பசிப்பிணி போக்கும் உச்சிநாதர்!

சனி பெயர்ச்சி திருக்கோயில்
பொ.பாலாஜிகணேஷ்கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு

கிழக்கே திருநெல்லிவாயில் எனும்

புராணப் பெயர் கொண்ட சிவபுரி எனும்

சின்னஞ்சிறு கிராமத்தில் உள்ளது

அருள்மிகு கனகாம்பிகை சமேத

ஸ்ரீ உச்சிநாதர் சுவாமி திருக்கோயில்.

அம்மை பார்வதியின் ஞானப்பால் அருந்திய திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். மேலும், திருவேட் களத்தில் தங்கி இருந்த நாட்களில் ஆளுடையப்பிள்ளையும், கன்வ மகரிஷியும் வழிபட்டு அருள் பெற்ற பெருமையும் மிக்கது இந்தத் திருத்தலம்.

நெல் வயல்களை ஊரின் வாயிலில் கொண்டு விளங்கும் மாட்சிமையினால் இவ்வூர், ‘நெல்வாயில்’ என வழங்கப்பட்டு தற்போது, ‘சிவபுரி’ என அழைக்கப்படு கிறது. கோயில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. கோயிலின் எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம் உள்ளது. ஐந்து நிலைகளுடன் காட்சி தரும் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அஷ்டபுஜ துர்கை பிரம்மா ஆகியோர் காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர், பைரவர், பஞ்ச லிங்கங்கள், சனி பகவான், சூரியன், சந்திரன் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. ஒரே பிராகார வலம் முடித்து முன் மண்டபம் சென்றால், வலதுபுறம் நவக்கிரக சன்னிதியும் பள்ளியறையும் காட்சி தருகின்றன.

துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலதுபுறம் அம்பாள் சன்னிதி உள்ளது. தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம். அம்மையின் பெயரால் இக்கோயிலை, ‘ஸ்ரீ கனகாம்பாள் கோயில்’ என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். சபையில் ஆனந்தத் தாண்டவரான சிவபெருமான், சிவகாமி அம்மையுடன்

தரிசனம் தருகின்றார்.

‘விருத்தனாகி வெண்ணீறு பூசிய

கருத்தனார் கனலாட்டு உகந்தவர்

நிருத்தனார் நெல்வாயில் மேவிய

ஒருத்தனார் எமது உச்சியாரே’

என்று ஆளுடையப்பிள்ளை பாடிய மூலவர் சுயம்பு லிங்கத் திருமேனி உயரமும் பருமனும் குறைந்த அமைப்புடையது. சதுர பீடம் சுற்றளவில் சிறியது. மூலவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். அகத்தியருக்குக் காட்சி தந்த சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. மூலவர் சிவலிங்கத்தின் பின்புறம்

சிவ - பார்வதி திருமணக்கோலத்தை தரிசிக்கலாம்.

முன் மண்டபத்தில் நந்தியைச் சுற்றியுள்ள முன், பின் இரு தூண்களில் நால்வர் சிற்பங்கள் உள்ளன. தினமும் ஐந்து கால வழிபாடுகள், வைகாசி

விசாகத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு போன்றவை இந்தக் கோயிலில் சிறப்பு. கோயிலில் கொடி மரம் இல்லை.

‘வாழ்க்கை மனைநல்வாயலெங்கு

நவமணிக்குன்றோங்கு

திருநெல்வாயில் நின்றொளிரும் நீளளியே’

என்று திருவருட்பா இத்தலத்தை புகழ்ந்துரைக் கிறது.

மூன்று வயதிலேயே சீர்காழி திருத்தலத்தின் குளக்கரையில் அம்மையின் ஞானப்பால் உண்டு, ‘தோடுடைய செவியன்’ என்று பாடத்தொடங்கிய ஞானசம்பந்தப் பெருமான், பல்வேறு திருத்தலங்களை தரிசித்தும் பாடியும் சீர்காழிபதியை அடைகிறார். அவருக்கு அப்போது திருமணப் பருவம் வந்தமை யால், அவரது தந்தையாரும் மற்ற பெரியோர்களும் நம்பியாண்டார் நம்பியின் திருமகளை அவருக்குத் திருமணம் பேசி முடிக்கின்றனர். அவர்கள் திருமணம் திருநல்லூர் பெருமணம் (தற்போது ஆச்சாள்புரம்) திருத்தலத்தில் நடைபெற்றது.

திருஞானசம்பந்தரின் திருக்கல்யாணம் காண வந்த 12,000 சிவனடியார்கள் சிதம்பரத்திலிருந்து

ஆச்சாள்புரம் செல்லும்போது,

உச்சிக்காலத்தில் இவ்வாலயம் வர, அந்த அடியார் திருக்கூட்டத்துக்கு கோயில் வேலையாள் போல வந்து இறைவனே அவர்களுக்கு அமுது படைத்த வள்ளல். எனவேதான் இவர், ‘உச்சிநாதர்’ என்றும், ‘மத்யானேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகின்றார். இந்தக் கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப் பிரச்னை வராது என்பது நம்பிக்கை.

திருமண சீராகப் பெண்ணுக்கு அணிவிக்கப்படும் தங்க நகைகள் வாங்க முடியாமல் திருமணம் தடைப்படுவோர், இக்கோயில் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கும் அருள்மிகு கனகாம்பிகையை வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடுவதோடு, நகை பிரச்னை களும் தீரும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பிராகாரத்தில் தனிச் சன்னிதியில் உள்ள சனி பகவானை பற்றிய ஒரு சுவையான கதையும் உள்ளது. திருஞானசம்பந்தருடன் வந்த

சிவனடியார் ஒருவருக்கு, அப்போது சனி தசை துவங்குவதால்

அவரை சனி பகவான் பிடிக்க வந்தார். அப்போது அவர், பசியாக உள்ளது. சாப்பிட்டுவிட்டு வருகிறேன்" என்று கூற, சனி பகவானும் அதனை கருணையுடன் ஏற்றுக்கொண்டு அவரை கோயிலுக்குள் அனுப்பினார்.

திருஞானசம்பந்தரின் திருமணம் முடிந்தவுடன் அடியார்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு, ‘நல்லூர் பெருமணம்’ என்ற பதிகத்தைப் பாடிக்கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கருவறையில் ஒரு சோதி தோன்றியது. அப்பொழுது சம்பந்தப்பெருமான், ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி’ என்னும்

பஞ்சாட்சர பதிகத்தைப் பாடிக்கொண்டே அடியார்கள் அனைவரையும் அந்த ஜோதியில் கலக்கச் செதார்.

சனி பகவான் பிடிக்க வந்த அந்த அன்பரும் அப்படியே சம்பந்தப் பெருமானுடன் சிவலோகம் அடைந்து விடுகின்றார். எனவே, இன்றும் பிராகாரத்தில் சனி பகவான் அவருக்காகக் காத்திருப்பதாக

ஐதீகம். எனவே, சனி பகவான் இங்கே கருணைச்சனியாக எழுந்தருளி யுள்ளார்.

பிரதோஷ வேளைகளில் இங்கு உச்சிநாதருக்கும் நந்தியம்

பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செயப்படுகின்றன. இதைக் காண ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு பிரதோஷ

தினங்களிலும் வருகை தருகின்றனர். இந்தப் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்பவர்களின் பிரார்த்தனை எதுவாக இருந்தாலும்,

மனதார வேண்டிகொண்டால் அடுத்து வரும் பிரதோஷத்துக்குள்

அதற்கான பலன் கைமேல் கிடைப்பதாக பலன் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர்.

அமைவிடம் : சிதம்பரம், கவரப்பட்டு சாலையில் ஐந்து கி.மீ. தொலைவிலுள்ளது இக்கோயில்.

தரிசன நேரம் : காலை 6.30 முதல் 11 மணி வரை.

மாலை 4.30 முதல் 7.30 மணி வரை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :