வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்! 24

உயிரின் ரகசியம்!
ராஜ்மோகன்வாழ்க்கை இரண்டு விதமானது. ஒன்று அக வாழ்க்கை. இன்னொன்று புறவாழ்க்கை. இந்த புறவாழ்க்கை என்பது பொருள் கொண்டு நிறைவுற்று, அகத்தோடு ஒன்றுவது. அகவாழ்க்கை என்பது எப்பொழுதும் பிரபஞ்ச மகாசக்தி யான அந்த இறை சக்தியுடன் லயித்து இயற்கையோடு இயற்கையாக ஒன்றிக் கலக்க யத்தனிக்க இறைவன் நமக்களித்த இணைப்புப் பாலம்.

மஹரிஷி மனித உருவில், மண்ணில் பிறந்து சராசரி மனிதராக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந் தாலும் அவரின் அகம் முழுக்க முழுக்க இயற்கை யோடும், இறைவ னோடும் பின்னிப் பிணைந்தபடி அந்த மகாசக்தியின் ஈர்ப்பில் அமிழ்ந்துகொண்டிருந்தது.

அன்னை லோகாம்பாளின் எண்ண ஓட்டங்கள் சுவாமிஜிக்கு சிறு இடர்பாடு தரும் வகையில் ஒருபுறம் இருந்தாலும் அதனை சமாளித்தாவாறு ஆன்ம ஆராச்சியைத் தொடர்ந்தார் மஹரிஷி. அன்னை லோகாம்பாளின் விருப்பம் என்பது அவரின் பார்வையில் சரியானது. அதேநேரம் சுவாமிஜிக்கு அதற்கு மாற்றாக வேறு வழி தெரியும். அதனை பரிந்துரைத்தால் அன்னைக்கு அதில் உடன்பாடு இல்லை. இப்படி ஒரே ஒரு விஷயத்தில் இருவரின் கருத்துக்கள் வேறுபட்டு நின்றாலும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகவே புரிதலுடன் இருந்தனர்.

புறவாழ்வு இப்படிச் செல்ல, அகவாழ்வு சுவாமிஜிக்கு எல்லை யில்லா ஆனந்தத்தைக் கொடுத்தது. ஆதியெனும் பரம்பொருள் குறித்த ஆராச்சியில் சுத்தவெளி எனும் வற்றாத அந்த இருப்பு நிலையின் தன்மையை சுவாமிஜியால் ஓரளவுக்கு உணர முடிந்தது. வெட்டவெளிதான் மெபொருள். அதன் ஆற்றல்தான் சக்தி எனும் ஆகாசம். அந்த வெட்டவெளியின் திரட்சி நிலை வேறுபாடுகள்தான் பஞ்சபூதங்கள். இந்த பஞ்சபூதக் கூட்டுக்களின் காட்சிகளே பேரியக்கத் தொடர்களாக, தோற்றங்களாக விளக்கம் பெற்றார் சுவாமிஜி. அதனால் உயிரின் ரகசியம் மட்டுமல்ல, இறைவனின் ரகசியமும் புலப்படத்தொடங்கியது.

முதன் முதலில் அதனை நெருங்கும்போது சுத்த வெளி என்று நாம் அழைக்கும் அந்த வெட்டவெளி என்பது ஏதுமற்ற ஒரு இடம். அதனை பொருள் என்று எப்படிக் கூறுவது? என்ற திகைப்பு முன்னர் அவருக்கு இருந்து வந்தது. இப்பொழுது தீவிர ஆராச்சியில் அந்த ஐயம் தெளிந்தது. ஒரு இயக்கத்தை அதன் இயக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் கணிப்பு நிலையில் உள்ள அறிவுக்கு, வெட்டவெளி ஏதுமற்றதாக இருக்கிறது. அறிவே சமாதி நிலையில் பொருளாகவும், இயக்க நிலையில் உயிராகவும், புலன் வழியிலான காட்சி நிலையில் எண்ணற்ற இயக்க வேறுபாடுகளாகவும் இயங்கும் உண்மையினைக் கூர்ந்து தவ நிலையின் அனுபவமாக உணரும்போது வெட்டவெளியே பொருள் என்றும் அதன் இயக்க ஆற்றலான பரமாணு உயிர் என்றும், அணுக்களின் திரட்சி நிலைகள் பலவாறான வேறு பட்ட தோற்றங்கள் எனவும் புரிந்தது.

மேலும், பேராற்றல் பெற்ற கோடானுகோடி சூரியன்களும் மற்ற கோள்களும் வெட்டவெளியில் தான் மிதந்து, உருண்டு, ஓடி இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்ற உண்மை தெளிந்தபோது வெட்டவெளியே எல்லாம்வல்ல பரம்பொருள் என்ற விளக்கம் சுவாமிக்கு உண்டா யிற்று. இவ்வாறெல்லாம் புதிய அனுபவங்களைப் பெற்றார் சுவாமிஜி.

ஆழ்ந்த சிந்தனை ஒருமுகப்பட்டு தியானமானது. அது சமாதி நிலைக்கும், துரிய நிலையிலும், புறக் காட்சி நிலையிலும், புலனுணர்வு நிலையிலும் நின்று நின்று பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் ஆராந்து பொருள், ஆற்றல், தோற்றம், உணர்வு ஆகிய நிலைகளை அறிந்துகொண்டார்.

சுவாமிஜியின் மனதில் எல்லையில்லா பேரின்பம் பெரு கியது. உண்மை பரம்பொருளை உணரும்போது ஏற்படக்கூடிய ஆனந்தக்கூத்து அவரின் மனதில் தாண்டவமாடியது.

எல்லாம் வல்ல பரம்பொருளே ஆகாசம். அந்த ஆகாசமே உயிர்த்துகள்களா, அதன் திரட்சித் தோற்றமே உடலா, உடல்-உயிர் கூட்டு இயக்கத்தால் உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராச்சி, தெளிவு, முடிவு என்ற உயிரின் பத்து படித்தளப் படர்க்கை இயக்க ஆற்றலான மனமா இயங்கும் மறைபொருள் உண்மைகள் ஒவ்வொன்றாக அவருக்குப் புலப்பட்டது.

‘ஒரே பொருள்தான் எல்லாமுமாக இருக்கிறது’ என்ற அத்வைத தத்துவம் விளங்கிவிட்டது. அது மலர்ச்சி பெற்று இயக்கம் என்ற நிலை வேறுபாட் டோடு சித்து - உயிர் - ஆகாசம் - பரமாணு - சக்தி என்று பேசப்படும் ஆற்றலாக இயங்கித் திரட்சி நிலையில் உலகமாகி, உயிர்களாகி, ஆனந்தமாக இருக்கின்றன என்ற தெளிவில் துவைத தத்துவமும் சுவாமிஜிக்கு விளங்கிவிட்டது.

சரி! ஏன் மனித உயிர்கள் சதா நேரமும் துன்பத்தில் உழல்கின்றன?

இந்தப் பிரபஞ்ச தத்துவ நிலையை உணராத காரணத்தினாலும், கரு மைய தொடர்ச்சியாக சில பதிவுகளை சுமந்து பிறப்பெடுப்பதால் அதனை தீர்த்துக்கொள்ள வேண்டிய சூழலிலும் ஒரு

மனிதனின் வாழ்வில் துன்பம் நிகழ்கிறது. இந்த துன்பம் நாம் அனுபவித்துக் கழிக்கவேண்டிய வினைப்பதிவு. ஒரு துன்பத்தால் வினைப்பதிவு நீங்கு கிறது என்ற தெளிவு ஏற்பட்டுவிட்டால், அம்மனிதன் அந்த அனுபவத்துக்காக வருத்தப்படாமல் சமநிலை யில் அந்த அனுபவத்தை ஏற்றுகொள்ள முடியும்.

மனித உயிர்களை எது மயக்குகிறது? புலன் மயக்கத்தின் தேவை, பழக்கம், சூழ்நிலை நிர்பந்தங்கள் என சிக்கல்களில் சிக்கி துன்பங்களை விளைத்துக் கொண்டு தவிக்கும் நிலையிலிருந்து விடுபட்டு வாழவேண்டுமெனில், தனது அறிவை அகநோக்குப் பயிற்சியால் பண்படுத்தி, மனதின் இயக்க விதியறிந்து உயிரின் நிலையறிந்து, அவ்வுயிரைப் பரநிலையோடு இணைத்துத் தவம் இயற்றி, அறிவின் முழுமை பெற வேண்டும். பிறவிப் பெருங்கடலைக் கடக்க இதுவே சரியான வழி. இதற்குப் பொருள்நிலை, நிகழ்ச்சி நிலையறிந்து அகநோக்கு தவத்தில் முழு ஆற்றல் பெற்ற ஆசான் அருளை நாடி அவர் மூலம் முறையாக நோன்பு ஆற்றியே மனிதன் உய வேண்டும் என்ற விசிஷ்டாத்வைத தத்துவமும் மஹரிஷிக்கு புரிந்தது.

இப்படி அக ஆராச்சியில் தீவிரமாக ஈடுபட்டு எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டு வந்தாரோ,அதே அளவுக்கு சுவாமிஜியின் வாழ்க்கையில் பல தடைகளும், சிக்கல்களும் உருவாகிக்கொண்டே இருந்தன. காரணம், அருள் அன்னை லோகாம்பாள் மஹரிஷிக்கு திடீரென்று ஒரு நிபந்தனை விதித்தார். அருள்துறையில் முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு மகானால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிபந்தனை. அது சுவாமிஜிக்கு புற அளவில் ஒரு அழுத்தத்தை உருவாக்கியது. இருப்பினும் அகநிலையில் முன்னேறிக்கொண்டிருந்த அவருக்கு இதுவும் ஒரு கர்மவினையின் பதிவாகவே விளங்கிற்று. ‘அன்னையின் நிபந்தனையை எப்படியாவது அவரைக் கரைத்து மாற்றியமைக்க முடியுமா?’ என்று யோசித்தார் சுவாமிஜி. ஆனால், அன்னையின் பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகமாயிற்று.

அப்படி என்ன நிபந்தனை விதித்தார் அன்னை லோகாம்பாள்? அதனை எப்படி சமாளிக்க முயன்றார் மஹரிஷி?

(குருத்துவம் தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :