தாவணித் தேவதைகள்சந்திப்பு : தனுஜா ஜெயராமன் - ஓவியம் : S.A.V.இளையராஜாஅது என்னவோ தெரியவில்லை ‘அந்தக் காலத்து’ தாவணிப் பெண்களை அவ்வளவு பிடிக்கும் பலருக்கும். கொள்ளைப் பிரியம் அவர்களின் மேல். பெரிய பெரிய பூக்களிட்ட சீட்டி பாவாடைகள், கலர் தாவணிகள், மூடிய கழுத்து வைத்த சாதாரண ப்ளவுஸ்கள் என வலம் வருவார்கள். அவர்களின் அதிகபட்ச அணிகலனே கலர்கலரான ப்ளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்கள் மட்டுமே. காதுகளில் சிறிய தங்க மொட்டுகள். கழுத்தில் கறுப்பு அல்லது வெள்ளை மணிகள். பணக்கார

வீட்டுப் பெண்கள் எனில் கழுத்தில் பெரிய பதக்கம் வைத்த செயின், காதில் சிறிய தங்க ஜிமிக்கிகள் அவ்வளவுதான். தேவதைகளாய் ஜொலிப்பார்கள்.

அவர்களின் அதிகபட்ச அழகு சாதனப் பொருட்கள் ஐடெக்ஸ் கண் மையும், கலர்

சாந்துப் பொட்டும். அதை வாங்கவே வீட்டில் போராட வேண்டிய சூழல் பல குடும்பங்களில். இப்போதைய காஸ்மெடிக்ஸ் அயிட்டங்களையோ, யுடியூப் வீடியோக்களையோ பார்த்தறியாத துரதிருஷ்டசாலிகள். அவர்களின் குறைந்தபட்ச

அழகு சாதனப் பொருட்கள் கடலை மாவும், பயத்த மாவும் மட்டுமே. முகத்திற்கு மஞ்சள் பூசினால் ‘மஞ்சள் முகமே வருக, மங்கலப் பூவே வருக’ எனப் பாடலாம். ஷாம்பூகளின் வாசமறியாத கூந்தல்கள் அவர்களுடையது. நல்லெண்ணெ, சியக் கா புண்ணியத்தில் இடுப்பு வரை நீண்ட கூந்தலே பெரும்பாலான பெண்களுக்கு! அதையும் விரித்துப் போட்டால் அத்தை, பாட்டியென பஞ்சாயத்திற்கு வந்து விடுவார்கள். தலைக்குக் குளித்த ஈரத் தலையின் காதோரத்திலிருந்து சிறு முடிகளை எடுத்து நடுவில் சின்னதாய் ஜடையிட்டு காதோரம் ரோஜாப் பூக் களை வைத்து அக்கால அம்பிகா மற்றும் ஸ்ரீதேவியை ஞாபகப்படுத்துவார்கள். மற்ற நேரங்களில் முகத்தில் எண்ணெ வழிய கழுத்து நரம்பு சிவக்க கூந்தலை இறுகப் பின்னுவது அவர்களின் வாடிக்கை.

இந்தத் தாவணிப் பெண்களுக்கு மூக்குத்தி மற்று மொரு பேரழகு. நீண்ட நாசியில் ஒற்றைத் தங்க மொட்டோ, ஒற்றைக்கல் மூக்குத்தியோ, ஏழுகல் ஸ்ரீதேவி மூக்குத்தியோ ஜொலிக்கும்.

இந்தத் தேவதைகளுக்குப் பெரிய லட்சியங்களோ கனவுகளோ கிடையாது. கிடையாது என்பதைவிட அப்படியெல்லாம் வைத்துக்கொள்ள குடும்பச் சூழல் பெரும்பாலும் இடம் தராது. பத்தாவது முடித்து தையலோ டைப்ரைட்டிங்கோ கற்றுக்கொள்வதே மிகப் பெரிய வாழ்க்கை லட்சியமாக இருக்கும்.

இவர்களின் உலகம் பெரும்பாலும் அப்பா, அம்மா, குடும்பம் என்ற சின்னஞ்சிறு வட்டத்திற் குள் சுற்றிச் சுற்றியே இயங்கிக் கொண்டிருக்கும்.

மிகப் பெரிய குடும்பத்திற்குள் இருப்பதால் பெரிய அண்ணன், சின்ன அண்ணன் என அனைவருக்கும் அடங்கியே கிடப்பார்கள். மிகப் பெரிய சென்டிமென்ட் திலகங்களாக இருப்பார்கள். முணுக்கென்றாலோ அதட்டினாலோ அழுதுவிடும் இளகிய மனதுடையவர்கள். மற்றவருக்கு விட்டுக் கொடுப்பதில் இவர்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஒரு முழம் பூவை நான்கு அக்கா, தங்கைகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழல். ஒரு சிறிய ப்ளாஸ்டிக் தட்டில் பத்து குப்பிகளாக பத்து கலர் சாந்து டப்பாவை வாங்குவதுதான் அவர்களின் மிகப் பெரிய ஆடம்பர ஆசை.

சில ஏழைக் குடும்பங்களில் தாவணி வாங்க வசதியற்று அக்கா, அம்மாவின் பழைய புடைவைகள் இரண்டாகக் கிழிக்கப்பட்டு இரு தாவணிகளாக உருமாற்றம் பெறும். சில வீடுகளில் அக்காக்களின் பழைய பாவாடை தாவணிகள்தான் தங்கைகளுக்கு என்பது எழுதாத விதி. இவர்களுக்கெல்லாம் புதுப் பாவாடை தாவணி என்பது பெருங்கனவு.

அது என்ன மாயமோ மந்திரமோ இந்தத் தாவணித் தேவதைகளில் பெரும்பாலானோர் ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’, ‘ராணி’, ‘கல்கி’ பிரியை களாகவே வலம் வருவர். சொந்தமாக வாங்கிப் படிக்க வசதியற்று இரவல் வாங்கி வர தன் தம்பி, தங்கைகளைத் தயார் செது வைத்திருப்பார்கள். அதையும் சுதந்திரமாகப் படிக்கப் பல வீடுகளில் அனுமதியில்லை. ஏதோ பெரிய தவறாக நினைத்து ரகசியமாகவோ, ஒளித்து வைத்தோ அல்லது பெரி யவர்களிடம் திட்டு வாங்கியோ படித்துக்கொண் டிருப்பார்கள்.

பெரும்பாலான பெண்கள் கால்களில் கொலுசு அணிவதை வழக்கமாகக் கொண்டவர்கள். இந்த வெள்ளந்திப் பெண்கள் வெட்கத்தால் காலால் கோல மிடுவது மட்டுமல்ல, தெரு அடைக்க கோலமிடு வதிலுமே வல்லவர்கள். தெருவில் வரும் உதிரிப் பூக் களைப் பேரம் பேசி வாங்கி தன் சக தோழிகளுடன் கதையளந்து கொண்டே சரமாகத் தொடுத்து டிபன் பாக்ஸில் பொத்தி வைத்து, பூத்துவிட்டதா என மணிக்கொருதரம் நோட்டமிடுபவர்கள். சாமந்தி மற்றும் டிசம்பர் பூக்களைக் கூட தலையில் வைத்துக் கொள்ளும் பத்தாம்பசலி தேவதைகள்.

இவர்களின் ஆகச் சிறந்த விருப்ப இடம் கோயில்கள் மட்டுமே... நல்ல கணவன் கிடைக்க அடிப்ரதஷ்ணம், அங்கப்ரதஷ்ணம், விரதங்கள் என

சளைக்காமல் வேண்டிக்கொள்பவர்கள்.

இந்தத் தேவதைகளின் மணவாழ்க்கை குறித்த எதிர்காலக் கனவுகள், ஏக்கங்கள் சற்று ஆச்சர்யம் அளிப்பவை. பிருத்விராஜ் போல மன்மதன் ஒருவன் குதிரையில் வந்து தன்னை மீட்டுச் செல்வான் என்று எதிர்காலக் கனவு கண்டு திடீரென மிகச் சாதாரணமான ஒருவனை வீட்டில் பார்த்தாலும் மறுபேச்சுப் பேசா மல் தலைகுனிந்து தாலி வாங்கிக் கொள்பவர்கள். தனது திருமண வாழ்க்கைக்காக எந்தவித சமரசங் களும் செது கொள்ளத் தயாரானவர்கள்.

இவர்களின் கனவு நாயகிகள் பெரும்பாலும் ராதா, அம்பிகா போன்றவர்களே. பாலசந்தர், பாக்யராஜ், பாரதிராஜா போன்றவர்களின் நிழல் கதாநாயகிகளுக்கு இன்ஸ் பிரேஷன் இந்த நிஜக் கதாநாயகிகள்தான் என்பது இவர்களுக்கே தெரியாது.

சுலக்ஷனாவின்

பால்வடியும் முகமே பல தாவணிப் பெண்களின் அடையாளம். அதே பாவாடை தாவணி, கள்ளமற்ற சிரிப்பு, வெள்ளந்தி முகமென அச்சு அசல் நிஜ உலக சுலக்ஷனாக்களாக வலம் வந்து கொண்டிருந்தனர் பலர். இந்தத் தாவணிப் பெண்களின் மொத்தப் பிரதிநிதியாகவே சுலக்ஷனாவைத் திரையில் காட்டியிருப்பார் பாக்யராஜ்.

இந்த எளிய தேவதைகளுக்கு பெண்ணியம் பற்றியெல்லாம் அதிகம் தெரியாது. தெரிந்தாலும் பேச மாட்டார்கள். இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மௌனமாக அன்பு செலுத்துவது மட்டுமே. வெள்ளந்தி மனசுக்குச் சொந்தக்காரர்கள்தான் என்றாலும், அன்பாலும் பாசத்தாலும், மதிப்பாலும், மௌனத்தாலும், அடக்கத்தாலும், அறிவாலும் ஆண்களை வெல்லக் கூடியவர்கள்.

இந்த எளிமையான தாவணித் தேவதைகளை இனி எப்படி, எப்போது காண்போமோ?

Post Comment

Post Comment