விவேக்பாரதி

என்னைப் பிழியும் தவமே! என்னுள்
எழுமோங் காரத் திடமே - நெஞ்சில்
மின்னை ஊன்றிய கரமே! கைகள்
மீட்காவோ ஆதி சிவமே!
கண்முன் காணும் நிழலே, காற்றில்
கரைக்கும் கவிதைப் புயலே - வானம்
மண்முன் பொழியும் அழகே, கண்கள்
மலராவோ ஆதி சிவமே!
உள்ளக் குகையில் ஒளியே, காதுக்
குள்ளே கீதத் துகளே - மொந்தைக்
கள்ளைக் குடித்த களியே! என்னைக்
காவாயோ ஆதி சிவமே!
நிலையற் றலையும் புவியில், அதிலே
நித்தம் மாறும் மனதில் - ஆசை
அலைபட் டெகிரும் கடலில், மூழ்கி
அழிகின்ற மூடன் என்னை,
மழுவும் மறுகைத் தீயும், உடலில்
மங்கை தலையினில் கங்கை - எனவரும்
அழகே ஒருகணம் தெரிய வினைத்தீ
அணையாதோ ஆதி சிவமே!
பார்த்தேன் ஐயம் தீர்த்தேன் உன்முன்
பூத்தேன் மனதினைச் சேர்த்தேன் - அதிலுனை
வார்த்தேன் வார்த்தையில் கோத்தேன் கேட்டிட
வாழ்வோமே ஆதி சிவமே!!
-விவேக்பாரதி
10.11.2019
>
Post Comment