கூடலழகி


பள்ளியறையா, பாசறையா?
காலச்சக்கரம் நரசிம்மா - தெய்வாவானவரம்பனும் பைம்பொழிலும் தங்களை மறந்த நிலையில் வாட்சண்டையிட்டு, பள்ளி யறையை ரணகளமாக்கிக் கொண்டிருக்க, அறைக் கதவு திடீரென்று தடதடவென்று தட்டப் பட, இருவரும் சற்றே நிதானித்தனர்.

தனது மங்கல நாணை அவனது வாளின் நுனியில் இருந்து விடுவித்துக் கொண்டு சாளரத்தின் பக்கமாக நகர்ந்து வெளியே இருளை வெறித்தபடி நின்றுவிட்டாள், பைம்பொழில். தனது சினம் சற்றும் குறையாமல், கதவை நோக்கி நகர்ந்த வானவரம்பன், தாளினை நீக்க, வெளியே அர்களா நின்றிருந்தாள். அனுமனால் சீரழிக்கப்பட்ட அசோகவனம் போன்று அந்தப் பள்ளியறை காட்சி தர, அந்த அறையின் உள்ளே நடந்துகொண்டிருப்பது என்ன என்பது அவளுக் குப் புரிந்துபோனது.

இன்னும் வானவரம்பனின் கையில் வாள் மின்னிக்கொண்டிருந்தது. சாளரத்தின் அருகே கையில் வாளுடன், கொதிப்படைந்த நிலையில் பைம்பொழில் நிற்பதைக் கண்டதும் அதிர்ந்து போனாள், அர்களா.

வானவரம்பரே! உரிமை எடுத்துக்கொள் வதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்ன நடக்கிறது இங்கே? பள்ளி யறைக்குள் வாட்சண்டையா?" என்றபடி கதவைத் தனது பின் பாக மூடிக்கொண்டு அதன் மீது சரிந்து நின்றாள் அர்களா. வானவரம்பனோ, பைம் பொழிலோ அவளுக்குப் பதில் கூறாமல் மௌனமாக நின்றனர்.

நான் ஒரு துயரமான சேதி யைத் தெரிவிக்கத்தான் வந்தேன். ஆனால் நீங் கள் இருவரும் இருக்கும் நிலை, பழையாறை யிலிருந்து வந்திருக்கும் தகவலைக் காட்டிலும், உங்கள் பெற்றோருக்கு இன்னும் அதிகத் துயரத்தை ஏற்படுத்தும். கணவனும் மனைவியும் வாட் சண்டை புரிந்ததாகச் சரித்திரமே இல் லையே. எதனால் இந்த ஆக்ரோஷம்?" என்ற வுடன், பைம்பொழில் ஓடிவந்து தனது ஆருயிர்த் தோழியின் தோளினில் தனது தலையைப் புதைத்துக்கொண்டு, விசும்பத் தொடங்கினாள்.

நான் ஆதித்த கரிகாலனைப் பாதுகாக்கும் பணியில் கடமை தவறிவிட்டேன் என்று எனக்குத் தண்டனை வழங்க வாளை எடுத்தார். வீராங்கனை என்று பெயர் பெற்றுள்ள நான் பதிலுக்கு எனது வாளை ஓங்காமல் இருந்தால் எப்படி?" பைம் பொழிலின் குரல் உடைந்தது.

வானவரம்பன் அமைதியாக அர்களாவை நோக்கினான். பண்ணுருட்டி காடுகளில் ஆதித்த கரிகாலனுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செது கொண்டிருப் போம். அப்படி இருக்கும்போது, நம் குடும்பத் தினருக்கு எச்சரிக்கை உணர்வு வேண்டு மல்லவா? அமராபரணன் ஆதித்த கரிகாலனை மேற்பார்வையிடாமல், உங்களுடன் யாழ் மீட்ட அமர்ந் தது தவறல்லவா, நீயே கூறு அர்களா" தனது பக்கலில் உள்ள நியாயத்தை எடுத்துச் சொல்ல முயன்றான் வான வரம்பன்.

ஒருகணம் தோழியைத் திரும்பி நோக்கிய அர்களா, பிறகு வானவரம்பனைப் பணிவுடன் நோக்கினாள்.

இளவரசே! அமராபரணனை அழைத்ததற்குக் காரணம் யாழ் மீட்டுவதற்கு அல்ல. உங்கள் மனையாள் என் மீது கொண்டிருந்த நேசமும் பாசமும்தான் அதற்குக் காரணம். நான் யாழ் மீட்டுபவள். அமராபரணரும் மிக நன்றாக யாழ் மீட்டுபவர் என்பதால், பைம்பொழில் எங்கள் இருவரையும் வாழ்வில் இணைக்கப் பார்க்கிறாள். எங்களை நெருங்க வைக்கத்தான் அமராபரணரை உள்ளே அழைத்தாள். நண்பர் களுடன் விளையாடிக்கொண் டிருந்ததால் சோழ இளவரசர் பாதுகாப்புடன் இருப்பார் என்கிற நினைப்பில், எங்களைப் பேசச் செய வேண்டும் என்பதற்காக அமராபரணரை உள்ளே அழைத் தாள். அந்த வேளையில் இளவரசர் காணாமல் போவார் என்று நிச்சயம் பைம்பொழில் எதிர் பார்த்திருக்க மாட்டாள். அதற்காக, அவளை வாள்நுனியில் நிறுத்து வீர்களா? சோழ இளவரசரைத் தொட்டிலில் இருந்த நாகத்திடம் இருந்து காப்பாற்றிய வள், அவரது பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவாளா?" அர்களா கேட்டாள்.

நான் வீராங்கனை என் பதை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டி, அந்த நாகத்தை நானே தொட்டிலில் வைத்து அதனைக் கொன்றதாக உங்கள் இளவரசர் கூறு கிறார்" பைம்பொழில் எரிச்சலுடன் கூறினாள்.

ஒருவரையொருவர் ஆழமாக நேசித்துக் கொண்டு எதற்காக இந்தப் போலி நாடகம் ஆடு கின்றீர்?" அர்களா கேட்க, வானவரம்பனின் முகம் மீண்டும் கடுமை அடைந்தது.

வந்த விவரத்தைக் கூறு அர்களா?" வான வரம்பன் கூறினான்.

பழையாறையில் இருந்து தூதுவன் வந்திருக் கிறான். சோழ மன்னர் பராந்தகனார் அமரத் துவத்தை அடைந்தார். உங்கள் தந்தையார் உறங்கச் சென்றுவிட்டார். தகவலைத் தாங்கள் தான் அவருக்குத் தெரிவிக்க வேண்டும்" என்ற தும் வானவரம்பனும் பைம்பொழிலும் அதிர்ந்தனர்.

அர்களா தொடர்ந்து வானவரம்பனை நோக்கிப் பேசினாள்:

சோழத்திற்கு அடிமேல் அடியாகத் துயரங் கள் நிகழ்கின்றன. சோழ இளவரசர் ஆதித்த கரிகாலனாவது பாதுகாப்புடன் இருக்கட்டும் என்று, உங்கள் அனைவரையும் நம்பித்தானே இளவரசரைத் திருக்கோவிலூரில் விட்டிருக் கிறார்கள்? இதில் யார் யார் மீது குற்றம் சுமத் துவது? ஒருவருக்கொருவர் இப்படித்தான் மோதிக்கொள்வீர்களா? கோபாவேசத்தில் ஒருவரையொருவர் அழித்துக்கொண்டு விட்டீர் கள் என்றால் ஆதித்த கரிகாலனுக்கும் கன்னலுக் கும் யார் பொறுப்பு? சதித் திட்டங்களின் ஊற்றுக்கண் யார் என்பதைக் கண்டுபிடித்து, அவர்களை அழிப்பதை விட்டுவிட்டு, இப் படித்தான் வாட்களைக் கையில் எடுப் பீர்களா? ஆதித்த கரிகாலனை இனி வருங்காலத்தில் எப்படிப் பாது காப்பது என்று திட்டமிடுவதை விட்டு விட்டு, பள்ளியறையை யுத்த களமாக மாற்றிவிட் டீர்களே? எத்தனை மன்னர் கள், போர் வீரர்கள், போர்க் களத்தில் வீழ்ந்து, வீர மரணத்தைத் தழுவும் வேளை யில், மனைவி குழந்தைகளை நினைத்தபடி இறந்திருக்கிறார்கள்? உத்தமசீலரின் மனைவி அற்புதவல்லி யையும், அவர்களது செல்வன் வீராதித்தனும் படும் வேதனைகளை நீங்கள் நினைய வேண் டாமா?" என்றதும், வானவரம்பனின் நினைவில், வெள்ளங்குமரனும், கர்ப்பிணியான, நந்திபுரகுல வல்லியும் தோன்ற, தனது செகையை நினைத்து அவனுக்கே வெட்கமாக இருந்தது.

வெறுப்புடன் வாளை நழுவவிட்டவன், அறையின் கதவை நோக்கி நகர, அர்களா அவ னுக்கு வழிவிட்டு நகர்ந்தாள். கதவைத் திறந்த வானவரம்பன், அதனைப் பற்றியபடி அர்களாவை நோக்கினான்.

அர்களா! நீயாவது என்னைப் புரிந்துகொள்! நடு நாடு தற்போது வாளின் மீது நடந்துகொண் டிருக்கிறது. உத்தமசீலன், ராஜாதித்யன் என்று சோழத்து இளவரசர்களின் மரணங்கள் தொடர் கின்றன. ஆதித்த கரிகாலனுக்கு ஆபத்து நிகழ உள்ளது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. அவன் பாலகன் என்பதால், அவனை இப்போ தைக்கு அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால், அவனுக்கு ஆபத்து இருப்பது உறுதி. அவனைச்சுற்றி சிலந்தி வலை ஒன்றைப் பின்னி அவனது சிந்தையைக் குழப்புகிறார்களோ என்று நான் ஐயப்படுகிறேன். அமராபரணன்தான் தன்னை பண்ணுருட்டிக்கு அழைத்துச் சென்றான் என்று அவன், ஊர்ஜிதமாகச் சோல்கிறான். பாலகன் பொ சோல்வான் என்று நான் நினைக்கவில்லை. அமராபரணன், யார், அவன் எங்கிருந்து வந்திருக்கிறான், என்றும் நமக்குத் தெரியாது. ஆனால், உனது தோழி, அந்தப் பாலகனின் நடத்தையில்தான் ஐயங்கள் இருப்பதாகத் தொடர்ந்து கூறி, அவனை மனநோ உள்ளவனாகச்

சித்தரிக்கிறாள். எனது தமக்கையின் மகன் என்று அவள் பேதம் கற்பித்த தால் மட்டுமே, நான் எனது வசத்தை இழந்தேன்" - என்றான்.

‘உண்மையா?’ என்பது போன்று தோழியைப் பார்த்தாள் அர்களா.

பைம்பொழில் அவளை ஆழமாகப் பார்த்தாள். நீயே சோல் அர்களா! கன்னல் பிறந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆதித்த கரிகாலன் இருக்கும்போது நமக்கு இனி மகன் தேவை யில்லை என்றளவுக்கு அவனை நேசிக்கிறார் மலையமான் மகன். ஆனால் இந்த ஆறு ஆண்டுகளில் ஆதித்த கரிகாலன் மீது காட்டும் அக்கறை யில் சிறிதாவது பெற்ற மகள் கன்னலிடம் காட்டி யிருக்கிறாரா? அவளிடம் சரியாகக் கூட உரையாடுவதில்லை. பெற்ற மகளையே இவர் பேதம் காட்டிப் பிரித்து வைக்கிறார். ஆதித்த கரிகாலனை நான் பேதம் பார்ப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்! யார் பக்கலில் நியாயம் உள்ளது? நீயே சோல்!" பைம்பொழில் கூறினாள்.

என் மகளின் வருங்காலக் கணவனைத்தான் நான் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக் கிறேன். ஆதித்த கரிகாலன் எனது தமக்கையின் மகன் மட்டுமல்ல, எனது வருங்கால மருமகன். கன்னலின் கணவன். அதனால்தான் அவனுக்கு அதீதப் பாதுகாப்பைத் தருவதாக வைத்துக் கொள்ளலாம் அல்லவா? ஆதித்த கரிகாலனுக்கு ஆபத்து இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. சதி யாளர்கள் அவனை நெருங்குவதற்கு முன்பாக, நான் அவர்களைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும்.

நம்மை நம்பி மலைய மாருதத்தில் பாசறை அமைத்த, பட்டத்து இளவரசர், ராஜாதித்யரை தக்கோலம் போரில் காக்க முடியாமல் போனதே என்கிற வருத்தத்திலும் துயரத்திலும் இருக்கும் வேளையில் ஆதித்த கரிகாலன் காணாமல் போவிட்டதால் எனது மனம் பேதலித்து விட் டது. எனது செகைக்கு நான் வருத்தப்பட்டாலும் எனது சுகதுக்கங்களில் சரிசமமாகப் பொறுப்பேற்க வேண்டியவள் என்னைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் என்னை சினம்கொள்ள வைத்தது. உனது தோழியிடம் என்னை மன்னித்துவிடச் சோல்" என்றவனின் குரல் சற்றே தழுதழுத்தது.

பைம்பொழிலைத் திரும்பி நோக்காமல் வெளியே சென்றவன் தனக்குப் பின்பாக அறைக் கதவை மூட முயன்றபோது அர்களா அவனைத் தடுத்தாள்.

இளவரசே! ஒருகணம் நில்லுங்கள். ஒருவருக்கொருவர் நன்கு மனம் விட்டுப் பேசி, மனதில் உள்ள கிலேசங்களையும் ஐயங்களையும் நீக்கிவிட்டு, பிறகு இந்த அறையை விட்டுச் செல் லுங்கள். திருக்கோவலூர் மன்னர் மலையமான் ஏற்கெனவே மிகவும் நொந்து போயிருக்கிறார். உங்களிடையே உள்ள பிரச்னை வேறு அவரைப் பாதிக்க வேண்டாம்" என்று அர்களா கூறியதும், வான வரம்பன் வேண்டாவெறுப்பாக மீண்டும் தனக்குப் பின்பாக அறைக்கதவினை மூடிக் கொண்டு நின்றான்.

உனது பிரச்னைதான் என்ன பொழில்?" வானவரம்பன் நேரிடையாகவே பைம்பொழி லைக் கேட்டான்.

எனக்கு என்ன பிரச்னை இருக்கக்கூடும்? தாங்கள்தான் என்னிடம் சினத்தைக் காட்டி வருகின்றீர். நீங்கள்தான் எனக்குப் பிரச்னை. ஆதித்த கரிகாலனின் பாதுகாப்பு என்பது, கொதிக் கும் இரும்பு உருளையைக் கையில் ஏந்தி யிருப்பது போல என்கிறேன். வருடங்கள் பல ஓடியும் நம்மால் யாழ் மனிதனை ஒன்றும் செய இயலவில்லை. அவனது நடவடிக்கைகள் எல்லை மீறிப் போக்கொண்டிருக்கின் றன. நம்மால் அவனைக் கட்டுப்படுத்த முடியும் என் கிற நம்பிக்கை எனக் கில்லை. எனவே, ஆதித்த கரிகாலனை அவனது பெற்றோர் வசம் ஒப் படைப்பதே நல்லது. உறக் கத்தில் நடக்கும் அவனுக்கு ஏதாவது நேர்ந்தால் நாமல் லவோ உங்கள் தமக்கையருக்கும் சுந்தரசோழருக்கும் பதில் கூற வேண் டும். எனவே அவனைத் திருப்பி அனுப்பி விடுங்கள்" பைம்பொழில் கூறினாள்.

பொறுப்பேற்கிறேன் என்று நீதானே எனது தந்தையாருக்கு வாக்களித்தா! பொறுப்பினைக் கை கழுவுதல் கடமை வீரர்களுக்கு அழகா?" வானவரம்பன் கேட்டான்.

குழந்தையாக இருந்தபோது அவனது பொறுப்பை ஏற்கிறேன் என்று வாக்களித்

தேன். ஆனால், அவன் வளர வளர, அவனிடத்தில் மூர்க்கமும் சினமும் வளர்ந்துவிட்டதைத் தாங்கள் கவனிக்கவில்லையா? ‘இரவில் நித்திரை யில் நடக்கிறான். எனது அறையின் கதவின் முன்பாக ஒரு நாள் நின்றான். அடிக்கடி நம் மகள் கன்னலின் அறைக்கு இரவு வேளையில் வந்து நிற்கிறான்’ என்று அழிஞ்சி புகார் கூறினாள்.

‘எனது மனைவியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்’ என்று அழிஞ்சியை அச்சுறுத்துகிறானாம். எல்லாவற்றிற்கும் மேலாக நமது மகளின் உடலின் கீறிய அடையாளங்களும் கிள்ளிய காயங்களும் தென்பட்டன. அழிஞ்சியாளைக் கேட்டால் ஆதித்த கரிகாலன் அடிக்கடி அறைக்கு வந்து கன்னலைக் கொஞ்சி மகிழ்கிறான். அப்போது உண்டான காயங்கள் என்கிறாள். எனக்கு அவ னால் கன்னலுக்கு ஆபத்து ஏற்படுமோ என்கிற அச்சம் தோன்றியுள்ளது. ஒன்று நீங்கள் ஆதித்த கரிகாலனைத் திருக்கோவிலூரில் இருந்து பழை யாறைக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் நான் கன்னலுடன் திருவாவடுதுறை

செல்வதைத் தவிர வேறு வழி இல்லை!" பைம்பொழில் கூற, வானவரம்பன் அதிர்ந்து போனான். பிறகு, நிதான மாக அவளைப் பார்த்தான்.

ஆதித்த கரிகாலன் ஒரு மனநோயாளி என்று மீண்டும் மறைமுகமாகக் கூறுகிறா, பொழில்! சரி! அத்தகைய அச்சத்தோடு,

நீ இங்கே இருக்க வேண் டாம். நீயும் கன்னலும் திருவாவடுதுறை பயணமாகுங் கள். ஆதித்த கரிகாலன் எனது பாது காப்பில் இங்கே பத்திரமாக இருப்பான்!" தீர்மானத்துடன் கூறினான், வானவரம்பன்.

அர்களா இருவரையும் சங்கடத்துடன் நோக்கி னாள்.

உங்கள் இருவரிடையே ப்ரணய கலகம் நடைபெறுகிறது என்று நினைத்தேன். பிரளய கலகமாக அன்றோ மாறிவிட்டது! நான்

சோல்வதைக் கேளுங்கள். இருவருக்கும் பொதுவாக ஒரு கருத்து கூறுகிறேன். பொழில், உனது அச்சம் தேவையற்றது! ஆதித்த கரிகால னால் கன்னலுக்கு எந்த ஆபத்தும் நிகழாது. அவளைத் தனது வருங்கால மனைவி என்று கூறுபவன் ஏன் அவளுக்கு ஆபத்தை உண்டாக்க போகிறான்? அதே சமயம், வானவரம்பரே! இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சில பிரச்னைகள் உள்ளன என்பதனையும் மறுப்பதற்கு இல்லை. எனவே, அவரைச் சிறிது காலம், மனமாசு கெடிகையில் பகிரண்ட சித்தரின் பொறுப்பில் விட்டு சிகிச்சை அளிப்போம். பிறகு அவன் குண மடைந்ததும் இங்கே அழைத்து வருவோம். பிரச்னையை நகத்தால் கிள்ளி எறிவதை விட்டு, எதற்கு இருவரும் கோடரியைக் கையில் எடுக் கின்றீர்கள்?" அர்களா கூற, வானவரம்பன் மற்றும் பைம்பொழில் இருவருக்குமே அர்களா வின் அந்த யோசனை பிடித்திருந்தது.

இதுகுறித்து தந்தையிடம் பேசுகிறேன். பராந்தகனார் ஈமகாரியங்கள் முடிந்ததும் இதுகுறித்து யோசிப்போம்!" என்ற வானவரம்பன் மீண்டும் கதவைத் திறந்தவன், வெளி யேறாமல் அதனைப் பற்றிக் கொண்டு அர்களாவைப் பார்த்தான்.

அர்களா! நீ பொழி லுக்கு உயிர்த்தோழியாக இருக்கலாம். ஆனால், உனக்கும் உனது தந்தைக் கும் அடைக்கலம் கொடுத் திருப்பது, எனது தந்தை மலையமானும் நானும்தான். நடுநாட்டு பட்டத்து இளவரசனாக, மலையன் வானவரம்பனாக, நான் உனக் கிடும் கட்டளை இது! எனது பொறுப்பில் நீயும் உனது தந்தையும் இருக்கும் வரை உனது திருமணத்தை நிச்சயிக்கும் உரிமை என்னிடம்தான் உள்ளது. உனக்குத் தகுந்த மணவாளனைத் தேர்ந் தெடுக்கப்போவது நான்தான். அமராபரணனை உனக்கு ஏற்றவனாக நான் கருதவில்லை. நீ நன்றாக யாழ் மீட்டுபவள் என்பதால் உனக்கு யாழ் மீட்டுபவன்தான் நாதனாக வரவேண்டும் என்பதில்லை. நானும் எனது மனையாளும் வாட் சண்டை அறிந்தவர்கள்தான். எங்கள் அந்நியோன் னியத்தைத்தான் சற்று முன்பு பார்த்தாயே! எனவே, இந்த விவகாரத்தில் முடிவை என்னிடம் விடு!" என்றபடி கதவை மூடிக்கொண்டு அகன்றான்.

அர்களா மட்டுமல்ல, பைம்பொழிலும் வான வரம்பனின் உறுதியான கட்டளையைக் கேட்டு அதிர்ந்துபோ நின்றாள். சற்றுநேரம் அந்த அறையில் அமைதி நிலவியது. பிறகு அர்களாதான் மௌனத்தைக் கலைத்தாள்.

நீ செவது முற்றிலும் தவறு பொழில்! தக்கோலம் போரில் ராஜாதித்யர் வீர மரணம் எதியதும், போரில் சோழர்கள் தோற்றதும், அவர்களைக் காட்டிலும் உனது கணவரைத்தான் அதிகம் பாதித்திருக்கிறது. ராஜாதித்யரின் மரணத் திற்குப் பிறகு வானவரம்பர் நடைப்பிணமாக நடமாடுவது எனக்கே கண்கூடாகத் தெரியும் போது, நீ அவருக்கு ஆதரவுடன்தானே செயல்பட வேண்டும். ‘அமராபரண னுக்கு நான் உத்தரவாதம் அளிக் கிறேன்’ என்று நீ கூறியது எனக்கே அதிகமாகத் தோன்றியது. அப்படியே நீ உத்தரவாதம் அளிப்பதாக இருந்தாலும் கூறுவதற்குச் சமய சந்தர்ப்பம் இருக்க வேண்டாமா? பள்ளியறையில் தனிமை யில் நீ கூறியிருக்கலாம். மேலும் ஆதித்த கரிகாலனின் பாதுகாப்பு குறித்து அனைவருமே கவலைப்படும் வேளையில், நீ அவனைக் குற்றம்சாட்டிப் பேசுவது, அவருக்குக் கோபத்தைத்தான் ஏற்படுத்தும். அவர் கூறுவது போன்று ஆதித்த கரிகாலன்தானே உனக்கு மருமகனாகப் போகிறான். உன் மகள் சோழ இளவரசியாவது உனக்குப் பெருமை தானே" அர்களா கேட்க, அவளை உறுத்துப் பார்த்தாள் பைம்பொழில்.

பிறகு விடுவிடுவென்று சாளரத்தின் அருகே சென்று வெளியே நிலவிய இருளை மீண்டும் வெறித்துப் பார்த்தாள். அங்கிருந்தபடியே தோழி யைத் திரும்பி நோக்கினாள்.

அங்கேதான் பிரச்னை தொடங்குகிறது அர்களா! எனது கணவர் சோழ இளவரசர்கள் அற்ப ஆயுளில் இறந்துபோவதைப் பற்றிக் கவலைப்படுகிறார். இளங்கோ பிச்சியின்

சாபம், யாழ் மனிதனின் சதி என்று சோழம் எத் தனையோ பிரச்னைகளைச் சந்திக்கிறது.

அத்தகைய சோழ இளவரசன் ஒருவனுக்குத் தனது மகள் கன்னலை எப்படி மணமுடிக்க நினைக்கிறார். உண்மையில் எனக்கு ஆதித்த கரிகாலனின் மீது தனிப்பட்ட பிரச்னை எதுவு மில்லை. ஆனால் அவனை எனது மருமகனாக நினைக்க முடியவில்லை" பைம்பொழில் கூற, அர்களா அதிர்ந்தாள்.

ஏன் இந்த முடிவுக்குத் திடீரென்று வந்து விட்டா?" அர்களா தனது புருவத்தை உயர்த்தி னாள்.

உனக்கு நினவிருக்கிறதா, அர்களா? ஆதித்த கரிகாலன் குழந்தையாக இருந்தபோது நாம் உப்பரிகை யில் இருந்து ஒரு காட்சி பார்த் தோமே! ஆதித்த கரிகாலன் நீராடும் வேளையில், அவன் மீது இறந்துபோன எலி ஒன்றின் உடலை அண்டங்காக்கை நழுவ விட்டதே!" பைம்பொழி லின் குரலில் ஒருவித அச்சம் பரவியது.

அர்களா தலையசைத்தாள். அப்படி ஒரு காட்சியை மீண்டும் எனது கனவினில் கண் டேன். நான் நிலாமுற்றத்தில், கன்னலை நீராட்டிக் கொண்டு இருக்க, நீ அருகில் நின்று

நீர் வார்த்துக் கொண்டு இருக்கிறா. அண்டங் காக்கை ஒன்று கீழே எதையோ நழுவவிட, அது குழந்தை கன்னலின் மீது வந்து விழுகிறது. நீ அதனை எடுத்து எனது கண்களின் முன்பாகக் காட்டுகிறா. அது செத்த எலி அல்ல! ஆதித்த கரிகாலனின் தலை!" மேனி நடுங்க, தனது கனவை விவரித்தாள் பைம்பொழில்.

அர்களாவுக்கே பைம்பொழிலின் கனவைப் பற்றிக் கேட்டதும் பிடரியில் வியர்த் தது. இந்தக் கனவை கண்டது முதல், நான் நானாக இல்லை அர்களா! ஆதித்த கரிகாலனுக்கு ஆயுள் நீடிக்கும் என்கிற உத்தரவாதம் இல்லாமல் நான் எப்படி எனது மகளை அவனுக்கு மணமுடிப்பேன்" பைம்பொழிலின் குரல் கிசுகிசுப்பாக மாறியது.

ஒரு கனவுக்கு இவ்வளவு முக்கியத்துவத் தைக் கொடுக்காதே பொழில்! இளவரசர் வான வரம்பர் உன் மீது அளவு கடந்த நேசத்தை வைத் திருக்கிறார். உனது வீணான ஐயங்களால் பிரச்னைகளை உண்டாக்கி, உனது வாழ்வைப் பாழ் செயாதே! சோழ மன்னர் காலமாகிவிட்டார். இந்தத் தருணத்தில் நீ உங்கள் குடும்பத்தைத் தாங்க வேண்டும். வா! நாம் மற்றவர்களோடு

சேர்ந்து துக்கத்தில் பங்கு கொள் வோம்!" அர்களா அழைத் தாள்.

பங்குகொள்ளலாம்! அதற்கு முன்பாக நீ எனக்கு ஒரு வாக்கினை அளிக்க வேண் டும். எனது கணவன் கட்டளை யிட்டது போன்று, அவர் கூறும் நபரை நீ திருமணம் செது கொள்ளக் கூடாது! உனது வாழ்க்கையை நீதான் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அமராபரணன் தான் உனக்கேற்ற கணவன். அவனை மணப் பதால், நீ மலைய மாருதத்தை, ஏன் திருக் கோவிலூரை விட்டே வெளி யேற வேண்டுமென்றாலும் பரவாயில்லை. உங்கள் திருமணத்தை நான் முடித்துக் காட்டுகிறேன்!" பைம் பொழில் வீம்புடன் கூறினாள்.

அர்களா திகைத்து நிற்க, பைம்பொழில் அவளது கரத்தை தரதரவென்று பிடித்து இழுத்த படி, மலையமானின் அறையை நோக்கி நகர்ந்தாள்.

மலையமான், மலையமாருத அதிகாரி,

பராங்குசதாசரிடம் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

நாம் அனைவரும் பராந்தகருக்கு இறுதி அஞ்சலியைச் செலுத்த பழையாறை செல்ல வேண்டும். பராங்குசரே! நமது பயணத்திற்கு ஏற்பாடு செயுங்கள்" என்று கூறிக்கொண் டிருந்தபோது, அர்களாவுடன் அங்கே வந்தாள், பைம்பொழில்.

நான் கன்னலைப் பார்த்துக்கொள்ள வேண்டும்! நான் இங்கேயே இருக்கிறேன்!" பைம்பொழில்கூற, கண்களில் நையாண்டியுட னும், குரலில் குரோதத்துடனும், அவள் முகத்தை நோக்காமல் பொதுவாகக் கூறினான் வான வரம்பன்.

ஆதித்த கரிகாலனும் நம்முடன் பழை யாறைக்கு வருகிறான். அதனால் நீ கன்னலைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீ பழை யாறைக்கு வர வேண்டியதுதான் முறை!" வான வரம்பன் கூற, அவனது குரலில் ஒலித்த கட்டத் தைக் கேட்டதும், வியப்புடன் அவனது பக்கமாக நோக்கினார் மலையமான்.

அப்போது தாதி தமனகம் உள்ளே வந்து மலையமானைப் பணிந் தாள்.

வேந்தே! பகிரண்ட

சித்தர் வந்திருக்கிறார்!" என்றதும், மலையமான் தலையசைக்க, அவள் அவரை உள்ளே அனு மதித்துவிட்டு அகன்றாள்.

வாருங்கள் சித்தரே! சேதியை அறிந்திருப்பீர் என்று நினைக்கிறேன்! சோழ சக்கரவர்த்தி பராந்தகனார் காலமாகிவிட்டார்!" மலையமான் சோகத்துடன் கூற, சித்தர் தனது தாடியை நீவியபடி அவரை ஆழமாகப் பார்த்தார்.

மலையமாருதத்தில் நுழைந்தபோதுதான் நான் சேதியை அறிந்தேன். மிகவும் துயரத்தைத் தரும் சேதிதான். ஆனால் நான் மன்னரின் மரணத் திற்காகத் துக்கம் கேட்க வரவில்லை. மற்றொரு நெஞ்சை நடுங்க வைக்கும், சேதியைப் பகிரவே வந்திருக்கிறேன். சித்தர் கூற, அனைவரும் திகைப்புடன் அவரைப் பார்த்தனர்.

கூறுங்கள் சித்தரே!" மலையமான் கூறினார்.

உங்கள் பெயரன் ஆதித்த கரிகாலன் எங்கே?" சித்தர் கேட்டார்.

இரு தினங்களாகக் காணாமல் போன அவன், தற்போது அவனது அறையில் ஓவு எடுத்துக் கொண்டு இருக்கிறான்" வானவரம்பன் கூறி னான்.

அந்த இரு தினங்களில் அவன் எங்கு

சென்றிருந்தான் தெரியுமா?" சித்தர் பதற்றத்

துடன் கேட்க, வானவரம்பன் அவரை வியப்பு டன் நோக்கினான்.

பண்ணுருட்டி கெடிலம் நதிக்கரையில், உள்ள வனமகாதேவி ஆலயத்தில், வைணவ அடியார் நாதமுனிகளால் கண்டெடுக்கப்பட்டான்!" வானவரம்பன் கூறினான்.

மிகச் சரி! அங்கேதான் ஆலயத்தின் அருகே, கெடில ஆற்றின் கரையில், வல்லவன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டான். அவனது தலையில் பெரிய கல்லைப் போட்டு யாரோ அவனைக் கொன்றிருக்கின்றனர். யார் அதனைச் செதிருக்கக்கூடும் என்று தெரிய வில்லை. உடன் ஆதித்த கரி காலன் இருந்ததாகப் பேசப்படு கிறது!" சித்தர் கூறியதும் அனைவரும் கல்லா

சமைந்து நின்றனர்.

‘இப்போது என்ன சொல்கிறீர்கள்?’ என்பது போன்று பைம்பொழில் வானவரம்பனை நோக்க, அவன் முகத்தில் கலவரத் துடன் சித்தரையே வெறித்துக் கொண்டிருந்தான்.

ஆதித்த கரிகாலன் காணாமல் போனபோது, இங்கே அரண்மனை நந்தவனத்தில்தானே வல்லவன் விளையாடிக் கொண்டிருந்தான்!" அர்களா கூறினாள்.

விளையாடிக்கொண்டிருந்தான். ஆனால் ஆதித்த கரிகாலன் காணவில்லை என்று நாம் பதற்றப்பட்டதும், நான் சென்று அவனைத் தேடி வருகிறேன் என்று அவன் புறப்பட்டுச் சென் றானே! மறந்துவிட்டாயா அர்களா?" பைம் பொழில் கூற, வானவரம்பன் இப்போது அவளை எரிச்சலுடன் உறுத்துப் பார்த்தான்.

சித்தர் செதியைத்தான் தெரிவிக்க வந்தார். நீ அதற்குள் தீர்ப்பைக் கூறிவிடாதே! சித்தரே! ஆதித்த கரிகாலனின் நிலை குறித்து எங்களுக்கும் அதிகம் கவலை உள்ளது. வல்லவன் மரணத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்து தண்டனை வழங்கப்படும். அதற்கு முன்பாக, எங்களுக்கு ஒரு யோசனை தோன்றி யுள்ளது. சிறிது காலம் ஆதித்த கரிகாலனைத் தங்களது மனமாசு கெடிகையில் வைத்து, தகுந்த சிகிச்சை அளித்தால், அவன் நலம் பெறக் கூடும் என்று நாங்கள் நினைக்கிறோம்!" வானவரம்பன் கூற, அதனைத் தலையசைத்து ஆமோதித்தார் மலையமான்.

ஆம்! உறக்கத்தில் நடக்கிறான். மூர்க்கத்தன மாகப் பேசுகிறான். அடிக்கடி சினம் தோன்று கிறது. நீங்கள் உங்கள் கெடிகையில் அவனுக்குத் தக்க சிகிச்சையளித்து பூரண குணம் அடையச் செய வேண்டும்" மலையமான் கைகூப்பி

சித்தரை வேண்டினார்.

நிச்சயம் அதனைச் செகிறேன்! தயாபரியை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. இப் போதைக்கு அவளிடம் தகவ லைச் சொல்லாமல் இருப் பது நல்லது. அவளையும் அமராபரணனையும் நான் மனமாசு கெடிகைக்கு அழைத்துச் சென்று அங்கே விவரங்களைக் கூறுகிறேன். நீங்கள் பழை யாறைக்குப் புறப்படுங்கள். மன்னரின் தகனம் முடிந்ததும் திரும்பி வரும்போது ஆதித்த கரி காலனை மனமாசு கெடிகைக்கு அழைத்துவந்து என்னது வசம் ஒப்படையுங்கள். நான் சிகிச்சையைத் தொடங்குகிறேன்" என்ற

சித்தர், அமராபரணனையும் தயாபரியையும் அழைத்துக்கொண்டு மனமாசு கெடிகைக்குப் புறப்பட்டனர்.

வல்லவன் கொல்லப்பட்ட சேதியை அறியாமல் மகிழ்ச்சியுடன் அவருடன் புறப்பட்டுச் சென்ற னர், தயாபரியும் அமராபரணனும்.

பழையாறைக்குப் புறப்படுவதற்கு முன்பாக மலையமான் அனைவரையும் எச்சரித்தார்.

எல்லோருக்கும் நான் விடுக்கும் கோரிக்கை. எக்காரணம் கொண்டும், ஆதித்த கரிகாலனின் மனதில் உள்ள பிரச்னைகளோ, அவனை நாம் மனமாசு கெடிகையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்கப்போகும் விவரத்தையோ பழையாறை யில் யாரிடமும் மூச்சுவிடக்கூடாது. குறிப்பாக, சுந்தர சோழருக்கும் வானவன் மாதேவிக்கும் தங்கள் மகனிடம் உள்ள பிரச்னைகளைப் பற்றித் தெரிவிக்கக்கூடாது. வாயைக் கட்ட முடியாத வர்கள் பழையாறைக்கு வரவேண்டிய தேவையே இல்லை!" என்றது, அனைவரும் அமைதி காத்தனர்.

பராந்தகனுக்கு அஞ்சலி செலுத்த மலையமான் குடும்பத்தினர் புறப்பட்டனர். அனைவருமே உடன் பயணித்த ஆதித்த கரிகாலனைக் கவலை யுடனும் பயத்துடனும் பார்க்கத் தொடங்கி இருந் தனர். பழையாறையில் இருந்து வரும்போது அவனை மனமாசுக் கெடிகையில் சிகிச் சைக்காக அனுமதிக்க வேண்டும் என்று இவர்கள் தீர்மானித்திருக்க, அவன் அதற்கு ஒப்புக் கொள் வானா என்கிற கவலை பைம்பொழிலிடம் தோன்றி விட்டது. வானவன் மாதேவி வசம் அவனை ஒப்படைத்து, இனி ஆதித்த கரிகாலன் உங்கள் பாடு’ என்று கூறி பொறுப் பைக் கழிப்பதுதானா புத்தி

சாலித்தனம் என்று மனதில் தோன்றினாலும், வானவரம்பன் அதற்குக் கடும் எதிர்ப்பு காட்டு வான் என்பதால் மௌனமாகவே பயணித்துக்கொண்டிருந்தாள் பைம்பொழில்.

மனநோ உள்ளவன் என்கிற முத்திரை தனக்குக் குத்தப்பட்டுவிட்டது தெரியாமல், இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி பயணித்துக் கொண்டிருந் தான் ஆதித்த கரிகாலன். இனி அவனது வாழ்க் கைப் பாதை கரடுமுரடாக இருக்கப் போவதற்கு அடையாளமாக அவன் பயணித்த ரதம் குலுங்கிக் கொண்டிருந்தது. இனி எஞ்சிய காலம் முழுவதும் மற்றவர்களால் அலைக்கழிக்கப்படப் போகிறான் என்பதை உரைக்கும் விதமாக ஒரு சாலையோர மரத்தில் அமர்ந்திருந்த விசித்திரப் பறவை ஒன்று வீறிட்டு அலறிக்கொண்டிருந்தது.

(கூடலழகி முதல் பாகம் முற்றும்)

Post Comment

Post Comment