மணிக்கதவம் தாள் திறவாய்!

திருப்பாவை அமுதம்
அம்பிகைபாகன்ஆயர்பாடியின் வைகறைப்பொழுது. எல்லோரும் எழுந்து விட்டார்கள். ஆயினும், ஒரு கோபிகை மட்டும் இன்னமும் உறங்கிக்கொண்டிருக்கிறாள். எழுந்தபாடில்லை. அவளுடைய தோழியர் யாவரும் வாசலுக்கே வந்துவிட்டனர்.

மார்கழி மாதத்தில் எல்லாப் பெண்டிரும்

சேர்ந்து நீராடி பாவை நோன்பு நோற்க

வேண்டும். அதுதான் நியதி. அப்படி இருக்க, அவள் ஒருத்தியை மட்டும் விட்டு விட்டுப் போக முடியுமா? அவளையும் எழுப்பிக் கூட்டிக்கொண்டுதான் போக வேண்டும். ஆகவே, அவளுடைய தோழிகள் அனை வரும் அவள் வீட்டு வாசற்படியில் வந்து நின்று கொண்டனர்.

நன்றாக உறங்கும் தோழியின் வீட்டை ஆண்டாள் இவ்வாறு தனது பாசுரத்தில் வருணிக்கிறாள்.

‘தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவா!

மாமீர்! அவளை எழுப்பீரோ உம் மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றெலோர் எம்பாவா!’

அந்த வீடு சாதாரண வீடல்ல. வீட்டின் நாற்புறமும் மாடங்கள் வைத்து கட்டப்பட்ட வீடு. அம்மாடங்களில் எப்போதும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாயிற்படியின் மூலையிலும் இரு புறமும் விளக்குகள் மாடங்களில் ஒளி விடுகின்றன. ஒளி வீசக்கூடிய மணிகளை, ரத்தினக் கற்களை அழுத்தி மாடங்களைச் சுற்றிப் பதித்து மாடங்களை அழகு செய்திருக்கின்றனர்.

விளக்குகளின் தீப ஒளி அந்த ரத்தினக் கற்கள் மீது பட்டு அவை மேலும் ஒளி பெறச் செகிறது. வீட்டின் ஒவ்வொரு வாயிற்படியும், மாடங்களும் இது ஒரு செல்வந்தர் வீடு என்பதைப் பார்த்த உடனேயே சொல்லத் தோன்றும். இப்படிப்பட்ட மாளிகையில் தான் அந்தப் பெண் கவலையில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவன் செல்வந்தருடைய

மகள் மட்டுமல்ல, அவருடைய செல்லப் பெண்ணும்கூட.

அது மட்டுமல்ல... வீட்டுக்குள்ளேயிருந்து அகிலும் சந்தனமும் மணக்கும் புகையும் காற்றோடு கலந்து தெருவுக்கு வந்து விடுகிறது. அந்தப் பெண் கண்ணனிடம் தீராத காதல் கொண்டவள். அப்படி யானால் கண்ணன் நினைவே இல்லாமல் எப்படி இன்னமும் உறங்கிக்கொண்டிருக்கிறாள்? படுக்கை சுகம் போலும்! அன்னத் தூவியில் செய்யப்பட்ட மென்மையான மெத்தையில் உறங்குகிறாள். அதனால் தான் இன்னும் எழுந்திருக்க முடியவில்லை.

‘மாமன் மகளே! நீ மணிக்கதவம் தாள் திறவாய்!’ என்று விளிக்கின்றனர், வந்திருந்த தோழிகள் அனைவரும். கதவையும் தட்டிப் பார்க்கிறார்கள். ஆனால், எந்தச் சந்தமும் அவள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

நம் உள்ளம் கூட இப்படிப்பட்ட உல்லாச மாளிகைதான். அது எல்லா சுகங்களையும் தேடிச் செல்கிறது. சுகங்களைப் பெற்றதும் அவற்றை அனுபவிப்பதிலேயே அது ஆழ்ந்து விடுகிறது. இந்த உலகச் சுகங்களைத் தேடி அலைகின்ற மனம் தெய்வ சிந்தனை என்பதையே மறந்து விடுகிறது. மாயை என்னும் கதவு மனதை லௌகீக வட்டத்துக்குள்ளேயே அடைத்து விடுகிறது. கண நேரத்தில் அழிந்து போகும் நிரந்தரமற்ற சுகானுபவங்களை அனுபவிக் கின்ற மனம் நிரந்தரமான எல்லையில்லா பேரின்பத்தை தேடிப் போவதில்லையே. பகவானின் திருவடி நிழல் என்னும் பேரானந்தத்தில் ஒன்றுவது எப்போது? மாயை என்னும் கதவு திறக்கப்பட்டால் ஆன்ம ஜோதி வெளிப்படும். அங்கே இறைவனின் ஆனந்த ரூபத்தை தரிசிக்கலாம்.

அஞ்ஞான இருளில் உறங்கிக்கிடக்கும் மனம், மாயை என்ற மணிக்கதவை திறந்துகொண்டு

தெய்வ சிந்தனையில் மனம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டால் கண்ணனை காணலாம் என்று ஆண்டாள் இந்த வரிகளில் சூசகமாகத் தெரிவிக்கிறாள்.

சரி, கதவைத் தட்டியும் கூட இந்தப் பெண் எழுந்து வந்து கதவைத் திறக்கவில்லை. மாமீ! நீங்களாவது அவனை எழுப்பக் கூடாதா? நாங்கள் கூப்பிடும் குரலுக்கு மறுமொழியாக ஏதாவது பதில் சொன்னால் என்ன? வாய் முத்தா உதிரிந்து விடும்? அல்லது அவள் வாய் பேசா ஊமையா? இல்லை... நாங்கள் போடும் சத்தம் அவளுடைய காதில் விழ வில்லையா...? இல்லை, அவள் காது கேளாத செவிட்டுப் பெண்ணா...? இல்லை, பெருந்தூக்கம் தூங்கும்படி யாராவது மந்திரம் போட்டு கட்டி விட்டார்களா...? இப்படி இதில் ஏதாவது ஒன்று காரணமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வந்திருக்கும் விவரம் தெரிந்தால் ஓடி வந்து எங்களை எதிர்கொள்ள மாட்டாளா?

நாங்கள் நாராயணனின் நாமத்தைப் பல படியாக உரக்கச் சொல்லியபடி வந்து கொண்டிருக்கிறோம். அவனை மாமாயன் என்று புகழ்கிறோம். வியக்கத்தக்க லீலைகளைச் செய்கிறான் கண்ணன். அவை மாயா ஜாலங்களாக நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆகையால், அவன் மாயன். அது மட்டுமா? மாயை என்னும் பிரகிருதியை தனக்கு வசப்படுத்திக்கொண்டு லீலைகளைப் புரிகிறான். மாயை அவனைக் கட்டுப் படுத்துவதில்லை. மாயைக்கு அப்பாற்பட்டவன் அவன். நாம்தாம் மாயையால் கட்டுண்டு அலை கழிக்கப்படுகிறோம். நாம் இந்தக் கட்டிலிருந்து விடுபட வேண்டுமாகில் அவனைச் சரணடைவதல் லாமல் வேறு உபாயமில்லை. தன்னைச் சரணடைந்

தோரை மாயையிலிருந்து விடுபடச் செய்பவன் ஆதலால் அவன், ‘மாமாயன்’ என்று போற்றப்படு கிறான்.

‘தைவீ ஹ்யேஷா குணமயீ

மம மாயா துரத்யயா

மாம்மேவயே ப்ரபத்யந்தே

மாயாம் மேதாம் தரந்திதே’

(7-14)

என்று கீதையில் பகவான் இதையே கூறுகிறான்.

முக்குண வடிவமான எனது மாயை, சக்தி வாய்ந்தது. இது கடப்பதற்கரியது. எவர் என்னைச் சரணடைகிறார்

களோ, அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள் என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

மாயையிலிருந்து விடு பட்டால் அவனோடு ஒன்றிப்போவோம். அதுவே வைகுந்தப் பதவி. அவனை, ‘வைகுந்தன்’ என்று போற்றுவோம். பரம பதத்தை அளிக்கவல்லவன் அவனே. இப்படி எல்லாம் மாதவனைப் புகழ்ந்து பாடியும் அவள் எழுந்து வரவில்லையே என்று ஏக்கம் கொள்கின்றனர் அத்தோழிகள். ஆகவேதான், மாமியைக் கூப்பிட்டு அவளை எழுப்பி விடுங்கள் என்று வேண்டுகின்றனர்.

சாதாரணத் தூக்கத்திலிருந்து விடுபட்டு கதவைத் திறந்து எங்களோடு பாவை நோன்புக்கு வா என அழைக்க வந்த கோபியர்கள் கண்ணனின் திருநாமங்களை உரக்க உச்சரித்துத் தோழியை எழுப்ப முயல்கின்றனர். நம்முடைய மனமும் தாமச குணத்தாலும் ஆசை மயக்கத் தாலும் உறக்க நிலையில்தானே கிடக்கிறது. பகவானுடைய நாம சங்கீர்த்தனத்தால் நம் மனமும் அஞ்ஞான உறக்கத் திலிருந்து விழித்துக்கொள்ள

வேண்டும். மனதின் கதவு களைத் திறந்து கொண்டு ஆன்மா கண்ணனுடைய திருவடிகளில் ஒன்றிட

வேண்டும். இந்த தத்துவத்தைத் தான் ஆண்டாள் தன் ஒன்பதாம் பாடலில் இவ்வாறு கூறுகிறாள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :