வாழ்வியல்


    சோம்பல் நல்லது!


சொக்கன்அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தார் ஓர் இளைஞர்.

அவர் சேர்ந்திருந்த பணிப்பிரிவில் ஏற்கெனவே பலர் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் அவரை வரவேற்று வேலை கற்றுக்கொடுத்தார்கள். ‘கொஞ்சம் கடினமான வேலைதான். ஆனால், விரைவில் கற்றுக் கொண்டுவிடலாம்’ என்று ஊக்கப்படுத்தினார்கள்.

அந்த இளைஞர் ஆர்வத்துடன் வேலையைக் கற்றுக்கொண்டார். தொடக்கத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தபோதும், தம்முடைய திறமையாலும் விடாமுயற்சியாலும் விரைவில் நன்கு பணியாற்றத் தொடங்கிவிட்டார்.

ஆனால், அவருக்கு அந்த வேலை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஒரே மாதிரியான பணியை நாள் முழுக்கச் செய்து கொண்டிருப்பது அவருக்குச் சலிப்பூட்டியது.

இதை அவர் வாய்விட்டுச் சொன்னபோது, மூத்த பணியாளர்கள் சிரித்தார்கள். ‘தம்பி, நீ வேலைக்குப் புதுசு. நாங்கல்லாம் பதினஞ்சு, இருவது வருஷமா இதைத்தான் செஞ்சுகிட்டிருக்கோம்’ என்றார்கள். ‘புலம்பறதை நிறுத்திட்டு இந்த வாழ்க்கைக்குப் பழகிக்கோ. வேற வழியில்லை.’

அந்த இளைஞருக்கு யதார்த்தம் புரிந்தது. அதே சமயம், வேலையின்மீது அவருக்கிருக்கிற சலிப்பும் தொடர்ந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

சில நாட்களுக்குப்பிறகு, அந்த இளைஞர் முகத்தில் பெரிய சிரிப்புடன் அலுவலகத்தைச் சுற்றி வரத் தொடங்கினார். மற்றவர்களெல்லாம் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இருந்த இடத்தை விட்டு எழாமல், மதிய உணவைக்கூட மேசையிலேயே முடித்துக்கொண்டு உழைத்துக்கொண் டிருந்த நேரத்தில், இவர்மட்டும் சில மணி நேரங்களுக்குள் வேலையை முடித்துவிட்டு எழுந்துவிடுவார். மற்ற துறையினருடன் சென்று பேசுவார், கற்றுக் கொள்வார், பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வார், புத்தகம் படிப்பார், பக்கத்திலிருக்கும் மைதானத்துக்குச் சென்று கால்பந்து விளையாடிவிட்டுத் திரும்புவதும் உண்டு.

இதையெல்லாம் பார்த்த மூத்த பணியாளர்களுக்கு எரிச்சல் வந்தது. தங்களுடைய மேலாளரிடம் சென்று அவரைப்பற்றிக் குறைசொன்னார்கள், ‘அந்தப் பையன் சரியான சோம்பேறி’ என்றார்கள்.

‘அதெல்லாம் இல்லை. அவர் எல்லா வேலையையும் ஒழுங்கா முடிச்சுடறார்’ என்றார் மேலாளர். ‘வேணும்ன்னா நீங்களே பாருங்க’ என்று அவருடைய பணி ஆவணங்களை எடுத்துக் காட்டினார்.

அந்த ஆவணங்களைப் பார்த்த மூத்த பணியாளர்கள் திகைத்துப் போனார்கள். சில மாதங்களுக்கு முன்புதான் வேலையில் சேர்ந்த ஒருவர், ஒரு நாளைக்குச் சில மணி நேரங்களே மேசையில் அமர்கிற ஒருவர், இதே துறையில் மிகுந்த அனுபவம் பெற்ற தங்களையெல்லாம்விடச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள்.

‘இது எப்படிச் சாத்தியம்? அந்தப் பையனை அலுவலகத்துல பார்க்கறதே அதிசயமா இருக்கு; ஆனா, வேலைகளையெல்லாம் ஒழுங்கா முடிச்சுடறானே’ என்று அவர்கள் வியந்தார்கள். அந்த இளைஞரை அழைத்து இதுபற்றி விசாரித்தார்கள்.

அவர் சிரித்தபடி பதில் சொன்னார், ‘நீங்கல்லாம் கடின உழைப்பாளிங்க, அதனாலதான் பல வருஷமா இந்த வேலையைச் சலிக்காம செய்யறீங்க. நான் கொஞ்சம் சோம்பேறி. அதனால, இதே வேலையை விரைவாய்ச் செய்யறதுக்கு என்ன வழின்னு பல நாள் உட்கார்ந்து யோசிச்சேன். சில எளிய வழிகளைக் கண்டுபிடிச்சேன். அதன் மூலம், என்னால ஒரு மணி நேர வேலையை அரை மணி நேரத்துல செஞ்சுட முடியுது. மீதியிருக்கிற நேரத்தை எனக்குப் பிடிச்சமாதிரி செலவழிக்கறேன். அவ்ளோதான்!’

இந்தக் கற்பனைக் கதையைக் கேட்டவுடன், அந்த இளைஞரைப்பற்றி உங்கள் மனத்தில் தோன்றும் உணர்வு என்ன? உண்மையைச் சொல்லுங்கள்!

