கடைசிப் பக்கம்


எது நல்ல காபி?
சுஜாதா தேசிகன் -இரண்டு வாரத்துக்கு முன் நான் வசிக்கும் அபார்ட் மெண்டில் ‘எங்கள் தோட்டத்தில் விளைந்த, நாங்களே வறுத்த காபிப் பொடி விற்பனைக்கு’ என்று ஒருவர் விளம்பரப்படுத்தியிருந்தார். இரவு ஒன்பது மணிக்கு அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பி அரை கிலோ வாங்கி அன்று இரவே காபி போட்டுக் குடித்தேன்.

மறுநாள் விற்றவர் என்னைத் தொடர்பு கொண்டு காபி எப்படி?" என்றார்.

நன்றாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் அதிகம் வறுபட்டுவிட்டது" என்றேன்.

இந்தப் பதிலை எதிர்பார்க்காத அவர் எங்கள் தாத்தா காலத்திலிருந்து நாங்கள் காபி தொழிலில் இருக்கிறோம். எல்லாம் ஆட்டோமேட்டிக்... காபி போடுவது ஒரு கலை தெரியுமா?" என்றார். என் காபி புராணத்தை ஆரம்பித்தேன். அதை நீங்களும் கேளுங்கள், மன்னிக்கவும் படியுங்கள்.

சிறுவயதில் எங்கள் தாத்தா வீட்டில் காபிக் கொட்டை அரைக்கும் சக்கர இயந்திரத்தைப் பார்த்திருக்கிறேன். பாலை அடுப்பில் வைத்து விட்டு சக்கரத்தை விஷ்ணு போல இரண்டு சுற்று சுற்றினால் காபிப் பொடி ரெடி.

மாவு மிஷின் மாதிரி இயந்திரத்தில் அரைத்து அந்தத் தெருவே காபி வாசனை பரவியிருக்கும். காபி கடைக்கு என் அப்பாவுடன் சென்றி ருக்கிறேன். இந்த மாதிரி மியூசியம் பொருளை மயிலாப்பூர் லியோ காபிக் கடையில் சில வருடங்களுக்கு முன் பார்த்தேன்.

சென்னைவாசிகளிடம் உங்க வீட்டில் என்ன காபி?" என்ற கேள்விக்கு, லியோ" என்றால் இவர்கள் மயிலாப்பூர் மாமா என்று கண்டுபிடித்துவிடலாம். எங்கள் வீட்டில் என்றுமே லிங்கம்தான்" என்பார்கள் மாம்பலத்து மாமிகள். சைவம், வைணவம் போன்ற கொள்கைப்பிடிப்பு காபி பிரியர்களுக்கு என்றுமே உண்டு. வீட்டை மாற்றி னாலும் காபிப் பொடியை மாற்ற மாட்டார்கள்.

குத்துவிளக்கு ஏற்றி, கோலம் போட்டு தலையில் ஈரத் துண்டுடன் துளசி மாடத்தைச் சுற்றும் ஓர் அடக்கமான பெண்ணுக்கு காபி போடத் தெரியவேண்டும் என்று விளம்பரம் செது காபியை வைதீகத்தில் சேர்த்து ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது!

பல ஊர்களில் பல காபியைக் குடித்திருக் கிறேன். ஸ்ரீரங்கம் கோபுரம்முன் ‘முரளி கஃபே’யில் டிகாக்ஷன் உங்கள் மீது தெளிக்ககாபி போட்டுத் தரும் காபியை வாங்கத் துடிக்கும் காபி பிரியர்களின் வரிசை பெருமாளைச் சேவிக்கும் வரிசையைவிட பெரியது.

பெங்களூருவில் எல்லா உணவகங்களிலும் தைரியமாக காபி குடிக்கலாம். சுமாராக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி இல்லை. எந்த ஊரிலும் காலை காபி நன்றாக இருக்கும். இரவு கல்யாண வீட்டில் டிபனுக்கும் சாப்பாட்டுக்கும் நடுவில் கிடைக்கும் வஸ்து போல இருக்கும்.

‘நல்ல காபி’ என்பதன் ‘பெஞ்ச் மார்க்’ நீங்கள் வாழ்க்கையில் குடித்த நல்ல காபியைப் பொறுத்தது.திக்கான பால், உயர்ந்த காபிப் பொடியில் போட்ட காபிகூட மியூசிக் அகாதமியில் பிரைம் ஸ்லாட்டில் தொண்டை சொதப்பச் சங்கதி போடும் வித்துவான்கள் போல ஆகிவிடும்.

நல்ல காபி ‘கீத கோவிந்தம்’ படத்தில் சிட் ஸ்ரீராம் பாடல் மாதிரி ஆனந்த பைரவியில் ஆரம்பித்து நல்ல காபி ராகத்தில் முடிய வேண் டும். ஒன்ஸ்மோர் என்று கேட்க வைக்க வேண்டும்!

காபி போட சில குறிப்புகள்:

* காபி மேக்கர், பில்டர், பர்குலேட்டர் என்று பல உபகரணங்கள் இருக்கின்றன. பில்டர்தான் காபிக்கு ஏற்றது. பித்தளை பில்டர், சாதாரண பில்டர் என்று இரண்டு விதமான பில்டர் இருக்கின்றன. ஈயச் சோம்பு ரசம் போலப் பித்தளை பில்டர் காபி ஒருவிதமான கோயில் பிரசாத வாசனையுடன் இருக்கும்.

* எந்த பில்டராக இருந்தாலும், பில்டர் வழியாக எல்லா ஓட்டையிலும் வெளிச்சம் வர வேண்டும். வெளிச்சம் வரவைக்க பில்டரின் அடிபாகத்தை அடுப்பில் சுட வைப்பது என்று பல டெக்னிக் இருக்கிறது. ஆனால் ஒழுங்காகத் தேப்பதுதான் சிறந்த வழி, உடற்பயிற்சியும்கூட.

* புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள் போல பில்டரை இறுக்கமாக மூடினால் ஏர்-லாக் போன்ற பிரச்னைகள் வரும். பழைய தம்பதிகள் போல பட்டும் படாமலும் இருந்தால் ஒழுங்காக இறங்கும்.

* ஊருக்குப் பெட்டியில் துணியை அடைப் பது போல பில்டரில் காபிப் பொடியை அடைக்கக் கூடாது. மூச்சு முட்டி இறந்துவிடும்.

* தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்போது அதை காபிப் பொடியில் வட்டவடிவமாக மெதுவாக ஊற்ற வேண்டும். பக்கத்து வீட்டு புளித்த தோசை வாசனை மாதிரி எங்கும் காபி ‘அரோமா’ பரவவேண்டும். (வரவில்லை என்றால் அது பழைய பொடி. தலை டை அடிக்க உபயோகிக்கலாம்.)

* பால், டிகாக்ஷன் இரண்டும் சூடாகக் கலக்க வேண்டும். என்றுமே காபியைச் சுட வைக்கக் கூடாது. (அப்படியும் யாராவது செதால் அவர்களுக்குக் கரண்டியில் சூடு வைத்துவிடுங்கள்). பால், டிகாக்ஷன் என்ற வெற்றிக் கூட்டணிக்கு மூன்றாவதாக ஜீனி என்ற வஸ்துவைச் சேர்க்கவே வேண்டாம்.

மனம் குணம், நிறம், சூடு காபிக்கு மிக முக்கியம். வேதியியலில் "Titration experiment` மாதிரி சரியான காபியைப் பலமுறை முயன்று பார்க்க வேண்டும். காபியில் நான் எக்ஸ்பர்ட் என்று ஜம்பம் அடித்தால் அன்றே காபி சோதப்பிவிடும். அதனால் அகங்காரம் கூடாது. இன்றைய காபி போல நாளையும் வந்தால் அது இன்ஸ்டண்ட் காபி. பில்டர் காபி தினமும் வெவ்வேறு விதமாக முதலிரவு அறைக்குள் போகும் பையன் போல ஓர் எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும். மூன்று காபிப் பொடிகளைக் கலந்து ஒரு விதமான ‘நல்ல’ காபியைக் கண்டுபிடித்திருக் கிறேன். பேட்டண்ட் செய என்ன வழி என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

Post Comment

Post Comment