நந்திக்குக் காட்சி தந்த பஞ்சலிங்கேஸ்வரர்!


வெளிமாநிலக் கோயில்
ராஜிராதா -கர்நாடகா மாநிலம், மான்டியா ஜில்லாவில் கோவிந்தனஹள்ளியில் அமைந்துள்ளது பஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோயில். கட்டடக் கலைக்கு புகழ் பெற்ற இந்த சிவன் கோயில், இந்திய தொல்பொருள் இலாக்காவின் கண்காணிப்பில் உள்ளது. இந்தக் கோயிலிலுள்ள பஞ்சலிங்கங்களும் தனித்தனிச் சன்னிதிகளில், ஒரே வரிசையில் அமைந் துள்ளது அபூர்வமாகும்!

பார்வதி தேவி ஒருசமயம் கடும் தவத்தில் ஈடுபட்டிருந்தாள். அப்போது கயிலாயத்தைக் காத்து வந்த நந்தியெம்பெருமானை ஏமாற்றி ஒரு அரக்கன் அன்னை பார்வதி தேவியின் ரூபத்தில் கயிலாயத்தில் நுழைந்து விட்டான். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, நந்தி தேவரை பூலோகத்தில் நரியாகப் பிறக்கும்படி சபித்துவிட்டாள்.

நந்தி தேவர் பூலோகத்தில் நரியாகப் பிறந்தாலும் தன்னுடைய தலைவர் சிவபெருமானை மறக்காமல் கோவிந்தனஹள்ளியில் விலஸ்தா மற்றும் நேத்ரா வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மண்ணால் ஒரு சிவலிங்கம் அமைத்து பூஜித்து, தவமியற்றி வந்தார்!

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து சிவபெருமான் நந்தி தேவருக்கு ஒன்று ஐந்து முறை காட்சி தந்து முக்தி பேறு அருளி, கயிலைக்கு அழைத்துக் கொண்டார்! சிவபெருமான் நந்தி தேவருக்கு ஐந்து முறை இத்தலத்தில் காட்சி தந்ததினால், ஐந்து லிங்கங்களின் ரூபங்களில் இங்கே நிலைகொண்டு அருள்பாலித்து வருகிறார். அந்த ஐந்து லிங்கங்களும் இன்று, ஸ்ரீ அகோரயீஸ்வரர், ஸ்ரீ வாமதீஸ்வரர்,ஸ்ரீ சத்யோஜாதேஸ்வரர், ஸ்ரீ தத்புருசேஷ்வரர்,ஸ்ரீ ஈசாநேசுவரர் என அழைக்கப்படுகின்றனர்! இரண்டு மற்றும் மூன்றாம் சன்னிதிகளுக்கு எதிரே இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. இவற்றில் இரண்டாவது வாசலின் இருபுறமும் துவாரபாலகர் களைத் தரிசிக்கலாம்.

உள்ளே நுழைந்தால் ஐந்து சன்னிதிகளையும் இணைக்கும் வகையில் 21 தூண்களைக் கொண்ட ஒரு பெரிய மண்டபம் உள்ளது. அந்தத் தூண்களில் ஏகப்பட்ட வேலைப்பாடுகளைக் காணலாம்! இந்த மண்டபம் பளிச்சென வெளிச்சத்தோடு காட்சி தருவது சிறப்பு! இந்த மண்டபத்தின் வழியே கருவறை சன்னிதிகளுக்குச் செல்லலாம். கருவறை யில் ஐந்து லிங்க மூர்த்திகளுக்கும் எதிரே ஐந்து நந்திகள் காணப்படவில்லை. மாறாக, மூன்று சன்னிதிகளுக்கு வெளியே மட்டும் நந்திகள் உள்ளன. அவை அனைத்தும் அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றன!

இப்பகுதியை 1235ஆம் ஆண்டு வாக்கில் ஆட்சி செது வந்த ஹொசால மன்னர் வீரசோமேஸ்வரா என்பவர் 1236ஆம் ஆண்டில் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார். இந்தக் கோயில் மட்டுமின்றி, அவர் கட்டிய சுமார் பத்து கோயில்களும் மிகவும் சிறப் புற்று விளங்கின. அக்காலகட்டத்தில் சிற்பக் கலையில் சிறந்து விளங்கிய ரூவாரி மல்லித்தம்மாவின் கைவண்ணத்தில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டுள் ளது. இதற்காக இவருக்கு இக்கோயிலில் சிலை கூட வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு சன்னிதியிலும் லிங்க மூர்த்தங்களை சொற்ப அலங்காரத்தில் தரிசிக்கலாம். அனைத்து சன்னிதிகளின் மேலும் விமானங்கள் எழுந்துள்ளன. அவை ஒன்றிலிருந்து மற்றொன்று வித்தியாசமாய் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. பஞ்ச லிங்கமூர்த்தி களும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளனர். முதலில் இக் கோயிலில் நான்கு சன்னிதிகள் மட்டுமே இருந்ததாக வும், பின்னாட்களில் ஐந்தாவது சன்னிதி இணைக் கப்பட்டதாகவும் உள்ளூர்வாசிகள் சிலர் கூறுகின்றனர்.

கருவறை விமானத்தில் அற்புத வேலைப்பாடு களையும், சிற்பக் கலைகளையும், பூவேலைகளையும் கண்டு மகிழலாம். கீழேயிருந்து முதல் அடுக்கில் சுற்றி மாடங்கள் அமைத்து அவற்றினுள் ஏராளமான சிலை களை வைத்துள்ளனர். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரக் காட்சிகளையும் இந்த மாடங்களில் கண்டு ரசிக்கலாம். கோயிலின் உட்புறத்திலும், ஏராளமான மாடங்கள் உள்ளன. அவற்றில் பார்வதி, கணபதி, சுப்ரமணியர், மகிஷாசுரமர்த்தினி, பிரம்மா,ஸ்ரீ வீரபத்ரர், ஸ்ரீ உமாமகேஸ்வரர் போன்ற அழகிய சிற்பங்களை தரிசிக்கலாம்!

ஸ்ரீ சப்த மாதர்களும் இந்தக் கோயிலில் அருள் பாலிக்கின்றனர். அதேபோல், இக்கோயிலில் இரண்டு பாம்பு சிற்பங்கள் உள்ளன. இவற்றில் ஆண் பாம்பு ஏழு தலைகளுடனும், பெண் பாம்பு ஐந்து தலைகளுடனும் காட்சி தருகின்றன. இதுபோன்ற இரட்டைப் பாம்பு சிற்பத்தை, ‘ஆரக்குப்பே’ என்ற இடத்திலும் காணலாம்!

தரிசன நேரம் : காலை 9 முதல் மாலை 6 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

Post Comment

Post Comment