பெரும்பாலானோர் அந்த இளைஞரைச் ‘சோம்பேறி’ என்று நினைத்து முகம் சுளிப்போம். ‘சோம்பேறித்தனத்தால இந்தப் பையன் ஒழுங்கா வேலை செய்யாம குறுக்கு வழிகளைக் கண்டுபிடிச்சிருக்கான்’ என்று சினம் கொள்வோம். அதேசமயம், மனத்தின் ஒரு மூலையில், அவரை நினைத்து நமக்குப் பொறாமையும் வரும். ‘இந்தமாதிரி நம்ம வேலையையும் சீக்கிரமா, எளிமையா, வசதியாச் செஞ்சு முடிக்கறதுக்கு ஒரு வழி இருந்தா நல்லா இருக்குமே!’ என்று நினைப்போம்.

அப்படி ஒரு வழி நிச்சயம் இருக்கிறது. ஆனால், அதைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கவேண்டும்.

இதென்ன அசட்டுத்தனம்? சிறுவயதிலிருந்து ‘சோம்பேறித்தனம் கூடாது’ என்று சொல்லித்தானே நம்மை வளர்த்தார்கள். சமூகத்தில் எங்கும் சொம்பேறிகள் மதிக்கப்படுவதில்லையே. ‘சோம்பித் திரியேல்’ என்று ஔவையார்கூட இடித்துரைத்திருக்கிறாரே.

அவை அனைத்தும் உண்மைதான். ‘வெறும் சோம்பேறித்தனம்’ நிச்சயம் தவறுதான். ஆனால், அந்தச் சோம்பேறித்தனம் திறமையோடு சேர்ந்துகொள்ளும்போது, அதனால் பல நன்மைகள் உண்டு.

இந்தக் கதையையே எடுத்துக்கொள்ளுங்கள்; அந்த இளைஞர் வெறும் சோம்பேறியாக இருந்திருந்தால் கடினமான வேலையைச் செய்ய மறுத்திருப்பார்; வேறு எளிய வேலைக்கு மாறிக் கொண்டிருப்பார். அவர் வெறும் சோம்பேறியாக மட்டும் இல்லாமல், திறமையுள்ள சோம்பேறியாக இருந்ததால்தான், கடினமான வேலையைச் செய்ய ஓர் எளிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்.

இப்படியொரு கண்ணோட்டத்துடன் நம்மைச் சுற்றியிருக்கிற உலகைத் திரும்பிப் பார்த்தால், அங்குள்ள பல கருவிகளின் கண்டுபிடிப்புக்குச் சோம்பேறித்தனமும் உதவியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். நடக்கச் சோம்பேறித் தனப்படாத ஒருவரால் மிதிவண்டியைக் கண்டறிய இயன்றிருக்காது; துணி துவைக்கச் சோம்பேறித்தனப்படாத ஒருவரால் துவைக்கும் இயந்திரத்தைக் கண்டறிய இயன்றிருக்காது.

இங்கு ‘சோம்பேறித்தனம்’ என்பதை எதிர்மறைப் பொருளில் பார்க்கக் கூடாது. திறமையான ஒருவருக்குக் கொஞ்சம் சோம்பேறித்தனமும் இருந்தால் அவர் எதையும் புதிய வழிகளில் எளிமையாகச் செய்ய வழிகளைக் கண்டறிவார் என்ற பொருளில் பார்க்க வேண்டும்.

மேலாண்மை வல்லுனர்கள் இந்த அடிப்படையில் பணியாளர்களை நான்கு விதமாகப் பிரிக்கிறார்கள்:

* அதிகத் திறமையுள்ளவர்கள், சோம்பேறித்தனம் இல்லாதவர்கள்.

* அதிகத் திறமையுள்ளவர்கள், அத்துடன் சிறிது சோம்பேறித்தனமும் உள்ளவர்கள்.

*அதிகத் திறமையில்லாதவர்கள், ஆனால், சோம்பேறித்தனம் இல்லாதவர்கள்.

* எந்தத் திறமையும் இல்லாத சோம்பேறிகள்.

இதில் நான்காவது வகையினரால் உலகுக்குப் பெரிய பயன் எதுவும் இல்லை. மூன்றாவது வகையினர் உழைப்பின்மூலம் தங்களுடைய திறமைக்குறைவை ஈடுகட்டிவிடுவார்கள். மற்ற அனைவரும், அதாவது, திறமையுள்ள நம்மைப் போன்ற அனைவரும் முதல் வகையில் இடம் பெறவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால், அதைக்காட்டிலும் இரண்டாவது வகை சிறப்பானது என்பதை நாம் உணர்வதில்லை.

அதாவது, மிகுந்த திறமையுள்ள ஒருவருக்குச் சிறிது சோம்பேறித்தனமும் இருந்தால், அதை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், ஒவ்வொரு வேலையையும் ‘இன்னும் எளிதாகச் செய்வது எப்படி?’ என்று சிந்திப்பார்; அதேசமயம், தரத்தில் சமரசமும் செய்துகொள்ள மாட்டார்; புதிய வழிகளைக் கண்டறிந்து, விரைவாக வேலைகளைச் செய்துவிட்டு வாழ்க்கையை நன்கு அனுபவிப்பார்.

இதற்குச் சான்றாக, உங்களைச் சுற்றியுள்ள திறமையாளர்கள், வெற்றியாளர்களையே கவனித்துப் பாருங்கள். அவர்களில் கடின உழைப்பாளிகளைவிட ( Hard Workers) அறிவார்ந்த உழைப்பாளிகள்தான் ( Smart Workers) அதிகமாக இருப்பார்கள். அவர்களுடைய உழைப்புக்கு, மாறுபட்ட சிந்தனைக்கு, வெற்றிக்கு, அவர்களுடைய சோம்பலும் உதவியிருக்கும்.

>

Comments


Post Comment

(Press Ctrl+g        to toggle between Tamil and English)