பரீட்சை பயம் போக்கும் பரிமுகக் கடவுள்!


வஸந்தா வேணுகோபால், சென்னைசாதாரணமாக மாணவ-மாணவிகளுக்குத் தேர்வுகள் நெருங்கும்போது, பயம், கலக்கம் போன்றவை ஏற்படும். அதிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஆண்டு முழுவதும் படிக்க வேண்டியவற்றை, மிகவும் குறைந்த நாட்களில், கொரோனா காரணமாகப் படிக்க வேண்டிய சூழ்நிலையில், பாவம் மாணவ மணிகள் என்ன செய்வார்கள்? என்ற கவலை எல்லோருக்குமே இருக்கின்றது. நன்றாகப் படித்து, நன்கு தேர்வுகளை எழுதி, நல்ல மதிப் பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற வேண்டும் என எல்லோருமே ஆசைப்படுவார்கள். நாம் நன்கு படித்தாலும், நமது ஞாபகசக்தி நிறைந்து நிறைய மார்க்குகள் பெற்று, முக்கியமாக, பரீட்சை பயம் நீங்கி பரீட்சைகளை எழுதுவது மிகவும் அவசியம். அதற்கு, பரிமுகக் கடவுளை பணிந்து, தொழுது, வணங்கி வேண்டிக் கொள்வோம்.

பரிமுகக் கடவுள்

‘பரி’ என்றால் குதிரை. ‘ஹயம்’ என்பது குதிரையைக் குறிக்கும் வடமொழிச் சொல் ஆகும். ஸ்ரீ ஹயக்ரீவர் என்ற குதிரை முகத்தை யுடைய பரிமுகக் கடவுளே பரீட்சை பயத்தைப் போக்குபவர். மது, கைபடன் என்ற இரண்டு அரக்கர்கள், நான்முகனிடமிருந்து படைப்புத் தொழிலின் ரகசிய வேதங்களை அபகரித்துக் கொள்ள, பிரும்மா, திருமாலை நோக்கித் தவம் புரிந்தார். மனம் இறங்கிய திருமால் குதிரை வடிவம் எடுத்து, அந்த அரக்கர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு, நான்முகனிடம் அளித்தார்.

ஸ்ரீ தேசிகர் கண்ட ஸ்ரீஹயக்ரீவர்

மணியின் அம்சமாய் அவதரித்த மகானாகிய ஸ்ரீ தூப்புல் மகாதேசிகர், 102 வயது வாழ்ந்தவர். ‘ஸர்வதந்த்ர சுதந்திரா’ என்று ஸ்ரீரங்கநாயகித் தாயாரால் கொண்டாடப்பட்டவர். முதலில் இவர் கருடனை நோக்கித் தவம்புரிந்து, பின்பு, கருடன் கட்டளைப்படி, ஸ்ரீஹயக்ரீவரை நோக்கித் தவம் புரிந்து, ஸ்ரீ ஹயக்ரீவரின் அற்புத தரிசனம் பெற்றார். ஸ்ரீ ஹயகவதனப் பெருமாளே, தனது விக்கிரத்தை இவருக்கு அளித்ததாகச் சொல்வார்கள். ஸ்ரீ ஹயக்ரீவரின் ஆதித்திருமேனிகள் இரண்டு. ஒன்று திருவஹந் திரபுரத்திலும், மற்றொன்று, மைசூரில் உள்ள பரகால மடத்திலும் உள்ளதாக வரலாறு.

திருவஹிந்திரபுரம் ஸ்ரீ ஹயக்ரீவர் ஆலயம்

கடலூருக்கு அருகில், திருவஹிந்திரபுரம் என்ற திருமாலின் திவ்யதேசம் உள்ளது. இங்கு ‘ஔஷதகிரி’ என்ற மலையில், 72 படிகள் ஏறிச் சென்றால் ஸ்ரீஹயக்ரீவரின் ஆலயத்தை அடை யலாம். கீழேயே, ஏலக்காய் மாலைகள், ரோஜா மாலைகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, சாற்றி அர்ச்சனை செய்யலாம். தேன் வாங்கிக் கொடுத்தால், குழந்தைகள் மிக நன்றாகப் பேசுவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக் கும். நெய் விளக்குகள் ஏற்றி, முடித்து பிரதட் சணங்கள், நமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.

மற்ற ஆலயங்கள்

யோக ஹயக்ரீவர், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் என பற்பல விதமாக சேவை சாதிக்கும் இவருக்கு மேலும் பற்பல ஆலயங்கள் உள்ளன. சிங்க பெருமாள் கோயிலுக்குச் சற்று தொலைவில் இந்த ஹயக்ரீவர் ‘செட்டி புண்ணியம்’ என்ற இடத்தில் கோயில் கொண்டுள்ளார். பசுமை நிறைந்த, மரங்களிடையே அற்புதமாக அமைந்துள்ளது இந்த ஆலயம். நங்கநல்லூரில், எட்டா வது தெருவிற்கு எதிரில், மிக அழகான, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் உள்ளது. ஐந்து தலை நாக ஆதிசேஷனின் குடையின் கீழ், மிக மிக எழிலுடன், லாவண்யமாக, அற்புதமாக ஸேவை ஸாதிக்கும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அத்தனை வரப்பிரசாதி இவர். மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ ஸத்யநாராயண கோயிலில், ஒரு சிறிய சன்னிதியில் ஸ்ரீஹயக்ரீவர் சேவை ஸாதிக்கிறார். மயிலாப்பூரில், ஸ்ரீ தேசிகர் கோயிலில், அற்புத மாக ஸ்ரீ ஹயக்ரீவர் சன்னிதி இருக்கிறது. தேசிகர், ஹயக்ரீவர் இருவருமே ஸேவை ஸாதிக் கின்றனர். ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் இங்கு மிகச் சிறப்பாக, அர்ச்சனைகள் நடை பெறுகின்றன. தேர்வுகளுக்கு முன்பு, இவருக்கு லட்சார்ச்சனைகள் மிக மிக அற்புதமாக நடைபெறுகின்றன. பேனா, பென்சில், நோட்டுகள் இவற்றைத் திருவடியில் வைத்துக் கொடுக்கின்றனர்.

வீட்டிலேயே வழிபாடு!

நாம் ஒரு அழகிய ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் படத்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு, ஒவ்வொரு வியாழக்கிழமையும், இந்தப் படத்தை, ஒரு மணையில் வைத்து, பூ மாலை சாற்றி, இரண்டு நெய் விளக்குகள் ஏற்றி திராட்சை, கற்கண்டு போன்ற எளிய நிவேதனம் செய்யவும், பின்பு, ஒரு இடத்தில் இப் படத்தை வைத்த, 12 முறை பிரதட்சணம் செய்து 12 முறை நமஸ்காரம் செய்ய வேண்டும். ஸ்ரீஹயக்ரீவருக்கு மிகவும் உகந்த தினம் வியாழக்கிழமையாகும். 5, 7, 9, 11, 27 என எத்தனை முடிகிறதோ அத்தனை பிரதட்சண நமஸ்காரம் செய்து மனம் உருகிப் பிரார்த்தனை செய்து கொள்ளவும். இது மிக நல்ல பலன்களை அளிக்க வல்ல வழிபாடு ஆகும்.

ஸ்ரீஹயக்ரீவ பண்டி

ஸ்ரீ ஹயக்ரீவருக்கு மிகவும் உகந்த உத்தம மான பிரசாதம் இந்த ஹயக்ரீவ பண்டியாகும். கடலைப் பருப்பைக் குழையாமல் வேக வைத்து வடிகட்டி, வெல்லம், ஏலம், தேங் காய், முந்திரி சேர்த்துச் செய்யப்படும் அற்புத பிரசாதம். இதனை நிவேதனம் செய்வது மிகவும் நல்லது.

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்குதம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே" என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கணிதத்தில், நிறைய மதிப்பெண்கள் பெற, ஸ்ரீ கணித ராமானுஜரின் இஷ்டதெய்வமான, ஸ்ரீ நாமகிரித் தாயாரின் ஸ்லோகத்தைச் சொன்னால் நல்ல பலன் உண்டு.

ஸ்ரீ நாமகிரி லக்ஷ்மி ஸஹாயம்: ஸ்ரீவித்யா மந்த்ரரத்னா ப்ரகடித விபவாஸ்ரீ ஸுபலா பூர்ண சாமா ஸர்வேஸ பிரார்த்திதா ஸகல ஸீரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரீ லக்ஷ்மிஸ்ரீ வேதகர்பா விதுரதமதிஸா விஸ்வ கல்யாண பூமா விஸ்வ ஹேமாத்ம யோகா விமலகுணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா"

மாணவச் செல்வங்களே அனைவரும், இறைவனின் கருணையாலும், நல்ல முயற்சி யும், கடின உழைப்பும் கொண்டு, நிறைய மதிப்பெண்கள் பெற்று, தேர்வில் தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன். இறைவனை மனம் உருகி வேண்டுகிறேன். பரீட்சைக்குப் பயம் வேண்டாமே!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :