நீங்கள் ‘பிரியாணி ராணி’ ஆக வேண்டுமா?ஆர்.சாந்தா, மயிலாப்பூர் -இந்த முறைப்படி பிரியாணி செய்தால் ஹோட்டல் பிரியாணியின் ருசியை வீட்டில் செய்யும் பிரியாணியில் உணரலாம்.

* குக்கரில் வைக்காமல், பாத்திரத்தில் பிரியாணி செய்தால், அரிசி தொக்கு பிரட்டிக் கொண்டு வரும்போது, சூடான தோசைக் கல்லில் பாத்திரத்தை வைத்து மூடி, சுடுதண்ணீர் வைத்து தம் போடவும். குழிவான மூடி என்றால் சுடுதண்ணீரை மூடியிலேயே ஊற்றலாம்.

* பிரியாணி அரிசி பழைய அரிசி என்றால் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீரும், புது அரிசி என்றால் 1லீ கப் தண்ணீரும் விடவும்.

* பிரியாணி அரிசியை அரை மணி நேரத்துக்கு மேல் ஊறவிடக் கூடாது.

* பிரியாணிக்கு காஷ்மீரி மிளகாய்த் தூள் கலந்து போட்டால் நல்ல நிறம் கிடைக்கும். இந்த மிளகாய்த் தூளில் காரம் இருக்காது.

* பிரியாணிக்கு வதக்கும்போது அடுப்பை சிம்மில் வைத்து வதக்கக் கூடாது. பெருந்தீயில் வதக்கினால்தான் பிரியாணி நல்ல மணமாக இருக்கும்.

* தேங்காய்ப்பால் வேண்டாமென்றால், கெட்டியான சாதாரண பால் சேர்க்கலாம்.

* மசாலா அதிகமிருந்தால் சாதம் உதிரியாக வராது. ஆனால் ருசியாக இருக்கும்.

* நெய்க்குப் பதில் வெண்ணெய் சேர்த்தால் மணம் அதிகமாக இருக்கும்.

* பிரியாணிக்கு கெட்டியான தயிர்தான் ஊற்ற வேண்டும். தயிர் தண்ணியாக இருந்தால், ஒரு மெல்லிய துணி அல்லது டீ வடிகட்டியில் தயிரை வடித்து விடலாம். இந்தத் தயிரை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கட்டியின்றி கலந்து சேர்க்கவும்.

* பிரியாணிக்குப் போடும் நாட்டுத் தக்காளி நல்ல சிவப்பாக இருக்க வேண்டும்.

* பட்டை, லவங்கம், ஏலக்காய் இவற்றை வறுத்துப் பொடித்த பொடியை, வெங்காயம் வதக்கும்போதுதான் சேர்க்க வேண்டும். பொடியை எண்ணெயில் போட்டால் கருகி விடும்.

* தோசைக் கல்லில் தம் போடும்போது, தம் போடும் பாத்திரத்தின் அடிப்பாகம் சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் சூடு சமமாகப் பரவும்.

* தம் போடும்போது தோசைக்கல்லை நன்கு காயவைத்து பிரியாணி பாத்திரத்தை வைத்து, 5 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் எரியவிட்டு, பிறகு அணைத்து விட்டால் கல்லில் சூடு 10 நிமிடங்கள் இருக்கும்.

* 1 கிலோ அரிசிக்கு 1 கைப்பிடி உப்பு போட வேண்டும். கைப்பிடி அளவு என்றால், உப்பைக் கையில் எடுத்து கையில் இடைவெளி இல்லாத அளவு இறுக மூட வேண்டும். பிரியாணி செய்யும்போது மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றினாலும், உப்பு, புளிப்பு, காரம் சரியாக இருந்தாலும், உங்கள் பிரியாணியை அடிக்க ஆள் இல்லை. நீங்கள் தான் பிரியாணி ராணி.

Post Comment

Post Comment