சாம்பார் அண்டா சரிந்தது!


அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்! 7
ரேவதி பாலு -சித்தர்கள் என்பவர்கள் அஷ்டமா சித்திகளையும் பெற்றவர்களாவர். அவர்களுக்கு நடந்தது, நடந்து கொண்டிருப்பது, நடக்கப்போவது எல்லாமே துல்லியமாகத் தெரியும். ஆனால், தேவையிருக்கும்போது மட்டுமே தாங்கள் பெற்றுள்ள சக்திகளை வெளிப்படுத்துவார்கள்.

முக்கியமாக, மக்களுக்கு உதவி புரியும் நோக்கத்தில் மட்டுமே அவர்கள் சக்திகள் வெளிப்படும். சேஷாத்ரி சுவாமிகளின் சித்தாடல்களும் திருவண்ணாமலையில் இப்படித்தான் நாள்தோறும் பல இடங்களில் பலவிதமாக நடந்து கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் அவர் பல இடங்களில் காட்சி கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை கோயிலில் ஆனி மாதம் பிரம்மோத்ஸவம் நடைபெறும். ஈஸ்வரன் திருவீதி உலா வந்து கொண்டிருந்தார். மக்கள் அனைவரும் மிகுந்த பக்தியோடு வடத்தைப் பிடிக்க, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. திடீரென்று ஓடிக்கொண்டிருந்த தேர் சக்கரம் தெரு மண்ணில் ஒரு பள்ளத்தில் புதைந்துபோக, தேர் ஓட முடியாமல் நின்றுவிட்டது. மக்கள் கூடி சக்கரத்தை பள்ளத்திலிருந்து மேலே தூக்க முயன்றனர். அது அவர்களுக்கு மிகக் கடினமாக இருந்தது. சக்கரம் பள்ளத்திலிருந்து அசைந்து கொடுக்கவேயில்லை.

திடீரென்று அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த சேஷாத்ரி சுவாமிகள் இதை கவனித்தார். ஒரு நொடிதான்! தனது வலது கையால் மென்மையாக ஒரு தட்டு சக்கரத்தின் மேல் தட்டவும், புதைந்திருந்த சக்கரம் மேலே ‘ஜிவ்’வென்று எழும்பி வந்தது. கூடியிருந்தவர்கள் தங்கள் கண்களையே நம்ப முடியாமல் திகைத்துப் போயினர். அப்புறம் என்ன? தேரோட்டமும் திருவீதி உலாவும் விமரிசை யாகத் தொடர்ந்தன. மக்கள் சந்தோஷ மாகத் திரும்பிப் பார்த்தபோது, இத்தனைக்கும் காரணகர்த்தாவான சேஷாத்ரி சுவாமிகளை அந்த இடத்திலேயே காணவில்லை. அவர் எப்பவோ அங்கிருந்து சென்று விட்டார்.

திருவண்ணாமலையில் ஒரு திருமண சத்திரத்தில் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சத்திரத்தின் தோட்டப் பகுதியில் பிரம்மாண்டமாக சமையல் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. வழக்கம்போல தனது கால் போன போக்கில் ஊரில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த சேஷாத்ரி சுவாமிகள் திடீரென்று அந்த சத்திரத்துக்குள் நுழைந்து நேரே தோட்டப்பக்கம் போனார். விறகடுப்பில் பெரிய அண்டாவில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த அண்டாவை காலால் எட்டி ஒரு உதை விட்டார். அண்டா பக்கவாட்டில் சரிந்து சாம்பார் அத்தனையும் கீழே வழிந்து ஓட ஆரம்பித்தது. கூடியிருந்த மக்களில், சுவாமிகளின் மகத்துவம் தெரிந்தவர்கள், என்னவோ நல்லதுக்குதான் இப்படி நடக்கிறது என்று மௌனம் காக்க, அவரைப் புரிந்து கொள்ளாதவர்கள் கொதித்துப் போயினர். ‘இப்படியா அண்டா சாம்பாரை கவிழ்ப்பது? விருந்தினர்கள் சாப்பிடும் நேர மாயிற்றே? சரியான கிறுக்குத்தனமாக இருக்கிறதே?’ என்று கொதித்தனர். அப்பொழுது அவர்கள் கண்ணெதிரே சுவாமிகள் சரிந்து கிடந்த அண்டா விலிருந்து நீளமாக ஒரு இறந்து போன பாம்பை எடுத்து வெளியே வீசினார். கூடியிருந்த அனைவரும் பேச்சற்றுப் போயினர்.

அடடா! சுவாமிகள் தெவம் போல வந்து இங்கு சாப்பிட இருந்த ஜனங்க எல்லோரையும் எப்படி காப்பாத்தி இருக்காரு!" என்று இரு கரம் கூப்பி அவரைத் தொழுது வணங்கினர்.

வெங்கடேச முதலியாரும் அவர் மனைவி சுப்புலட்சுமி அம்மாளும் சுவாமிகளின் அத்யந்த பக்தர்கள். சுவாமிகள் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போவார். அவர்களுடன் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார். சில சமயங்களில் அவர்கள் வீட்டிலேயே உணவு உட்கொள்வார். அவர்கள் வீட்டின் முன்புறத்தில் ஒரு பூவரச மரமும் இரண்டு முருங்கை மரங்களும் இருக்கும்.

ஒரு அமாவாசை தினத்தன்று மாலை நாலு மணி அளவில் அவர்கள் வீட்டுக்குச் சென்ற சுவாமிகள் சுப்புலட்சுமியை அருகே அழைத்தார். நான் இப்போ உனக்கு ஒரு வேடிக்கை காட்டட்டுமா? பாக்கறியா?" என்றார் சிரித்தபடியே. அந்த அம்மாளும் சரியென்று தலையாட்டினாள். சுவாமிகள் வீட்டுக்கு வெளியே நின்று வானத்தையே உற்று நோக்க ஆரம்பித்தார். கைகளை ஆட்டி, வா! வா!" என்று கூப்பிட்டார்.

திடீரென்று ஒரு காகம் எங்கிருந்தோ பறந்து வீட்டுக் கூரையின் மேல் வந்து அமர்ந்தது. தொடர்ந்து ரெண்டு... மூன்று என்று வரிசையாக ஆயிரக்கணக்கில் காகங்கள், புறாக்கள், குருவிகள், கிளிகள், மைனா, குயில் என்று பல வகையான பறவைகள், கணக்கில்லா மல் பறந்து வந்து வீட்டிலுள்ள மரங்கள், வீட்டுத் தாழ்வாரம், வாசல், கூரை என்று எல்லா இடங்களிலும், சில பறவைகள் அக்கம்பக்க வீடுகளிலும் கூட அமர்ந்து கொண்டன. சுவாமிகள் அவற்றைத் தடவிக்கொடுத்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார். பறவைகள் அங்கும் இங்கும் பறந்து ஓடியாடி குதித்து மகிழ்ச்சியாக விளையாடின. பறவைகள் ஒன்றோடொன்று சம்பாஷிப்பது போல ஒரு கூச்சல் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.

இதையெல்லாம் பார்த்து பிரமித்துப்போன சுப்புலட்சுமி, சிறிது நேரத்துக்குப் பிறகு, சுவாமி... இந்தப் பறவைகளை எங்கெங்கிருந்தோ வரவழைச்சு விளையாடிக்கிட்டிருக்கீங்க. ஆனா, ரொம்ப நேரம் இவை இங்கிருந்தா, பசியும் தாகமும் வந்து விடாதா? இவற்றின் குஞ்சுப் பறவைகள் தங்கள் பெற்றோரைக் காணாது தவிக்காதா?" என்று மிகுந்த ஆதங்கத்தோடு வினவினாள்.

ஓஹோ! சரி! நீ அப்படி நினைக்கிறியா? அப்ப இந்தப் பறவை களைத் திருப்பி அனுப்பிச்சுடலாமா?" என்று கூறி சிரித்த சேஷாத்ரி சுவாமிகள், தன் மேல் வஸ்திரத்திலிருந்து ஒரு நூலைப் பித்து வெளியே எறிந்தார். அவ்வளவுதான்! ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல எங்கிருந்தோ வந்து அங்கே அமர்ந்துகொண்டிருந்த அத்தனை பறவைகளும் கூட்டமாகப் பறந்து சில நொடிகளில் அந்த இடத்தை விட்டு மறைந்துபோயின. அடுத்த நொடி, அத்தனை ஆயிரம் பறவைகள் வந்த சுவடே அங்கு இல்லை. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் வழி வந்தவர்கள் இன்றும் கூட திருவண்ணாமலையில் இருக்கிறார்கள்.

திருவண்ணாமலை அக்னி மலை. அதனால் அந்த ஊரில் வெப்பம், வறட்சி அதிகம்தான். ஒரு முறை மழையில்லாமல் அங்கே உள்ள மக்களுக்குக் குடிநீர் அளிக்கும் ஏரி, குளங்கள், கிணறுகள் எல்லாம் வறண்டுபோயின. ஜனங்கள் தண்ணீரில்லாமல் தவித்துப் போனார்கள். ஐயன்குளம் தெருவைச் சேர்ந்த அர்த்தநாரி ஐயர் என்பவர் சுவாமிகளிடம் வந்து மண்டி யிட்டு வணங்கி, சுவாமி... இந்த ஊரில் மழை பொழிய, ஜனங்களின் தண்ணீர் கஷ்டம் தீர, அனுக்ரஹம் செயக் கூடாதா?" என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.

அவர் கேட்ட நேரம் வானம் பளீரென்று நீல நிறத்தில் மேகமேயில்லாமல் இருந்தது. சுவாமிகள் தான் நின்று கொண் டிருந்த வீட்டின் வாசல் வராந்தா வில் இருந்து வானத்தையே அண்ணாந்து பார்த்தார். பெரிய மழையில் துணியெல்லாம் சொட்டச் சொட்ட நனைஞ்சு போச்சு. இப்போ இதை யெல்லாம் காய வச்சாக ணுமே?" என்றார். அர்த்தநாரி ஐயரும் அங்கே நின்றிருந்த மற்றவர்களும் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மேகமேயில்லாத வானத் திலிருந்து திடீரென்று எங் கிருந்தோ ஒரு மேகம் பொத் துக்கொண்டு சடேரென்று கீழே பாந்து குதித்ததைப் போல மழை கொட்ட ஆரம்பித்தது. தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவிடாது கொட்டிய மழை யில் ஏரி, குளம், கிணறு என்று ஊரிலுள்ள சகல நீர்நிலைகளும் நிரம்பி வழிய ஆரம்பித்தன. தெருக்களில் முட்டிக்கால் அளவுக்கு நீர் நிரம்பி ஓடிக் கொண்டிருந்தது.

மழை நின்றவுடன் திரும்ப அதேபோல மேகமேயில்லாத தெளிவான நீல வானம் மக்கள் கண்களில் தெரிந்தது. அத்தனை நேரமும் அங்கேயே இருந்த சேஷாத்ரி சுவாமிகள் மழை நின்றதும், அதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போன்ற முகபாவத் துடன் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)
Post Comment

Post Comment