இன்னார்க்கு இன்னாரென்று...!


சபீதா ஜோசப்
விஜய்டாலிவிடுமுறை தினம், ரவி தாமதமாகவே எழுந்தான். டீ குடித்துவிட்டு, சைக்கிளைத் துடைத்துக்கொண்டிருந்தான். அவன் பின்னால் வந்து நின்ற குமார், உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா! ஞாயிற்றுக்கிழமையானா வயசான சைக்கிளுக்கு மேக்கப் போட ஆரம்பிச்சுடுறே," என்று சிரித்தான்.

மச்சான்! எந்தப் பொருள் ஆனாலும் சுத்தமா வச்சுக்கணும். எங்கப்பாவோட சைக்கிள் இது. கருவிலிருந்த என்னையும், அம்மாவையும் சுமந்த சைக்கிள். அப்பா வோட ஞாபகமா வச்சிருக்கேன்" என்று புன்னகைத்தான் ரவி.

இன்னிக்கி படத்துக்குப் போறோமா?"டிபன் சாப்பிட்டுக் கிளம்ப வேண்டியது தான். இன்னைக்கியாவது குளிச்சுட்டு வா" என்று ரவி சிரித்தான்.

குமாரு!" என்றழைத்தபடி வீட்டின் உள்ளிருந்து காமாட்சி வந்தாள். ஒட்டகப்பாளையம் வழியாத்தானே உதயம் போறீங்க?"ஆமா?" என்றான் குமார்.

எதுக்குக் கேட்கிறே என்பதுபோல ரவி தாயைப் பார்த்தான்.அப்படியே ஒண்ணு செய். போன வாரம் பொண்ணு பார்த்தோமே அவங்க வீட்டுல போயி..."கல்யாணத்துக்கு நாங்க ரெடின்னு சொல்லணும் அதுதானே...?" இல்லே, உங்க சம்பந்தம் வேணாம்னு சொல்லு." அந்தப் பொண்ணுக்கு என்ன? அந்தக் கால ஒல்லி கே.ஆர். விஜயா மாதிரி அழகாயிருக்கானு சொன்னே"- ரவி.

அழகாயிருந்தா போதுமா, ஒரு நல்லது கெட்டதுன்னா அவங்களாலே ஏதாவது பண்ண முடியுமா? நாலு வீட்ல வேலை பார்க்கிற அம்மா, நாலு பசங்களுக்கு டியூஷன் எடுக்கிற மகள், அந்த வோட்டு வீடு தவிர என்ன இருக்கு?" ஏழைப் பெண், அடக்கமாயிருப்பாள்னு சொன்னது நீதானே." ஆமா, சொன்னேன், நாளைக்கி ஒரு அவசரம்ன்னா அவங்களாலே உதவ முடியுமா?"

சரி, இப்ப என்ன? உங்க சம்பந்தம் பிடிக்கலேனு சொல்லணும்..." ரவி சற்று உஷ்ணமாகக் கேட்டான்.பிடிக்கலேனு யாரு உன்ன சொல்லச் சொன்னா? முன்னே பார்த்த இடமே அமைஞ்சு போச்சுன்னா போதும்." எப்ப, எங்கே பார்த்தீங்க எனக்குத் தெரியாமே?" என்று குமார் குறுக்கிட்டான். இவன் ஒண்ணு, பந்திக்கு முந்துவான்," என்று சொல்லிவிட்டு, மகன் பக்கம் திரும்பி,முத்தம்மா மூலம் ஒரு வரம் வந்தது, விஜயபுரம் மளிகைக் கடை அண்ணாச்சி. அவர் பொண்ணுக்கு மாப்ளே தேடுறார். உன் பையனுக்குப் பொருத்தமா இருக்கும். நல்ல வசதி, ஒரே பொண்ணு அப்படின்னு சொன்னாள், போப் பார்த்தேன். எனக்குப் பிடிச்சிருந் தது, உனக்குப் பிடிக்கும்."

ஓ...அதுதான் சங்கதியா?" என்றான் ரவி மெல்லிய குரலில்.நீயும் எத்தன காலத்துக்கு வேலைக் காரனா இருப்பே? அண்ணாச்சி அவரோட கடைய சீதனமா தர்றேங்கறாரு."

எல்லாம் எனக்காகனு சொல்லு" ரவி புருவம் உயர்த்தி அம்மாவைப் பார்த்தான்.அண்ணாச்சிகூட உன்ன கடையில பார்த்திருக்காராம்."

முத்தம்மாவுக்கு கமிஷன்தானே முக்கியம். பார்த்து... பொண்ணு அண்ணாச்சி மாதிரி இருட்டு கலர்ல இருக்கப் போறா" என்றான் குமார்.

உங்க சம்பந்தம் வேணாம்னு, போ சொல்லணுமா?" ரவியின் கேள்விக்குக் காமாட்சி தலையாட்டி வைத்தாள். இதச் சொல்லி, அவங்க மனசு வருத்தப்பட வேணாம். சொல்லாம இருந்தாலே, புரிஞ்சிப்பாங்க"என்றான் ரவி.

சரி, அப்படியே ஆகட்டும்..."பேச்சு வளர்க்காமல், ரவி, குமாருடன் சைக்கிளில் புறப்பட்டான்.

விடுமுறை முடிந்து, ரவி வேலை பார்க்கும் புரொவிஷன் ஸ்டோருக்குப் போனபோது, அண்ணாச்சி வந்ததும், முதலாளியிடம் விசாரித்ததும் ‘தங்கமான பையன்’ என்று சர்டிபிகேட் கொடுத்ததும் சக ஊழியர்கள் மூலம் தகவல் வந்தது.

ரவி எட்டாவது பாஸான கையோடு, தந்தை வேலை பார்த்த கடையில் வந்து சேர்ந்தவன், காரணம் அவன் தந்தையின் திடீர் மறைவு, குடும்பத்தின் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல். 12 பேர் வேலை பார்க்கும் அந்தக் கடையில் அவன்தான் சீனியர், பத்து வருட சர்வீஸ். ரொம்ப நல்ல பையன். சுறுசுறுப்பான வேலைக்காரன். பில்போடுவது. டோர் டெலிவரி செவது. பணம் வசூலித்து வருவது என எல்லா வேலையும் தெரிந்த விசுவாசமான ஊழியன்.

கல்யாணத்துக்குப் பிறகு அண்ணாச்சி கடையிலே வேலையா?" ஒருவன் நக்கலாகக் கேட்டான். கடைய இவனுக்குத்தான்டா" என்றான் மற்றொருவன்.தனியா கடை வச்சுத் தந்தா பரவால்ல, அவர் கடைய இவரு பார்த்துக்கறதுன்னா என்ன அர்த்தம். சம்பளமில்லாத வேலைக் காரன்" இன்னொருவன் கிசுகிசுக்க, சிரிப்பு வெடித்தது.சக ஊழியர்களின் வஞ்சகப் புகழ்ச்சியில் பொறாமை நெடி வீசினாலும், ஏதோ உணர்த்தியது. எதையும் காதில் ஏற்றுக் கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருந்தான்.

இதெல்லாம் நீ பெரிசா எடுத்துக்காதே, மச்சான், எல்லா பயலுக்கும் உன் மேல காண்டு," என்றான் குமார்.காந்திநகர் டெலிவரி எடுத்துக்கொண்டு சைக்கிளில் பறந்தான் ரவி. இரவு வேலை முடிந்து திரும்பும்போது குமார் கேட்டான், மச்சான் என்ன முடிவு பண்ணிருக்கே?"

அம்மாவோட ஆசைய நிறைவேத்த வேண்டியது மகனோட கடமை, எங்கப்பா சாகறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி- உங்கம்மாவ நல்லா பார்த்துக்கோ. அவ வாழ்க்கையிலே ரொம்ப கஷ்டப்பட்டா, அவ மனசு நோகாம நடந் துக்கோ, கடைசி வரை வேலைக்காரனாவே இருந்துடாதே, சொந்தக் கடை வைக்க முயற்சி பண்ணு’ அப்பா சொன் னது இப்பவும் காதுல ஒலிக்குது" என்று பெருமூச்சு விட்டான் ரவி, அவனை ஆற்றுப் படுத்துவதுபோல, தோளில் தட்டிக் கொடுத்து குமார் விடை பெற்றான்.

அடுத்த மூன்றாவது நாள் அண்ணாச்சி யிடமிருந்து அழைப்பு வந்தது, முக்கியமா பேசணும். நீங்களும் உங்க மகனும் நாளைக்கு வீட்டுக்கு வாங்க"- என்று சொல்லி அனுப்பியிருந்தார்.

அம்மாவுடன், குமாரை அழைத்துக் கொண்டு சென்றான் ரவி. வீடு பெரிதாக இருந்தது. பெரிய ஹாலில் உட்கார வைத்து, காப்பி, பலகாரம் என்று பலமான உபசரிப்பு.

நான் எதுக்குக் கூப்பிட்டேன்னா, சபையில் பேசுவதற்கு முன்னாடி ஒரு விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும். எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. இந்த வீடு, கடை எல்லாமே அவளுக்குத் தான்" முதல் வார்த்தையிலேயே அண்ணாச்சி தன்வசப்படுத்தினார்.

காமாட்சி முகம் மலர்ந்தது. ரவியும் புன்னகைத்து வைத்தான்.நான் சுத்தி வளைக்காம நேரா விஷயத் துக்கு வாரேன். ஒரே பொண்ண பிரிஞ் சிருக்க எங்களாலே முடியாது"ஒரு நிமிடம் நிறுத்தித் தொடர்ந்தார்.வீட்டோட மாப்ளேயா வரணும், மேல் மாடி அவங்களுக்கு ஒதுக்கியிருக்கேன். சம்பந்தி நீங்களும் இங்கே தங்கிடலாம். மாப்பிள்ளைக்கு பைக், செயின். மோதிரம் எல்லாம் செறோம், இதச் சொல்லத்தான் வரச்சொன்னே, உங்களுக்குச் சம்மதம்னா வர்ற ஞாயித்துக் கிழமையே நிச்சய தார்த்தம் வைச்சுடலாம்.ரெண்டு மாசத்துல ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணிடலாம். நீங்க ஒரு பைசா செலவு பண்ண வேணாம். மாப்ளே வந்து தாலி கட்டி, வீட்லே குடியேறினா போதும்," அண்ணாச்சி பேச்சில் தேன் மழை பொழிந்தது.

அண்ணாச்சி தன்னை மொத்தமாக ஒரு விலைக்குக் கேட்கிறார் என்று உணர்ந்த ரவி. என் மகன் சந்தோஷமாயிருந்தாலே போதும். அவன் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும். நான் எங்க வீட்லே இருக்கேன். அப்பப்போ வந்து பார்த்துக் கறேன்." வெள்ளந்தியான காமாட்சியின் பேச்சு கேட்டு அண்ணாச்சியும், அவரது மனைவி முகமெல்லாம் மகிழ்ச்சி. ரவி அதை ரசிக்கவில்லை .மாப்ளே நீங்க என்ன சொல்றீங்க?" யோசிச்சு சொல்றேன்" என்று ரவி எழுந்து விட்டான். அதைக் கேட்டு அண்ணாச்சிக்குச் சுருக்கென்றிருந்தது. மூவரும் எழுந்து புறப்படத் தயாராக, சாப்பிட்டு போகலாமே" என்றார் திருமதி அண்ணாச்சி.

பரவாயில்லை இன்னொரு முறை சாப்பிடலாம்" என்றாள் காமாட்சி. சீக்கிரமா சொல்லுங்க மாப்ளே" என்றார் அண்ணாச்சி. ரவி தலையாட்டிவிட்டு நடந்தான். அதில் ஒரு அலட்சியமும், பிடிக்கலே என்ற தொனியும் இருந்தது.

என்னடா தம்பி, சட்டுனு எழுந்து வந்துட்டே" நடந்துகொண்டே மகனின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள் காமாட்சி.

வீட்டோட மாப்பிள்ளையா, அடிமையா இருக்க எனக்குப் பிடிக்கலே. உன்ன தனியா விட்டுட்டு நான் மட்டும் சொகுசா வாழப் பிடிக்கலே..." என்றான் அழுத்தமாக, எனக்கென்னடா நீ அடிக்கடி வந்து பார்த்துக்கப் போறே..."

