கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி!

நீலகண்ட தீட்சிதர் ஆராதனை (22.12.2020)
பா.கண்ணன்கூடல் மாநகராம் மதுரையில் மகேசன் 64 திருவிளையாடல்கள் புரிந்து அடியார் களைத் தடுத்தாட்கொண்டார் என்றால், அன்னை மீனாட்சியும் தனது கருணாகடாட்சத்தினால் பல லீலைகளை ஆற்றிக் காண்பித்துள்ளாள்.

ஒரு பக்தனின் ஆழ்ந்த பக்தியினால் கட்டுண்டுப் போகும் தெவம், அவன் மீது அளவற்ற கருணைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட ஒருவர்தான் மீனாட்சி தேவியின் உபாசகராக விளங்கிய, மகாகவியும், மன்னன் திருமலை நாயக்கரின் முதல் மந்திரியுமான, ‘குட்டி தீட்சிதர்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட

ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர்.

காஞ்சி மாநகருக்கு அருகே, விரிஞ்சிபுரம் ஊருக்கு அடுத்துள்ள அடையப்பலம் கிராமத்தில், பாரம்பரிய தீட்சிதர் குடும்பத்தில் ஸ்ரீ நாராயண தீட்சிதர் - பூமி தேவி தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் நீலகண்ட தீட்சிதர். இளம் வயதிலேயே தந்தையை இழந்து பெரிய பாட்டனார் ஸ்ரீ அப்பைய தீட்சிதரின் பராமரிப்பில் வளர்ந்ததால் காவ்ய, தத்துவ, பக்தி

சாஸ்திரம், சம்ஸ்கிருத ஞானம் ஆகியவை இயல் பாகவே நீலகண்டரிடம் அவரது எட்டு வயதிலேயே குடிகொண்டு விட்டன!

ஒருமுறை பெரியவர் அப்பைய தீட்சிதர், குடும்பச் சோத்து பாகப்பிரிவினைச் செய முனைந்தபோது பேரன் நீலகண்டனின் எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டார். அந்தப் பன்னிரெண்டு வயது பாலகன் விநயமுடன், தாத்தா! நிலையற்ற பொருட்செல்வம் எதுவும் வேண்டாம். உங்கள் பேரன்பும், கருணையும், ஆசியும் கூடவே நிலையான கல்விச் செல்வமும் எனக்குக் கிடைத்தால் போதும். இதற்கெல்லாம் ஈடாக மகாராஜ்ஜியம் கிடைத்தாலும் வேண்டாம்!" என்று கூறி, பூஜை அறையிலிருந்து இரு ஓலைச் சுவடி களைக் கொண்டு வந்து கொடுத்து ஆசி கோரினான்.

ரகு வம்சம், தேவி மாகாத்மியம் சுவடிகளைப் பார்த்த பெரியவரின் கண்கள் பனித்தன. ஹே, அங்கயற்கண்ணி தாயே! உன் கருணைப் பொழியும் விழிகளை இச்சிறுவனின் மீதிருந்து அகற்றிவிடாமல் காப்பாற்று!" என்று தியானித்தார்.

தொடர்ந்து, நீலகண்டா! காளிதாசனின் ரகுவம்சம் போன்ற காவியங்களை நீ இயற்றிப் புகழ் பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. உன் ஆன்மிகப் பயணத்துக்கு தேவி மாகாத்மியம் அடிக்கல்லாக அமையும். நீ வேண்டாம் என்று ஒதுக்கினாலும் ஒரு சாம்ராஜ்ஜியம் உனது சேவைக்காகக் காத்திருக்கிறது. போ வா...!" என்று ஆசி வழங்கி கூடல்மாநகர் அனுப்பி வைத்தார்.

குட்டி தீட்சிதர் நீலகண்டன் தனது தாயாருடன் தஞ்சையில் சிறிது காலமிருந்து கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று மதுரை வந்தடைந்தார். அங்கு தினமும் தேவி மாகாத்மியம் பற்றி உபன்யாசம் புரியத் தொடங்கினார். அப்போது ஒரு முறை இரவில் மாறு வேடமணிந்து நகரை வலம் வந்த மன்னர் திருமலை நாயக்கர், குட்டி தீட்சிதரின் பிரசங்கத்தில் மனதை பறிகொடுத்தார். நீலகண்டரை பிரதான மந்திரியாக தமது அரசவையில் நியமிக்க மன்னர் முனைந்தார். இதற்கு உள்ளூர் அறிஞர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்ப, ஓர் இலக்கிய விவாதத்துக்கு ஏற்பாடு செது அதில் வெல்பவரே அப்பதவிக்கு உகந்தவராவார் எனப் பிரகடனம் செதார்.

வித்வத் சபையில் விவாதத்துக்கு மன்னர் திருமலை நாயக்கர் கொடுத்த தலைப்பு, ‘காகத்துக்கு வடமொழி யில் காக: என பெயர் வரக் காரணம் என்ன?’ என்பதுதான். கூடியிருந்தோர் விழி பிதுங்கி நிற்க, நீலகண்டர் சுந்தர காண்டம் 38வது சர்க்கத்தில் சீதா தேவி அனுமனிடம் சித்திரக்கூடத்தில் நிகழ்ந்த காக்காசுர சம்பவத்தைப் பற்றி கூறுவதைப் பின்னணி யாகக் கொண்டு பதிலளிக்கிறார். ‘சீதேவ ராம இவ ஷமயா தயயா புவன இஹ கா க:..’ என்று காக்கை உருவில் வந்து தன்னைத் துன்புறுத்திய இந்திரனின் மகன் ஜயந்தனை தாயன்புடனும், பரிவுடனும் மன்னித்த சீதைக்கு இணையாக இவ்வுலகில் வேறு எந்தப் பெண் இருக்க முடியும்?

சம்ஸ்கிருதத்தில் கா-யார் அவள், எந்தப் பெண் என்பதாகும். ஜயந்தனுடன் வந்திருந்த பெண் காக்கைகள் இதைக் குறிப்பிட்டுத்தான் ‘கா, கா’ எனக் கரைந்தனவாம். அதேசமயம், சீதையின் செயலால் கோபம் தணிந்து, ஜயந்தனை கருணையுடன் மன்னித் தருளிய ராமனுக்கு இணையாக இவ்வுலகில் வேறு எந்த ஆண் மகன் இருக்க முடியும்? க: - யார் அவன், எந்த ஆண் என்பதாகும். இதையே அங்கிருந்த அண்டங்காக்கைகள், ‘க:... க...: (க..கர்..ர்)’ எனக் கரைந்தன என்கிறார். பெண், ஆண் காக்கைகள்

கோரசாகக் கரைந்த ஒலி ‘காக:... காக...:’ என்று எழுந்ததாம்! இரண்டு எழுத்துக்களை வைத்து வார்த்தை ஜாலம் காட்டி பாராட்டையும், பதவியையும் பெற்றார் குட்டி தீட்சிதர்!

மதுரை நாயக்கர் அரசின் முக்கிய மந்திரியாக, தீட்சிதர் விளங்கிய நாட்கள் ஒரு பொற்காலம்! ஆகம சாஸ்திரத்தில் விற்பன்னராதலால் அவரது

ஆலோசனைப்படி மதுரை நகரை ஸ்ரீ சக்ர வடிவில் மன்னர் கட்டமைத்தார். இதற்கிடையே பல காவியங் களை சம்ஸ்கிருதத்தில் இயற்றினார். அன்னை மீனாட்சியின் வருடாந்திர உத்ஸவ நிகழ்ச்சிகளை

ஸ்ரீ ஹாலாஸ்ய மகாத்மியத்தை அனுசரித்து ஆரம்பித்து வைத்துள்ளார். அவ்வழக்கமே இன்றளவும் நடைமுறையிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி மேற்கொண்ட ஒரு திருப்பணிதான் கோயிலின் கீழ்த்திசையில் சோக்கநாதர் சுவாமி கோபுரத்தின் எதிரே நிர்மாணித்த, ‘புது மண்டபம்.’ இதற்கு பின்பு வேறு பல மண்டபங்கள் புதிதாகக் கட்டப்பட்டிருந்த போதிலும், இது இன்றளவும் புது மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது. மண்டப நடுக்கூடத்தின் தெற்கிலும் வடக்கிலுமா நிற்கும் பெருந்தூண்கள் அனைத்துமே நாயக்கர் காலக் கலை, பண்பாட்டு வரலாற்றைக் காட்டும் பற்பல சிற்பங் களைக் கொண்டுள்ளன. நாற்புறமும் அடைக்கப் பட்டுள்ள இதன் நடுக்கூடம், நாயக்க அரசர்களின் திருவுருவங்களைக் கொண்டுள்ளது. பொதுவாக, நாயக்க மன்னர்கள் தங்களது சிலை மற்றும் தமது ராணியர்களின் சிலைகளை ஆலயங்களில் நிறுவுவது வழக்கம். அதுபோன்றே இங்கும் மண்டபத்தின் வடக்கில் ஐந்து தூண்களிலும் தெற்கில் ஐந்து தூண் களிலுமாக எதிரெதிர் நோக்கியவர்களாக முதற்பட்டம் விசுவநாதர் நாயக்கரிலிருந்து, பத்தாவது பட்டம் திருமலை நாயக்கர் வரை அவர்களது ஆளுயரச்

சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இங்குதான் அன்னை அங்கயற்கண்ணி, சிற்பி சுமந்திரமூர்த்தி ஆச்சாரி வாயிலாக தனது லீலையை வெளிப்படுத்த ஆரம்பித்தாள். திருமலை நாயக்கரின் பட்டத்து ராணியின் சிலையை வடிக்கும்போது இடது கால் முட்டி மேற்பகுதி தொடையில் ஒரு சில்லு பெயர்ந்து விட, அதைச் சரிசெய எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை. பணியைப் பார்வையிட வந்த தீட்சிதரிடம் இதை வருத்தமுடன் தெரிவித்தார் சிற்பி. இறுகிய முகத்துடன் சிறிது நாழிகை மீனாட்சி அம்மனை மனதில் தியானித்தவுடன் ஞான திருஷ்டியில் அதற்கான விடை கிடைத்தது.

சிற்பியிடம், சுமந்திரரே! நீங்கள் எவ்வளவு முயன்றாலும் அதைத் திருத்த முடியாது. சாமுத்திரிகா லட்சணங்கள் கொண்ட நமது அரசியாருக்கு அவ்விடத்தில் அதற்குரிய குறியீடு இருப்பதால்தான் அதை உணர்த்தும் வகையில் சில்லு பெயர்ந்துள்ளது. ஆகையால், அதை அப்படியே விட்டு விடுங்கள்!" என்று கூறி அகன்றார்.

இதைக் கேள்விப்பட்ட மன்னருக்கு கோபமும், சந்தேகமும் மனதைக் கவ்வியது. ‘இவரை அந்தப்புரம் வரை வந்துபோக அனுமதித்தது எனது மதியீனம்’ என்று நினைத்தார். உடனே, ராணியாரை பார்த்த

தீட்சிதரின் கண்களை எரியும் கற்பூரத்தைக் கொண்டு பொசுக்க ஆணையிட்டு, அவரை அழைத்து வர

சேனாபதி இராமப்பயனை அனுப்பினார்.

தேவி உபாசனையில் ஆழ்ந்திருந்த தீட்சிதர், ஞான திருஷ்டியால் அனைத்தையும் அறிந்தார். சேனாபதியை பூஜை முடியும் வரை காத்திருக்கக் கூறினார். அம்பிகைக்கு கற்பூர ஆரத்தி காட்டியபின், தாயே! நாயக்கர் கொடுக்க நினைக்கும் தண்டனையை நானே நிறைவேற்றிக்கொண்டு அதை உனக்குக் காணிக்கை ஆக்குகிறேன்!" என்றவர், கொழுந்துவிட்டு எரியும் பூங்கற்பூரத்தை தனது இரு கண்களின் மேல் வைத்துக் கொண்டுவிட்டார். வலியால் துடித்தவர் குரல் கேட்டு ஓடி வந்த சேனாபதியிடம், ராஜ சபைக்கு தம்மை அழைத்துச் செல்லக் கூறினார். இதற்குள் தீட்சிதர் ஞான திருஷ்டி மூலம் சோன்ன தகவல் உண்மை என்பதை மகாராணி மூலம் அறிந்தார் மன்னர்.

அரசே, இது தெவச் சங்கல்பமே. தண்டனையை நானே நிறைவேற்றிக் கொண்டுவிட்டேன் என்பதைக் காண்பிக்கத்தான் வந்தேன். மீனாட்சி அன்னையின்

சன்னிதானம் செல்ல வேண்டும்!" என்றவரை பிறர் அழைத்துச் சென்றனர். அப்போது மீனாட்சி அம்மன் சன்னிதியில் அவரால் இயற்றப்பட்டதுதான் உள்ளத்தை உருக்கி நெகிழ வைக்கும் 108 ஸ்லோகங்கள் கொண்ட, ‘ஆனந்த சாகரஸ்தவம்‘ என்ற தோத்திர மாலை. பதிகத்தைப் பாடி முடித்ததும் அம்பிகையின் லீலா விநோதத்தால் கண் பார்வையை திரும்பப் பெற்றார் தீட்சிதர். மன்னர் அவரை மீண்டும்

அரசவைக்கு அழைக்க, அதை அவர் ஏற்க மறுத்தார்.

மனிதனின் மனதில் சந்தேகம் எனும் விஷ வித்து ஊன்றி விடுமானால் அங்கிருப்பது நல்லதன்று என நினைத்த தீட்சிதர், அரசரின் வேண்டுதலைப் புறந் தள்ளி ராஜதானியை விட்டு விலக முடிவெடுத்தார். திருமலை மன்னா! அரசு வேலை எனக்கு அலுத்து விட்டது. நான் அமைதியை விரும்புகிறேன். ஆதலால், தட்சிண கங்கை எனும் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உலக்கைச் சத்தம் கேட்காத, கோழி கூவாத நிலை யிலுள்ள ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு

சிவாலயத்தை நிர்மாணித்துத் தா. அங்கு நானும் மற்றும் பல வேதவித்துக்களும் குடியேறி இவ்வுலகம் உய நற்பணிகள் பல மேற்கொள்கிறோம். இதுவே எனது ஒரே கோரிக்கை!" என்றார்.

திருமலை நாயக்கரும் தாமிரபரணி நதியின் வடகரையிலுள்ள பாலாமடை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் அவருக்கு மானியமாக அளித்தார். ‘நீலகண்ட சமுத்திரம்’ எனும் அவ்விடத்தில் தனது கடைசி நாட்களை ஆன்மிகப் பணிகளில் கழித்து, பின் துறவறம் மேற்கொண்டு, ஒரு தனுர் மாத வளர்பிறை அஷ்டமி திதியன்று அன்னை மீனாட்சியின் திருவடிகளில் ஜீவ சமாதி யடைந்தார். இங்கு, கிழக்குப் பார்த்த சன்னிதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மங்களேஸ்வரி உடனுறை

ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரர் சிவாலயத்தின் தெற்கு பக்கமாக இவரது அதிஷ்டானம் நிறுவப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இவரது வைகாசி அனுஷம் ஜயந்தி விழாவும், ஜீவ சமாதி அடைந்த தினமும் விமரிசையாக அனுஷ்டிக்கப்படுகின்றன.

மேலும், ஸ்ரீ அப்பைய தீட்சிதரால் பூஜிக்கப்பட்டு பின்னர், ‘குட்டி’ தீட்சிதராலும் ஆராதிக்கப்பட்டு வந்த ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் லிங்கம். பஞ்சலோக மகா கணபதி, ஸ்ரீசக்கரம் ஆகியவை தற்போது ஸ்ரீ சிருங் கேரி ஜகத்குரு சுவாமிகளின் பூஜை சன்னிதானத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :