• அருள்வாக்கு


ஒரே இடத்தில் 11 சுயம்பு பிள்ளையார்கள்
• ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் -வேலூருக்குப் போயிருந்தோம். அங்கே சேண்பாக்கம் என்ற இடத்தில் சக்தி வாந்த கணபதி மூர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு பிள்ளையார், இரட்டைப் பிள்ளையார் இல்லை; பதினொரு பிள்ளையார்கள்! அதில் இன்னும் விசேஷம் என்னவென்றால் அவை சில்பி அடித்துப் பண்ணியவையல்ல; பதினொன்றும் சுயம்பு மூர்த்திகள். ஏகாதச ருத்ரர்கள் உண்டு. இங்கே ஏகாதச விநாயகர்கள் இருக்கிறார்கள். பதினொன்றும் அமைந்திருக்கும் அமைப்பு ப்ரவணவாகாரமாக இருக்கும்.

நடுவாந்தரத்தில் பூமி மட்டத்தோடு மட்டமாக அந்த மூர்த்திகள் மூடிப் போயிருந்ததாம். விக்னேஸ்வரர் ப்ருத்வீ தத்வத்துக்கு மூர்த்தி என்று காட்டவோ என்னவோ, இப்படி மண்ணுக்குள் புதைந்து விளையாட்டுப் பண்ணியிருக்கிறார்! ‘துக்கோஜி’ என்ற மஹாராஷ்டிர மந்திரி அந்த வழியாக ஒரு ராத்திரி வேளையில் சாரட்டில் போக் கொண்டிருந் தாராம். ‘டக்’கென்று அச்சு முறிந்து வண்டி நின்றுவிட்டது. இறங்கிப் பார்த்தால் பூமியில் ரத்தக்கறை இருந்தது. ஆனால், ஆள் யாரையும் காணோம். என்னவென்று புரியாமல் மனசு கலங்கி ராத்திரி பூராவும் அங்கேயே இருந்தாராம். விடிந்துதான் சாரட்டுக்குத் தச்சு பார்த்து ரிப்பேர் பண்ண முடியுமென்பதால் அப்படித் தங்கும்படி ஆயிற்று.

பிரயாணத்துக்கு இப்படி ப்ரதிபந்தகம் (விக்னம்) வந்ததே என்று வருத்தப்பட்டு, விக்னேஸ்வரரைப் பிரார்த்தித்துக்கொண்டு தூங்கிப்போ விட்டார். விக்னேஸ்வரர் ஸ்வப்னத்தில் வந்தார். அந்த இடத்தில் என்னுடைய ஏகாதச மூர்த்திகள் புதைந்து போயிருக் கின்றன. அதன்மேல் உன் வண்டிச் சக்கரம் இடித்ததனால்தான் ரத்தம் வந்துவிட்டது. அதைப் பற்றி வருத்தப்படாதே! மூடிக்கிடந்தது போதும், கோவில் கட்டிக் கொண்டு எல்லோரும் வரப்ரஸாதியாகப் பிரகாசிக்க வேண்டும் என்கிற சங்கல்பத்தில் நானேதான் பண்ணுவித்தது! அங்கே கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் பண்ணிப் பரம புண்ணியம் சம்பாதிச்சுக்கோ!" என்றார். துக்கோஜி எத்தனை வருத்தப்பட்டாரோ அதற்கு வட்டியும் முதலுமாகச் சந்தோஷப் பட்டுக்கொண்டு அப்படியே பண்ணினார்.

அந்தக் கோயில் இருக்கிற பக்கமாக நாங்கள் ஊர்வலமாகப் போக் கொண்டிருந்தோம். அப்போது என்ன ஆச்சு என்றால், சின்ன ஸ்வாமிகள் யானை மேல் வந்து கொண்டிருந்தார். அந்த யானை இடத்தை விட்டு மேலே போகாமல் அங்கேயே சுழண்டு சுழண்டு வந்தது. யானைப் பாகனும் மற்றவர்களுக்கும் எத்தனை தாஜா பண்ணியும் கேட்காமல் ரொம்ப நேரம் இப்படி முரண்டு பண்ணிற்று. ‘மேலேயானால் ஸ்வாமிகள் இருக்கிறார். இது இப்படிப் பண்ணு கிறதே! மதம் பிடித்துவிட்டதா என்ன? கூட்டமாக ஜனங்கள் சேர்ந்திருக்கிறார்களே!’ என்று எல்லோருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அப்புறம்தான் சட்டென்று ஞாபகம் வந்தது. ‘பக்கத்திலே சேண்பாக்கம் பிள்ளையார் இருக்கிறார். அவருக்கு 108 சிதறுகா போடுவதாக வேண்டிக்கொண்டிருந்தோம். ஆனால், சமயத்தில் அது மறந்து போயிடுத்து’ என்று! மறந்து போச்சு என்றால் என்ன? அசிரத்தை என்றுதான் அர்த்தம்! பூர்ண கும்ப மரியாதை, மாலை மரியாதை, ஜனங்களுடைய நமஸ்காரம் எல்லாம் நிறைய வாங்கிக் கொள்வதற்காகப் பவனி வருவதற்கு மறந்து போகவில்லையே! பிள்ளையாருக்கு வேண்டிக் கொண்டதைச் செய மட்டும் மறந்து போகலாமா? ஜனங்களுக்கு ச்ரத்தா - பக்திகளை உண்டு பண்ண வேண்டிய பொறுப்புள்ளவர்களே இப்படிப் பண்ணலாமா என்று பாடம் கற்பிக்கிறதற்காகத்தான் ஸ்வாமி இப்படிப் பண்ணியிருக்கிறாரென்று புரிந்தது. எனக்கே ஏதாவது கஷ்டம் உண்டாக்கினால்கூட அவ்வளவு மனசில் தைக்காது என்றுதான் சின்ன ஸ்வாமிகள் ஏறி வந்த தம்முடைய ஸ்வரூபமான யானை மூலமே இடக்குப் பண்ணி யிருக்கிறார் என்று தோன்றிற்று. அவர் ‘சின்ன ஸ்வாமிகள்’ ஒன்றும் பயப்படாமல் தைரிய மாகத்தான் இருந்தார். வேண்டிக்கொண்ட எனக்கும், அதைத் தெரிந்துகொண்டிருந்த காரியஸ்தர்களுக்குந்தான் பயம், பாடம் எல்லாம்.

உடனே பிள்ளையாருக்குச் சிதறுகா போட்டது. யானையும் சட்டென்று சரியாகித் தன் பாட்டுக்கு மேலே போக ஆரம்பித்தது. இது ப்ரத்யக்ஷத்தில் பார்த்தது.

அப்புறம் ஒரு நாள் அந்தப் பிள்ளையாருக்கு அபிஷேக ஆராதனைகளும் விசேஷமாகப் பண்ணினோம்.

Post Comment

Post Comment