அன்னை சபரி முக்தித் திருத்தலம் ஷிவ்ரி நாராயண் கோயில்!


ஸ்ரீ ராமரின் பாதையிலே... 2
பிலாய் பிச்சு -‘ஸ்ரீராமரின் பாதையிலே...’ அடுத்து நாம் தரிசிக்கவிருப்பது,ஷிவ்ரி நாராயண் திருக்கோயில். ராமாயணத்தில் சபரி என்ற பழங்குடியினப் பெண் இல்லறம் துறந்து, மதங்க முனிவரிடம் சீடராகச் சேர்ந்தார்.பின்னர் அவருக்குச் செத பணிவிடையால் அவரது அன்பைப் பெற்றாள்.

மதங்க முனிவரின் ஆசிரமம் ஷிவ்ரி நாராயண் சங்கமம் அருகில் இருந்தது. மதங்க முனிவர் முக்தி அடையும்போது, சபரியும் முக்தி வேண்டும் என்று வேண்ட, உன்னைத் தேடி இறைவன் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமர் வருவார். அவருக்குப் பணிவிடைகள் செது, பின்னர் முக்தி அடைவா" என்று கூறி முக்தி அடைகிறார் முனிவர். ஸ்ரீராமரின் வருகைக்காக சபரி வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறாள். அவளது தள்ளாத வயதிலும் காட்டுக்குச் சென்று கனிகளைப் பறித்து வந்து ஸ்ரீராமரின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள். வருடங்கள் உருண்டோடுகின்றன. சபரி அன்னையும் முதுமை அடைகிறார்.

ஒரு நாள் ஸ்ரீராமன், லக்குவனுடன் அந்த ஆசிரமத்துக்கு வருகை தர, அவரைக் கண்ட சபரி அன்னை மிகுந்த மகிழ்ச்சி பொங்க வரவேற்று பணிவிடைகள் செகிறார். இதைக் கம்பன்,‘இருந்தனென் எந்தை நீ ஈண்டு எதுதி என்னும் தன்மை பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி எங்கள் வருந்துறு துயரம் தீர்த்தா; அம்மனை வாழி’என்கிறார்.

அப்போது சபரி, வனத்தில் தான் சேகரித்த பழங்களை எடுத்து வந்து, அவற்றைச் சுவைத்து துவர்ப்பான பழங்களை விடுத்து, இனிப்பான பழங்களை ஸ்ரீராமருக்கு வழங்குகிறாள். ஸ்ரீராமரும் மகிழ்ச்சியுடன் அதை உண்ணுகிறார். அதைக் கண்ட லக்குவன் கோபம்கொள்ள... கோதண்டராமர், அன்பில் மிகுதியால் சுவைத்துக் கொடுக்கப்படும் இந்தப் பழங்கள் மிகுந்த சுவை உடையவை" என்று லக்குவனிடம் கூறுகிறார். பிறகு சபரி அன்னை முக்தி அடைகிறாள். அந்த இடம்தான், ‘ஷிவ்ரி நாராயண்’ கோயில்.

இன்றும் இங்குள்ள சபரி இனப் பழங்குடியினர் சபரி அன்னையை, தங்கள் இனத்தின் தெவமாக நினைத்து வழிபடுகின்றனர். ஷிவ்ரி நாராயண் கோயில் தலைநகர் ராப்பூரில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு செல்ல மகாநதி மற்றும் ஜோங்க் நதிகளைக் கடந்து செல்ல வேண்டும். ஸ்ரீராமரும் மகாநதியின் வழியே பயணித்து வந்த தாகக் கூறுகின்றனர். சபரி அன்னை, நாராயணரை சந்தித்த இடமாதலால், ‘சபரி நாராயணன்’ என்பது மருவி, ‘ஷிவ்ரி நாராயண்’ என்று அழைக்கப் படுகிறது. இங்கு சிவன், நாராயணன் ஆகிய இருவருக்கும் கோயில்கள் உள்ளன. முதலில் தரிசிக்கவிருப்பது, நர்நாராயண் மந்திர். இந்தக் கோயிலின் மூலவர் பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணு.

ஆடம்பரம் இல்லாத மிகவும் பழைமையான கோயில். மூலவரின் கீழே ஒரு சிறிய வற்றாத சுனை உள்ளது. அதில் இருந்து தீர்த்தம் எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள்.இந்தக் கோயிலைச் சுற்றி வரும்போது உள்ளுர்வாசிகள் என்னை ஒரு மரத்தின் அருகே அழைத்துச்சென்று, அந்த மரத்தின் இலைகளை உற்றுப் பாருங்கள்" என்றனர். உற்றுப்பார்த்து அதிர்ந்து போனேன். அது, ‘கிருஷ்ண வாட்’ என்கிற ஒரு அபூர்வ மரம். இதன் இலைகளின் கீழ்ப்புறம் குமிழாக சுருட்டி ஒரு சிறிய பாத்திரம் போல் இருக்கும். சிறு வயதில் ஸ்ரீ கிருஷ்ணர் இதில் வெண்ணை சேமித்து உண்டதாக ஒரு கதை உண்டு.

இந்தக் கோயிலை ஒட்டினாற்போல் உள்ளது, பூரி ஜகன்நாத் கோயில். இது பூரி ஜகன்நாதரின் முதல் (ஆதி) கோயில் என்றும் கூறுகின்றனர். பூரியை போன்று இங்கும் ரத யாத்திரை வருடா வருடம் நடைபெறுகிறது. ஒரிசா, மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய அண்டை மாநிலங்களிருந்து திரளான மக்கள் வந்து இதில் கலந்து கொள்கிறார்கள்.

பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் மாசி பூர்ணிமா விழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த விழா, சத்தீஸ்கர் மாநிலத் தின் மிகப்பெரிய விழாவாகும். அந்த பூர்ணிமாவின் போது ஒரு நாள் பூரி ஜகன்னாதர் பூரியிலிருந்து இங்கு வந்துவிடுவதால், பூரியிலிருக்கும் கோயிலில் ஜகன்னாதருக்கு பிரசாதங்கள் சமைக்கப்படுவதில்லை என்றும், இங்கு அப்போது சமைத்த உணவுகளை மட்டுமே நிவேதனம் செவதாகவும் கூறுகின்றனர்.

ஷிவ்ரி நாராயண் கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில், ‘லக்னேஸ்வர் கோயில்’ எனும் லக்ஷ்மனேஸ்வர் சிவன் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இது, ‘சத்தீஸ்கரின் காசி’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள லிங்கத்தை பற்றிய வரலாறும் லிங்கத்தின் வடிவமும் பிரம்மிக்கச் செய்கிறது. ராவணனை வதைத்த பிறகு ஸ்ரீராமர், தமக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட, ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் வைத்து பூஜை செதார். அப்போது லட்சுமணனிடம் பல புண்ணிய நதிகளில் இருந்து நீர் எடுத்து வரக் கூறினார். அவ்வாறு லட்சுமணன் இங்குள்ள புண்ணிய சங்கமத்தில் புனித நீர் எடுத்தவுடன் மயக்கமுற, கனவில் தோன்றிய சிவபெருமான், இங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செது வழிபடுமாறு கூறினார். அதன்படி லக்ஷ்மணன் இங்கு ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு.

ராமேஸ்வரத்துக்கும் இந்த ஊருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ராமேஸ்வரம்=ராமர்+ஈஸ்வரன். ஷிவ்ரி நாராயண்=சிவன்+நாராயணன். இந்த லிங்கம், மொரமொரப்பான பல துவாரங்களையுடைய சிவ லிங்கத்தின் வடிவம் கொண்ட பாறை போன்று உள்ளது. இதில் எவ்வளவு தண்ணீர் அபிஷேகத்துக்காக விட்டாலும் அது வெளியே வராமல் உள்ளேயே செல்கிறது என்றும், அது பாதாள லோகம் வரை செல்கிறது என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை.

இந்த லிங்கம் ஒரு லட்சம் லிங்க சித்திரங்களை கொண்டது என்றும், அதனால் இது, ‘லக்னேஸ்வர்’ என்றும் பெயர் பெற்றது என்றும் கூறுகின்றனர். சிவராத்திரியின்போதும், சிராவண மாதம் என்று அழைக்கப்படும் மாதத்தின்போதும் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். எவ்வளவு கஷ்டங்கள், பாவங்கள் வாழ்க்கையில் இருந்தாலும், இந்த லிங்கத்தை தரிசித்தால் அவ்வளவும் பொடிப் பொடி யாகி விடும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. ராமாயண கால சிறப்புமிக்க ஓர் அரிய சிவலிங்கத்தை இங்கு தரிசிக்கலாம்.அடுத்ததாக, ஸ்ரீராமரின் பாதையில் நாம் தரிசிக்க விருப்பது சப்த ரிஷி ஆசிரமம்.

(தொடரும்)

Post Comment

Post Comment