கேள்வி நேரம்ஞானகுரு -கண்ணாடியில் தெய்வத்தன்மை இருக்கிறதா? அதை பெண்கள் எப்படிப் பயன்படுத்தலாம்?- என்.மலர்விழி, திருச்சி

முகத்தைப் பிரதிபலிக்கின்ற கண்ணாடியில் ஆண்டவனும் தெரிவார். ஆண்டாள் நாச்சியார் தனது அழகைக் கூட்டிக்கொண்டு பெருமாளிடம் சேர அடிக்கடி கண்ணாடி பார்த்துக்கொண்டார். அதில் மகாலட்சுமி குடி இருக்கிறாள். ஒரு வீட்டில் வட்ட மான மூன்று கண்ணாடி இருக்க வேண்டும். ஒன்று ஒப்பனை அறையில். மற்றொன்று வாசற்படியின் உட்பகுதி. மூன்றாவது நடுஅறையில் இருப்பது நலம் தரும். ஒரு வட்டமான கண்ணாடி சூரியன், சந்திரனுக்கு ஒப்பானது. எதிர்மறை சக்திகளை அகற்றும் வல்லமை உடையது. இதற்கு, ‘வடநூலார் தர்ப்பணம்’ என்று பெயரிட்டனர். ஆலயங்களில், ‘சோடசம்’ என்ற பதினாறு உபசாரங்களில் இதுவும் ஒன்று. கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோயிலில் கண்ணாடி அலங்கார சேவை என்ற ஆராதனை நிகழ்ச்சி மாதத்தில் முதல் சனிக்கிழமைகளில் நடைபெற்று வந்தது. கண்ணாடி அறையில் வைக்கப் படுகிற பெருமாள் பல கோணங் களில் சேவை சாதிப்பார். பெண்கள் வட்டமான கண்ணாடியைத் திருமகளாக வழிபட்டு, அதைக் கண்டு திலகம் இட்டுக் கொள்ளலாம்.

குரு மூலம் உபதேசம் பெற்ற மந்திரங்களை உடல் நலமில்லாத காலத்தில் ஜபிக்காவிட்டால் சங்கடங்கள் வருமா?- கே.சிவசங்கரன், சென்னை

சாஸ்திர சம்பிரதாயங்கள் கடைபிடிப்பதில் பல விஷயங் களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட் டுள்ளது. அதில் உடல் நலம் இல்லாதவர்கள், வயது முதிந்தவர்கள் நோய் வாய்ப்பட்டிருப்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பூஜை, விரதம், மந்திர உச்சாடன காலங்களில் சிரமம் ஏற்பட்டால் சில நாட்கள் கழித்துத் தொடங்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால் சங்கடங்கள் வந்து விடுமோ என்று வீண் பயம் வேண்டாம்.

தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்ட மந்திரங்களை ஓய்வு காலம் கழித்து மீண்டும் ஜபிக்கத் தொடங்கும் போது ஒரு வெற்றிலை பாக்கு, இரண்டு பழம் வைத்து சில காசுகளுடன் இரண்ய கர்ப்ப மந்திரத்தால் மூன்று முறை நீர் விட்டு அதை வேத பண்டிதர் ஒருவருக்கு தானம் தந்து தொடங்கினால் அதற்கு பிராயச்சித்தம் என்னும் தோஷ நீக்கம் ஏற்பட்டு விடும். மந்திரம் ஜபிக்கத் தொடங்கிவிட்டால் அதன் பொருட்டு சந்தேகங்கள் எழுதல் கூடாது. நம்பிக்கை யோடு செய்வது அவசியம்.

வசந்த நவராத்திரியில் அம்மனை வீட்டில் வழிபடுவது, கோயிலில் வழிபடுவது... எது நல்லது?- சி.கற்பகம், திருவள்ளூர்

இந்த வருடம் ஏப்ரல் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை வசந்த நவராத்திரி காலம். இந்த நாட்களில் ஒன்பது நாட்களும் விரதம் இருந்து அம்பிகையை தீபத்திலும் கலசத்திலும் எழுந்தருளச் செய்து பூஜைகள் நடத்தலாம். முதல் நாளில் மூன்று வயதுள்ள சின்னஞ்சிறு குழந்தையாகவும், இரண்டாவது நாளில் ஒன்பது வயதுள்ள ஸ்ரீகுமாரி என்கிற நவாட்சரீ சொரூபிணியாகவும், மூன்றாவது நாள் பதினைந்து வயதுள்ள ஸ்ரீ பஞ்ச தசாட்சரீ ரூபிணியாகவும், நான்காவது நாள் பதினாறு வயதுள்ள ஸ்த்ரீயாக ஸ்ரீசோட சாட்சரி ரூபிணியாகவும், ஐந்தாவது நாள் சௌந்தர்யா என்கிற பெயருடன் மாத்ருகா வர்ண ஸ்வரூபிணியாகவும், ஆறாவது நாள் சாகம்பரீ என்ற பெயருடன் ஸ்ரீவித்யா ரூபிணியாகவும், ஏழாவது நாள் துர்கா தேவி என்ற பீஜாட்சர சொரூபிணியாகவும், எட்டாவது நாள் மகிஷாசுரனைக் கொன்ற ஸ்ரீமகாலக்ஷ்மி ரூபிணி யாகவும், ஒன்பதாவது நாள் சும்பன், நிசும்பன் என்கிற இரண்டு அசுரர்களை ஸ்ரீ சாமுண்டியாக வடிவமெடுத்து அழித்து உலக மக்களைக் காத்த காருண்யவல்லியாகவும் அம்பிகை துதிக்கப்படுகிறாள்.

இந்த ஒன்பது நாட்கள் நிறைவடைந்ததும் பத்தா வது நாளில் வித்தைக்கே அதிபதியான ஸ்ரீ சரஸ்வதி தேவியாகவும், பதினொராவது நாள் ஸ்ரீ துர்கை, மகாலக்ஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளும் சேர்ந்த ஸ்ரீ சண்டிகா தேவியாகவும் நினைத்து பூஜை செய்ய வேண்டும். ஆலயத்துக்குச் சென்று தீபம் ஏற்றி அம்மன் அருட்பாடல்களைப் பாடி வழிபடலாம். வாழ்வில் வசந்தம் வர வசந்த நவராத்திரி காலத்தைக் கொண்டாடுங்கள்.

பெண்களுக்குத் தாலி கட்டுவது, ஒரு கட்டுப் பாட்டை அவர்கள் மேல் வைப்பது போல் இல்லையா?- நா.கார்த்திகேயன், மன்னார்குடி

திருமண காலத்தில், ‘மாங்கல்ய தாரணம்’ என்னும் தாலிகட்டுதல் பற்றி, ‘கிருஹ்ய சூத்ரம்’ என்ற நூல் விவரிக்கிறது. இடது கையில் முப்புரி நூலும், கழுத்தில் ஒன்பது இழை சரமும் கட்டுவது வழக்கம். கழுத்தில் மஞ்சள் கயிறை கட்டுவதால் ஒரு பெண் ஆண் மகன் ஒருவனுக்குச் சொந்தமாகிவிட்டாள். அவளை வேறொரு வித்தியாசமான கோணத்தில் பார்க்கக்கூடாது என்பதற்காகவே அணிவிக்கப்படு கிறது. திருமாங்கல்யத்தில் அம்பிகையும் சிவபெருமானும் இருக்கிறார்கள் என்று அதற்கு ஒருவகை தெய்வத்தன்மையை சொன்னார்கள். வீட்டுக்கு வந்த மருமகளை மகாலட்சுமி போல இருக்கிறாள் என்று வர்ணிக்கின்றனர் வீட்டுப் பெண்கள். ஸ்ரீமன் நாராயணனின் பத்தினிக்கு உதாரணமாகச் சொல்வதற்கு அவள் கழுத்தில் கட்டப்படும் தாலியே சாட்சியாக இருக்கிறது. மங்களகரமாக அவளை விளங்கச் செய்திடும் அணிகலனாக அது திகழ்கிறது.

கட்டுப்பாட்டை பெண்கள் மேல் எந்த ஆன்மிக சாதனமும் வைக்காது. மாறாக, பாதுகாப்பையே தரும். தாலி கட்டுகிற நேரத்தில்கூட மங்கள சண்டிகா துதியின்,

‘ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே’ எனும் இரண்டு பொன் வரிகள் உச்சரிக்கப்படு கின்றன.

திருமணம், ஆலய விழாக்கள் சமயத்தில் பயிறு, விதைகளை இட்டு முளையிடுவது ஏன்?- ஆ.சிவசங்கரி, வந்தவாசி

சுப நிகழ்ச்சிகள் எங்கே நடந்தாலும் அங்கே தானியங்களை முதல் நாளே ஊற வைத்து ஈர மணலில் போட்டு அதற்கான மந்திரங்களை ஜபித்து முளைக்கச் செய்வார்கள். ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி தொடங்கும்போதும், மணமேடையிலும் நவதானியங்களை மண் சட்டியில் ஈர மணல் வைத்து அதில் சுமங்கலிகள் குலவைக் குரல் வெளிப்படுத்தி இட வேண்டும். சில வீடுகளில் நவநாயகர்களை அழைத்து இடுவர். இதற்கு முளைப்பாரி இடுதல் என்று பெயர். சுப வைபவம் நடை பெறுகிற காலத்தில் நவக்கிரஹங் களின் அருளாசி கிடைக்கவும் இடையூறுகள் வராமல் காக்கவும் வேண்டப்படுகிறது. மேலும், தானியங்கள் விரைவில் முளைத்து வளமாக வளர்வது போல ஆண், பெண் இருபாலரின் வாழ்க்கையும் வளர்ந்து பூத்துக் குலுங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யப்படுகிறது. தானியங்கள் முளைத்து செடியாகிற போது அதிலிருந்து ஒருவித சக்திப் பரவல் நல்ல சூழலை உருவாக்குகிறது. இதையே கும்பாபிஷேக காலங்களில், ‘அங்குரார்ப் பணம்’ என்ற பெயரில் செய்வார்கள். அங்குரம் என்றால் விதைகள். அர்ப்பணம் என்றால் இடுதல். இங்கே பாலில் ஊற வைத்த நவதானியங்களை நவ நாயகர்களது மந்திரங்களைச் சொல்லி ஆற்று மண், புற்று மண், அரச மரத்தடி மண் கலந்து வைப்பார்கள். சீமந்தம், வளைகாப்பு, வீடு குடிபுகுதல், தவிர, அசுப காரியங்கள் செய்யப்படுகிறபோதும் முளைப்பாரி இடுதல் வழக்கத்தில் இருப்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
Post Comment

Post Comment