தேர்தல் சிறப்பு தேன்கிண்ணம்

முகநூல் பக்கம்
சரவணன்* தேர்தல் சிறப்புத் தேன்கிண்ணத்தில் இடம்பெறும் முதல் பாடல்.

படம்... ‘இதயக்கமலம்’! விருப்பம் தெரிவித்த நேயர்கள், எடப்பாடி பழனிசாமி, போடிநாயக்கனூர் பன்னீர் செல்வம்.

நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ..போ போ.

நீ வாழுமிட மெல்லாம் நானும் வருவேன் வா வா வா

போ... போ போ வா வா வா..."

*அடுத்தது திருக்குவளை ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அவர்களுடைய சுற்றம், பீகார் பிரஷாந்த் கிஷோர், காட்பாடி, துரைமுருகன் ஆகியோர் விரும்பிக் கேட்ட பாடல், ‘எங்க ஊர் ராஜா’ திரைப்படம்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க...

என் காலம் வெல்லும், வென்ற பின்னே வாங்கடா வாங்க...

தென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு...

பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா"

* அடுத்து, தில்லி ராகுல், சோனியா, பிரியங்கா, கடலூர் அழகிரி, சிவகங்கை

சிதம்பரம் விரும்பிக் கேட்ட பாடல் இடம் பெற்ற திரைப்படம், ‘கப்பலோட்டிய தமிழன்’.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?"

* அடுத்தது குஜராத் மோடி, தில்லி அமித்ஷா, முருகன், அண்ணாமலை, குஷ்பு விரும்பிக் கேட்ட பாடல்.

எதிர்நீச்சல் திரைப்படத்திலிருந்து

தாமரைக் கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள்,முத்தமாத் தீண்டும்போது பொங்கிடும் எண்ணங்கள்.

மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன் மங்கை நான் கன்னித்தேன் காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்"

* அடுத்து திண்டிவனம் ராமதாஸ் அன்புமணி, ஜி.கே.மணி விரும்பிக் கேட்ட, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படப் பாடல்.

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன். அவன் மாம்பழம் வேண்டுமென்றான்,நான் கொடுத்தாலும் வாங்கவில்லை இந்தக் கன்னம் வேண்டும் என்றான்.

ஒன்று கேட்டால் என்ன, கொடுத்தால் என்ன குறைஞ்சா போவிடும் என்றான்.கொஞ்சம் பார்த்தால் என்ன? பொறுத் தால் என்ன ?மறந்தா போ விடும் என்றான்?"

* அடுத்து விருத்தாச்சலம், விஜயகாந்த்,

சுதீஷ், பிரேமலதா, விஜயப்ரபாகரன், குடும்பம், உறவினர் விரும்பிக் கேட்ட பாடல். ‘மதுரை வீரன்’ திரைப்படத்தில் இருந்து

வாங்க மச்சான் வாங்க. வந்த வழியை பார்த்துப் போங்க ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பார்க்கறீங்க? வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான்

உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பார்த்தானாம்.நாக்கால சப்புக்கொட்டி உச்சுச் கொட்டி நின்றானாம்."

* அடுத்த பாடல், காட்டுமன்னார் கோவில், திருமாவளவன், சி.பி.ஐ. முத்தரசன், சி.பி.எம். ராமகிருஷ்ணன், ஆகியோர் விரும்பிய பாடல் இடம்பெற்ற படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.’

ஸலாம் பாபு ஸலாம் பாபு என்னைப் பாருங்க தங்கக் கையினால காசை அள்ளி வீசுங்க.ஸலாம் பாபு ஸலாம் பாபு......

தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே தானாக உண்டாகும் கண்ணாலே பேசியே... காந்தச் சிலை... காதல் வலை,காந்தச் சிலை காதல் வலை வீசும் நிலை பாருங்க... கனவு இல்லீங்க நினைவு தானுங்க.

கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க ஸலாம் பாபு ஸலாம் பாபு என்னைப் பாருங்க."

* அடுத்தது ம.தி.மு.க. வைகோ மட்டும் விரும்பிய பாடல் ‘புதிய பறவை’ படத்தி லிருந்து.

எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி... அங்கே எனக்கோர் இடம் வேண்டும்... அங்கே எனக்கோர் இடம் வேண்டும்."

அடுத்தது ஆழ்வார் பேட்டை கமல் விரும்பிக் கேட்கும் பாடல் இடம்பெற்ற படம், ‘கல்யாணராமன்’ஆஹா வந்திருச்சு...ஆஹஹா ஓடிவந்தேன்.

பாலோ பழமோ தேவையில்லை பால்வடியும் பூமுகத்தைப் பார்க்க வந்தேன்."

* அடுத்த பாடல் இடம்பெற்ற படம், ‘குழந்தையும் தெவமும்.’

விரும்பிக் கேட்டுள்ள நேயர்கள், அ.ம.மு.க. தினகரன், சரஸ்வதி, திவாகரன், குடும்பத்தினர்.

கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே, கோழிக்குஞ்சு மட்டும் இப்ப அன்பில்லாத காட்டிலே. பசுவைத் தேடி கன்றுக்குட்டி பால் குடிக்க ஓடுது..."

* அடுத்து ‘பாவமன்னிப்பு’ படத்தில் சிவாஜி சைக்கிளில் பாடியபடி செல்லும் பாடலின் சைக்கிளுக்காக பாடலைக் கேட்க விரும்பும் ஒரே நேயர், தஞ்சை ஜி.கே.வாசன்.

வந்த நாள் முதல் இந்த நாள் வரை காலம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும்மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்..."

* தேர்தல் சிறப்புத் தேன்கிண்ணத்தின் அடுத்த பாடல், இடம் பெற்ற திரைப்படம், ‘பராசக்தி’! விரும்பியவர் நாம் தமிழர் சீமான்

ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்துகளிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக் கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்

ஒ ரசிக்கும் சீமானே ஒ ரசிக்கும் சீமானே..."

* நிகழ்ச்சியை நிறைவு செயும் பாடல், போயஸ் கார்டன் ரஜினி காந்த், தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி விரும்பிக் கேட்கும் ‘என் அண்ணன்’ படப்பாடல்

ஆஆஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு ஆனாலும் கூட கொஞ்சம் அச்சமிருக்கு ....அச்சமிருக்கு..."

- தேர்தல் சிறப்புத் தேன்கிண்ணம் இனிது நிறைவடைகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :