தலையங்கம்


நல்ல தொடக்கம்
-கொரோனா தொற்றுப் பரவல் மெல்ல குறைந்து, நாட்டின் பொருளாதாரம் மீண்டெழும் அடையாளங்கள் அரும்பும் இந்த நேரத்தில், வெளியாகியிருக்கும் மற்றொரு நிம்மதியளிக்கும் செய்தி இந்தியா - சீனா இரு நாடுகளும், பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளிலுள்ள தங்கள் படைகளைப் படிப்படியாகத் திரும்பப் பெறச் செதுகொண்டிருக்கும் ஒப்பந்தம். அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்குள் இரு நாட்டுப் படைகளும் திரும்பப் பெற்று விடும்.

நமது அண்டை நாடான சீனாவோடு அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போரின்போது, சீனா இந்தியாவிலுள்ள 43 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டது. அப்போது தொடங்கிய தாக்குதல் - அமைதி - தாக்குதல் என்ற சுழற்சி, பல ஆண்டுகளாக ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதும் எல்லையின் கிழக்குப் பகுதியில் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைத் தனக்குச் சொந்தமானது என்று கூறிவருகிறது. ஆனால், இதை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை.

சீனா இந்தப் பகுதிகளில் 50 ஆயிரம் ராணுவ வீரர்களைக் குவித்து வைத்திருந்தது. கடும் பனிக்கிடையே இரு நாட்டு வீரர்களும் தங்கள் உயிரை யும் பணயம் வைத்து காவல் காத்துக் கொண்டிருந்தனர்.

கடந்த ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செதனர். இந்த நிலையில் ஒருபுறம் இந்தியா, சீனா இரண்டு அரசுகளும் தங்களது வலிமையைக் காட்ட எல்லைப் பகுதியில் ராணுவத் தளவாடங்களையும் படைகளையும் குவித்துக்கொண்டிருந்தாலும், மறுபுறம் இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள், தளபதிகள் இரு நாட்டு ராணுவ அமைச்சர்கள், வெளியுறவுத்துறை

அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்தனர். இந்தப் பேச்சு வார்த்தைகளில் முதலில், இந்தியா - சீனா எல்லையின் மேற்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டுப் படைகளும் வாபஸ் பெறவேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது. இப்போது இரு நாடுகளும் பிரச்னைக்குரிய பகுதிகளி லிருந்து தங்கள் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்வதாகவும், அதைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில், இரு நாட்டு மூத்த ராணுவத் தளபதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிச்சயமாக, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமாகும். ஆனால், வெறும் எழுத்து வடிவில் சமாதானம் வந்துவிடாது. அதை முழு உணர்வோடு செயல்படுத்தவேண்டும். இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு வேண்டும். அது எல்லைப் பகுதியில் அமைதி இருந்தால்தான் முடியும். அந்த வகையில் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்த மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்

சிங்கும், ராணுவத் தளபதிகளும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால், இதை முழு வெற்றியாகக் கருதிவிட முடியாது.

பல ஆயிரம் கி.மீ. பரப்பளவைத் தாரை வார்த்துவிட்டீர்கள் என்று எதிர்க் கட்சியும், ஒரு கைப்பிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஆளும் கட்சியும் மாறி மாறி அறிக்கைகள் கொடுத்து, பிரச்னையை அரசியல் ஆக்குவதை நிறுத்தி, ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்கு உதவ வேண்டும்.

இன்று நம் நாடு உலக அரங்கில் வெகு வேகமாக வளரும் வலிமை மிகுந்த ஒரு நாடாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள, அண்டை நாடுகளுடன் நல்லுறவு அவசியம்.

1950 தொடக்கங்களில் இந்தியப் பிரதமர் நேருவும், சீன அதிபர் சூயன்லாயும் சந்தித்த நேரத்தில் கூறியதுபோல, இந்தியாவும் சீனாவும் சகோதரர்களாக வாழவேண்டும் என்றால், இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு திகழ்ந்தால் மட்டுமே முடியும்.

உன் நண்பர்களை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அண்டை நாட்டுக்காரர்களை மாற்றிவிட முடியாது. எனவே, சமாதானத்தோடு வாழ்வதுதான் நல்லது" என்பது உலகம் முழுவதும் சொல்லப்படும் ஒரு மூதுரை. இந்திய அரசியல் கட்சிகள் இதை உணர்ந்து சீன உறவு விஷயத்தில் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும்.

Post Comment

Post Comment