சுக வாழ்வு தரும் சித்திரை வழிபாடு!


விசேஷம்
மாலதி சந்திரசேகரன் -சூரியனின் ராசி சஞ்சாரத்தை, அதாவது சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முழுச்சுற்றின்போதும் சூரிய பகவான், மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரெண்டு சூரிய மாதங்கள் (ராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறார்.

சித்திரை, வைகாசியை இளவேனில் காலம் என்றும், ஆனி, ஆடியை முதுவேனில் காலம் என்றும், ஆவணி, புரட்டாசியை கார் (மழை) காலம் என்றும், ஐப்பசி, கார்த்திகையை, கூதிர் (குளிர்) காலம் என்றும், மார்கழி, தையை முன் பனிக்காலம் என்றும், மாசி, பங்குனியை பின் பனிக்காலம் என்றும் காலத்தை முன்னோர்கள் ஆறாகப் பிரித்திருக் கிறார்கள். அதன் அடிப்படையில் சூரிய பகவான், முதல் ராசியான மேஷத்தில் பிரவேசிப்பதையே தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.

ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்று என்ன திதி அமைகிறதோ, அந்தத் திதியின் பெயரே அந்த மாதத்தின் பெயராக அமைந்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த தமிழ் மாதம் பிறப்பதை, தமிழ் புத்தாண்டு தினமாக தமிழர்கள் கொண்டாடுவது வழக்கம். இந்தப் புதிய சித்திரை ஆண்டுக்கு, ‘பிலவ’ வருடம் என்று பெயர்.

வராகமிஹ்ரர் என்னும் மாமேதை உஜ்ஜைனியில் பிறந்தார். விக்கிர மாதித்தன் அவை யில், நவரத்தினங் களில் ஒருவராகத் திகழ்ந்த இவர் ஒரு வானியலாளர், கணித மேதை மற்றும் சோதிடர் ஆவார். பல நூல்கள் எழுதிய அவரால் இயற்றப் பட்ட, ‘பிருகத் சம்ஹிதை’ என்னும் நூலில், பிரபவ முதல் அட்சய வரை அறுபது ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பிருகத் சம்ஹிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபது ஆண்டு பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதன் படி, முப்பத்தைந்தாவது ஆண்டாக, ‘பிலவ’ வருடம் குறிக்கப்பட்டுள்ளது.

புதிதாகப் பிறக்கப்போகும் பிலவ வருட புத்தாண்டு தினமான சித்திரைத் திருநாளை எப்படிக் கொண்டாட வேண்டும்?

சித்திரை மாதம் பிறப்பதற்கு முதல் நாள், அதாவது பங்குனி கடைசி நாள் அன்று இரவே, பூஜையறையை சுத்தம் செய்து கோலமிட்டு, ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, புஷ்பம், ஸ்வர்ண ஆபரணம், வெள்ளி நாணயம், ரூபா தாள்கள், இவற்றை வைப்பதுடன் பாரம்பர்ய கனிகளான முக் கனிகளை வைத்து, பச்சரிசி, துவரம் பருப்பு, வெல்லம் ஆகியவற்றை வைத்து, முகம் பார்க்கும் கண்ணாடியுடன், பிலவ வருட புது பஞ்சாங்கத்தை யும் வைக்கவேண்டும். முக்கியமாக, அந்த இடத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் குல தெவ படங்கள் அவசியம் இருக்க வேண்டும்.

இவற்றுடன் முக்கியமான ஒரு பொருளையும் வைக்க வேண்டும். அது, பங்குனி கடைசி நாள், அதாவது சித்திரை பிறப்பதற்கு முதல் நாள் பல ஆலயங்களில், ‘மருந்து நீர்’ என்று சொல்லப்படும் மூலிகை ஜலத்தை, (பொதுமக்களுக்குக் கொடுப்பார் கள்) வாங்கி வந்து சுவாமி படத்துக்கு முன்னால் வைக்க வேண்டும்.

சித்திரை மாதம் பிறந்தவுடன் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி, இந்த மங்கலப் பொருட்களில் கண் விழிக்க வேண்டும். மருந்து நீரை குளிக்கும்பொழுது தலையில் ப்ரோக்ஷணம் செது கொண்டோ அல்லது குளிக்கும் நீரில் கலந்து கொண்டோ குளிக்க வேண்டும். அப்படிச் செவதால் வருடம் முழுவதும் வரும் பல இடர்கள், நோகள் களையப்படும் என்பது நம்பிக்கை.

சித்திரை வருடப் பிறப் பன்று, முக்கியமாக சில வற்றைச் செய வேண்டும். முதலில் காலை எழுந்தவுடன் பூஜை அறையில் இருக்கும் மங்கலப் பொருட்களைக் காண வேண்டும். முடிந்தவரை ஆலயங்களுக்குச் சென்று, பகவானை தரிசனம் செவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில், பூஜை செவதை அன்று தவறவிடக்கூடாது. பூஜை முடிந்த பிறகு, முக்கியமாக, அறுசுவை கலந்த பண்டம் மற்றும் சூரியனுக்கு உகந்த சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

அடுத்து, ‘பஞ்சாங்கம் படித்தல்’ என்று ஒரு வழக்கம் உள்ளது. வீட்டில் பெரியவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் பஞ்சாங்கம் படிப்பதை அறிந்திருந்தால் அவர்கள் படிக்கும்பொழுது சிறியவர்கள் அமர்ந்து முக்கியமாகக் கேட்க வேண்டும். ஏனென்றால், பஞ்ச அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தும் அதன் அங்கங்களாகும்.

திதியை பற்றி படிக்கும்பொழுது திருமகள் அனுகூலமும், வாரம் பற்றி படிக்கும்பொழுது ஆயுள் விருத்தியும், யோகம் பற்றி படிக்கும்பொழுது நோயற்ற வாழ்வும், கரணம் பற்றி படிக்கும்பொழுது காரிய சித்தியும், நட்சத்திரங்கள் பற்றி படிக்கும் பொழுது தீராத வினைகளும் தீரும் என்று அறியப் படுகிறது. ஆகையால், அன்றைய பஞ்சாங்க படனம் நிகழும்பொழுது படிக்க முடிந்தவர்கள் படிக்கலாம் அல்லது பிறர் படிக்கும்பொழுது அவசியம் கேட்க வாவது வேண்டும். அன்றைய தினம் பெரியவர்களிடம் இருந்து ஆசி பெறுவது மற்றும் ‘கை நீட்டம்’ என்று சொல்லப் படும் அட்சயமாக ஆசீர்வாத பணம் ஒரு ரூபாயாவது பெரியவர்களிடமிருந்து பெற்று, சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

சித்திரை சுக்ல பக்ஷ அஷ்டமி அம்பாள் அவதாரம் செத தினம் என்றும், சித்திர குப்தன் சித்ரா பௌர்ணமியன்று அவதாரம் செதார் என்றும், அட்சய திருதியையன்று பிரம்மா சிருஷ்டித் தொழிலைத் தொடங்கினார் என்றும் புராணம் மூலம் அறிகிறோம்.

இனி, பிலவ ஆண்டு பிறக்கும் இந்த சித்திரை திரு நாளில் என்னென்ன பண்டிகை கள் வருகின்றன என்று பார்ப்போம். ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு, 21 ஸ்ரீராமநவமி, 24 ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம், 26 சித்ரா பௌர்ணமி, 27 கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், மே 14 அட்சய திருதியை.

முக்கியமாக, வருடப் பிறப்பன்று தான தர்மங்கள் செதல், சூரிய நமஸ்காரம் செதல் ஆகியவை மிகவும் ஸ்ரேஷ்டத்தைக் கொடுக்கும். அன்று உட்கொள்ளும் மருந்துக்கு அதிக வீரியம் உண்டு. அதனால் உடல் நலத்துக்காக மருந்து உண்பவர்கள், அன்றைய தினம் மருந்தினை சுவாமி படம் அல்லது விக்ரஹத்திடமோ வைத்து வேண்டிக்கொண்டு, உண்ண ஆரம்பிக்கலாம்.

சித்திரை திருநாள் அன்று, புதியதாக உப்பும்,மஞ்சளும் கடையில் வாங்கி உபயோகம் செதல் நல்ல சுபிட்சத்தைக் கொடுக்கும். சித்திரை இரண்டாம் வெள்ளிக்கிழமையன்று, ‘ஓம் தனதா தேவியே நமஹ’ என்கிற மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜபித்து, வெல்லப் பாயசத்தை ஸ்ரீ லக்ஷ்மி தேவிக்கு நிவேதனம் செதால் தனம் வளரும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு பண்டிகையையும் குல வழக்கப் படியோ, பரம்பரை வழக்கப்படியோ அனைவரும் கொண்டாடி வருகிறோம். பண்டிகைகளைக் கொண்டாடுவதில் மனதுக்கு திருப்தி உண்டாகிறது என்பதைவிட, குடும்பத்துக்கு சுபிக்ஷம் ஏற்படுகிறது என்பதுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட விசேஷமான ஒன்றுதான் சித்திரை மாதப் பிறப்பு. மொத்தத்தில், சித்திரைத் திருநாளை அனைவரும் வரவேற்போம். சுபிக்ஷமான சுக வாழ்வைப் பெறுவோம்.

சித்திரை மாத விரதங்கள்!

சித்திரை மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் வாழ்வை வளமாக்கும் என்று கூறுவர். அதில், பரணி விரதம், சௌபாக்கிய சயன விரதம், சித்ரா பௌர்ணமி, பாபமோசனிகா ஏகாதசி போன்ற விரதங்கள் முக்கியமானவையாகும்.

பரணி விரதம் : சித்திரை மாதம் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவருக்கு பூஜை செய வேண்டும். தயிர்சாதம் படைத்து இன்று பைரவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.

சௌபாக்கிய சயன விரதம் : சித்திரையில் வரும் சுக்லபட்ச திரிதியை திதியில் உமாமகேஸ்வரரை துதித்து பூஜை செவது மிகவும் நல்லது. அன்று தான, தர்மங்கள் செவதால் இப்பிறவியில் வளமான வாழ்வும் மறுபிறவியில் கயிலாய லோக பிராப்தியும் கிடைக்கும்.

சித்ரா பௌர்ணமி :சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விழாவன்று மக்கள் பொங்கலிட்டும், அன்னதானம் செதும் வழிபாட்டை மேற்கொள்கின்றனர். இன்று பெண்கள் விரதமிருந்து தங்கள் வாழ்வில் செத பாவங்களைப் போக்குமாறும், இனி வரும் நாளில் பாவம் செயாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டு கின்றனர். நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்கவும் பிரார்த்திக்கின்றனர்.

பாபமோசனிகா ஏகாதசி : சித்திரை மாத தேபிறை யில் வரும் ஏகாதசி பாப மோசனிகா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இன்று விரதம் மேற்கொண்டு திருமாலை வழிபட, பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.


Post Comment

Post Comment