ஒரு வார்த்தை• அனுஷா நடராஜன் -ஒரு ஊருல ஒரு அழகான ராஜகுமாரி இருந்தாளாம். அவங்க அப்பா, அவளோட பிறந்த நாளுக்கு விலையுயர்ந்த வைர மாலையைப் பரிசளிச்சாராம்.

ஒருநாள் அந்தப்புரக் குளத்துல அவ குளிக்கும்போது, ஒரு காக்கா அவளோட வைர மாலையை அபேஸ் பண்ணிட்டுப் போயிடுச்சாம். ராஜகுமாரிக்கு அதிர்ச்சி கம் அழுகை! நம் ராஜா சும்மா இருப்பாரா? உடனே தண்டோரா போட்டு, சன்மானத்தையும் அறிவிச்சுட்டாரு.

அதைக் கேள்விப்பட்ட இளைஞன் ஒருவன் மும்முரமாகத் தேட ஆரம்பிச்சான். ஒருநாள் தேங்கியிருந்த பெரிய சாக்கடை ஓரமா போன போது, தண்ணில என்னவோ பளபளன்னு தெரியவே, எட்டிப் பார்த்தான்.

அட! வைர மாலை மின்னுது!உடனே குச்சியை விட்டு எடுக்கப் பார்த்தான்; முடியலை! கையை விட்டுக் கிளறினான், எதுவும் அகப்படலை. சாக்கடை ஆச்சே... மூக்கை மூடிக்கிட்டு உள்ளே இறங்கியும் தேடினான். நெக்லஸ் பளபளன்னு கண்ணுக்குத் தெரியுதே தவிர, கையில கிடைக்க மாட்டேங்குது.

கடுப்பான அந்த இளைஞன் சேறும் சகதியுமா வெளியே வரும்போது, எதிரே யார் வரணும்? கரெக்ட்! ஒரு சாமியார் பர்ஃபெக்ட் என்ட்ரி!என்னடா தம்பி, என்ன தேடறே?"ன்னு பாயின்ட்டா கேட்டுட்டாரு. அவனும் முழு கதையையும் சொல்லிட்டு, தோ... நீங்களே பாருங்க சாமி. சாக்கடைக் குட்டையில பளபளன்னு வைர மாலை நல்லாவே தெரியுது. ஆனா இறங்கிப் பார்த்தா கையில கிடைக்க மாட்டேங்குது"ன்னு அலுத்துக்கிட்டான்.

அடப்பாவி, இருக்குற இடத்தை விட்டுட்டு இல்லாத இடம் தேடி அலையறியே?"ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்ன சாமியார், நீ தேடற வைர மாலை சாக்கடைக்குள்ள இல்ல; கொஞ்சம் அண்ணாந்து பாரு, மேல இருக்கு!"ன்னு காட்டினாராம்.அந்தச் சாக்கடைக்கு மேல ஒரு மரத்தோட நுனிக் கிளையில் மாட்டியபடி தொங்கிக்கிட்டிருந்ததாம் அந்த வைர மாலை!கதையின் நீதி: நம்முடைய சந்தோஷம் ஏதோ ஒரு பொருளிலோ, அல்லது ஒரு ஆளிடமோ, ஒரு விஷயத்திலோ இருப்பதாக நினைத்துக் கொண்டு, சாக்கடை போன்ற உலக வழக்குகளில் அமிழ்ந்து துழாவிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையான அமைதியும், நிலையான மகிழ்ச்சியும் உயர்ந்த விஷயங்களில் மட்டுமே காண முடியும். அது இறைவனாக இருக்கலாம்; அல்லது இறைத்தன்மை மிக்க நோக்கமாகவோ, யாருக்கும் தீங்கு நினைக்காத நல்ல செயல்களாகவோ இருக்கலாம். மேன்மையான விஷயங்களில் ஈடுபடும் மனசு இருந்தால் உயரிய பொருள் எளிதில் வசப்படும்!

Post Comment

Post Comment