மேகங்கள் வாழும் சொர்க்கம்

ஓடும் மேகங்களே...
ரமணன்இந்தியாவிலேயே மிக அழகான, இயற்கையின் அத்தனை செல்வங்களையும் ஒருங்கே பெற்ற வடகிழக்கு மாநிலங்களில் சிலவற்றைப் பார்க்க இந்தப் பயணம்.

ஏழு அழகிய சகோதரிகளாக வர்ணிக்கப்படும் இந்த மாநிலங்களிலேயே எல்லாப் பகுதிகளும் எழில் கொஞ்சும் இயற்கையின் பேரழகு மிளிரும் மிகச் சிறிய தான மாநிலமான மேகாலயாவிலிருந்து பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டு, அசாம் மாநிலத்தின் முக்கிய நகரான கௌஹாத்தியிலிருந்து மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் சென்று கொண்டிருக்கிறோம்.

ஷில்லாங் நகரில் ரயில் நிலையம், விமான நிலையம் இல்லாததால் கௌஹாத்தியிலிருந்து சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். 125 கி.மீ. பயணித்தால் 5000 அடி உயரத்திலிருக்கும் ஷில்லாங்கை அடைய முடியும். வளைந்து வளைந்து மலைகளுக்கிடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை.

மாலையை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரம். இருபுறமும் உயரமான மரங்கள் அடர்ந்த அழகான அமைதியான வனப்பகுதி. இதமான குளிர் தொலைவில் மெல்லிய வெள்ளிக் கோடுகளாக அருவிகள். வனங்கள் இல்லாத பசுமைப் பகுதிகளில் சிறு ஏரிகள் எல்லாம் நம் ஆவலை அதிகரிக்கின்றன. நம்மோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடுவதுபோலப் பஞ்சுப் பொதிகளாக வேக மாக நகரும் மேகக்கூட்டங்களைப் பார்க்கும் போது, ‘மேகங்கள் வாழும் சோர்க்கம்’ என்று சமஸ்கிருத இலக்கியங்களில் இந்த இடம் வர்ணிக்கப்பட்டிருப்பது சரிதானே என்று தோன்றிற்று.

சட்டென்று மாறிய காட்சியாகக் குறுகிய சாலைகள், சந்தடிகள் நாம் ஷில்லாங் நகருக் குள் வந்ததைச் சொல்லுகின்றன. எல்லா மலை நகரங்களைப் போல மிகச் சிறிய சாலைகள், மெல்ல நகரும் வாகனங்கள். ஆனால் எவரும் ஹாரன் அடிக்கவே இல்லை. போலீஸ்காரர் கண்ணில் படவில்லை. அமைதியாகவும், பொறுமையாகவும் வாகனத்தை ஓட்டு கிறார்கள். நிச்சயமாக இங்கிருப்பவர்களுக்கு நமது நகரங்களில் வாகனம் ஓட்டுபவர்களைப் போல பிளட்பிரஷர் தொல்லை இருக்காது.

மாநிலத் தலைநகர் ஷில்லாங்கின் நடுவில் ஒரு சிறிய அழகான ஏரி, எல்லா மலைநகர ஏரிகளைப் போலக் கன்னாபின்னாவென்ற வடிவம். ஏரியின் கரையெல்லாம் செரிபிளாசம் பூக்கள். பெரிய பார்க். ஆண்டுதோறும் இந்த சீசனில் மரங்களின் இலைகள் முழுவதும் செரி மலர்களாகவே பூக்காடாகவே மாறுவது நடைபெற்றாலும், இந்த ஆண்டுமுதல் ‘செரிபிளாசம் திருவிழா’ கொண்டாட ஆரம்பித் திருக்கிறார்கள்.

இது இந்தியாவின் முதல் செரிபிளாச விழா என்ற அறிவிப்பைப் பார்த்ததும் நாமும் இதில் கலந்துகொள்கிறோம் என காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறோம். இந்த ஒரு வார விழாவில் மாநில இசை, நடன, நாடகக் கைவினைக் கலைஞர்களும், வில்வித்தை வீரர்களும் தலைநகருக்கு நிகழ்ச்சிகள் அளிப் பதற்காக அழைக்கப்பட்டிருந்தார்கள். உணவுத் திருவிழாவும் உண்டு. (மூங்கில் பூக்கறி, வேகவைத்த அன்னாசிக் கா என நாம் அறியாத சில வகைகள், கொழுக்கட் டைகள். சொன்னாலொழிய தெரியாத சிக்கன் கொழுக்கட்டை!

ஏரியைவிட அதைச் சூழ்ந்திருக்கும் பார்க் பெரிது. படுசுத்தமாக இருக்கிறது. பூந்தொட்டிகளைப் பாதுகாக்கும் மூங்கில் வீட்டிலிருந்து, கோன் ஐஸ்கிரீம் வடிவில் தொப்பி போட் டுக்கொண்டிருக்கும் குப்பைத்தொட்டி வரை எல்லாமே அழகாக இருக்கிறது. இந்தச் சின்ன மாநிலத்தில்தான் எத்தனை அழகான விஷயங்கள் என ஆச்சர்யமாக இருந்தது.

பார்க்கின் ஒரு பகுதியில் எந்த ஆடம்பரமும் இல்லாமல் கறுப்புத் துணியின் பின்னணியில் மேடை. அருகிலிருக்கும் மரங்களிலிருந்து ஸ்பாட் லைட்ஸ். ஓர் அழகான இளம் பெண் ஆங்கிலப் பாடலைப் பாடிக்கொண்டிருக் கிறார். தாளத்துக்கு ஒரே ஒரு கீபோர்ட் மட்டும்தான். அதுவும் மேடைக்குக் கீழேதான். உட்கார்ந்து பாடலைக் கேட்க நாற்காலிகள் கிடையாது. பலர் நின்றுகொண்டும் புல் தரை யிலேயே குடும்பமாக உட்கார்ந்தும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தது ஒரு கித்தார், தொடர்ந்து நீ..........ண்ட புல்லாங் குழல். எல்லாமே வெஸ்டர்ன் இசைதான். உள்ளூர் பாடல்கள் பாடமாட்டார்களா எனக் கேட்ட நம்மை வியப்புடன் பார்த்தார் அருகிலிருந்தவர்.

இவர்கள் மிகப் புகழ் பெற்ற வெஸ்டர்ன் இசைக் கலைஞர்கள். இந்தப் பெண் 19 ஆல்பம் கொடுத்திருக்கிறார். புல்லாங்குழல் வாசித்தவருடைய டியூனும் பாடலும் அவருடையது. அவர் ஹாலிவுட் படங் களுக்குப் பணி செகிறவர்" என்றார்.

ஷில்லாங்தான் இந்தியாவின் ‘ராக் இசை தலைநகர்’ இந்த மாநிலத்திலும், அருகில் உள்ள மாநிலங்களிலும் வெஸ்டர்ன் இசை மிகவும் பாப்புலர்" என்றார். அந்தக் கலைஞர் களில் பலர் ஐரோப்பாவில் கச்சேரிகளுக்காக டூர் செல்பவர்கள் என்றும் தெரிந்துகொள் கிறோம். நம் இனிய தேசத்தில்தான் இன்னும் நாம் தெரிந்துகொள்ள எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என நினைத்துக்கொண்டே திரும்புகிறோம்.

குளிர் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஏரியிலிருக்கும் அத்தனை மரங்களிலும் விளக்குகள் பூக்கின்றன. பார்க்கில் இருக்கும் ஒரு சின்ன ரெஸ்டாரண்டில் ‘தென்னிந்திய மசால் தோசை’ என்ற போர்ட் அழைத்தது. போர்டிலிருந்த போட்டோ மட்டுமே நன்றாக இருந்தது. மாஸ்டர் இன்னும் கற்றுக்கொள்ள வில்லை, அடுத்த முறை வருவதற்குள் இவர் நன்றாகக் கற்றுக் கொண்டிருப்பாரோ அல்லது இன்னொரு புதியவரிடம் மாட்டப் போகிறோமோ?

வெளியே வரும்போது போர்டில் ‘குபுலி’ என்ற வார்த்தையைப் பார்க்கிறோம். இங்கு எல்லாப் போர்டுகளிலும் அஸாமி / மேகாலயா மொழி வார்த்தைகளை ஆங்கில எழுத்தில் எழுதுகிறார்கள். (அஸ்சமிங்கிலிஷ்?) அது அஸாமிய மொழியில் தாங்க்யூ என்றார்கள். குறித்துக்கொள்கிறோம். ஆங்கில எழுத்து வடிவில் மொழி இருப்பது நமக்குப் பேச எளிதாக வருகிறது. இங்கிருந்தால் 30 நாளில் இவர்களுடைய மொழியைக் கற்பது எளிது.

‘ஷில்லாங் நகருக்கு ஏன் அந்தப் பெயர்?’ என்று கேட்டுக்கொண்டிருந்த எனக்கு விடை சொன்னவர்களைவிட விநோதமாகப் பார்த்த வர்கள்தான் அதிகம். உள்ளூர்க்காரர் ஒருவர் சொன்ன தகவல் இது: இந்த இடத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடவுளின் அருளால் திருமணம் ஆகாமலேயே தாயாகி விட்ட ஒரு கன்னித்தா (குந்திதேவி, கர்ணன் கதை நினைவுக்கு வருகிறதா?) அந்தக் குழந்தையைப் பிறந்தவுடனேயே ‘அஹலாத்’ எனப் பெயரிட்டு மண்ணில் புதைத்துவிட்டார்.15 ஆண்டுகளுக்குப் பின் ஆஜானுபாகுவாக அவன் மண்ணிலிருந்து எழுந்து வந்து, ‘அம்மா நான்தான் உங்கள் மகன்’ என்று அவருக்கு மாத்திரம் தெரிந்த ரகசியத்தைச் சொன்னார்.

இந்த ஆச்சர்யமான செதியை உள்ளூர் மக்கள் வியந்து, அந்த மகனைத் தெவமகன் என மதித்து மண்ணின் மைந்தன் எனப் பெயரிட்டு (மேகாலயா மொழியில் ஷில்லாங் என்றால் மண்ணின் மைந்தன் என்று அர்த்தம்) வழிபட்டார்கள். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்தப் பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டால் மக்கள் அதிலிருந்து காப்பாற்ற வேண்டி அவரிடம்தான் பிரார்த்திக்கிறார்கள். அந்தத் தெவத்தின் பெயரில் வழங்கப்பட்ட கிராமம்தான் ஷில்லாங். ஷில்லாங் பீ அருகில் அந்தக் கோயில் இருக்கிறது. நீங்கள் அங்கே போனால் பார்க்கலாம்" என்றார். சுவாரசிய மான கதையாகத்தான் இருக்கிறது. பாகுபலி 3ஆம் பாகமாகக்கூட வரலாமென நினைத்துக் கொள்கிறோம்.நகரிலிருந்து 2000 அடி உயரத்திலிருக்கும் ஒரு சின்னக் குன்றின் உச்சிதான் ஷில்லாங் பீக். அங்கிருக்கும் வியூ டவரி லிருந்து பார்த்தால், மேலே நீலவானில் மிதந்து கொண்டிருக்கும் வெண் மேகங்கள், கீழே மலைச்சரிவுகளில் அடர்ந்த மரங்களின் பச்சை நிறம், தொலைவில் ஏதோ ஆறு ஓடும் ஓசையென அழகான வண்ண ஓவியத்தைப் போலிருக்கிறது ஷில்லாங். சற்றுத் திரும்பினால் ஒருபுறம் நகரமாகியிருக்கும் கான்கிரீட் காடும், மறுபுறம் அழகான பசுமைக் காடாகவும் இருக்கும் காண்ட்ராஸ்ட். வரும் தலைமுறை இந்தப் பசுமையை வளர்க்குமோ இல்லை அதையும் கான்கிரீட் காடாக ஆக்கிவிடுமோ தெரியவில்லை.

திரும்பும்போது அங்குள்ள தகவல் பலகையில் நேற்று நாம் கேட்ட கதை எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தபோது, ஓ! இதுதான் அதிகாரபூர்வமான ‘ஸ்தல புராணம்’ என்பதைப் புரிந்துகொள்கிறோம். இந்தியாவின் எல்லா மாநிலங் களிலும் பல நகரங்களுக்கு இப்படிக் கதைகள், தனி வரலாறு கள் இருப்பது ஓர் ஒற்றுமை.

‘நாளை நாம் ஒரு மிக அழகான இடத்துக்குப் போகப் போகிறோம். விடியற்காலையிலேயே தயாராக இருங்கள்’ எனச் சொல்லிவிட்டுப் போனார் நண்பர். அது எந்த இடமாக இருக்கும்? என எண்ணிக்கொண்டே தூங்கப் போகிறோம்.

அமைதியான நதியினிலே...மிகத் தெள்ளத்தெளிவாக ஓடும் நீரோட்டத்தைப் பளிங்கு போல நீர் என்று சொல்லுவதைக் கேட்டி ருக்கிறோம். இந்தப் பயணத்தில் ஒரு பரந்த பரப்பில் அதைப் பார்க்கும் ஒரு வாப்பு. ஷில்லாங்கிலிருந்து 85 கி.மீ. தொலைவில் ஒரு மலைச்சிகரத் துக்கு அருகில் உருவாகிற துவாக்கி என்றழைக்கப்படும் நதி. மிக மிக அமைதி யாக, அழகாக ஓடுகிறது. ‘ஜெநிதா, துவாக்கி’ என்ற இரண்டு மலைச்சரிவுகளுக்கிடையே இமயமலைப் பகுதிகளிலிருந்து ஓடிவரும் ‘உமன்காட்’ என்ற நதி இங்கு சற்று அமைதியாகி ஒரு சின்ன ஏரியைப் போல இருக்கிறது. இந்த இடத்திலிருந்து திரும்பி மீண்டும் இந்த நதி பங்களாதேஷின் உள்ளே செல்லுகிறது. நதி ஓடும் இந்த இரண்டு மலைச்சரிவுகளையும் ஒரு தொங்கு பாலம் இணைக்கிறது. இந்தப் பாலத்தின் ஒரு முனையில்தான் இந்திய பங்களாதேஷ் எல்லை. அதேபோல் நதி திரும்பும் இடத்திலிருந்தும் பங்களாதேஷ் எல்லை தொடங்குகிறது. அதாவது இந்த இடம், நீர், நில வழிகளில் இரு நாட்டின் எல்லைப்பகுதி.

துவாக்கி கிராமத்திற்குள் நுழையும் முன் இருபுறமும் செதுக்கிவைக்கப்பட்ட கற்பலகைச் சுவர்கள் போல நிற்கும் மலைப் பாறைகளின் நடுவில் மரகதப்பச்சை நிறத்தில் ஓடும் ஆறும், காத்திருக்கும் படகுகளும் நம்மை அழைக்கின்றன. நம் காரை வழிமறித்து ஏரியில் படகில் பயணம் செய அழைக் கிறார்கள் சிறுவர்கள். சற்றே ஆபத்தான, சரியான படிகள் இல்லாத மலைச் சரிவுகளில் நம்மை இறக்கி இந்த ஏரியின் கரைக்கு அழைத்துச் செல்லுகிறார்கள். அங்குள்ள நீர் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. மரகதப் பச்சை வண்ணத்தில் நீர் மிக மெல்லிய வேகத்தில் போக்கொண்டிருக்கிறது. கண்ணாடித் தொட்டிக்குள் பார்ப்பதுபோல் பளிச்சென்ற தெளிவு.

இரண்டு பேர் மட்டுமே செல்லக்கூடிய மிகச் சிறிய படகு. அருகில் செல்லும் படகின் அடிப் பகுதியும் அதன் நிழல் நீரின் ஆழத்தி லிருக்கும் மணல் தரையில் விழுவதையும் துல்லியமாகப் பார்க்க முடிகிறது. அவ்வளவு தெளிவாக இருக்கிறது நீர். படகு செல்லு மிடத்தில் நீரின் ஆழம் 12 அடிகளுக்கும் மேல் என்று சொன்னார்கள்.

ஆனால், கீழே கிடக்கும் பளிங்குக் கற்கள் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது போல் பளிச்சென்று தெரிகிறது. துள்ளி விளையாடும் மீன்களைக் கண்ணாடிப் பெட்டிக்குள் பார்ப்பதைப்போலப் பார்க்க முடிகிறது. இரண்டு மிகப்பெரிய மலை களுக்கிடையே அமைதியான நதியில் ஒரு சின்னப்படகில் இப்படி மெல்லச் செல்வது ஓர் இனிய அனுபவம்.

ஓரிடத்தில் நதி வழிந்து சற்று கீழே பாயும் முனையில்தான் இந்தியப் பங்களாதேஷின் நீர் எல்லை தொடங்குகிறது. அதைத் தாண்டி அனுமதியில்லாத படகுகள் செல்ல முடியாது.ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி என்பதையே உணரமுடியாத அளவிற்கு அமைதியாக இருக்கும் இந்த ஏரியில் கிடைக்கும் மீன் மிகச் சுவையானதாம். ஆனால் எளிதில் தூண்டிலில் சிக்காதாம். அதனால் உள்ளூர் படகுகளில் அசையாமல் சிலைகளைப் போல் மணிக் கணக்கில் உட்கார்ந்து, மீன் பிடிக்கிறார்கள். பலருக்கு இதுதான் தொழில். ஏ.டி.எம். கியூ, 2000 நோட்டுக்குச் சில்லறை கிடைக்காத பிரச்னைகள் எல்லாம் இல்லாத கவலை யில்லாத மனிதர்கள்.

ஏரியின் நடுவே ஒரு மணல் திட்டு. அதில் மூங்கில் தட்டிகளாலான ஒரு ஸ்நாக்ஸ் கடை. ஆளில்லாத கடையில் வெறும் காபி ஆற்றிக் கொண்டிருக்கும் தன் நிலை பற்றிக் கவலைப் படாமல், சின்ன சிஸ்டத்தில் சுகமாகப் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார், அதன் முதலாளி யான ஓர் இளைஞர். அந்த மியூசிக் சிஸ்டம் சின்ன சோலார் பேனலில் இணைக்கப்பட்டிருக் கிறது.

இந்த மணல்திட்டில் டிரெக் செய வரும் வெளிநாட்டுக்காரர்களுக்குத் தங்குவதற்கு டெண்ட் வாடகைக்குத் தருகிறார். ஒரு நாளைக்கு 100 ரூபா. பிரஷ்ஷாகப் பிடித்த மீன்களைச் சமைத்துச் சாப்பாடும் கொடுப் பாராம். குடிநீருக்கு, மலையில் இருக்கும் ஒரு சுனையிலிருந்து நதியின் வழியே குழா மூலம் கொண்டுவரும் நீரை, இங்கு பல துளைகளிட்ட மூங்கிலில் விழ வைத்திருக் கிறார். இயற்கையின் ஆசியுடன் 24 மணிநேரக் குடிநீர், மின்சார வசதி செதுகொண்டிருக்கும் புத்திசாலி இளைஞர்.

நதியில் படகு போகும்போது தலைக்கு மேலே பிரம்மாண்டமான தொங்கு பாலம். ‘இது ஒரு இண்டர்நேஷனல் பிரிட்ஜ்’ என்றார் படகுக்காரர். போகும் வழியில் நதியின் கரைக்குப் போகும் வசதியான படிகளுடன் சுற்றுலாத் துறையின் படகு குழாம் கண்ணில் படுகிறது. இங்கு போவிடக்கூடாது என்பதற் காகத்தான் அந்தச் சிறுவர்கள் வழிமறித் திருக்கிறார்கள் என்பதையும், எல்லாச் சுற்று லாத் தலங்களைப் போல இங்கும் ஏமாற்று பவர்கள் இருக்கிறார்கள் எனவும் தெரிந்து வருந்துகிறோம்.

