காட்டு வெளியினிலே...இந்திரநீலன் சுரேஷ் - விஜய் டாலிதம்பிகளா, எங்க போறீங்க...? காட்டாறு தாண்டி, மலைமேல ஏறாதீங்க... பிச்சிப் புள்ள பிடிச்சிக்கும்" என்றார் ஆடு மேத்துக் கொண்டிருந்த பெரியவர்.

சைக்கிளில் வந்து நின்ற கல்லூரி இளைஞர் களிடம் ஆர்வம் தொத்திக்கொள்ள, யாரு அது? நீங்க பாத்திருக்கீங்களா பெரியவரே?" நா பாத்ததில்லை; எங்க அப்பாரு பாத்திருக்காரு. அது மோகினி!"ஹா... ஹா... கால், இருந்துச்சா...?" வினோத். தம்பி, விளையாட்டா எடுத்துக்காதீங்க. குழந்தைகள், சின்ன வயசுப் பொண்ணுங்க, பசங்களைக் கண்டால் அடிக்காம விடாது."

போனமுறை ‘சாதனா’ காலேஜ் பொண் ணுங்க குழு இப்படித்தான், என் பேச்சைக் கேட்காம, ‘காட்டாறை’ தாண்டி ஏறினாங்க... பிச்சிப் புள்ள அடிச்சதுல எல்லாரும் அலறி அடிச்சி ஓடி வந்துட்டாங்க. ஒரு புள்ளைக்கு வாயில நுரைதள்ளி... இதா... இந்த மேட்டுல தான் கொண்டுவந்து கிடத்தினாங்க. நா(ன்)தான் பச்சிலை அரைச்சு ஊத்தினேன். போற மூச்சைப் பிடிச்சு நிறுத்தினேன். பொறகு, வண்டி கட்டி எடுத்துட்டுப் போனாங்க. ஒரு வாரம் ஆச்சாம் கண்ணு தொறக்க..."

இவர், எல்லார்கிட்டையும் இதே கதையைத்தான் வுடுவாரான்னு கேட்டுச் சொல்லு சரவணா" என்றான் அமித், ஆங்கிலத்தில்.ஐயா... நாங்க சும்மா சுத்திப் பாக்கத்தான் வந்தோம். காட்டாறு தாண்ட மாட்டோம். சைக்கிள் எல்லாத்தையும் இங்க விட்டுட்டுப் போகலாமா?"சாக்கிரதை தம்பி... மேல் வானம் வேற இருண்டு கிடக்கு... சொல்லிப் புட்டேன்..."

சேலத்தில், பொறியியல் கல்லூரி முதல் வருடம் சேர்ந்த சில நாட்களி லேயே இந்த ஐவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

+2வை சமீபத்தில் கடந்ததால் சிறுவன் என்ற நிலை விலகி, இளைஞன் என்ற குறியீடு கிடைத்த பெருமிதம். புகழ்பெற்ற இன்ஜினீயரிங் காலேஜில் சீட் கிடைத்த மகிழ்ச்சி. வீட்டில் இல்லாமல் முதன் முதலாக வெளியில் தங்கும் சுதந்திரம் எனப் பல சேர, சினிமா, ஹோட்டல், வார இறுதி நாட்களில் ஒன்றாக ஊர் சுற்றுவது. மேட்டூர், சேர்வராயன் மலை, கல்ராயன் மலை என உற்சாகப் பயணங்கள்.

அமித்தின் சொந்த ஊர் டேராடூன். மத்திய பணியில் இருக்கும் தந்தைக்கு அவ்வப்போது இடமாற்றம். வினோத் - ஆந்திராவின் நகரி, போஜன் கோத்தகிரி. செந்திலுக்கு திருச்சி பக்கத்தில் குணசீலம். இதில் சரவணன்தான் லோக்கல். (ஏற்காடு மலை அடிவார கிராமம்)

மச்சான் இந்த வாரம் எங்கடா?" இப்படி வாரம் வாரம் ஊர் சுத்திட்டு இருந்தால் செமஸ்டர் ஊத்திக்கும்" என்றான் செந்தில். வாழ்க்கை என்றால் அனுபவங்களைச் சேகரிப்பது. தேடல் இல்லைனா, வாழ்க்கை யில் வசீகரம் இல்லைன்னு எங்க அப்பா சொல்லுவாரு" அமித்.

கொல்லிமலை, மாதேஸ்வரன் மலைக் கெல்லாம் போயாச்சு. பக்கத்தில இருக்கிற ஏற்காட்டுக்கு இன்னும் போகலையே?" என்றான் செந்தில்.

எங்க ஊர் பக்கத்துல, ஏற்காடு போறதுக்கு ஒரு பழைய மலைப்பாதை இருக்குன்னு சொல்லிக் கேட்டிருக்கேன். எங்க தாத்தா காலத்தில அந்த வழியா ஏற்காடுக்கு ரோடு போட ஆரம்பிச்சு, ஏதோ காரணத்தினால பாதியிலேயே கைவிட்டுட்டாங்களாம். ஆனா ஒத்தையடிப் பாதை இருக்காம். பல இடத்துல செடி வளர்ந்து மூடிக்கிச்சாம். ரொம்ப அமானுஷ்யமா இருக்கும்ங்கிறதால யாரும் போறதில்ல."

சம்திங் இன்டரஸ்ட்டிங்!" என்றான் அமித். நாம ஏன் அதை ‘எக்ஸ்ப்ளோர்’ பண் ணக் கூடாது? மேல சொல்லு..."எங்க ஊருக்கு மலைத்தேன் விக்கிறவரு சொல்லியிருக்காரு. அந்தப் பகுதில சாதாரண மாகப் பார்க்கமுடியாத பறவைகள், பூ, மரங்கள் இப்படி ரொம்ப ரம்யமா இருக்கு மாம். கீழ பாத்தா சேலம் தெரியுமாம். ஆனா... அவங்களே பாதி தூரத்துக்குமேல ஏறிப் போனதில்லை. அபாயமான பகுதி."

அப்படின்னா நாம கண்டிப்பா போகிறோம்" என்றான் போஜன். எங்க நீலகிரில நான் ஏறாத மலையா? கையில ஒரு வீச்சுக் கத்தி வச்சிக்கிட்டு, புதரை அகற்றிட்டு மேல போயிக்கிட்டே இருப்போம். ரங்கசாமி பீக், கேத்தரின் பால்ஸ், குந்தா டேம் என்று நான் போகாத இடமில்லை. இதெல்லாம் நமக்கு ஜுஜுபி மச்சான்."

சரவணன் முதன்முதலாகக் கவலைப்பட ஆரம்பித்தான். இவங்ககிட்ட சொல்லியிருக் கக் கூடாதோ? ஒருமுறை கிராமத்துக்குப் பக்கத்திலிருக்கும் பேட்டை நண்பர்களுடன் சைக்கிளில் ஏற்காடு அடிவாரம் வரை போ வந்ததற்கு, அப்பா விளாரினது ஞாபகம் வந்தது. அமித் பிடிச்சா ஒத்தைக் கால்ல நிற்பானே.

அதுதான் நடந்தது. அமித் எல்லோரையும் கிளப்பி, அவனவன், அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ்னு என்னமா ரிஸ்க் எடுக்கிறான். உத்தரகாண்ட் வந்து பாருங்க. எங்க அப்பா பனிமலை ஏற்றக்காரர். என்னைப் பல இடத்துக்குக் கூடவே கூட்டிப் போயிருக்காரு. நாகதீப மலை ஏறியிருக்கேன். நாக் திப்பா என்பார்கள். மலைப் பாறைகளைப் பார்த்தா பாம்புக்கு மேல இருக்கிற மாதிரி பட்டை பட்டையா வரி இருக்கும். ஏறும்போதுதான் கஷ்டம். உச்சிலே ஏறிக் கீழ பார்த்தா, உலகமே நம்ம காலடில கிடக்கும். இதெல்லாம் அனுப விக்காம இன்னும் எத்தனை நாள்தான் இட்லி, தட்டு வடை சாப்பிட்டுக்கிட்டு இருப்பீங்க?"

அந்தக் கடைசி வரிகள் செந்திலுக்கு மிகவும் வலிக்க, நாம் போறோம்டா சரவணா... கண்டிப்பா போறோம்" என்றான். வாடகை சைக்கிள்களை ஒப்படைத்து விட்டுக் கிளம்பிய நண்பர்கள் அந்த மிகப் பழைய, விளம்புகள் சேதமடைந்த, குண்டும் குழியுமான, கைவிடப்பட்ட, வண்டிகளின் டயர் கண்டிராத அந்தத் தார்ச்சாலையில் நடக்க ஆரம்பித்தார்கள். சாலையின் நடு நடுவே விரிசல்களில் செடிகள் முளைத் திருந்தன.

சற்று நேரம் நடந்ததில் குறுக்கே ஒரு சிறிய பாலத்தின் சிதிலங்களைத் தூரத்தி லிருந்தே பார்க்கமுடிந்தது.இதுதான் அந்தக் காட்டாறு போற இடம்!" என்றான் சரவணன்.

என்றோ வந்த காட்டாறு வெள்ளத்தில் அந்தப் பாலம் தூக்கி வீசப்பட்டுள்ளது தெரிந்தது. பாலத்தின் ஒரு தூண் அருகிலிருக்க, அடுத்தது 20 மீட்டர் தாண்டி, ஒரு பாறையின் நடுவே அனாதையா செருகி யிருந்தது.இந்த இடத்தைத் தாண்டித்தான் போகக் கூடாதுன்னு சொன்னார்களா?" என்றான் செந்தில்.இதோ தாண்டிட்டோமே!" என்று அந்த வெற்று மணலில் குதித்து, அடுத்த கரையில் ஏறினான் அமித். தொடர்ந்தான் வினோத்.

க... மான் வேற யார் தாண்டி வரீங்களோ அவங்களுக்கு சேலம் திரும்பினதும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தருவேன்." வர வர இவனோட ராவடி தாங்க முடியல."

தொடர்ந்து ரோடு சற்று மேடாக ஏற ஆரம் பிக்க, மலை ஏற்றத்திற்கான கட்டியம் கூறுவ தாகத் தெரிந்தது.

ஐந்தாறு கொண்டை ஊசி வளைவுகள் கடந்தபின் கீழே நடுவைப்பட்டி, தீவட்டியான் பட்டி போன்ற சுற்றுவட்ட கிராமங்கள் உயிர் பெற்றன.

மச்சான், அரைகுறை தார் ரோடு இதோட முடிஞ்சு, கப்பி ரோடு ஆரம்பிக்குதடா."

உயரே ஏற ஏற இயற்கை தன் பச்சைப் பட்டாடையை விரித்துக் காண்பித்தது. பத்துக்கும் மேற்பட்ட பச்சைக் கிளிகள் ஒன்றாகப் பறந்து சென்றன.

‘சே! எப்படி ஒரு அழகை மிஸ் பண்ணி யிருப்போம்’ என சரவணனே நினைத்தான்.ஊருக்குத் திரும்பியதும் தன் பழைய கிளாஸ் மேட்களைப் பார்த்து இதைச் சொல்ல வேண்டும்.

கீழே மேக மூட்டமா இருந்திச்சி. இப்ப வெயில் அடிக்குது பாரேன். சூரியனைச் சுற்றி ஓர் அழகான கருவட்டம்."மச்சான், தாகமா இருக்கு. அந்த வாட்டர் பாட்டிலை எடு."இதுதான் லாஸ்டுபாட்டில். முடிச்சிடாத."மேல ஏதாவது சுனை இருக்கும், பாத்துக்கலாம் விடுடா."

இப்போது கப்பி ரோடும் முடிந்து வெறும் மண் சாலை. சுற்றிலும் வேலிகாத்தான் செடிகள். சாலை குறுக ஆரம்பித்திருந்தன.

மச்சான், ஒரு பிளாஸ்டிக் பேப்பரோ, பேப்பர் குப்பையோ நாம வர வழில பாக்கல, கவனிச்சயா."அட ஆமாண்டா! (இது) கவலைப்பட வேண்டிய விஷயமா எனக்குத் தோணுது."கவலையை விடுடா.. கீழப் பாரு கருப்பூர். அதோ சேலம் ஏர்போர்ட் தெரியுது!"ஆமாம். சீனரி அட்டகாசமா இருக்கு!"

அடுத்த சில நிமிடங்களில் அந்த மண் ரோடும் முடிய புதர் ஆரம்பமானது. அதனருகே காட்டாறு கடந்த சுவடு.போஜன், தன் முதுகில் மாட்டியிருந்த பேக்கிலிருந்து வீச்சுக் கத்தியெடுத்து புதர் களை விலக்க, சிறிய ஒத்தையடி பாதை மேல் நோக்கி ஏறுவது தெரிந்தது.

வெயில் சூடு குறைந்தது. ஆனால், காற்று குறைந்து சற்று வெக்கையாக இருந்தது. உயரத்தால் ஏற்படும் மிதமான குளிரை உணர முடியவில்லை.புதர் சூழ்ந்ததால் இருள் பிரதேசங்கள் அதிகரித்தன.

‘மச்சான், தாகம் ஒட்டிக்கிதுடா" என்றான் வினோத்.எனக்கும்தான். முதல் வேலை தண்ணி யைத் தேடறதுதான்" என்றான் அமித்.அவர்கள் அங்கும் இங்கும் தேடிப் பார்த் தாலும் தண்ணீர்க்கான சுவடே தெரிய வில்லை.

சில இடங்களில் பாறைகள் மேல் எட்டி ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. அடியில் காட்டாறு அடித்துச் சென்ற வழி பழுப்பு நிறமாகப் படிந்திருந்தது.இப்போது வெயில் சுத்தமாகப் போ வானம் இருள ஆரம்பித்து விட்டது. மழைக்கான அறிகுறிகள்.

மச்சான், அங்க பாருடா!" என்றான் அமித்.ஒரு பெரிய பாறையை ஒட்டி ஒரு சிறு தட்டுக் குடிசை போன்ற அமைப்பு. பாதி நீட்டிக்கொண்டி ருந்த பாறை மேல் காந்த மரக் கிளைகள், தழைகள் கூரை போல் மூடியிருக்க மிகச் சிறிய பொந்து போன்ற துவார வாசல்.எனக்குத் தண்ணி குடிச்சே ஆகணும். இங்க யாராவது இருப்பாங்களா? உள்ள போ தண்ணியிருக்கா பாக்கலாம்" என்றான் அமித்.

வேணாண்டா. பயமா இருக்கு."நீ தள்ளுடா, நான் வர்றேன் அமித்" என்றான் வினோத்.அமித் மெதுவாகத் தலையை உள் நுழைத்து ஹலோ யாரு?" என்றான். பிறகு குனிந்தவாறே ஒரு காலை உள் வைத்துத் தடுப்பைத் தாண்டினான். அந்த அமைதி சற்று விசித்திரமாக இருந்தது.தொடர்ந்து அடுத்த காலை வைத்தான்.

மேல்பாகம் உடைந்த ஒரு பானை இருந் தது...எட்டிப் பார்த்தான். உள்ளே தண்ணீர்!ஒரே தூக்காக அந்தப் பானையைத் தூக்கிக் குடிக்க முற்பட சரசரவென காந்த இலைகள் உதறும் சப்தம். தொடர்ந்து அந்த இலைகளும் தழைகளும் பறக்க, பாறையின் இடுக்கே உள் சந்து போன்ற அமைப்பிலிருந்து சடார் என அந்த முதிய பெண் உருவம் வெளிப்பட்டது.

சடை சடையா சிக்கு பிடித்த தலை மயிர்க்கால்கள், கோடு கோடா சுருக்கம் விழுந்த நெற்றி, குழி விழுந்த நெருப்புக் கண்கள், எலும்பு தெரியும் அளவிற்குச் சதை யில்லாத உடல், சாட்டையா கைகள், பல ஆண்டுகள் கடந்த நைந்த துணி யுடுத்தி படு கோரமான உருவம், திடீரென வெளிப்பட... அமித் விக்கித்து மயிர்க்கூச்செறிய நின்றான். கை கால்கள் நடுங்க, பானை நழுவி உடைந்தது!

யாருடா நீங்க? எங்கடா வந்தீங்க?" என்று பெருத்த கரடு முரடான குரலுடன் அவள் அமித்தின் கழுத்தைப் பின்புறமாக இரும்பு குறடு போல் நெக்கிப் பிடித்து, ஒரே தள்ளாகத் தள்ள அவன் நிலைகுலைந்தான்.

அடுத்த நிமிடம் அவனை முரட்டுத்தனமாகத் தன் எலும்புக் கரங்களால் பிடித்துத் தர தர வென இழுத்து வெளியே எறிந்தாள். தடுமாறிய அமித், உள்ளே நுழைய எத்தனித்த வினோத்தின் மேல் விழ, வினோத் அந்தக் காட்சியைக் கண்டு உறைந்தான்.

எல்லோரும் ஓடுங்கடா இங்கிருந்து" என அவள் வீறிட்டுக் கத்த, அவளது ஆக்ரோஷத்தைப் பார்த்த செந்தில் திடுக்கிட்டு, பிச்சிப் புள்ள..." எனக் குழறினான்.

அவள் இப்போது வினோத்தையும் இறுக் கிப்பிடிக்க அவன் அந்த இரும்புக் கரத்தி லிருந்து பிரயத்தனப்பட்டு விலகி ஓட ஆரம் பித்தான்.

அவள் அவர்களை நோக்கி கற்களை தொடர்ந்து வீச, அமித் அந்தப் பாறையிலிருந்து நேரடியாகக் குதித்ததில் உடம்பெல்லாம் சிராப்பு ரணமாக எரிய, உடம்பு படபடப்பு அடங்காமல் வெறித்தனமாக ஓட, அவன் பின் மற்றவர்களும் நிலைதடுமாறி ஓட ஆரம்பித்தார்கள்.

போஜன் எங்கடா?" அவனும் பின்னால ஓடிவரான். திரும்பிப் பார்க்காம ஓடு."பிச்சி அந்தப் பாறையின் மீது ஏறிப் பார்த்தாள். கீழே புள்ளி யாக அந்த ஐவரும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

மெதுவாக மண் வாசனை வீசியது. சில நிமிடங்களில் ‘ஹோ...’ எனச் சப்தம் ஆரம்பிக்க, பாறைகள் உரசும் ஓசையும், நீரின் சலசலப்பும் கேட்க ஆரம்பித்தது. மழைத் தூறல் மெதுவாகத் தொடங்கியது.பிச்சி வாவிட்டு பலமாகச் சிரித்தாள்.

வாடி...! வாடி...! காட்டாறே...! இன்னிக்கும் உன்கிட்ட இருந்து குழந்தை களைக் காப்பாத்திட்டேன் என்று எக்காள மிட்டாள்.‘இளம் வயதில், சுள்ளி பொறுக்கவந்த நான், திடீர் காட்டாறாகிய உன்னிடம் என் இரு சிறு குழந்தைகளையும் ‘அம்மா...அம்மா...’ என்று கதறக் கதற என் கண் முன்னே பறிகொடுத்தேன். அந்தப் பிஞ்சுகள் கைதூக்கி ‘அம்மா... அம்மா... காப்பாத்து’ எனக் கதற, நான் பாறைகள் மேல் இங்கும் அங்கும் ஓடிச் செவதறியாமல் திகைத்தேன்.கண்முன்னே நீ அவர்களைக் கொண்டு செல்வதைப் பார்த்துக் கதறினேன்.

உடனே குதித்து என் குழந்தைகளோடு போயிருக்க வேண்டாமா? போகாமல் விட்டு விட்டேனே... பாவி நான்... ஆனால், அன்றே இந்தப் பாறை மேல் ஓங்கி அறைந்து சபதம் எடுத்தேன். இனி ஒரு உயிர்கூட உனக்குக் காவு கொடுக்க மாட்டேன் என்று. அந்தச் சபதத்தை இன்றுவரை காப்பாற்றிவிட்டேன்.உயிர் உள்ள வரை காப்பாற்றுவேன். உணக் காயிற்று எனக்காயிற்று பார்த்துவிடலாம்’ (என்று மனசுக்குள் சொல்லி), ஓ... ஓ..." எனப் பெருங்குரல் எடுத்துக் கத்தினாள். அழுதாள்.

அந்த சப்தத்தையும் தாண்டி பெரும் ஓசை யுடன் கற்களையும் செடி, கொடி, கிளைகளையும் முறித்தவண்ணம் அந்தக் காட்டாறு பெரு வெள்ள மா கீழே பாறை யின் அடியில் நுழைந்தது.சுழித்துக்கொண்டு பெரு வேகமெடுத்து, வழியில் உள்ள மரம் செடிகளையெல்லாம் காவு கொண்டு பேரருவியாக இறங்கியது.

கரையைத் தாண்டி மேல் ஏறி ஓடிக் கொண் டிருந்த நண்பர்களிடம் சரவணன், திரும்பிப் பாருங்கடா!" என்றான்.சற்றுமுன் கடந்த பாதையில் நுழைந்த காட்டாறு வெள்ளம் உடைந்த பாலத்தின் மிச்சம் இருந்த தூணையும் ஆக்ரோஷமாகத் தள்ளி உடைத்துக்கொண்டு போக, அதன் சுழற்சியால் பறந்து சிதறிய நீர்த் திவலைகள் அவர்கள் மீதும் தெளித்தன.

அனைவர் கண்களும் மலை மீது நோக்கின. பனித்த அவர்களின் கண்களை மழைத் துளிகள் துடைக்க ஆரம்பித்திருந்தன.
Post Comment

Post Comment