கமலி from நடுக்காவேரி


சினிமா விமர்சனம்
லதானந்த் -கிராமத்தில் படிக்கும் மாணவி ஒருவர் ஐ.ஐ.டி. தேர்வெழுதி, ஜெயித்து, சாதிப்பதுதான் திரைப்படத்தின் ஒன்லைன்.

குத்துப் பாட்டுகள், ஆபாச நடனங்கள், அபத்த நகைச்சுவை, காதைத் துளைக்கும் பின்னணி இசை, புவியீர்ப்பு விசைக்கெதிராக மேலெழும்பிப் பறக்கும் சண்டைகள், மதுவருந்தும் காட்சிகள் போன்ற எதுவும் இல்லாமல் ஆற்றொழுக்காக நடைபோடுகிறது படம்.

படத்தின் ஆரம்பத்தில் பிரதாப் போத்தன் தன் வீட்டில் எழுதிவைக்கும் பொன் மொழிகளில் ஆனந்தி சிறு திருத்தங்கள் செது நகைச்சுவை வாக்கியமாக்குவது ஜோர். அதேபோல வகுப்பில் இருக்கும் பட்டாஸுகளை லென்ஸ் மூலம் வெடிக்க வைப்பதும் குறும்பு.

கிராமத்தைக் காட்டும்போது கண்ணுக்குக் குளிர்ச்சியை அள்ளி வீசும் கேமரா, குவிஸ் காட்சிகளில் ஹைடெக்காகத் துள்ளி விளையாடுகிறது.

நம் பக்கத்து வீட்டுப் பாப்பா மாதிரியான தோற்றத்துடன் ஆனந்தி இயல்பாக நடித்திருக் கிறார். அழகம் பெருமாள், பிரதாப் போத்தன், இமான் அண்ணாச்சி ஆகியோரும் படத்தை விட்டுத் துருத்திக்கொண்டிருக்கும் பாத்திரங்களாக இல்லாமல் கதையோடு பொருந்திப்போயிருக்கின்றனர்.

படிப்பு சம்பந்தமான படம் என்பதால், நீதி போதனைகளை நீட்டி முழங்குவார்கள் என்று நினைக்கவேண்டாம். மாணவர்கள் கருத்தில் கொள்ளவேண்டியனவற்றை அழகாகக் கையாண்டிருக்கிறார்கள். ABCD எழுத்துக்களை வைத்து பிரதாப் போத்தன் கற்பிக்கும் உத்தி, (Concentration, Understanding மற்றும் Practice)அபாரம்!

காதலர்கள் இருவர் நெருக்கமாக அமர்ந்து உரையாடுவதைப் பார்த்துப் பொறுக்காத ஆனந்தி அவர்கள் அருந்தும் குளிர்பான பாட்டிலைக் காலடியில் சிதைப்பது, காட்சிமைப்படுத்துதல் மூலம் உணர்வுகளை வெளிக்கொணர்ந்த டைரக்ஷனுக்கு ஒரு சாம்பிள்!

எதேச்சையாகப் படத்தில் உச்சரிக்கப்படும் ‘சிண்ட்ரெல்லா’ என்ற சொல்லும், ‘இன்ஸ் பிரேஷன்’ என்ற சொல்லும் படத்தின் மிக முக்கியமான காட்சிகளைத் தீர்மானிக்கின்றன. எப்படி என்று விவரித்தால் சுவாரசியம் போவிடும்.

படத்தில் மிக அதிகமாக ஆங்கில வசனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்களும் புரிந்துகொள்ளும்படியே அவை இருக்கின்றன என்பதுதான்

சிறப்பு!

படத்தில் திருப்பங்கள் என்று அதிகம் எதுவும் இல்லாதிருப்பதும், தட்டையான பாங்கில் கதை நகர்வதும்கூட திரைக்கதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் மங்கிவிடுகின்றன.

முடியுமான்னு நினைச்சிருந்தா எடிசன் பல்பைக் கண்டுபிடிச்சிருக்க முடியுமா? கிரஹாம்பெல் டெலிபோனைக் கண்டுபிடிச்சிருக்க முடியுமா?" படிக்க நினைச்சாலும் சொல்லித்தர ஆளில்லை" போன்ற வசனங்கள் அழகு.

சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு - குறிப்பாக ஐ.ஐ.டி. மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உத்வேகமளித்து, வழிகாட்டும் படம் இது. குடும்பத்தோடு சென்று தாராளமாகப் பார்க்கலாம்.

எழுதி இயக்கி இருக்கும் ராஜசேகர் துரை

சாமிக்கு ஹேட்ஸ் ஆஃப்!

Post Comment

Post Comment