கதம்பமாலை

ஒரு கால பூஜைக்கு தாழம்பூ!

‘சிவபெருமானின் முடியைக் கண்டதாக பொ சொன்ன பிரம்மனின் கூற்றுக்கு சாட்சியாக இருந்த தாழம்பூ சிவ பூஜைக்கு ஏற்றதல்ல’ என்று சபிக்கப் பட்டது. ஆனால், மகாசிவராத்திரியில் லிங்கோத்பவ ருக்கு செயப்படும் ஒரு கால பூஜையின்போது மட்டும் கருவறையின் பின்புறத்தில் உள்ள லிங்கோத் பவருக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடையை அணிவித்து தாழம்பூ சாத்துவது ஐதீகம். இந்த ஒரு கால பூஜைக்கு மட்டும் தாழம்பூ சிவ பூஜைக்கு பயன்படுத்தப்படும். தவிர, வரலட்சுமி பூஜையின்போது தேவியை தாழம்பூவால் அலங்கரிப்பது விசேஷம். மேலும், நாக பூஜைக்கும் இதைப் பயன்படுத்தலாம். ஈசனை பூஜிக்க அம்பிகை பயன்படுத்திய மலர்களுள் ஒன்று தாழம்பூ.

- டி.ரவி, சென்னை

பேச்சுக் குறைபாட்டை போக்கும்

ஸ்ரீ ராஜமாதங்கி!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியிலிருந்து 10.கி.மீ. தொலைவிலுள்ள திருநாங்கூர் தலத்தில் உள்ளது 1,100 ஆண்டுகள் பழைமையான மதங்கீஸ்வரர் சுவாமி ஆலயம். ‘இறைவி ராஜ மாதங்கீஸ்வரி. பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதியில் அமர வைத்து அவர்கள் நாக்கில் தேனைத் தடவி, மூலமந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது உண்மை’ என்கின்றனர் பக்தர்கள்.

திருமணத் தடையுள்ள ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் அஷ்டமி தினத்தன்று கொண்டு வந்து அர்ச்சனை செய்து

வேண்டுகின்றனர். பூஜை முடிந்த பின் அர்ச்சகர் தரும் அந்தத் தேங்காயை வேண்டுதல் செய்பவர் 11 மாதங்கள் அஷ்டமி நாளன்று வீட்டிலேயே வைத்து பூஜித்து வர, 11 மாதங்களுக்கு முன்பே அவர்கள் திருமணம் நடந்தேறிவிடுமாம். அதன்பின் மணமான தம்பதி ஆலயம் வந்து 11 முறை சன்னிதியை வலம் வந்து அபிஷேகம் செய்து, இறைவிக்கு புத்தாடை அணிவித்து தேங்காயை அங்கேயே கட்டி விடுவார் களாம். இந்த அன்னைக்குப் பாலபிஷேகம் செய்தால் அன்னையின் மேனி பச்சை நிறமாகக் காட்சி தருவது விசேஷம்.

- செ.கலைவாணி, மேட்டூர் அணை

அதிசய நடராஜர்!

திருவெண்காடு திருத்தலத்தில் எழுந்தருளியிருக் கும் நடராஜப் பெருமான், ஈரேழு பதினான்கு புவனங்களைக் குறிக்கும் வகையில் 14 சதங்கைகள் கொண்ட காப்பு, பிரணவம் முதல் நம: வரையுள்ள 81 பத மந்திரங்களைக் குறிக்கும் 81 வளையங்கள் கோக்கப்பட்ட அரைஞாண், 28 ஆகமங்களைக் குறிக்கும் 28 எலும்புத் துண்டுகள் கோர்த்த ஆரம், பதினாறு கலைகளைக் குறிக்கும் வகையில் 16

சடைகளுடன் அபூர்வமாகக் காட்சி தருகிறார்.

- சியாமளா ராஜகோபால், சென்னை

அன்னத்தில் அமர்ந்த அம்மன்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் அன்ன வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள். அன்னத்தின் மீது அமர்ந்த கோலத்தில் மாரியம்மனை வேறெங்கும் தரிசிக்க இயலாது. அம்மனின் திருவடிகள் அசுரன் ஒருவனை மிதித்த நிலையில் இருக்கிறது. இங்கு தரப்படும் மூலிகையை குழந்தை இல்லாத தம்பதிகள் சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை. நீண்ட காலம் நோயால் அவதிப்படுபவர் கள் அம்மனை தரிசித்து நிவாரணம் பெற்று வருகிறார்கள்.

சயனக் கோல துர்கை!

பெரும்பாலான கோயில்களில் துர்கையை நின்ற கோலத்திலேயே தரிசிக்க முடியும். ஆனால், திருநெல்வேலி மாவட்டம், பிராஞ்சேரி எனும் தலத்தில் ஐந்து தலை நாக பாம்பணை மேல் பள்ளிகொண்ட கோலத்தில் துர்கையம்மன் காட்சி தருகிறாள். இவளை, ‘சயன துர்க்கை’ என்று பக்தர்கள் போற்றி வழிபடுகின்றனர்!

நோய் தீர்க்கும் குணபூரணி!

கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ளது தண்டு மாரியம்மன் திருக்கோயில். அந்தக் காலத்தில் இந்த ஊரில் தங்கியிருந்த படை வீரர்களை,

‘பிளேக்’ எனும் கொடிய நோய் வாட்டியது. அவர்கள் இக்கோயில் அம்மன் தீர்த்தம் பருகி குணம் அடைந்தனர். அன்று முதல் இந்த அம்மனுக்கு, ‘குணபூரணி’ என்னும் பெயர் ஏற்பட்டது. அன்னம் தரும் அம்பிகையை, ‘அன்னபூரணி’ என அழைப்பது போல நோய் தீர்க்கும் அம்மனை, ‘குணபூரணி’ என்பதும் பொருத்தமே!

- ஜெயலட்சுமி கோபாலன், சென்னை

சிவசக்தி சொரூப தட்சிணாமூர்த்தி!

திருப்புலிவனம் ஆலயத்தின் மூன்றாவது பிரகாரத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி ஒரு காதில் குண்டலமும், மறுகாதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாகக் காட்சியளிக்கிறார். தட்சிணா மூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுவது விசேஷம்.

- ஆ.யாழினி பர்வதம், சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :