பகவதிசாமியும் நூற்றைம்பது ரூபாயும்கனகராஜன் - தமிழ்காந்தி சிலையைத் தாண்டி நடந்து போக்கொண்டிருந்தேன். சார்... சார்..." என்று பின்னால் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். பகவதிசாமி பழைய சைக்கிளைத் தள்ளியபடி ஓடி வந்து கொண்டிருந்தார். ஊதா நிறத்தில் முகக்கவசம் அணிந்திருந் தார். அதில் கொஞ்சம் கிரீஸ் கறை படிந் திருந்தது. படிய வாரிய தலை. வெயிலில் அலைந்திருந்ததில் முகத்தில் எண்ணெ படர்ந்திருந்தது.

உங்களைத்தான் பார்க்கலாம்னு வந்துட்டு இருந்தேன் சார். இன்னைக்கு ஷட்டருக்கு கிரீஸ் போட்டரலாங்களா சார்?" என்று ஆர்வமாகக் கேட்டார்.

இன்னைக்கா...? வெள்ளிக்கிழமை வர்றீங்களா?" அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. சரிங்க சார். வெள்ளிக்கிழமை வர்றனுங்க..." நான் கூப்பிடறனே...?"

இல்லீங்க சார். ரெண்டு நாளைக்கு முன்னால சைக்கிளில வரும்போது செல்போன் எங்கயோ விழுந்திருச்சுங்க. போன் இல்லீங்க. நானே வர்றனுங்க சார்."

அவரிடம் பழைய செல்போன் ஒன்று இருந் தது. கொஞ்சம் உடைந்து போயிருக்கும். ரப்பர்பேண்ட் போட்டு சுற்றியிருப்பார்.சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நியூ ஸ்கீம் ரோட்டில் கிழக்குப் பக்கமாகப் போனார்.நான் தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

எனக்கும் அவருக்கும் ஒரு நூற்றைம்பது ரூபாதான் பிரச்னை. எனக்கு ஒரு வருமானம் வந்தால் அவருக்கும் ஒரு வருமானம் வரும்.

பகவதிசாமி ஷட்டருக்கு கிரீஸ் போடுகிற வேலை செகிறார். ஒரு கடைக்கு கிரீஸ் போட்டால் நூறு ரூபா கிடைக்கும். சிலர் நூற்றைம்பது ரூபா கொடுப்பார்கள். நான் நூற்றைம்பது ரூபா கொடுக்கிறேன்.

பகவதிசாமியை ஏழெட்டு வருடங்களாகத் தெரியும். வந்த புதிதில் ஐம்பது ரூபா வாங்கிக் கொண்டிருந்தார்.

கொரோனா ஊரடங்குத் தளர்வுக்குப் பின் னால் நான் அலுவலகத்தைத் திறந்ததும், பகவதி சாமி நான்கைந்து முறை கிரீஸ் போடுவதற்காக வந்து கேட்டுவிட்டுப் போவிட்டார். ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போகிறார். வழியில் இப்படி எங்காவது பார்த்தால் கேட்பதும் வழக்கமாகிவிட்டது.

என் அலுவலகம் பாலகோபாலபுரம் வீதியில் மேல் தளத்தில் இருக்கிறது. ஒரு கம்ப்யூட்டரையும் பிரிண்டரையும் வைத்துக் கொண்டு சொந்தமாக அச்சு சார்ந்த வேலைகளைச் செது கொண்டிருக் கிறேன். இந்த வீதிக்கு அலுவலகத்தை மாற்றி வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. வந்த புதிதில் வாடகை ஆயிரத்து இருநூறு ரூபா. இப் போது ஐயாயிரம் ரூபா.

பத்துக்குப் பதினாறு அறை. அறையின் பன்னிரண்டு அடி அளவில் கண்ணாடிக் கதவு கொண்டு மறைத்திருக்கிறேன். அடிக்கடி அச்சகத்திற்கும் பேப்பர் கடைக்கும் வெளியே சென்றுவர இருப்பதால் யாராவது வந்தால் காத் திருக்க நான்கடி அளவில் அறையில் முன் பக்கம் இடம் விட்டிருக்கிறேன். வந்தால் உட்கார இரண்டு இருக்கைகள் இருக்கும்.

வந்த புதிதில், ஷட்டர் கதவைத் திறக்கவும் மூடவும் ரொம்பவும் சிரமப்பட்டேன். இறுக்க மாக இருந்தது. பத்துப் பதினைந்து நாட்கள் இருக்கும். ஒரு ஆள் வந்தார்.

சார் ஷட்டருக்கு கிரீஸ் போடலாமா?" என்று கேட்டார்.ம்... போட்டுருங்க..." என்றேன் உற்சாக மாக.கிரீஸ் போட்டு முடித்துவிட்டு வந்து நின்றார்.எவ்வளவுங்க?"இருநூத்திஅம்பதுங்க..."அதிகமாகப்பட்டது.

இருநூத்திஅம்பது ரூபாயா?" ஆமாங்க... கிரீஸ் விலை யெல்லாம் ஏறிப் போச்சுங்க சார்...."வாங்கிக்கொண்டு போ விட்டார்.கீழே ஜெராக்ஸ் கடைக் காரர் வந்து பார்த்து விட்டுச் சத்தம் போட்டார்.

என்ன சார் இப்படி ஏமாந்திட்டீங்க? அம்பது ரூபாதான். அதுவும் இது கிரீஸ் மாதிரி தெரியலையே. வண்டி கீல் மாதிரி இருக்குது. கம்பெனியில யூஸ் பண்ணி வேஸ்ட்டா வர்ற கிரீஸ் மாதிரி தெரியுது. பாருங்க எவ்வளவு கறுப்பா இருக்குது. அந்த ஆள் ஏமாத்திட்டான் சார்..."

அந்த கிரீஸ் ஷட்டரின் காடி ஓரங்களில் கறுப்பாகப் படிய ஆரம்பித்திருந்தது. அடுத்த சில நாட்களில் கிரீஸ் தன் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்தது. அலுவலகத்திற்கு வருகிற போகிறவர்களின் உடைகளில் எப்படியோ கிரீஸ் கறுப்பாக ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது.

என்னங்க கிரீஸ் சட்டையில இப்படி அப்பிடுச்சு... போயிடுமா?" என்று கேட்க ஆரம் பித்தார்கள். சிலர் நல்ல சட்டை இப்படி ஆகி விட்டதே என்று சங்கடப்படவும் செதார்கள். எனக்கு தர்மசங்கடமாகவும் பெரிய தலைவலி யாகவும் இருந்தது. எனக்கே கிரீஸ் அடிக்கடி சட்டையில் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது. பழைய துணியெல்லாம் கொண்டு வந்து துடைத் துப் பார்த்தேன். கிரீஸ் வழிவது நிற்கவில்லை. ஒரு வருடம் கழித்து அதே ஆள் கிரீஸ் போடலாங்களா?" என்று கேட்டுக்கொண்டு வந்தார். வேண்டாங்க" என்று சொல்லிவிட் டேன். அதற்குப் பின்னாலும் நான்கைந்து முறை வந்து கேட்டார். ஒருநாள் பகவதிசாமி வந்து நின்றார்.

சார்... ஷட்டருக்கு கிரீஸ் போடலாங்களா?"அவரைப் பார்த்தேன். ஒல்லியாக இருந்தார். படிய வாரிய தலை. வயது நாற்பத்தைந்து ஐம்பது மதிக்கலாம். கசங்கிய பேண்ட் சட்டை, தோளில் ஒரு பை. மனதிற்குள் ஏதோ தோன்றியது.

முதல்ல பூசுன கிரீஸ் சரியில்லீங்க. நல்லா கிளீன் பண்ணிட்டுப் பூசணும்" என்றதும் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி. ஒரிஜினல் கிரீஸ்ங்க..."பையிலிருந்த டப்பாவை எடுத்துத் திறந்து காட்டினார்.நீட்டா பண்ணிக் கொடுத்த றேனுங்க..."

பையிலிருந்த பழைய துணியை எடுத்துத் துடைக்க ஆரம்பித்தார். அளவாக கிரீஸ் பூசினார். வேலை சுத்தமாக இருந்தது.எவ்வளவுங்க?"அம்பது ரூபாங்க..."கொடுத்தேன்.

ஷட்டர் திறக்கவும் மூடவும் சிரமமில்லாமல் இருந்தது. கிரீஸ் வழிவதும் நின்றிருந்தது. பெரிய பிரச்னையிலிருந்து விடுதலை கிடைத்த மாதிரி இருந்தது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பகவதிசாமி கிரீஸ் பூசிவிட்டுப் போனார். நான் சொல்லி மேலே வக்கீல் அலுவலகம், கீழே ஜெராக்ஸ் கடையிலும் கிரீஸ் போட்டார்கள்.

ஏதேச்சையாக ஒருநாள் அவரை எங்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தில் பார்த்தேன்.வணக்கங்க சார்..." என்றார்.இங்க எங்கீங்க?"இங்கதானுங்க... எம்.ஜி.ஆர் நகர். குடிவந்து ரெண்டு மாசமாச்சுங்க..."

ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக் கிறது. 27ஆம் எண் பேருந்து மட்டும் அந்த வழியாகப் போகும்.

நீங்க இதே ஊருங்களா சார்?" ஆமாங்க..." என்றேன்.பஸ்சுல வர்றீங்க? வண்டி என்னாச்சுங்க?"டூ வீலர் இல்லீங்க. எப்பவுமே பஸ்சுதான்..."ஏன் சார்? பைக் ஓட்டமாட்டீங்களா?"ஓரளவுக்கு ஓட்டத் தெரியும். டவுனுக்குள்ள ஓட்ட கொஞ்சம் பயம்... டூ வீலர் ஓட்டி ரொம்ப வருசம் ஆயிப்போயிடுச் சுங்க." ரெண்டு நாள் ஓட்டுனா பழகிருங்க சார்..."

அவரை எப்போதாவது காலையில் பேருந்து நிறுத்தத்தில் பார்ப்பேன். நகரத்திலும் தென்படுவார். பையைத் தோளில் சுமந்தபடி நடந்து போக் கொண்டிருப்பார். பார்த்தால் வணக்கம் சொல்லிவிட்டுப் போவார்.

பகவதிசாமிக்குச் சொந்த ஊர் ஊட்டி. பதினைந்து வயதில் பொள்ளாச்சிக்கு பஞ்சு மில் வேலைக்கு வந்தவர். மில்லை மூடிய பின்னால் ஏதேதோ வேலை பார்த்திருக்கிறார். கடைசியாக இந்த வேலைக்கு வந்திருக்கிறார். மட்டை மில்லில் வேலை பார்த்த காலத்தில் ஏதோ விபத்து ஏற்பட்டு, கையில் அடிபட்டு விட்டது. இன்னும் வலி இருப்பதாகச் சொன்னார்.

தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கும்போது பகவதிசாமி வந்தார். அன்றைக்கு கிரீஸ் பூசும்போது கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தார்.தீபாவளிக்குப் பையன் வர்றானுங்க சார். பதினஞ்சு வயசுல இருந்து பாடுபட்டுட்டு இருக் கறானுங்க. வயசு முப்பத்திஒண்ணு ஆயிடுச்சு. அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிடனும்."

என்ன வேலை பார்க்கறாருங்க?"சென்னையில ஒரு ஓட்டல்ல சப்ளையர் வேலைங்க சார். ஏதேதோ வேலைக்குப் போப் பார்த்தானுங்க . ஒண்ணும் அமையல. சப்ளையர் வேலைக்குச் சேர்ந்து நாலு வருச மாச்சுங்க. வருசத்துக்கு ஒரு தடவை வருவான்... கொஞ்சம் கடன் இருக்குதுங்க. சம்சாரத்துக் கர்ப்பப்பை ஆபரேசன் வேற பண்ணுச்சு."

உங்களுக்கு இந்தத் தொழில் எப்படிப் போகுது?"ஒரு நாளைக்கு ஒரு கடை ரெண்டு கடை கிடைக் கும். மூணு கடைகூட கிடைக்கும். பெரும்பாலும் எல்லா நாளும் வேலை கிடைக்கறது இல்லீங்க. இன்னும் அம்பது ரூபா கொடுக்கறவங்களும் இருக்கறாங்க சார். இன்னைக்கு உங்க கடை கிடைச்சிருக்கு. சாயங்காலம் வரைக்கும் சுத்திப் பார்ப்பேன். வேலை இருந்தா செவேன். இல்லாட்டி வீட்டுக்குப் போயிறதுதானுங்க..."

பேருந்துக்குப் போகவர இருபது ரூபா. இரண்டு டீயாவது சாப்பிடவேண்டும். டீ சாப்பிடுவாரா? தெரியவில்லை. டிபன் பாக்சில் சாப்பாடு போட்டுக்கொண்டு வந்துவிடு வார். கிடைத்த இடத்தில் சாப்பிட்டுவிடுகிறார். கிரீஸ் செலவு, வீட்டு வாடகை, வீட்டுச் செலவு... ஏதோ சமாளிக்கிறார்.மார்ச் மாதம் ஒரு நாள் பகவதிசாமி வந்தார்.

கீழே ஜெராக்ஸ் கடைக்கு கிரீஸ் பூச வந்தனுங்க. சும்மா உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு..."பக்கத்தில் ஒரு கட்டடத்தை இடித்துக் கொண்டிருந்தார்கள். அதிலிருந்து கிளம்பிய மண் தூசு, புழுதிகளால் அலுவலகமே திணறிப் போயிருந்தது. ஷட்டரின் இரு பக்க காடிகளில் மண் துகள் படிந்து திறக்கவும் மூடவும் பெரும் சிரமமாக இருந்தது.

ஷட்டருக்கும் கிரீஸ் பூசணுமுங்க. ரெண்டு மூணு வாரத்தில பில்டிங் இடிச்சு முடிச்சிருவாங்க. முடிச்சதும் ஷட்டரை நல்லாத் துடைச்சுட்டு கிரீஸ் பூசிடலாம்." என்றேன்.

மார்ச் 23க்குப் பின்னால் எல்லாம் மாறிவிட்டது. கொரோனா முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டது. மே 20ஆம் தேதிக்கு மேல்தான் என்னால் அலுவலகத்திற்கு வர முடிந்தது.

ஊரடங்கு தளர்வுக்குப் பின்னால் தவிர்க்க முடியாமல் இருசக்கர வாகனம் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். தெரிந்த ஒரு ஒர்க் ஷாப்காரரிடம் சொல்லி வைத்து, பழைய எச்செல் வண்டியை வாங்கினேன். பதினாறாயிரம் ரூபாக்குக் கிடைத்தது. கடன் வாங்கித்தான் வண்டி வாங்கினேன். டயர் மாற்றி, வண்டி சர்வீஸ் என்று இரண்டா யிரம் ரூபா செலவும் வைத்தது. ஓரளவு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வண்டியை ஓட்டினேன். நகரத்திற்குள் ஓட்டு வதுதான் சிரமமாக இருந்தது. இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதை உணர முடிந்தது.

வெளி வேலைகளுக்காக நகரத் திற்குள் செல்லும்போது நடந்தே சென்று வந்தேன். பெரியதாக வருமானம் ஒன்று மில்லை. ஒரு நாளைக்கு நூறு ரூபா பார்ப்பதே பெரிய விஷயமாக இருந்தது. பெட்ரோல் செலவு, இரண்டு மாத வாடகை பாக்கி எல்லாமே பயமுறுத் தியது. போதாக்குறைக்கு பிரிண்டரில் தூசி படிந்து இரண்டாயிரம் ரூபா செலவு வைத்தது.

பக்கத்தில் கட்டடத்தை ஒருவழியாக இடித்து முடித்திருந்தார்கள். மண் தூசுகள் ஷட்டரில் ஏறித் திறக்கவும் மூடவும் சிரமப் படுத்தியது. பகவதிசாமியும் ஒரு பழைய சைக்கிளை வாங்கியிருந்தார். கொஞ்சம் பணம் கொடுத் திருப்பதாகவும், பாக்கியை சீக்கிரம் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந் தார்.

பையனுக்கு வேலை இல்லீங்க. சிரமப் படறான். ஓட்டலைச் சாத்திட்டாங்க. ஊருக்கு வரணும்ங்கறான். என்ன பண்றதுன்னு தெரிய லைங்க."ஒவ்வொரு முறையும் அவரைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருப்பது கஷ்டமாகத்தான் இருந்தது.

காந்தி சிலையருகே பகவதிசாமியைப் பார்த்து விட்டு வந்த அன்று மாலையில் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். ஷட்டரை இறக்கும் போது வித்தியாசம் தெரிந்தது. ஷட்டர் எந்தச்

சிரமமும் இல்லாமல் கீழே இறங்கியது. சந்தேக மாக இருந்தது. ஷட்டரை மேலே தூக்கினேன். சிரமப்படுத்தா மல் ஷட்டர் திறந்தது. காடிக்குள் புதிதாக கிரீஸ் பூசப்பட்டிருப்பதைப் பார்த்தேன். குழப்பமாக இருந்தது.

வக்கீல் அலுவலகத்தில் கிளார்க்காக இருக்கும் முத்து ஷட்டரை ஏற்றி இறக் கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான்.என்ன பண்றீங்கண்ணா?"ஷட்டருக்கு கிரீஸ் போட்டிருக்கு. யார் போட்டாங்கன்னு தெரியலே."

கிரீஸ் போட ஒருத்தரு அடிக்கடி வருவாரே. அவருதான் போட்டுட்டு இருந்தாரு. ஜெராக்ஸ் கடைக்கு கிரீஸ் போட வந்தாராம். உங்களைப் பார்க்க லாம்னு மேலே வந்திருக்கறார். ஷட்டரை இழுத்துப் பார்த்துட்டு, ‘ரொம்ப டைட்டா இருக்கு... சார் ஷட்டரை எப்படித் திறக்கறாரு? பாவம்’னு கிரீஸ் போட்டுட்டுப் போயிட்டாரு..."

பணம் கொடுக்கலையே முத்து..."கேட்டேன். ‘சார் சிரமத்தில இருக்காரு. மெதுவா கொடுக்கட்டும்’னு போட்டாரு..."மனசுக்குள் ஒரு படபடப்பு தோன்றியது.

என்னைவிட சிரமத்தில் இருப்பவர் பகவதி சாமிதான். சீக்கிரமாக அவருக்கு நூற்றைம்பது ரூபாயைக் கொடுத்துவிட வேண்டும். இரண்டு நாட்களில் பணத்தைத் தனியாக எடுத்து வைத்தேன். ஆனால் இருபது நாட் களாகியும் பகவதிசாமி வரவில்லை. எப்படியும் நகரத்தில் கண்ணில் அடிக்கடி தட்டுப்படுவார். அவரைப் பார்க்கவே முடியவில்லை. அவரிடம் செல்போனும் இல்லை.

நூற்றைம்பது ரூபா ஒரு சுமையாகவே இருந்தது.ஒரு மாதம் ஆகிவிட்டது. அன்றைக்குக் காலையில் எம்.ஜி.ஆர் நகர் போ பகவதி சாமியை நேரில் பார்த்துவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டு வருவது என்று முடிவு செதேன்.

எம்.ஜி.ஆர் நகரில் நுழைந்ததும் முதலில் தெரிந்த ஒரு பெட்டிக்கடையில் பகவதிசாமி வீடு எங்கே என்று விசாரித்தேன். கிரீஸ் போடற பகவதிசாமீங்களா? அவரு வீட்டைக் காலி பண்ணிட்டு சொந்த ஊருக்கே போயிட்டாருங்களே..."

பெட்டிக் கடைக்காரர் சொன்ன தகவல் கொஞ்சம் அதிர வைக்கத்தான் செய்தது. ஊட்டிக்கே போயிட்டாருங்களா?"ஆமாங்க. வேலையும் இல்லீங்க... வருமான மும் இல்லீங்க... இங்க இருந்து என்ன பண்ணறதுன்னு சொந்த ஊருக்கே போயிட் டாருங்க... நல்ல மனுசனுங்க..."

கடைக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டுத் திரும்பினேன். திரும்பும்போது பலவிதமான யோசனை கள். பகவதிசாமி போல ஷட்டருக்கு கிரீஸ் போட ஒரு மனிதர் கிடைப்பாரா என்று தெரியவில்லை?

ஷட்டரைத் திறக்கும்போதும் மூடும்போதும் எப்போதாவது பகவதிசாமியின் நினைப்பு வரலாம். அப்போது இந்த நூற்றைம்பது ரூபாயும் ஞாபகத்திற்கு வரலாம்.

Post Comment

Post Comment