கடவுளர் போற்றும் கல்யாணத் திருநாள்!


பங்குனி உத்திரம் (28.3.2021)
எஸ்.ஆர்.எஸ்.ரெங்கராஜன் -தெய்வீக மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று. இத் திருநாளை தெய்வத் திருமண நாளாகவே இந்து சமயம் போற்றிக் கொண்டாடுகிறது.

பங்குனி மாதம், பௌர்ணமி திதி யோடு உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் தினமே பங்குனி உத்திர திருநாளாகும். பங்குனி என்பது பலவிதங்களில் பெருகி வளர்வது என்ற பொருளைத் தருவது. உத்திரம் என்பது மேல்நோக்கிச் செல்வது என்ற பொருளை அளிக்கிறது.

இந்தத் திருநாளில் அனேக தெய்வங்களின் திருமணங்கள் நடந்தேறியுள்ளன. இந்தப் புராண அடிப்படையிலேயே பங்குனி மாதத்தில் சைவத் திருத்தலங்களோடு வைணவ உத்ஸவமாக பங்குனி பிரம்மோத்ஸவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சங்க காலத்தில் மனம் கவர்ந்த துணையோடு இளைஞர்களும் இளம் பெண் களும் கூடிக் களித்த விழாவாக பங்குனி உத்திர விழா நடைபெற்றதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்.

உலக உயிர்களுக்கு இடையில் அன்பை வளர்த்து, அதன் வழியே வம்சத்தைப் பெருகச் செய்து இன்ப முடன் வாழ வைப்பவன் மன்மதன். இவன் சிவ பெருமான் மீது தமது காம பாணங்களைச் சொரிந்து அவரது கோபத்துக்கு ஆளானான். இதனால் ஈசனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டு, சாம்பலான தினம் மாசி மகம். அடுத்த முழுநிலவு தினமான பங்குனி உத்திர நாளில் சிவபெருமான் ரதி தேவியின் வேண்டுகோளை ஏற்று காமனை உயிர்ப்பித்தார். அது அந்நாளில், ‘பங்குனி முயக்கம்’ என்று அழைக்கப் பட்டது. ‘முயங்குதல்’ என்பது பிரிவின்றிக் கூடிக் களித் தலாகும். அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் பங்குனி உத்திர விழா வான, ‘பங்குனி முயக் கம்’ பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பங்குனி உத்திர நாளில் உரிய துணை யைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு இல்லறத்தை இறைவன் முன்னிலை யில் துவங்கும் வழக்கம் எளிய நிலையிலுள்ள குடும்பங்களில் அண்மைக்காலம் வரை இருந்து வந்துள்ளது. காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகம்பர நாதர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா வின்போது ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதைப் பெரியோர்கள் அறிவர். நாகரிக வளர்ச்சி யால், அந்நிகழ்வு தற்போது நின்றுவிட்டது.

கோயில்களிலும் பங்குனி உத்திர நாள் திருமணத் துக்குரிய நாளாகக் கொள்ளப்பட்டு, அந்நாளில் இறைவனுக்கு திருமண விழாக்கள் நடத்தும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகின்றது. இந்நாளில்தான் ஸ்ரீராமன்-சீதா தேவி திருக்கல்யாணம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது. ஸ்ரீரங்கநாதனை மணாளனாக ஆண்டாள் அடைந்த தினம் பங்குனி உத்திரம். திருமால் ஆலயங்களில் தாயார் மஹாலக்ஷ்மி தேவிக்கும் ஸ்ரீ நாராயணனுக்கும் திருமண விழாக்கள் நடைபெறுவதைக் காண்கிறோம்.

இன்று திருமகளுடன் ஸ்ரீமத் நாராயணன் ஒரே ஆசனத்தில் வீற்றிருந்து காட்சியளித்து அருள்புரிகிறார். இதற்கு, ‘சேர்த்தி உத்ஸவம்’ என்று பெயர். திருவரங் கத்தில் ஸ்ரீரங்கநாதர் தாயார் சன்னிதிக்கு எழுந்தருளி திருமணம் செய்துகொண்டு இருவரும் ஏகாசனத்தில் அமர்ந்து சேவை சாதிப்பது இன்றும் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. அதேபோல், திருச்சி, உறையூரில் ஸ்ரீ கமலவள்ளி தாயாருடன் ஸ்ரீரங்கநாதர் சேர்த்தி திருவிழா பங்குனி உத்திரத்தில் நடை பெறுகிறது.

சிவாலயங்களிலும் இன்று ஸ்ரீ பார்வதி தேவிக்கும் சிவபெருமானுக்கும் திருமண விழா கொண்டாடப் படுகிறது. சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலய திருமண விழாவும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நடைபெறும் சிவ - பார்வதி திருமண விழாக்களும் உலகப் புகழ் பெற்றவையாகும்.

இதேபோல், முருகன் ஆலயங்களில் வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணத் திருவிழா சிறப்புடன் நடை பெறுகின்றது. இன்று முருகன் ஆலயங்களில்,‘வேடர்பறி’ எனப்படும் வள்ளியைக் களவு கொண்டு வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து வள்ளி திருமணமும் நடத்தப்படுகின்றன.

சுவாமிமலையில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தினைப்புனம் காத்தல், விநாயகர் யானையாக வந்து விரட்டுதல், முருகன் வேங்கை மர மாக நிற்பது, பிறகு வள்ளி தேவிக்குக் காட்சி கொடுத்துத் திருமணம் புரிந்துகொள்ளுதல் முதலியன சிறப்பாக நடத்தப்படுகின்றன.

தெய்வீகத் திருமணங்கள் அன்றி, திருவாரூர் பெருமான் தனது வலது பாதத்தைக் காட்டும் திருநாளாகவும், நாட்டுப்புறத் தெய்வங்கள் பொங்கல் விழா காணும் நாளாகவும், கன்னிமார் தெய்வங்களுக் குப் பூச்சொரிதல் நாளாகவும் பங்குனி உத்திரம் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திர விழாவைக் காணும் கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி இனிய வாழ்வைப் பெறுவர் என்றும், மணமான பெண்கள் நல்ல புத்திரர்களைப் பெறுவர் என்றும், கணவருடன் கருத்தொருமித்து மகிழ்ச்சியுடன் நெடுநாள் வாழ்வர் என்றும் உறுதியாக நம்புகின்றனர். அறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தரிசித்தால் வாழ்வில் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.

Post Comment

Post Comment