வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க



-



இதற்குப் பின் அது வருவது ஏன்?

அ-வுக்கு அடுத்து ஆ வருவதேன்?

அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!

இ-க்கு அடுத்து ஈ வருவதேன்?

இருப்பவன், ஈய வேண்டும் என்பதை இயம்பிட!

உ-வுக்கு அடுத்து ஊ வருவதேன்?

உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!

எ-க்கு அடுத்து ஏ வருவதேன்?

எதையும் ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!

ஐ மட்டும் எதோடும் சேராமல் தனித்து

இருப்பதேன்?

அதற்கு நான் (ஐ) என்ற அகம்பாவம் இருந்தால் தனிமைப்படுத்தப்படுவாய் என்பதை உணர்த்திட!

ஒ-வுக்கு அடுத்து ஓ வருவதேன்?

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்ந்திட!

- கீதா வீரப்பன், காஞ்சிபுரம்

ஆசை!

ஆசை காற்று அளவோடு வீசினால் அது தென்றல். சற்று பேராசை கொண்டால் அது புயல்.

நீர் ஆசையாக ஓடிக் கொண்டிருந்தால் அது நதி. பேராசை கொண்டு ஓடினால் அது வெள்ளம்.

ஆசையாக எரியும்போது அது ஜோதி. அதுவே பேராசை கொண்டு விரிந்தால் அது காட்டுத் தீ.

உழைத்து உயரும் ஆசை சேவை. உழைக்காமல் உயரும் ஆசை பேராசை.

எனவே, அதிகமாகும் ஆசை எல்லாம் பேராசையே. அவை அனைத்தும் பேராபத்தில் முடியும்.

தொகுப்பு: விமலா ராமமூர்த்தி, சென்னை

1) உரலில் தானியம் எதற்கு?

ஊசியில் மருந்து எதற்கு?

குத்துவதற்கு.

2) கொல்லன் தங்கத்தை அடிப்பதேன்?

கோமாளி சேட்டை செய்வதேன்?

நகைக்காக.

3) அலைகள் எழுவது எதனால்?

அனைவர் உயிரும் எதனால்?

காற்றால்.

4) பட்டாசுக்கு தீயிடுவதேன்?

பஞ்சுக்காய் முற்றுவதேன்?

வெடிப்பதற்கு.

5) மேகம் கருப்பது எதனால்?

சாதம் கொதிப்பது எதனால்?

நீரால்.

- வேதாத்மா, புதுச்சேரி

Post Comment

Post Comment