மிகக் குறுகிய ஒரு சாலையில் வளைவாக அந்தப் பாலம் தொடங்குகிறது. இரண்டு எல்லைகளிலிருக்கும் இரும்புத் தூண்களில் இணைக்கப்பட்டுத் தொங்கிக்கொண்டி ருக்கும் அந்தப் பாலத்தில் பயணிக்கும்போது ஆழத்தில் தெரியும் நதி நாம் இருக்கும் உயரத்தைச் சொல்லுகிறது. இன்னொரு பக்கம், வலுவில்லாத பாலம் (பாலத்துக்கு வயது 125). மிக மெதுவாகப் போகவும் என்று சொல்லும் அறிவிப்புப் பலகை பயமுறுத்துகிறது.

சுண்ணாம்புக் கற்களுடன் முன்னே போகும் லாரிகளைப் பார்த்தபின் நம் அச்சம் சற்று குறைகிறது. இந்தப் பாலத்தின் வழியே தினசரி 200க்கும் மேற்பட்ட பெரிய லாரிகள், சுண்ணாம்பு, நிலக்கரிப் பாளங்களுடன் எல்லையைக் கடந்து பங்களாதேஷ் செல்கின்றன. பாலத்தைக் கடந்தவுடன் துவாக்கி கிராமம். இதுதான் இந்திய எல்லை. ஊர் முழுவதும் எல்லையிலிருக்கும் செக் போஸ்ட்டின் அனுமதிக்காகக் காத்திருக்கும் லாரிகள். இதனால் அந்தச் சின்ன ஊரின் எல்லா வீடுகளும் குட்டி ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.நகரைக் கடந்து நாட்டின் எல்லைக்கு வருகிறோம். ஒரு நாட்டின் எல்லை என்பதை உணரமுடியாத, எந்தவித ராணுவக் கம்பீரமும் இல்லாமல், தமிழக மாவட்டங்களுக்கிடையே இருக்கும் ஒரு சாதாரண செக்போஸ்ட் போல (அவைகூட இதைவிட நன்றாக இருக்கும்), ஒட்டுத்தாழ்வாரத்துடன் இருக்கும் சிறிய இடத்தில் இருப்பதைப் பார்த்தபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் வாஹா போலவோ, சிக்கிமிலிருக்கும் இந்தியா சீனா எல்லையான நாதுல்லா கணவா போலவோ, ஒரு ராணுவப் பாணி எல்லையை எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றம்.

‘வெல்கம் டு இந்தியா’ என்ற போர்டும், அதன் அருகில் இருக்கும் தேசியக் கொடியும், ஒரு கௌரவமான மேடைகூட இல்லாமல் மிக மிகச் சாதாரணமாக இருக்கிறது. எல்லையில் ஒரு கேட் கூட இல்லை. ஒரு செக்போஸ்ட் தடுப்புக் கட்டைதான். எல்லைக்கு வெளியே சென்று படம் எடுக்க அனுமதி கேட்டபோது, நீங்கள் 1275 அடி என்று எழுதப்பட்டிருக்கும் கல் வரை போகலாம். அதற்குமேல் போகக் கூடாது" என்றார் அங்கிருந்தவர். அது இரு நாடு களுக்கும் பொதுவான ‘நோமேன் லேண்ட்’ பகுதியாம்.

அங்கிருந்து பங்களாதேஷ் எல்லையைப் பார்த்தால், அது நம் எல்லைக்கு அண்ணனாக இருக்கிறது. மிகச் சாதாரணக் கட்டடம். அதன் முன்னால் பச்சைத் துணியில் ஒரு டென்ட். திறந்தவெளியில் மேஜைகளில் அதிகாரிகள். இரண்டு நாடுகளுமே, ‘இந்த எல்லைப் பகுதிக்கு இது போதும்’ என முடிவு செதிருப்பார்களோ எனத் தோன்றுகிறது.

பாலத்தைக் கடந்து இந்த எல்லை வழி யாகத்தான் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில், இந்தப் பகுதிகளில் கிடைக்கும் சுண்ணாம்புக் கற்களும் நிலக்கரியும் பங்களா தேஷுக்கு ஏற்றுமதி செயப்படுகின்றன. இந்த ஏற்றுமதி இந்த எல்லையைக் கடப்பது வினோதமான காட்சி. லாரி எல்லையில் நிற்கிறது; அதிலிருந்து ஒருவர் இறங்கி, ஓடிச் சென்று பங்களாதேஷ் எல்லை அதிகாரிகளிடம் லாரியின் எண், எடை போன்ற விவரங்கள் அடங்கிய பேப்பர்களை நீட்டி, அதில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்பை வாங்கிக்கொண்டு திரும்பி ஓடிவந்து நமது சுங்க அதிகாரிகளிடம் காட்டுகிறார். அதில் அவர்களும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்பை இடு கிறார்கள். இரண்டும் ஒரு வார்த்தைகூட படிக்கமுடியாத அளவுக்குத் தேந்துபோன முத்திரைகள். இப்போது அந்த லாரி பங்களாதேஷுக்குப் போகலாம்.

இந்தக் கனிமங்கள் அதிகமில்லாத பங்களாதேஷ் இவற்றை இறக்குமதி செது, மின் உற்பத்திக்கும் சிமென்ட் உற்பத்திக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தக் கனிம வளங்களைக் கொண்டு இந்தியாவுக் குள்ளேயே நாம் ஏன் அதைச் செயவில்லை என்ற கேள்வி எழுகிறது. வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு, மத்தியில் வந்த அரசுகள் எதுவும் செயவில்லை என்று எழுந்து கொண்டிருக்கும் குரல்களில் இருக்கும் உண்மை நேரில் பார்க்கும்போதுதான் புரிகிறது. மலையிலிருந்து ஷில்லாங் நகருக்குத் திரும்பப் பயணிக்கத் தொடங்குகிறோம்.

சாலையில் என்.ஹெச். எண்களுக்கு அருகில் ஏ.ஹெச்1 என்ற எண்களையும் பார்க்கிறோம். அதை விசாரித்த பின்னர்தான், அது ‘ஏஷ்யன் ஹைவே’ என்ற சர்வதேசச் சாலை என்பது தெரிந்தது. ஆசியா கண்டத்திலிருக்கும் அத்தனை நாடுகளையும் ஒரே சாலையில் இணைக்கும் திட்டம். நீண்ட நாட்களுக்கு முன் ஐக்கிய நாட்டுச் சபையால் முன்னெடுக் கப்பட்ட இந்தத் திட்டம், நீண்டநாள் தூக்கத்துக்குப் பின் சமீபத்தில் உயிர் பெற்றிருக்கிறது.

இதன்படி ஏசியன் ஹைவே-1 என்பது ஜப்பானில் டோக்கியோவில் தொடங்கி கொரியா, சீனா, ஹாங்காங், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் வழியாக இஸ்தான்புலுக்குச் செல்லும், மிக மிக நீண்ட நெடுஞ்சாலை வழியில் உள்ள நாடுகள் தங்கள் தேசியச் சாலைகளை இதற்காக அனுமதித்து, சில வழிமுறை களுடனும் வசதிகளுடனும், ஏஷியன் நெடுஞ் சாலையாக அறிவிக்க வேண்டும் என்பது ஐ.நா. திட்டம்.

இதன்கீழ் பங்களாதேஷ் செல்லும் இந்தச் சாலையும் வருவதால் போர்ட்களில் ஏ.ஹெச்1 என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் அந்தப் படகுக்காரர், இன்டர்நேஷனல் பிரிட்ஜ்’ எனச் சொல்லியிருக்கிறார். அதன் வழியே இப்போது பங்களாதேஷுக்குப் பஸ்ஸிலேயே போகலாம்; ஆனால் விசா அவசியம். இன்றைய பயணத்தில் ஒரு சர்வதேசச் சாலையில், நமது நாட்டின் எல்லை வரை சென்று திரும்பியிருக்கிறோம் என்று எண்ணியபடி ஷில்லாங் திரும்புகிறோம். நாளை, இந்தப் பகுதிகளை பிரிட்டிஷார் வருகைக்கு முன்னர், பல ஆண்டுகளாக ஆட்சி செது கொண்டிருந்த அரசக் குடும்பத்தினர் வாழும் அரண்மனையைப் பார்க்கப் போக வேண்டும்.

(தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :