எங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு!

உங்கள் குரல்அண்மையில் ‘கோவையில் பிரதமர் பேச்சு எப்படி’ என்ற கேள்விக்கு தராசு பதிலை ஒரு அலசு அலசியது அருமையாக இருந்தது. ‘ஆட்சியில் இல்லாத கட்சியை ஊழல்’ என்று சொல்லி அதைச் சுட்டிக் காட்டியதும், ஜெயலலிதாவை மட்டும் பாராட்டி விட்டு, ‘பழனிசாமியைப் பாராட்ட வில்லை... என்ன நியாயம்’ என்றும் சுட்டிக் காட்டிய கல்கி இதழுக்கு பாராட்டுகள்

- ராதிகா, மதுரை

பத்து வார தொடர் மூலம் ‘நம்மை அறிய வைத்த’ ஜெயராமன் ரகுநாதன், தொடரை முடித்துக் கொண்டது வருத்தமாக இருக்கிறது. வெற்றி என்பது முடிவல்ல; தொடர்ச்சி. வென்றுகொண்டே இருக்க வேண்டும் என்பதை தீர்க்கமாகச் சொல்லியவர், மேலும் இது தொடர்பாக தொடர்பு கொள்ள மின் அஞ்சல் முகவரி தந்து, நெஞ்சில் அழுத்தமாக முத்திரை பதித்து விட்டார்.

- ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்

பத்து வாரம் சத்தான கருத்துக்களைச் சொன்ன ஜெயராமன் ரகுநாதனின் ‘உன்னை நீ அறிந்தால்’ ஒவ்வொரு வார்த்தையும் அருமையாக இருந்தது. ‘வெற்றி திட்டமிடல் விடாமுயற்சி தன்னம்பிக்கை’ என்ற நான்கு கால்கள் உருவாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து கொண்டால் ‘வெற்றி நிச்சயம்’ என்று உணர வைத்த ‘கடைசியாகச் சில வார்த்தைகள்’ படித்ததும் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அருமையான தொடரினைப் பிரசுரித்த ‘கல்கி’ இதழுக்கு வாழ்த்துகள்!

- பிரகதா நவநீதன், மதுரை

நூல் விமர்சனம், நூல் அறிமுகம் கட்டுரைகளுக்கு ஏதாவது விருது வழங்குவதாக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு சுப்ர.பாலனுக்கு வழங்கலாம். அவர் அறிமுகம் செயும் நூல்கள் பற்றிய கட்டுரையைப் படித்தால் உடனே வாங்கிப் படிக்க ஆர்வம் மேலிடும். இந்த வார கல்கியில், ‘ரங்கநாயகி புத்தகம்’ பற்றிய விமர்சனம் அருமை ஆதித்யாவின் ‘ஆடு’ கதை படித்து ஒருபுறம் சிரிப்பை அடக்க முடியவில்லை. மறுபுறம் அந்த பேப்பர் பையனை

நினைத்தால் பாவமாகவும் உள்ளது. தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் காலத்திற் கேற்ற கதை.

- சியாமளா ராமநாதன், சென்னை

அஸாம் தேர்தல் நிலவரத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டிய மாதிரி இருந்தது, ‘மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா?’ கட்டுரை. 1980களில் மாணவர் அமைப்பு உண்டு பண்ணிய அரசியல் எழுச்சி பற்றி, மறவாமல் குறிப்பிட்டு, இன்றைய நிலைமைகளை விளக்கியிருந்த பாங்கு அருமை... அருமை!

- ச. வண்னை கணேசன்,சென்னை

தன் தந்தையைக் கொன்றவர்களை ராகுல் என்கிற தனிப்பட்ட மனிதர் மன்னிக்கலாம். ஆனால், அந்தச் சம்பவத்தில் இறந்த 17 பேர்கள், அவர்களை நம்பியிருந்த அவர்களது குடும்பம், எதிர்காலம் கேள்விக்குறியான குழந்தைகள் போன்றவற்றை நினைவுபடுத்தியிருப்பது என் போன்ற பலரின் மனத்தில் எழுந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு.

- எம் சண்முகம், சேலம்

வெற்றி துரைசாமி தானே இயக்கி, தயாரித்த, ‘என்றாவது ஒரு நாள்’ படம், 25 சர்வதேச விருதுகளை அள்ளி இருக்கிறது என்பதைப் படித்ததும், ஏக சந்தோஷமும், நம்பிக்கையும் நெஞ்சில் ஊற்றெடுத்தது. இவர் போன்றவர்களை அறிமுகப்படுத்தும் கல்கியின் பணி பாராட்டுக்குரியது.

- பள்ளிபாளையம் கே. ரமேஷ், ஈரோடு

பொன்.மூர்த்தி புத்தக கண்காட்சி தொடர்பாக எஸ்.ராம கிருஷ்ணணின் நேர்காணல் அருமை. தன் புத்தகங்களைத் தவிர பிற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அவர் பரிந்துரைப்பது பாராட்ட வேண்டிய செயல். வாசிப்பானது என்றுமே குறையல, கொரோனாவால் நீங்கள் மின்னிதழுக்கு மாறியதால் நாங்களும் அதைப் படிக்கப் பழகிக் கொண்டாலும், அச்சிதழா கையில் வாங்கிப் படிக்கும் சுகமே தனி என்பது என் கருத்து. தமிழகத்தில் உள்ள பெரிய பல்கலைக் கழகத்தில் கூட புத்தகக்கடை இல்லை என்பது நெஞ்சை நெருடுகிறது. நான்கு பஸ்கள் வாங்கி கிராமம் கிராமமாக விதவிதமான புத்தகங்களை எடுத்துச் செல்லும் அந்த ராஜஸ்தான்காரர் போன்று முயற்சிகள் மேற்கொண்டால் நல்ல எழுத்தாளர்கள் உருவாகுவதோடு, நல்ல புத்தகங்களும் கிடைப்பது திண்ணம்.

- ஸ்ரீகாந்த், திருச்சி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :