கதம்பமாலை

உக்கிர லிங்கம்!

மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில், நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் அமைந்துள்ளது, ‘நெய்தலாடை’ எனப்படும் நல்லாடை திருத்தலம். இங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமானின் திருநாமம், ‘அக்னீஸ்வரர்’ ஆகும். இறைவன் அக்னீஸ்வரரின் லிங்கத் திருமேனி உக்ரத்துடன் காட்சி தருவதால் அதனைத் தணிக்கும் விதமாக கருவறையில் லிங்க மூர்த்தத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றி குளிர்ச்சி அடையச் செய்கின்றனர்.

காமநாதீஸ்வரர்!

சிவபெருமானின் தவத்தைக் கலைத்த மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் ஈசன். இதனால் கலங்கிய ரதி தேவி, சிவனை வழிபாடு செய்ய, மன்மதன் அவளது கண்களுக்கு மட்டும் தெரியும்படியாக விமோசனம் கொடுத்தார். காமன் எனும் மன்மதனை உயிர்ப்பித்த சிவன், ‘காமநாதீஸ்வரர்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார். இவருக்கு சேலம் மாவட்டம், ஆறகழூரில் ஆலயம் உள்ளது. இங்கு அஷ்ட (எட்டு) பைரவர் சன்னிதி இருப்பது கூடுதல் சிறப்பு.

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

மகாசிவராத்திரியில் சூரியனுக்கு பூஜை!

சூரியனார் கோயிலில் மகாசிவராத்திரியன்று, சூரிய பகவானுக்கு நான்கு காலமும் அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறுகின்றன.

மரணத்தை வென்றவர்!

காலனை வென்றதால் சிவபெருமானுக்கு, ‘மிருத்யுஞ்சயன்’ என்றும் பெயர் உண்டு. இதற்கு மரணத்தை வென்றவர் என்பது பொருள்.

ருத்ராட்சத் தேர் பவனி!

சேலம் நகரிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் பந்தல், பள்ளியறை, தேர் ஆகியன ருத்ராட்சத்தால் ஆனவை. ஒவ்வொரு அமாவாசையன்றும் சுவாமி ருத்ராட்சத் தேரில் எழுந்தருள்வது வழக்கம்.

பஞ்சாட்சர கோயில்கள்!

சேலம் நகரில், சுகவனேஸ்வரர், சுரபுரநாதர், வீரட்டேஸ்வரர், பீமேஸ் வரர் மற்றும் திருவேலிநாதர் கோயில் களை, ‘பஞ்சாட்சர கோயில்’களாகப் போற்றுகின்றனர்.

அரிய தோற்றத்தில் சிவா-விஷ்ணு!

நாமக்கல்லில் உள்ள குகைக் கோயிலில் சிவன் பாதி, விஷ்ணு பாதி யாகக் காட்சி தரும் இறைவன், நாகத்தைக் கையில் ஏந்திய அரிய தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.

- எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :