ஆலய தரிசனம்

இனிக்கும் வாழ்வருளும் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்!
தனுஜா ஜெயராமன்சென்னை, கிழக்கு தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு தேனுகாம்பாள் சமேத ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோயில். மாடம்பாக்கம் திருத்தலத்தில் அருளுவதால் இத்தல சிவபெருமானுக்கு, ‘மாடயம்பதி’ என்றும் புராணப் பெயர் உண்டு.

சகரனின் மகனை சபித்துவிட்டார் கபில மகரிஷி. மகரிஷியின் சாபம் சகரனின் தலைமுறைகளைத் தொடர்ந்தது. இதனால் வருத்தமுற்ற சகரனின் குலத்தில் வந்த பகீரதன், வசிஷ்ட முனிவரின் ஆலோசனைப்படி கங்கை நதியை பூமிக்குக் கொண்டு வந்து பூஜித்து சாப விமோசனம் தேடிக்கொண்டான்.

தமது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருத்தமுற்ற கபிலர், அதற்குப் பிராயச்சித்தமாக சிவ பூஜை செதார். ஒரு லிங்கத்தை தமது இடது கையில் வைத்துக்கொண்டு, வலது கையால் மலர் தூவி அர்ச்சித்தார். அவருக்குக் காட்சி தந்த சிவபெருமான், தம்மை கையில் வைத்து பூஜிக்கக் காரணம் என்னவென்று கேட்டார். அதற்கு கபிலர், ‘தரையில் வைத்து தங்களை பூஜிக்க மனமில்லை. அதனால்தான் எனது கைகளிலேயே வைத்து பூஜித்தேன்" என்று கூறினார்.

கையில் லிங்கத்தை வைத்து பூஜித்தது சரியான முறையல்ல. இதற்குப் பிராயச்சித்தமாக நீ பசுவாகப் பிறக்கக் கடவது" என்று கூறினார் ஈசன். அதன்படி பசுவாகப் பிறந்த கபில மகரிஷி இத்தல சிவபெருமானை வழிபட்டு முக்தி பெற்றதாகத் தல வரலாறு. பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலம் என்பதால் சுவாமி, ‘தேனுபுரீஸ்வரர்’ என அழைக்கப் பட்டார். ‘தேனு’ என்றால் ‘பசு’ எனப் பொருள்.

சுந்தர சோழரின் அமைச்சரான அன்பில் அநிருத்தர் இக்கோயிலைக் கட்டியுள்ளார். பின்னர் இது, குலோத்துங்கனால் கற்றளியாக்கப்பட்டது. முன் மண்டபமும் அதிலுள்ள தூண்களும் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. பின்னர் விஜய நகரப் பேரரசாலும் பராமரிக்கப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்தக் கற்பலகை கோயிலின் முன்புறம் திறந்த புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் இறைவனும் இறைவியும், ‘சிற்றேரி ஆளுடைய நாயனார்’ என்றும், ‘நம்பிராட்டியார்’ என்றும் கூறப்பட்டிருக்கிறார்கள்.

கஜபிருஷ்ட விமானத்துடன்கூடிய கருவறையில் மூலவர் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில் ஒரு ஒரு சாண் உயரத்தில் மூன்று விரற்கரை அகல லிங்க வடிவில் காட்சி தருகிறார். லிங்க மூர்த்தத்தில் பசு மிதித்தத் தழும்பும் கல்லடி பட்ட பள்ளமும் உள்ளது. அருகில் அம்பிகை ஸ்ரீ தேனுகாம்பாளுக்கு தனிச்

சன்னிதி உள்ளது. சிவகாமி அம்மையுடனும் மாணிக்கவாசகருடனும் நடராசப்பெருமான் காட்சி தருகிறார்.

கோயில் முன்மண்டபத்தில் அமைந்த பதினெட்டு தூண்களும் அவற்றில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் மிகவும் அற்புதமானவை. ஒரு தூணில் வடிக்கப் பட்டுள்ள சரபேசுவரர் சிற்பம் இத்தலத்தின் தனிச் சிறப்பு. மற்றொரு தூணில் கையில் வீணையுடன் விநாயகர், ஒரு தூணில் யானை மீது அமர்ந்துள்ள முருகன் இடது கையில் சேவலுடன் காணப்படுகிறார். சிவபெருமானை வணங்கியபடி திருமால், பிரம்மா, கங்கா பார்வதியுடன் சிவன், வாசுகி நாகத்தின் மீதுள்ள தாமரையில் சிவன், தட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர், மடி மீது சீதையை அமர்த்தியிருக்கும் ஸ்ரீராமன், அவர்களைத் தொட்டு வணங்கும் ஆஞ்சனேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா என ஒவ்வொரு தூணிலும் அருமையான சிற்பங்களைக் கண்டு களிக்கலாம்.

இக்கோயிலில் அருள்பாலிக்கும் முருகர், வடுக பைரவர், சரபேஸ்வரர் ஆகிய மூவரும் பிரார்த்தனை தெவங்களாக விளங்குகின்றனர். குறிப்பாக, நவக்கிரக தோஷம் மற்றும் நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோயில் சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிறப்பு பூஜை செது பலன் பெறுகின்றனர்.

ஸ்ரீ தேனுபுரீஸ்வரருக்கு மல்லிகைப் பூ மாலை சாத்தி வழிபட, வக்ர தோஷம் விலகும் என்பது ஐதீகம். அதேபோல் இக்கோயிலில் அருள்பாலிக்கும் வடுக பைரவருக்கு திராட்சை மாலை சாத்தி, வெள்ளை பூசணியில் நெ தீபமேற்றி வழிபட, அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்தும் திருமஞ்சனம் செதும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சித்திரையில் பத்து நாட்கள் பிரம்மோத்ஸவம், பங்குனி உத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி ஆகியவை இந்தக் கோயிலில் விசேஷ தினங்களாக அனுசரிக்கப்படு கின்றன. தல விருட்சம் வில்வம், தீர்த்தம் கபில தீர்த்தம்.

திருப்புகழிலிலும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள இத்தல இறைவன் ஸ்ரீ தேனுபுரீஸ்வரரிடம் வைக்கும் நியாமான வேண்டுதல்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறுகின்றன.

அமைவிடம் : கிழக்கு தாம்பரத்திலிருந்து 10 கி.மீ., தாம்பரம் - வேளச்சேரி முக்கிய சாலையில் வடக்கே ராஜ கீழ்ப்பாக்கம் அருகே அமைந்துள்ளது கோயில். கிழக்கு தாம்பரத்திலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

தரிசன நேரம் : காலை 6 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 8.30 மணி வரை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :