2020ன் Top 10 கடல் உயிரிகள்நாராயணி சுப்ரமணியன் -ஒவ்வொரு வருடமும் புதிய கடல்வாழ் உயிரிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்தபடியே இருக்கிறார்கள். அவற்றுள் பல உயிரிகள் சுவாரஸ்யமான உடல் அமைப்பையும் பண்புகளையும் கொண்டவை. சில உயிரிகள், அதுவரை உறுதிசெயப்பட்ட அறிவியல் தகவல்களைக்கூட கேள்விக்குட்படுத்தி, விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. கடல் உயிரிகளுக்கான சர்வதேசப் பதிவகம் (World Register of Marine Species) இவ்வாறு கண்டறியப்பட்ட உயிரிகளில் மிகவும் சுவாரஸ்யமான, முக்கியமான உயிரிகளைத் தேர்ந்தெடுக் கும்படி விஞ்ஞானிகளிடம் கேட்டு, வருடா வருடம் ஒரு பட்டியலை வெளியிடும். 2020ல் கண்டறியப்பட்ட டாப் டென் கடல் உயிரிகளின் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. ஆழ்கடல் விநோத உயிரிகள், பளபளக்கும் புழுக்கள், அதிகமாக ஆராயப்பட்ட வாழிடங்களில் கூட யார் கண்ணுக்கும் சிக்காமல் மறைந்திருந்த உயிரிகள் என்று ஆச்சர்யங்கள் நிறைந்த ஒரு பட்டியல் இது.

1. ஈ.டி. கடற்பஞ்சு (E.T Sponge)

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் 1982ல் வெளியான ஈ.டி. திரைப்படம் உலக அளவில் பல கோடிகளை அள்ளிக் குவித்து, பார்வை யாளர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. வேற்று கிரகவாசிக்கும் ஒரு சிறுவனுக்கும் இடை யிலான நட்பை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தில், ஈ.டி (Extra Terrestial) என்று அழைக்கப்படும் வேற்று கிரகவாசியின் முக அமைப்பு பரவலாகப் பேசப்பட்டது.கடலுக்குக் கீழே, கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் வசிக்கிறது இந்த ஈ.டி. கடற்பஞ்சு. இதன் உடல் கண்ணாடியைப் போன்ற சிலிகா கூட்டினால் ஆனது என்பதால், இவை கண்ணாடிப் பஞ்சுகள் என்று அழைக்கப் படுகின்றன. இதன் உடலில் இரண்டு பெரிய குழி போன்ற அமைப்புகள் இருக்கின்றன. சட்டென்று பார்த்தால், இது ஈ.டி.யின் கண் களைப் போலவே இருக்கிறது என்பதால், இதற்கு ஈ.டி. கடற்பஞ்சு என்று செல்லமாகப் பெயரிட்டிருக்கிறார்கள்.

2. பேட்ரிக் கடல் நட்சத்திரம் (Patrick Sea Star)

Spongebob Square Pants என்கிற ஒரு பிரபலமான கார்ட்டூன் தொடர் உண்டு. அதில், ஸ்பாஞ்ச்பாப் என்கிற கடல் பஞ்சின் உற்ற தோழனாக, பேட்ரிக் என்கிற கடல் நட்சத்திரம் வரும். பசிபிக் பெருங்கடலில், மூன்று கிலோ மீட்டர் ஆழத்தில் வசிக்கிறது இந்தக் கடல் நட்சத்திரம். எப்போதும் கடற்பஞ்சுகளின் மேலேயே வசிப்பதால், ஸ்பாஞ்ச்பாபின் தோழனான பேட்ரிக்கின் பெயரை இதற்கும் வைத்துவிட்டார்கள். பொதுவான கடல் நட்சத் திரங்களைப் போலல்லாமல், இதன் உடலில் ஏழு கைகள் காணப்படுகின்றன என்பது கூடுதல் சிறப்பம்சம்.

3. கிளைக்கைகள் உடைய மூக்கு கோப்பிபாட் (Branch Armed Nostril copepod)

இது ஒருவகையான நுண் விலங்கு. நண்டுகள்/இறால்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. திருக்கை மீன்களின் மூக்குக்குள் இவை ஒட்டுண்ணிகளாக வசிக்கின்றன.இதன் கைகள் ஒற்றையாக இல்லாமல், கிளைகளுடன் தோற்றமளிக்கும். இந்தக் குறிப் பிட்ட கோப்பிபாட், அர்ஜண்டைனா திருக்கை யின் மூக்குக்குள் வசிக்கிறது. இதில் பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தக் குறிப் பிட்ட திருக்கைக்குள் இந்தக் குறிப்பிட்ட கோப்பிபாட்தான் வசிக்கலாம் என்கிற துல்லியமான பிணைப்பு உண்டு. திடீரென்று வேறு திருக்கைக்குள் இந்த கோப்பிபாட் சென்று வசிக்காது! அந்த இனத்தைச் சேர்ந்த திருக்கை கிடைக்காவிட்டால் உணவு கிடைக் காமல் கோப்பிபாட் இறந்துவிடும்!

4. ஆர்லாண்ட் மஞ்சள் நத்தை (Yellow Seaslug of Orland)

உண்மையில் இந்த விலங்கை விட, இது கண்டுபிடிக்கப்பட்ட விதம் சுவாரஸ்யமானது. 2014ல் ஆர்லண்டில் கடலுக்கடியில் டைவ் செது கொண்டிருந்த ஸ்கூபா டைவிங் நிபுணர் ஒருவர், அழகாக இருக்கிறது என்பதற்காக இந்த விலங்கைப் புகைப்படம் எடுத்தார். பிறகு இந்த விலங்கு, 2017ல் வேறு ஒரு ஸ்கூபா டைவிங் நிபுணரால் படம்பிடிக்கப்பட்டது. இருவருமே விஞ்ஞானிகள் அல்ல. ஒரு சாகசத் துக்காகவும் கடல் விலங்குகளைப் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காக ஸ்கூபா டைவிங் செய்பவர்கள்தான்.

தங்கள் புகைப்படங்களை இவர்கள் ஆர்லாண்டின் கடல் விலங்குகளுக்கான முக நூல் குழுவில் பதிவிட்டிருந்தார்கள். குழுவி லிருந்த சில விஞ்ஞானிகள், இந்தப் புகைப் படத்தைப் பார்த்த உடனே, இது புதிய உயிரின மாக இருக்கலாம் என்று நினைத்து, இந்த விலங்கை சேகரிப்பதற்காக அரசிடம் அனுமதி வாங்கினார்கள். பிறகு இந்த விலங்கை சேகரித்து ஆராந்ததில், இது புது உயிரி என்பது உறுதிசெயப்பட்டது!கண்டுபிடித்த ஸ்கூபா டைவர்களையும் அங்கீகரித்து, தங்களது ஆவுக் கட்டுரையில் அவர்களது பெயரையும் விஞ்ஞானிகள் குறிப்பிட் டிருக்கிறார்கள்.

5. பெரிய ப்ளாஸ்டிக் ஆம்பிபாட் (Giant Plastic Amphipod)

ஆம்பிபாட் என்பது இறால் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கணுக்கால் உயிரி. இறாலே வளைந்துபோ அரைவட்டமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செது பாருங்களேன் - அதுதான் ஆம்பிபாட். இது கடலுக்கடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில், பசிபிக் கடலின் மேரியானா ட்ரெஞ்சில் வசிக் கிறது.‘ப்ளாஸ்டிக்‘ என்ற சொல், ஆம்பிபாடின் பெயரில் சேர்க்கப் பட்டிருக்கும் காரணம் மிகவும் சோகமானது. இந்த ஆம்பிபாட் டின் உடலில், நுண் ப்ளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றனவாம். அதுவும் பல துகள்கள், நாம் பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பாட்டிலின் வேதிக் கூறோடு ஒத்துப்போகின்றனவாம்! ‘இப்போதுதான் இந்த விலங் கையே மனித இனம் கண்டுபிடித்திருக்கிறது, அதற்குள் மனிதன் உரு வாக்கிய ப்ளாஸ்டிக் மாசு இந்த உயிரியின் உடலுக்குள் சென்று சேர்ந்து விட்டது’ என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் கள் விஞ்ஞானிகள்.

6. ஹஃபீஃபியின் தலைகீழ் (Hafifi`s upside down tapeworm)

தட்டைப்புழுக்கள் ஒட்டுண்ணிகளாக இருந்தே காலத்தைக் கழிக்கின்றன என்ப தைப் பள்ளிப் பாடங்களிலேயே படித்திருப் போம். ஜீரண உறுப்பு கிடையாது, வயிறு கிடையாது, குடல் கிடையாது, ஏன் வா கூட கிடையாது! ஒட்டுண்ணியாக இருந்து சத்துக்களை உறிஞ்சியே பல லட்சம் ஆண்டுகளாகத் தப்பிப் பிழைக்கிறது இந்த இனம்.இந்தக் குறிப்பிட்ட தட்டைப்புழு, சுறா மீன்களின் குடும்பத்துக்கு நெருக்கமான மீன்களான கிமேரா, எலிமீன் போன்ற மீன்களின் வயிற்றுக்குள் வசிக்கிறது. தட்டைப்புழுவுக்கும் எலிமீன்களுக்கும் இடையே உள்ள உறவு, 400 மில்லியன் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியின் விளைவு என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்!

7. கிளைக்கும் ப்ரையோசோவன் ((Branching Bryozoan)

இந்த விலங்கின் சுவாரஸ்யம், இது கண்டுபிடிக்கப்பட்ட கதை யில் இருக்கிறது. 1904லேயே, இது ஒரு தனி இனமாக இருக்க லாம் என்று விஞ்ஞானிகளுக்கு சந்தேகம் வந்து விட்டது!ஆனால், ஒரு உயிரினத்தைத் தனி இனம் என்று அறிவிக்க வேண்டுமானால், அதன் முழு உடல் ஒன்று பாடம் செயப் பட்டு பாதுகாக்கப்படவேண்டும். இதை Type specimen என்று அழைப்பார்கள். சந்தேகம் ஏற் பட்டு, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக முழு உடல் கிடைக்காமல் போராடி, பல குழப்பங்களில் வேறு விலங்கு களோடு இதை ஒப்பிட்டு, அலசி ஆராந்து, ஒருவழியாக 2020ல் இது தனி இனம்தான் என்று அறிவித்திருக்கிறார்கள் அறிவியலாளர்கள்!

8. உயிர்மர நீர்க்கரடி (Tree of life Tardigrade)

Tardigrade என்கிற நுண் விலங்குக்கு நீர்க்கரடி, பாசிப் பன்றிக்குட்டி என்று பல பெயர்கள் உண்டு. நம் வீட்டுக் குழா அருகே பாசி பிடித்திருந்தால், அந்தப் பாசி கலந்த நீரில் கூட இது வசிக்கும். ஆனால் இதைக் கண்ணால் பார்க்க முடியாது, ஆற்றல் நிறைந்த நுண்ணோக்கி தேவை.நீர்க்கரடிகள் - நன்னீர், உவர்நீர், கடல்நீர் என்று எல்லா நீர் நிலைகளிலும் வசிக்கும் ஆற்றல் பெற்றவை. எதையும் தாங்கும் திறன் கொண்டவை. ஃப்ரான்ஸில் உள்ள கடலோரப் பகுதியில் இந்த நீர்க்கரடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 0.3 மில்லி மீட்டர் நீளம் மட்டுமே உள்ள நீர்க்கரடி இது - ஆனால் கடல் நீர்க் கரடிகளைப் பொறுத்தவரை இது பிரம்மாண்ட உயிரி என்று சிரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

9.எல்விஸ் புழு (Elvis Worm)

பாப் பாடகர் எல்விஸ் உலக அளவில் பிரபலமானவர். அவர் பாடல்களைக் கேட்டிருக் கிறோமோ இல்லையோ, அவரது ஜிகினா உடையையும் கிருதாவையும் அறியாதவர்கள் இருக்க முடியாது.இந்தப் புழுவின் மேல் ஓடு, அவரது ஜிகினா உடை யைப் போலவே பளபளப்பாக இருப்பதால், அந்தப் பெய ரையே வைத்துவிட்டார்களாம்.ஆக்ஸிஜன் குறைவான பகுதிகளிலும் வசிக்கக்கூடிய புழு இது. ஓட்டுக்குக் கீழ் உள்ள செவுள் அமைப்புகள், நீரில் இருக்கும் குறைவான ஆக்சிஜனையும் திறமையாக உறிஞ்சி, புழுவைக் காப்பாற்றுகின்றன. இவை சூரிய ஒளியே படாத வாழிடங்களில், வேதிப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட உணவுச் சங்கிலியில் ஓர் அங்கமாக இருக் கின்றன.

10. சிவப்பு குழல்மீன் (Red wide bodied pipefish)

சிவப்பு நிற பாசித்தண்டுகள், கடற்பஞ்சுகளுக்கு இடையே, திறமையாக மறைந்துவாழும் மீன் இது. உடலும் குழல் போல இருப் பதால் கடல்பாசியின் தண்டுக்கும் இதற்கும் வித்தியாசமே தெரியாது.வெறும் 25 மீட்டர் ஆழத்தில், கடலின் ஆழமில்லாத பகுதிகளில் வசிக்கும் மீன் இனம் இது. அதிலும், இந்த மீன் வசிக்கும் வாழிடம், பல ஸ்கூபா டைவிங் நிபுணர்கள் வழக்கமாக வந்து செல்லும் இடம். ஆனாலும் நன்றாக மறைந்து வசிப்பதால் இது யார் கண்ணுக்கும் படாமலேயே இருந்திருக்கிறது. இப்படி ஒரு மீன் இருக்கிறது என்பது தெரிந்த பின்னும், இதைத் தேடிக் கண்டுபிடித்து சேகரிக்க விஞ்ஞானிகளுக்கு மூன்று மாதங்கள் ஆனதாம்!கடல் என்பது தீராத ஆச்சர்யங்களை எப்போதும் வழங்கிக் கொண்டேயிருக் கிறது. இந்தப் பட்டியல் அதற்கு ஒரு சிறு உதாரணம் மட்டுமே.
Post Comment

Post Comment