளமுடையார், ‘நான் கொடுத்த வேலையை நீ சரிவர செய்கிறாயா? என்று பார்ப்பதற்காகவே நான் திருடனாக வந்தேன். நான் சொன்ன சொல்லை நீ காப்பாற்றி விட்டா. அதனால் நீயும் என்னோடு இருந்துவிடு" என்று கூறிய சிவபெருமான், தமது சன்னிதிக்கு அருகிலேயே அவருக்கு ஒரு இடம் கொடுத்தார். இந்த ஊரின் காவல் தெவமா விளங்கும் பள்ளமுடையாருக்கு பக்தர்கள் சிவன் சன்னிதிக்கு அருகிலேயே ஒரு சன்னிதி அமைத் தனர். அவர் இன்றளவும் அந்த ஊரின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.

பொதுவாக, ஊர் காவல் தெய்வங் களுக்கு பூஜை செய்யும்பொழுது அசைவம் மற்றும் மது வகைகளைப் படைப்பது உண்டு. ஆனால், இந்தக் கோயிலில் இவற்றை பூஜையில் வைத்துப் படைப்பதில்லை. முழுக்க முழுக்க சைவப் படையல்தான். அதேபோல், இந்த ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்கள் மட்டுமல்ல, பள்ளமுடையாரை குல தெவமாக வழிபடும் அனைவரும் மது அருந்த மாட்டார்கள். அப்படி மது அருந்தும் சூழ்நிலை ஏற்பட்டால் முப்பது நாட் களுக்கு இந்தக் கோயிலுக்குள் வர மாட்டார்கள். பிறகு, தான் செதது தவறு என பள்ளம் உடையாரிடம் முறையிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டுதான் வருவார்களாம்.

மது அருந்துபவர்களைத் திருத்தும் கோயிலாகவும் இது திகழ்கிறது. இந்த கிராமத்தில் வாழும் ஆண்கள் பெரும்பாலானோர் மது பழக்கம் இல்லாதவர்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். அதே போல், இந்தக் கோயிலுக்கு அசைவம் சாப்பிடும் அன்று பக்தர்கள் வர மாட்டார்கள். அப்படி இந்தத் தவறுகளைச் செதவர்கள் மறுநாள் ஆலயத்தில் பள்ளமுடையாரின் காவல்காரரான சின்னவீரன், செட்டிவீரன் ஆகிய இருவரிடமும் மன்னிப்பு கேட்ட பிறகுதான் ஆலயத்துக்குள் வருவார்கள்.

மது பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து பள்ளமுடையாருக்கு சிவப்பு நிறத்தில் கயிறு வைத்து பூஜித்து, அதை கையில் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு மது அருந்த வேண்டும் என்ற எண்ணமே வராது என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பூஜித்த கயிறு கட்டிய பிறகு மது அருந்தினால் அவர்களின் கனவில் குதிரை வருமாம். அதற்கு பயந்து யாரும் மது அருந்துவதில்லை என்றும் கூறு கின்றனர். இந்தக் கோயிலுக்கு வெளி யூரில் இருந்தும் நிறைய பக்தர்கள் வந்து பள்ளமுடையாரை வணங்கி மது பழக் கத்தில் இருந்து விடுதலையாகிச் செல்வதைக் கண்கூடாகக் காணலாம்.

‘பள்ளமுடையார் தினமும் இரவில் இந்த ஊரை குதிரையில் சுற்றி வந்து காவல் காக்கிறார்’ என்று பக்தர்கள் கூறு கின்றனர். சுற்றியுள்ள கிராமங்களை விடவும் மிகவும் பள்ளத்தில் உள்ளது இந்த ஊர். ஆனாலும், எந்தவித இயற்கைச் சீற்றங்களினாலும் இந்த ஊர் பாதிப்பதில்லை. அதற்குக் காரணம் பள்ளமுடையாரின் காவல்தான் என்றும் பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை யன்றும், குறிப்பாக ஆடி வெள்ளி முழுவதும் விசேஷமாகும். சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறும். மேலும், சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் செயப்படும். கோயிலில் விநாயகர், முருகன், அம்பாள், வீரனார் அதன் குதிரை, சின்னவீரன், செட்டிவீரன், நவக்கிரகங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனி சன்னிதிகள் உண்டு.

அமைவிடம் : சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் வழியாக பிச்சாவரம் செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது கொடிப்பள்ளம்.
Post Comment

Post Comment