மகா சிவராத்திரி (11.3.2021)


மெய்ப்பொருளாவது நமசிவாயவே!
‘திருப்புகழ்’ மதிவண்ணன் -‘நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!’ எனத் தொடங்குகிறது மாணிக்கவாசகரின் சிவபுராணம். இதுதான் திருவாசகத்தின் முதல் அடி. மாணிக்கவாசகர் சொல்ல, சிவபிரானே எழுதியது இது. ஒருவரால் இறைவன் சிவபெருமானை நேரில்தரிசிக்க முடியாது. ஆனால், அவனது அருளைப் பெற முடியும். அதற்கான ஒரே வழி, ‘நமசிவய’ என்னும் ஐந்தெழுத்தை உள்ளம் உருக உச்சரிக்க வேண்டும்.

தலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவா யவே!’என்பது சிவபெருமானின் ஐந்தெழுத்து

மூலமந்திரம். ஈசனுக்கு முகங்கள் ஐந்து. இதனாலேயே அவரை, ‘ஐம்முகச்சிவன்’ என்றே புராணங்கள் புகல்கின்றன.

சிவபெருமானுக்கு உகந்த திருநாளாக மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி தினம் போற்றப்பெறுகிறது. சிவராத்திரி தினமும் நித்ய, பட்ச, மாத, யோக, மகா என ஐந்து வகையாகும். இதில் மகா சிவராத்திரி தினம் மகோன்னதம் மிக்கதாகும். ஈசனுக்குரிய

பிரதோஷமும், நித்ய, பட்ச, மாத, சோம, சனி என ஐந்தாகவே அனுஷ்டிக்கப்படுகிறது.

சிவபெருமானை, ‘நிறங்கள் ஓர் ஐந்துடையாய்’ என்று போற்றுகிறார் மணிவாசகர். பளிங்கு, பொன், கறுப்பு, சிவப்பு, வெண்மை நிறங்கள் பெற்ற ஐந்து முகங்கள் கொண்டதால் இவர், ‘பஞ்ச

வர்ணேஸ்வரர்’ என்று போற்றப்படுகிறார். சிவபெருமானுக்குரிய தொழிலும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தாகவே வகுக்கப்பட்டுள்ளது!ஆதியும் அந்தமுமில்லா ஈசன் நீக்கமற நிறைந் திருக்கும் தலங்களை, ‘பஞ்சபூத தலங்கள்’ என அழைப்பர். அவை: மண்-திருவாரூர், விண்-சிதம் பரம், காற்று-காளஹஸ்தி, நீர்-திருவானைக்கா, நெருப்பு-திருவண்ணாமலை.

சிவ வடிவங்களில் அனைவரின் சிந்தையையும் குளிர்விப்பது நடராஜரின் தோற்றம்தானே!

‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்

குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்

வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப்

பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த

மானிலத்தே!’

- என்கிறது தேவாரத் திருப்பாடல்!

ஆடல்வல்லான் நடராஜ பெருமான் நடன சபாபதியாக நாயகம் புரிவதும் ஐந்து சபைகளில்தான்!

அவை: சிதம்பரம் - தங்க சபை, மதுரை - வெள்ளி அம்பலம், திருஆலங்காடு - ரத்தின சபை, திருநெல் வேலி - தாமிர சபை, குற்றாலம் - சித்திர சபை.

ஈசனுக்குரியது பஞ்ச சபை மட்டுமல்லவே... அவர் புரியும் ஐந்து வகை நடனமும் உள்ளது. அவை : ஆனந்த நடனம் - தில்லை, பேரூர், அஜபா நடனம் - திருவாரூர், சுந்தர நடனம் - மதுரை, ஊர்த்துவ நடனம் - திருவாலங்காடு, அவிநாசி, பிரம்ம நடனம் - திருமுருகன்பூண்டி.

பூஜையாலும் சிறப்புப் பெற்ற சிவத்தலங்கள் ஐந்து உண்டு. அவை: காலசந்தி பூஜை - ராமேஸ்வரம், உச்சிக்கால பூஜை - திருவானைக்கா, சாயங்கால பூஜை- திருவாரூர், இராக்கால பூஜை - மதுரை, அர்த்தஜாம பூஜை - சிதம்பரம்.

பெரும்பாலும் சிவபெருமானை லிங்க வடிவில் வழிபடுவதுதான் அனைவரின் வழக்கம். அந்த வகை யில் லிங்க மூர்த்தங்களும் ஐந்து வகையாகும். அவை: தவ முனிவர்களால் பூஜிக்கப்பட்டது ஆர்ஷ லிங்கம், தேவர்களால் வழிபடப்பட்டது தெய்வீக லிங்கம், பாணாசுரன் என்பவனால் வணங்கப்பட்டது பாண லிங்கம், மானிடச் சிற்பிகளால் வடிக்கப்பெற்றது மானஷ லிங்கம், மலைகள், நதிக்கரைகள், மரத்தடிகள், காடு, சோலை வனங்களில் தானே தோன்றியது சுயம்பு லிங்கம் ஆகும்.

ஈசனுக்குரிய ஆரண்யங்களும் ஐந்தாகும் அவை: வேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரண்யம், வித்யாரண்யம், தர்ப்பாரண்யம் எனப்படும்.

சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது பஞ்சகவ்ய அபிஷேகம்! அதனாலேயே, ‘ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சாடுதல்’ என்கிறது தேவாரம்! சிறப்பு மிக்க பஞ்சகவ்யம் என்பது, பால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோசலம் எனப்படும் ஐந்து பொருட்களில் கலவையேயாகும்.

‘அம்பிகைக்கு நவராத்திரி, ஈசனுக்கு சிவராத்திரி’ என்பது சொல் வழக்கு. வேண்டியதை எல்லாம் வேண் டியபடி அருளும் மகாசிவராத்திரியில் அகிலத்துக்கே படியளக்கும் பரம்பொருளாம் சிவபெருமானை வழி பட்டு வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்.

Post Comment

Post Comment