வசதியான வீட்டு மருமகனா இருக்கிற தைவிட, பெத்தவளுக்கு மகனாயிருக் கணும்... அது என் ஆசை. இதுதான் என்னோட முடிவு" என்றான் அழுத்தமாக.மகனின் பாசத்தில் பெருமிதப்பட்ட போதும், வசதியான வாழ்வு மகனுக்குக் கிட்டாமல் போனதில் வருத்தம்தான்.

நான் என்ன சொல்ல வர்றேன்னா..."அம்மா நான் அந்தப் பொண்ணதான் கட்டிக்கணும்னா சொல்லு... கட்டிக்கறேன், அவ நம்ம வீட்டுல வந்து வாழணும், சம்மதமா கேளு. ஆனா, உடனே கல்யாணம் வேணாம். முதல்ல சொந்தமா கடை வைக்கணும், அப்புறம்தான் எல்லாம்" உறுதியாகச் சொன்னான் ரவி.

அதுக்கு மேல் பேசினால், அவங்க அப்பனபோல கத்துவான், ரோஷக்காரன்" என்று முணுமுணுத்தாள் காமாட்சி.விடிந்து ரவியும், குமாரும் சைக்கிளில் வேலைக்குப் புறப்பட்டனர்.டே மச்சான்! ராத்திரியே உங்கிட்டே கேட்கணும்னு, சொந்தமா கடை வைக்க, அட்வான்ஸ் லட்சம் ரூபா வேணும். கடைய செட் பண்ண, சரக்கு வாங்க, பல லட்சம் வேணுமே? குமார் எதார்த்தமாகக் கேட்டான்.

குமாரு! பொருள் வாங்கிப்போட பணம் தேவையில்லே, நம்மகிட்ட ஒரு கடை இருந்தாலே போதும், கடனுக்குப் பொருள் கொண்டாந்து போடுவாங்க."மெயின்ரோட்டு கடைன்னாதான் அட்வான்ஸ் லட்சங்களில் கேட்பாங்க. புதுசா வளர்ற ஏரியாவுல, அட்வான்சும் கம்மி, வியாபாரமும் நடக்கும். அதானலே போற, வர்ற ஏரியாவுல டுலெட் போர்ட் இருக்கா பாரு, நானும் பார்க்கறேன்."

மச்சான் உனக்குப் பொண்ணு பார்த்த தெருவுல டுலெட் போர்ட் பார்த்தேன்டா..." அப்பவே சொல்லக் கூடாத, சரி, மத்யானம் போ பார்க்கலாமா?"நீ கடை வக்கிறேன்னு எப்ப சொன்னே? சரி நாளைக்கி சன்டே. போப் பார்ப்போம். டோக்கன் அட்வான்ஸ் கொடுப்போம்."

அந்தக் கடை ஒட்டகப்பாளையம் மெயின் தெருவில் இருந்தது. கடையின் செட்டரில் மேல் படிந்திருந்த தூசியே, அது ரொம்ப நாளாக மூடியிருப்பதை உறுதிப்படுத்தியது.எதிரில் உள்ள டீக்கடையில் விசாரித்தார்கள். கடையை ஒட்டியிருக்கிற சந்துல போப் பாருங்க. அந்தக் கடைய வாடகைக்குத் தர மாட்டேன்னு சொன்னாங்களே, எதுக்கும் கேட்டுப் பாருங்க" என்றார் டீ மாஸ்டர்.

அந்த ஐந்தடி சந்துக்குள் நுழைந்தபோது, எதிர் வந்த பெண்மணி, வாங்க மாப்ளே!" என்று வரவேற்பு கொடுத்தார். அவரைப் பார்த்தும் இருவருக்கும் ஷாக். இங்கே ஒரு கடையைப் பார்த்தோம், அதை விசாரிக்கணும்" என்றான் ரவி.இந்தக் கடையா? தெரிஞ்சவங்களது தான்," என்று சிரித்தார் வடிவம்மாள். அவங்கள பார்க்கணும், அட்வான்ஸ் எவ்ளோ? வாடகை எவ்ளோனு கேட்கணும்?" வீட்டுக்கு வாங்க, சொல்றேன், கல்யாணச் சேதி எதுவும் அம்மா சொல்லலையா?" ம்... சொன்னாங்க, நான்தான், சொந்தமா கடை வச்ச பிறகுதான்னு சொல்லிட்டேன்." கடை உங்களுக்கா மாப்ளே" என்று அவர் சொன்னதும், ரவிக்கு நெருடலாக இருந்தது, இவர் மகளைத்தான் அம்மா நிராகரித்து விட்டாளே, இது தெரி யாமல். பேச்சுக்குப் பேச்சு மாப்ளே என்கிறாரே என்று நெளிந்தான்.

அட்வான்ஸ், வாடகை எவ்ளோனு அவங்கிட்டே கேட்டுச் சொல்றீங்களா?" நாளைக்கி அம்மாவ கூட்டிட்டு வாங்க, பேசி முடிச்சுருவோம்" என்று வடிவம்மாள் சொன்னதும், மகிழ்ச்சியோடு தலையாட்டி புறப்படும்போது, கூப்பிட்டு, மாப்ளே! காலையிலே 7 மணிக்கு நல்ல நேரம், அதுக்குள்ள அம்மாவை அழைச்சுட்டு வந்துடுங்க."ரவியும், குமாரும் மகிழ்ச்சியோடு தலையாட்டினாலும், அம்மா என்ன சொல்லுமோ தெரியலையே, இத அம்மா கிட்டே எப்படிச் சொல்றது?...

அவங்க சொந்தக்காரங்க கடைதானே. அம்மாவ கூட்டி வந்து பேசுவோம், கடை முடிச்சுக் கொடுத்தாங்கன்னா, ஒரு மாசக் கமிஷன் கொடுத்துடுவோம்." ஒண்ணும் சொல்லாம அம்மா கூப்பிட்டு போ பார்ப்போம். அவங்க என்ன முடிவு பண்ணறாங்கனு அப்புறம் பார்ப்போம்..." என்றான் ரவி முடிவாக. மறுநாள் காலை 6 மணிக்கே ரெடியாகி காமாட்சியம்மாளுடன், நண்பன் குமாரையும் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் சென்று இறங்கினார்கள். கடை செட்டர் சுத்தமாகத் துடைத்து, மஞ்ச தெளித்து புதுக் கடைபோல் இருந்தது. இந்தக் கடைதாம்மா" என்றான். வாங்க சம்பந்தி" என்று வாநிறைய அழைத்தபடி வடிவம்மாள் வந்தாள். யாருடைய பெண்ணை வேண்டாம் என்றாரோ அவர் எதிரில் நின்று சற்று சங்கடத்துடன் சிரித்தாள், காமாட்சி.கடைக்காரங்களக் கூப்பிட்டா அட்வான்ஸ் கொடுத்துடலாம்" என்றான் ரவி.மாப்ளே இது எங்க கடைதான், மகா லட்சுமியோட அப்பா, அவருக்காக கட்டுன கடை, அவர் தவறிட்டதாலே, மூடி வச்சுட் டோம், யார் யாரோ வந்து கேட்டாங்க கொடுக்கல, இது யாருக்குச் சேரணும்னு ஆண்டவன் தீர்மானிச்சிருக்கான்" சொல்லி விட்டு, அம்மா மகாலட்சுமி கடை சாவி எடுத்து வாம்மா" என்றாள் வடிவம்மாள்.

இதைக் கேட்டு, காமாட்சியும், ரவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். புள்ளிமான் ஓடி வந்த மகாலட்சுமி சாவியை நீட்டினாள், பெரியவங்க கையிலே கொடும்மா" என்றார் வடிவம்மாள்.மருமகளே நீயே உன் கையாலே கடைய திறம்மா" என்று காமாட்சி சொல்ல. எல்லோர் முகத்திலும் மலர்ச்சி! மாமனார், ஆசையா கட்டின கடை! மருமகனுக்குனு எழுதியிருக்கு. அமோகமாக வாங்க மாப்ளே," என்றாள் வடிவம்மாள். இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று’ டீக்கடையில் எஸ்.பி.பி. பாடிக்கொண்டிருந்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :