திறமையை யாரும் அடக்கிவைக்க முடியாது!

இனியொரு விதி செய்வோம் 5
ப்ரீத்தி ராஜகோபால்ஒரு பெண்ணின் மதிப்பு உயர்ந்து நிற்பது, அவர்கள் எப்படித் தங்களை வெளிப் படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அமையும். அந்த வகையில் ஒரு பெரிய கல்விக் குழுமமான AMET யூனிவர்சிட்டியின், இ-பிசினஸ் ஸ்கூலின் நிர்வாக இயக்குநரான திருமதி தீபா ராஜேஷ் சமூகத்தில் வெற்றியாளராக அடையாளம் பெற்றிருக்கிறார். இந்த இலக்கை அவர் எட்டியது எப்படி என்பது குறித்துப் பேசியதிலிருந்து...

நான் எனது பள்ளிப் படிப்பை மூன்று பள்ளிகளில் முடித்தேன். முதலில் சர்ச் பார்க் ஸ்கூல், லேடி மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மற்றும் CSI ஸ்கூல். பின்பு எத்திராஜ் மகளிர் கல்லுரியில் B.com, பட்டப்படிப்பை முடித்தேன், அங்குதான் எனக்குள் இருந்த திறமைகளை எனது பேராசிரியர்கள் வெளிக்கொணர்ந் தார்கள். பாட்டு, உரையாடல், டான்ஸ் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றேன்.

கல்லூரியில் campus இண்டர்வியூவில் வேலைக்காகக் காத்திருந்தேன். அப்போது எனது பேராசிரியர்கள், ‘நன்கு புரிந்து கொள்ளுங்கள் உங்களது முதல் வேலை என்பது உங்களது லட்சிய இலக்கு அல்ல, இது ஒரு ஆரம்பமே. இதில் முழு கவனத்தோடு கற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். ஒரு அன்னியச் செலாவணி நிறுவனத்தில் எனது முதல் பணியைத் தொடங்கினேன். அதில் தலைமைக்கான தகுதி களைக் கற்றுக் கொண்டேன். அப்போது எனக்குச் சிறந்த பணியாளருக்கான விருதும், கோவாவுக்குச் செல்ல அனைத்துச் செலவுகளும் நிறுவனமே ஏற்றுக்கொண் டது. இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஊக்கத் தையும் கொடுத்தது.

திருமணத்திற்குப் பின்பு அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் பணியைத் தொடர்தேன். அப்போது அந்தக் கல்லூரியின் முதல்வர் தேவராஜன் கொடுத்த ஊக்கத்தால் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குள் இருக்கும் திறமையை எனக்கே தெரியாமல் வெளிக்கொணர்ந்தார். அவருக்கு இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்.

கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தில், தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று (National Assessment and Accreditation Council, NAAC) பெறுவதற்கான வேலைகளில் எனக்கு முழு சுதந்திரம் அளித்து, அனைத்தையும் கற்றுக் கொடுத்தது அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி. அதன் பிறகுதான் எனக்கு என் மேலே ஒரு நம்பிக்கை பிறந்தது" என்கிறார்.

எனது பாட்டிதான் என்னோட மிகப் பெரிய பலமா இருந்தாங்க. எப்பவும் தைரியமா இருக்கணும்னு ரொம்பவும் ஊக்கப்படுத்துவாங்க. என்னோட வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலை யிலும் நான் திடமான முடிவு எடுக்க முக்கியக் காரணமாக என்னோட பாட்டியின் தன்னம்பிக்கை யான வாழ்க்கைமுறைதான். அவர்களைப் பார்த்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

என் கணவர், என் மாமனார் - மாமியார் என் மகள் இவர்கள் தரும் ஊக்கமும் தைரியமும் தான் எனது வெற்றிக்குப் பெரும் துணையாக இருப்பது. எனது குடும்ப வாழ்க்கையும், பணியை யும் சமமாகக் கருதுவதால் எனக்கு எந்தச் சிரமமும் தெரிவதில்லை. மேலும் எனது குடும்பத் தாரின் ஒத்துழைப்பு எனக்கு எல்லா வகையிலும் சிறப்பாகச் செயல்படவும், மேலும் இன்னும் பல புதிய முயற்சிகள் செயவும் உறுதுணையாக இருக்கிறது.

இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு நம்மளோட உறவுமுறைகள் பற்றி அவ்வளவா தெரியறது இல்லை. அதுமாதிரி நம்முடைய கலாசாரம் பண்பாடு, நம்ம வீட்டு சம்பிரதாயம் அதெல்லாம் கற்றுக்கொடுங்க. எங்க வீட்டுக்கு யார் வந்தாலுமே என்னோட பொண்ணும் நானும் வந்து ‘வாங்க வெல்கம்’ அப்படின்னு சொல்லி ஒரு நிமிஷம் பேசிட்டு, அப்புறம்தான் எங்க வேலைகளைப் பார்க்கப் போறோம். அதே மாதிரி வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் சின்னவங்க பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கணும்.

எப்பவும் நான் இந்தக் கால இளைஞர்களுக்குச் சொல்வது என்னன்னா, ‘வீட்ல இருக்கிறவங்க பெரிய வங்களுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கணும். கடவுளை வணங்கும் நமக்குக் கடவுள்தான் எல்லாமே. நாம இந்த நிலைமைக்கு இருக்கும்போது எல்லாத்துக்கும் காரணம் கடவுள்தான். அதுக்கப்புறம் நம்ம வீட்டுல இருக்குறவங்க பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கணும். நம் பண்பாடு, கலாசாரத்தை மதிக்கணும். அதுமாதிரி ஏற்றதாழ்வு இன்றி எல்லார்கிட்டயும் மரியாதையாகவும் அன்பாகவும் கருணையோடு இருந்தா, அது ஒண்ணுதான் நம்மை உயர்த்தும்.

அன்பு மட்டுமேதான் இந்த உலகத்தில் சிறந்த சக்தி அப்படிங்கறது எனது அசைக்க முடியாத நம்பிக்கை அப்படின்னு சொல்றாங்க.

எப்பவும் நாம எல்லாருக்கும் முன்மாதிரியா இருக்கணும். நான் எப்பவுமே காலேஜுக்கு மொதல்ல போயிடுவேன். அப்போ எனக்கு அப்புறம் வர்றவங்க கூட, ‘மேடமே முதல்ல வந்துட்டாங்க, நாம கரெக்ட் டயத்துக்கு வரணும்’ அப்படின்ற எண்ணம் தானா வரும்.

நானும் ஒரு தொழிலாளி மாதிரிதான் அவங்களோட வேலை செவேனே தவிர, நான் ஒரு முதலாளி, அப்படின்னு இருந்தது கிடையாது. நான் பெரியவன் நீ சிறியவன் அப்படினு இல்லாம, எல்லாரும் மனுஷங்க அப்படிங்கிற ஒரு விஷயம்தான். ஒரு துப்புரவுத் தொழிலாளர் வந்து என்னோட பேசணும், கை கொடுக்கணும்னு நினைச்சா அவர்களுடன் கைகுலுக்குவேன். நான் யாரிடமும் பாகுபாடு பார்ப்பதில்லை அப்படின்னு சொல்றாங்க.

எங்க காலேஜ்ல படிக்கிற எல்லா மாணவர்களுக்கும், தினமும் அவங்களோட வாழ்நாளில் என்னவெல்லாம் சந்தேகங்கள் வருமோ, அதெல்லாம் நாங்க இங்க பாடமாகவே நடத்துகிறோம். ஏட்டுச் சுரைக்கா கறிக்கு உதவாது அப்படின்னு சொல்லுவாங்க. அதனால நாங்க எப்பவுமே படிப்போடு சேர்த்து வாழ்க்கைக்குத் தேவையான வாழ்க்கைப் பாடத்தையும் சொல்லிக் கொடுக்கிறோம். அது என்னிக்கோ ஒருநாள் அப்படின்னு சொல்லாமல் தினமும் சொல்லிக் கொடுக்கிறோம்.

இதனால எங்ககிட்ட இருந்து வெளியில் போற பசங்க, ‘எந்தவிதமான இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரு தைரியமும் தன்னம்பிக்கையும் எங்களுக்கு இருக்கு’ அப்படின்னு சொல்றாங்க.

‘நான் ஒரு பெண்’ என்பதால் ஒருபோதும் எனக்கு எந்த இடத்திலும் நிராகரிப்புகளும் தடைகளும் இல்லை. பாலினத்தை விட திறன்களை நான் நம்புகிறேன். திறமைகளை யாரும் அடக்கி வைக்க முடியாது.

நான் நிறைய புத்தகங்களைப் படிப்பேன், எந்த புத்தகங்களும் குறைந்தது இல்லை. ஒரு கதை புத்தகம் கூட அதில் உள்ள ஏதோ ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்வோ நமக்கு ஏதோ ஒரு விதத்தில் நமது வாழ்க்கைக்கு உதவும் என்பது எனது கருத்து.

நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் அவர்களின் சொந்த பிரச்னைகள் மற்றும் வேதனைகள் உள்ளன. நாம் மரியாதையுடன் நடத்த வேண்டும், அவர்களின், கருத்துக்களைக் காது கொடுத்து கேட்க வேண்டும். அந்த இடத்தில் ஆண், பெண் என்ற பாலினத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

இளம் தலைமுறை பெண்கள் முதலில் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு படி எளிதாக அடையக்கூடிய இலக்குகளுக்கு அவற்றை உடைக்க வேண்டும். நிச்சயமாக ஒரு தற்காப்பு நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள், குடும்பப் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் அவர்களின் பங்கின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகனாக இருங்கள். நாம் புதிய யோசனைகளையும் எண்ணங்களையும் விரும்புகிறோம், எனவே, ஆக்கபூர்வமாக இருங்கள், இவற்றோடு உங்கள் கற்பனை யைக் கட்டவிழ்த்துவிடுங்கள். இது ஒரு வித்தியாசமான வெற்றிக்கு வழிவகுக்கும். இவை அனைத்தையும் நீங்கள் செயும்போது, உங்கள் இலக்கை நோக்கிய பயணம் தானாகவே வரும். உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு உத்வேகம் கொடுங்கள். கருணையோடு இருப்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்" என்கிறார் தீபா ராஜேஷ்.

இப்படி வாழ்க்கைக்குத் தேவையான ஒரு தனி மனுஷனோட வாழ்வாதாரத்துக்கு என்னவெல்லாம் தேவையோ, அதையெல்லாம் இவங்க வாழ்ந்து காட்டி இருக்காங்க. அப்படின்னுதான் சொல்லணும்.

தீபா ராஜேஷ், ஒரு பெண் அப்படிங்கறதைத் தாண்டி, ஒரு நல்ல மனுஷி. ஒவ்வொருத்தர் கிட்டயும் இந்தச் சமுதாயத்தில் இருக்கிறவங்க அத்தனை பேருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அப்படிங்கறது மிகையில்லை!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :