உங்களுடன்...

வாசக நெஞ்சங்களே, வணக்கம்.
- எஸ்.கல்பனாபஞ்சபூத கே்ஷத்ர சிவாலயங்கள் அமைந்த ஸ்தலங்கள் சிதம்பரம் (ஆகாசம்), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (வாயு), காஞ்சிபுரம் (ப்ரித்வி), திருவண்ணாமலை (அக்னி) என்று அமைந்துள்ளது அனைவரும் அறிவர். ஆனால், ஒரே நாளில் இந்த ஐந்து ஸ்தலங்களையும் தரிசிப்பது கடினம்!

அப்படி ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் சென்னையில் பஞ்சபூத சிவாலயங்கள் ஐந்து அமைந்துள்ளன. முதலில் ஆகாச கே்ஷத்ரம் -

சென்னை புரசைவாக்கம் சூளை பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைந்த சிதம்பரேஸ்வரர் கோயில். அன்னை - சிவகாமி.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயம் போலவே இங்கும் காலையிலும் மாலையிலும் ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம், ஆராதனைகள் செயப்படுகிறது. சிதம்பரம் போலவே இங்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் காட்சி தருகிறார். ஸ்தல விருட்சம் வில்வம்.

அடுத்து, ப்ரித்வி ஸ்தலம் - சென்னை, தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்! காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் போலவே, இக்கோயில் மூலவரும் ஏகாம்பரேஸ்வரராகவும் அம்பாள் காமாட்சி அம்மனாகவும் அருள்பாலிக்கிறார்கள். இக்கோயிலில் உறையும் காமாட்சியம்மன் நின்ற திருக்கோலம். ஸ்தல விருட்சம் வன்னி மரம்.

நீர் ஸ்தலம் - புரசைவாக்கத்தில் அமைந்துள்ள கங்காதீஸ்வரர் ஆலயம். அம்பாள் பங்கஜாம்பாள். ஸ்ரீராமர் காலத்துக்கும் முந்தைய புராதனமான இந்த ஆலயத்தில் பகீரதன் பிரதிஷ்டை செத சிவலிங்கம் கங்காதீஸ்வரராக ஜொலிக்கிறார். பகீரதன் கங்கா ஜலம் கொண்டு

சிவனை அபிஷேகித்து வழிபட்ட தலம் இது! ஸ்தல விருட்சம் குறுந்த மரம்.

அக்னி ஸ்தலம் - சென்னை, சௌகார்பேட்டை ஜார்ஜ் டவுனிலுள்ள அருள்மிகு அண்ணாமலையார் ஆலயம். திருவண்ணாமலை போலவே இங்கும் அருணாசலேஸ்வரர் மற்றும் அன்னை அபிதகுசலாம்பாளை தரிசிக்கலாம். காசியிலிருந்து எடுத்து வரப்பட்ட பாணலிங்கம்! வடலூர் ராமலிங்க வள்ளலார் அடிக்கடி வந்து வழிபட்ட ஆலயம் இது. சுமார் 250 வருடங்கள் பழைமையான ஆலயம்.

வாயு ஸ்தலம் - சௌகார்பேட்டையில் மண்ணடியிலுள்ள பவளக்கார தெருவில் அமைந்திருக்கிறது ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்! இங்கு உறையும் அன்னை, ஞானபிரசூனாம்பிகை! இங்கு கால பைரவ வழிபாடு சிறப்பானது.

வாசகர்களே, இதேபோல ஒரே நாளில் சென்று தரிசிக்கக்கூடிய பஞ்சபூத ஸ்தலங்கள் உங்கள் ஊர்களில் இருந்தால், தெரியப்படுத் துங்களேன்! வருகிற மார்ச் 11ம் தேதி மஹாசிவராத்திரி தினத்தன்று

சென்று தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு உதவியாக இருக்குமே!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :