பகவானின் கருணை மகத்துவம்!


ஆன்மிகக் கதை
ஆதினமிளகி -முன்னொரு காலத்தில் போதனா என்ற பரம பக்தர் ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்தார். கல்வியில் சிறந்த அவர் நாள்தோறும் பகவானின் சரித்திரத்தைப் பணிவுடனும் பக்திப் பரவசத்துடனும் பிரவசனம் செய்வது வழக்கம். அவரது சொற் பொழிவை பாமரர்களும் படித்தவர்களும் விரும்பிக் கேட்பார்கள்.

ஒரு நாள் போதனாவின் சொற்பொழிவைக் கேட்பதற்கு ஒரு பண்டிதர் வந்தார். அன்றைய தினம் கஜேந்திர மோட்சம் என்ற பகுதியை போதனா விளக்கிக்கொண்டிருந்தார்.

கஜேந்திரன் என்ற யானை, முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டது. அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாத கஜேந்திரன், பகவானை நினைத்து ஒரு தாமரை மலரை அர்ப்பித்து, ‘ஹே... நாராயணா...’ என்று கூவியது. அது அப்படிக் கூவியதும் பகவான் விழுந் தடித்துக்கொண்டு கஜேந்திரன் இருந்த குளத்தருகே ஓடோடி வந்தார்.

யானையின் கூக்குரல் கேட்ட சமயத் தில் அவர் மஹாலக்ஷ்மியுடன் தாயம் விளையாடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் கஜேந்திரனின் அபயக் குரல் கேட்டது. உடனே பகவான் அனைத்தையும் மறந்து, யானையைக் காப்பாற்றுவதற்காக ஓடினார். லக்ஷ்மி

தேவியும் அவர் பின்னாலேயே ஓடி னாள்..." என்று கதை சொல்லிக் கொண்டே போனார் போதனா.

சொற்பொழிவு முடிந்ததும்

போதனாவை சந்தித்த பண்டிதர், தாங்கள் நன்றாகத்தான் கதை சொல்கிறீர்கள். என்றாலும் பகவான் ஓட, தேவியும் அவர் பின்னால் ஓடினாள் என்றெல்லாம் சொல்லக் கூடாது. பகவான் அனைத்து அலங்காரங்களுடன் கையில் சங்கு, சக்கரம், கதை ஆகிய வற்றை ஏந்தியபடி கருடனில் பறந்து வந்தார் என்று சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.

மறுநாள் போதனா அந்தப் பண்டிதர் வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டுக்கு வெளியில் பண்டிதரின் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. போதனா அந்தக் குழந்தைக்குத் தின்பண்டங்கள் கொடுத்து, வீட்டை விட்டு சற்றுத் தொலைவு தள்ளி அதை விளையாடச் செய்தார். பிறகு, பண்டி தரின் வீட்டுக் கிணற்றில் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு,

வேகமாக ஓடிச் சென்று பண்டிதரிடம், ஐயா... உங்கள் குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது!" என்று பரபரப்போடு கூறினார் போதனா.

சாப்பிட்டுக் கொண்டிருந்த பண்டிதர், அதைக் கேட்டு அலறியடித்துக் கொண்டு, கையைக் கூடக் கழுவாமல் கிணற்றுக்கு அருகே ஓடினார். அவர் பின்னாலேயே போதனாவும் விரைந்தார். அப்போது பண்டிதரிடம், என்ன இப்படி ஓடுகிறீர்கள்? சாப்பிட்ட கையைக் கழுவ வேண்டாமா? கிணற்றிலிருந்து குழந்தையைக் காப்பாற்ற ஏணி, கயிறு வேண்டுமே? துணைக்கு ஆட்களை கூப்பிட வேண்டாமா?" என்று கேட்டார்.

போதனாவின் கேள்விகளைக் காதில் போட்டுக் கொள்ளாத பண்டிதர், பரபரப்புடன் கிணற்றின் அருகில் சென்று உள்ளே எட்டிப் பார்த்தார்.

அப்போது அவரது குழந்தை, அப்பா" என்று அழைத்தபடி பின்னால் இருந்து அவரது கால்களைக் கட்டிப் பிடித்தது. பண்டிதர் திகைப்புடன்

போதனாவை நோக்கினார்.

அப்போது போதனா, ஐயா! தங்கள் குழந்தை அபாயத்தில் இருக்கிறது என்று கேட்டதும் அதைக் காப்பாற்றுவதற்கு தாங்கள் எவ்வளவு வேகமாக ஓடினீர்கள்? அப்போது வேறு எதைப் பற்றியுமே தாங்கள் யோசிக்கவில்லை. சாதாரண உலக அன்பே இப்படி இருக்குமானால், தெய்வத்தின் பிரேமையும் கருணையும் எவ்வளவு மகத்தானவையாக இருக்கும்? ஆதலால்தான் பக்தனைக் காக்க பகவான் எதையும் பொருட்படுத்தாமல் உடனே ஓடோடி வருகிறார்" என்றார்.

முன்தினம் போதனாவின் சோற்பொழிவில் தாம் சுட்டிக்காட்டிய தவறை பண்டிதர் உணர்ந்தார். அதோடு, அவர் கூறிய விளக்கத்தையும் ஒப்புக் கொண்டார்.

பகவானின் லீலைகளைக் கேட்கும்போது யாரும் வீண் வாதம் செய்யக்கூடாது. மாறாக, புராணக் கதை களிலும், மகான்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் பொதிந்துள்ள சாரமான உட்கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Post Comment

Post Comment