குல்ஃபி அணிவகுப்பு!


சம்மரை சமாளிக்க...கூல் ரெசிபி தொடர் 1
கீதா பாலகிருஷ்ணன் -குல்ஃபி என்பது பாரம்பரிய இந்திய இனிப்பு ஐஸ்க்ரீம். பாலைக் குறுக்கி, இனிப்புச் சுவை ஊட்டி கெட்டியாக்கி,சில்லிடப்பட்டு செய்யும் இனிப்பையே குல்ஃபி அல்லது குல்ஃபி ஐஸ்க்ரீம் என்கிறோம். பொதுவாக மேலைநாட்டு ஐஸ்க்ரீம் போல் குல்ஃபியை நாம் ‘விப்’ (தீடடிணீ) செய்வதில்லை. அதனால் மேலைநாட்டு ஐஸ்க்ரீமை விட குல்ஃபியானது கெட்டியாக, அடர்த்தியாக (குணிடூஞீ ஈஞுணண்ஞு) இருக்கிறது. பழங்காலத்தில் பெரிய பானைகளில் உப்பையும், ஐஸ்கட்டிகளையும் நிரப்பி அதன் மேல் சிறிய மட்காவில் குல்ஃபியை வைத்துக் குளிர வைத்தனர். தற்காலத்தில் குல்ஃபி மோல்டுகள் ரெடிமேடாகக் கிடைக்கின்றன. என்றாலும், மட்காவில் நிரப்பப்படும் குல்ஃபிகளின் மவுஸே தனிதான்.

பொதுவாக குல்ஃபி செய நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

* சாதாரணமாக ஒரு தம்ளரில் கூட குல்ஃபியை ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்து, பாதி செட் ஆனதும், நீளமான கெட்டியான குச்சியைச் செருகி மேலும் செட் செய்து உபயோகிக்கலாம். பாலைக் குறுக்க குறுக்க, அதற்கு இனிப்புச் சுவை ஊட்ட குறைந்த அளவே சர்க்கரை தேவைப்படும். சர்க்கரைக்குப் பதில், நன்கு குறுகிய, ஆறிய பாலுடன் தேன் சேர்க்கலாம்.

* பேரீச்சம்பழம், காய்ந்த அத்திப்பழம் போன்றவற்றையும் ஊறவைத்து, அரைத்து சேர்த்து குல்ஃபிக்கு இனிப்புச் சுவையுடன் ஆரோக்கிய சத்தையும் ஊட்டலாம். டேட்ஸ் குல்ஃபி, அத்திப்பழ குல்ஃபி சக்தி கொடுக்கவல்லவை.

* பன்னீர் ரோஜா இதழ்களை பால் காய்ச்சுகையில் சேர்த்து, கல்கண்டு சேர்த்து குளுகுளு குல்கந்த் குல்ஃபி தயாரிக்கலாம்.

* கொக்கோ பவுடர் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘சாக்லெட் குல்ஃபி’ குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.

* ஸ்ட்ராபெர்ரி, லிட்ச்சி, சப்போட்டா போன்ற பழங்களைச் சேர்த்துச் செய்யப்படும் குல்ஃபி பால்-பழ சக்தி நிறைந்தது.

* சூடான பால் குடிக்க மறுக்கும் குழந்தைகளுக்கு பால் சத்து சேர சுலபமாக சுவையாக குல்ஃபி செய்து கொடுக்கலாம்.

கேஸர் பிஸ்தா - ஏலச்சி குல்ஃபி

தேவை: ஃபுல் க்ரீம் பால்- 2 லிட்டர், குங்குமப்பூ - கால் டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - கால் டீஸ்பூன், பிஸ்தா - 4 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 6 அல்லது 8 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: அடிகனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். காய்ச்சிய பாலில் இருந்து 4 டேபிள் ஸ்பூன் அளவை மட்டும் ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து ஆறவிடவும். அடுப்பில் உள்ள பால் பாதி யாகச் சுண்டும் வரை, அடிபிடிக்காமல், கைவிடாமல் கரண்டியால் கலந்து விட்டபடி கொதிக்க விடவும். எடுத்து வைத்த 4 டேபிள் ஸ்பூன் பாலுடன் குங்குமப்பூ சேர்த்து நன்கு கரைத்து, கொதிக்கும் பாலில் ஊற்றி, ஏலக் காய்ப் பொடி சேர்க்கவும். பிஸ்தா பருப்புகளை பொடியாக நறுக்கி, கொதிக்கும் பாலுடன் சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பை அணைக்க வும்.

பாலை இறக்கி நன்கு ஆறியவுடன், மட்கா வில் ஊற்றவும். ஒரு சிறிய தட்டு அல்லது ‘க்ளிங் ராப்’ போட்டு மட்காக்களை மூடி, ஃப்ரீஸரில் 4 மணி நேரம் வைக்கவும். 4 மணி நேரம் கழித்து வெளியே எடுத்து மெல்லிய மட்காக்களின் மூடியைத் திறக்கவும். பாதி செட் ஆன குல்ஃபிகளின் மேல், சிறிது பிஸ்தா பருப்புகளைத் தூவவும். மட்காக்களை மூடி, மேலும் ஃப்ரீஸரில் குறைந்தது 4 மணி நேரம் வைத்து எடுத்து, பின்னர் பரிமாறவும்.

குறிப்பு: முந்திரி, பாதாம் பருப்புகளை பொடியாக நறுக்கி சேர்த்து இந்த குல்ஃபியை கேஸர்-ஏலச்சி-நட்ஸ் குல்ஃபியாகவும் தயாரிக்கலாம். இளமஞ்சள் வண்ண கேஸர் குல்ஃபி’, நட்ஸுடன் சேர்ந்து, குழந்தைகளுக் குப் பார்க்கவும், சுவைக்கவும் குஷியாக இருக்கும்.

மாம்பழ குல்ஃபி

தேவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன், மாம்பழம் -2.

செய்முறை: அடிகனமான ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை சேர்த்து, பாதியளவு சுண்டும் வரை கைவிடாமல் கிளறிக் கொதிக்க வைக்கவும். நன்கு பழுத்த மாம்பழமாகத் தேர்ந்தெடுத்து தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி யில் போட்டுக் கூழாக அரைத்து வடிகட்டி, பாலுடன் சேர்த்து நன்கு கலக்கவும். நன்கு ஆறியவுடன், இந்தக் கலவையை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றவும்.

குல்ஃபி மோல்டுகளை அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி, ஃபாயில்களின் நடுவில் சிறு துளை போட்டு ஃப்ரீஸரில் 4 மணி நேரம் வைக்கவும். 4 மணி நேரத்திற்குப் பிறகு, மோல்டுகளை வெளியே எடுத்து, சிறு துளை வழியாக ஐஸ்க்ரீம் குச்சிகளை (சற்றே தடியான நீளமான ஐஸ்க்ரீம் குச்சிகளாக இருப்பது நல்லது) செருகி, மேலும் குறைந்தது 4 மணி நேரத்திற்கு ஃப்ரீஸரில் குல்ஃபி மோல்டுகளை வைத்து எடுத்தால், மாம்பழ குல்ஃபி தயார்.

குறிப்பு: மாம்பழத்தின் இனிப்புச் சுவைக்குத் தக்கவாறு சர்க்கரை அளவைக் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கலாம்.

ஈஸி குல்ஃபி

தேவை: காய்ச்சிய பால் - அரை லிட்டர், ஃப்ரஷ் க்ரீம் - அரை கப், கன்டென்ஸ்ட் மில்க் - அரை கப், ஸ்வீட் பிரட் துகள்கள் - கால் கப், மில்க் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: காய்ச்சிய (ஆறிய) பால், ஃப்ரஷ் க்ரீம், கன்டென்ஸ்ட் மில்க், ஸ்வீட் பிரட் துகள் கள், பால் பவுடர் அனைத்தையும் மிக்ஸியில் 3 அல்லது 4 முறை சுற்றி எடுத்து அரைக்கவும். இந்தக் கலவையை மட்கா அல்லது குல்ஃபி மோல்டுகளில் நிரப்பி மூடி, ப்ரீஸரில் குறைந் தது 8 மணி நேரம் செட் செய்து வெளியே எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: ஃப்ரஷ் க்ரீம் இல்லாவிடில், பாலைக் காய்ச்சுகையில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்க்கலாம். ஸ்வீட் பிரட் இல்லா விடில் சாதாரண மில்க் பிரட்டுடன் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
Post Comment

Post Comment