தலையங்கம்


விழித்திருப்போம் வரும்முன் காப்போம்
-இந்தியாவில் கொரோனா 2வது அலை தொடங்கிவிட்டது என்று எச்சரிக்கப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிகரித்த கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாதம் இறுதிவரை நீட்டிக்கப் பட்டு படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. தேர்வு இல்லாமலேயே ஆல் பாஸ் செயப்பட்டது. இந்நிலையில் இவ்வாண்டு முதல் பள்ளிக்கூடங்கள் வழக்கம் போல திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் 2வது அலை தொடங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிலும் அதேபோன்ற ஒரு பாதிப்பை ஏற்படுத்த வாப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்தியாவில் 10 மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த ஒரு நபர் நடமாடிக்கொண்டே இருப்பதால், ஒரே மாதத்தில் 400க்கும் மேற்பட்டோருக்கும் நோயைப் பரப்பக்கூடும் என்கிறது வல்லுநர்களின் அறிக்கை. இதன் காரணமாக நோயின் தாக்கம் அதிகமாகி, மாநில அரசுகளின் மெத்தனம் காரணமாகத் தடுப்பூசி போடும் பணிகளும் கிராமப்புறங்களைச் சென்று சேரவில்லை.

இதன் விளைவு பல்வேறு இடங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஒரே நாளில் 312 பேர் பலியாகியிருப்பது இதுவே முதல் முறை. தமிழக அரசு இயந்திரம் தேர்தல் பணிகளில் முடங்கி செயலிழந்து நிற்கிறது. நகரங்களில் கொரோனா விழிப்புணர்வில் மற்றுமொரு சிக்கலும் எழுகிறது. தடுப்பூசி போட்டாகிவிட்டது. இனிமேல் அந்த நோ நம்மை அண்டாது என்கிற நம்பிக்கையோடு, முகக்கவசம் ஏதுமின்றி உலா வருகின்றனர். கோயில் திருவிழா, அரசியல் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஆகியவற்றில் கொரோனா முன்னெச்சரிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மக்கள் கடந்த ஆண்டு ஊரடங்கால் பெரும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ளதால், மீண்டும் கொரோனாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அதற்காகக் கொடுக்கப்போகும் விலை மனித உயிர்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

அகில இந்திய அளவில் கொரோனா பாதுகாப்பில் செம்மையாகச் செயல் பட்ட தமிழக அரசின் இப்போதைய அறிவிப்புகளும் அரசியல் தலைவர்களின் வேண்டுகோள்களும் சமூக இடைவெளியைப் பெயரளவிற்கே வலியுறுத்து கின்றன.தொலைக்காட்சிகளில் தமிழகத்தின் பல நகரங்களில் அரசியல் தலைவர் களின் தேர்தல் பரப்புரைப் பயணங்களில் காணும் மக்கள் அலை அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு தனிமனிதனும் ‘நமக்கு நாமே’ என்ற அடிப்படையில் கொரோனா தொற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள கற்பிக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளான கூட்டத்தைத் தவிர்த்தல், சமூக இடைவெளி, கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்து விழிப்புணர்வுடன் வருமுன் காப்பானாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

Post Comment

Post Comment