சினிமா


    சமுத்திரத்துக்குள்ள முத்தெடுக்கிற மாதிரி!


பொன்.மூர்த்தி1982ல் இயக்குநர் கே.பாலசந்தரால் சார்லி என்று பெயர் சூட்டப்பட்டு ‘பொக்கால் குதிரை’படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி 800 படங்களுக்குமேல் நடித்துள்ள சார்லியின் இயற்பெயர் மனோகர். சுமார் 40 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் நடித்துவரும் சார்லி கடந்த நான்கரை ஆண்டுகளாகத் ‘தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை’என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு சமீபத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவரை, சென்னையில் நடந்த ‘வால்டர்’பட ஷூட்டிங்கில் சந்தித்துப் பேசினோம்.

முனைவர் பட்ட ஆய்வு செய்யும் எண்ணம் எப்படி வந்தது?

தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களால் நிறைந்துள்ளது. அதில் உச்சரிக்கப்படாத நிறைய நகைச்சுவை நடிகர்களைப் பற்றி நிறைய பதிவுசெய்ய வேண்டும் என்று முதன்முதலில் விதையிட்டு உந்துதலாக இருந்தவர் வி.கே.ராமசாமி. 1988ல் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்கும்போது அவர் சொன்னார், ‘சார்லி, தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை நடிகர்கள் தரமானவர்கள். அவங்களைப் பற்றிப் பதிவு பண்ணாமலே போய் விடக் கூடாதுயா’ என்றார். அதற்கு நான்,‘தமிழ் சினிமாவே ஒரு சமுத்திரம் மாதிரிப்பா. தமிழ் சினிமாவுல நகைச்சுவை நடிகர்களைப் பற்றிப் பதிவு பண்ணணும்னா சமுத்திரத்துக்குள்ள இறங்கி முத்தெடுக்கிற மாதிரிப்பா’என்றேன்.

‘அதுக்கில்லயா, காளி என்.ரத்தினம், கலைவாணர் போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்த இடம் தமிழ் சினிமா. கிராமியக் கலைகளில் மிகப் பெரிய சக்கரவர்த்தியாக விளங்கியவர் காளி என். ரத்தினம். அந்த மாதிரி ஒவ்வொரு நகைச்சுவைக் கலைஞர்களுக்குப் பின்னால் நிறைய தனித்திறமைகள் இருந்திருக்கின்றன. அதைப் பதிவு பண்ணணும்’என்று ரொம்ப ஆதங்கத்தோடு சொன்னார். அது என் மைண்டுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது.

ஒரு சமயம் புதுச்சேரி, ஆரோவில்லில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக, கவிஞர் மீனாட்சி அம்மாள் எனக்கு போன் பண்ணி, ‘சார்லி, நீங்க சாகித்திய அகாதமிக்கு ஓர் ஆய்வுக் கட்டுரை தரணும்’ என்று கேட்டாங்க. ‘எனக்கும் சாகித்திய அகாதமிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையே... மியூசிக் அகாதமியில் டிராமா போடச் சொன்னா போட முடியும். உங்களுக்கு என்னை ஆய்வு செய்யச் சொல்லி யார் சொன்னது?’என்றேன். ‘இல்லை... நீங்க தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக்குத் தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பங்களிப்புன்னு ஆய்வுக் கட்டுரை எம்.ஃபில்.லுக்காகக் கொடுத்திருக்கீங்க. இது அதைப் போன்றே எளிதாக இருக்கும். அதனால ‘தாகூரின் நாடகங்கள் நவீனத் தமிழ் நாடகங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள்’ அப்படிங்கிற தலைப்பில் நீங்க சாகித்திய அகாதமில ஆய்வுக் கட்டுரை ஒன்றைக் கொடுங்க’அப்படின்னாங்க.

சரின்னு அதைத் தொடர்ந்து தாகூர் பற்றிய விஷயங்களையெல்லாம் சேகரிக்கத் தொடங்கினேன். அப்போதான் எனக்கு அதிர்ச்சி தரத்தக்க ஒரு விஷயம் கிடைத்தது. கடந்த அரைநூற்றாண்டாக தாகூரைப் பற்றி எந்தப் பதிவும் தமிழில் வரவில்லை. ஏன்னா தாகூருடைய நூற்றாண்டைக் கொண்டாடியே 55 வருஷமாச்சு. தஞ்சாவூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாடகமேதை ராமானுஜத்தைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர், ‘நீங்க எங்க பல்கலைக்கழகத்துல ஓர் ஆய்வு பண்ணலாமே முனைவர் பட்டத்துக்கு’என்றார். ‘நீங்க சொன்ன மாதிரி முனைவர் பட்டத்துக்கு ஆய்வு பண்ணலாம். ஆனா இப்ப நான் படப்பிடிப்பில் தொடர்ந்து பிஸியாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்’என்றேன். அதற்கு அவர் சொன்னார், ‘நீங்க ஒரு தொழில்முறைக் கலைஞர். சினிமாவுல நடிக்கிறதுக்கும் நாடகத்துல நடிக்கிறதுக்கும் என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீங்க?’என்று கேட்டார்.

‘ஒரு நடிகருடைய பார்வையில் திரைப்படம் என்பது பதிவு செய்தல், நாடகம் என்பது பகிர்ந்து கொள்ளுதல்’ என்று நான் மேடையில் பேசினேன். அவர் சொன்னார், ‘நீங்க பேசினீங்களே இதுதான் ஆய்வு. உங்களுக்கு ஆய்வுன்னு தனியா மெனக் கெடுதல் எல்லாம் வேண்டாம். நீங்க தாராளமா முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்து அதற்கான வேலைகளை ஆரம்பியுங்கள்’என்று கூறி, நாடகத் துறை தலைவர் முனைவர் ரவீந்திரனிடம் அறிமுகப்படுத்தினார். இவரே எனக்கு கைடாக இருந்து வழிகாட்டினார். இப்படித்தான் ஆய்வுக்குள் வந்தேன்.

ஆய்வு தொடங்கியதற்குப் பிறகுதான் தெரிந்தது. ‘தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை’என்ற தலைப்பு பசிபிக் மகாசமுத்திரத்தைவிடப் பெரியது. எங்கே எடுக்கிறது? யாரை விடறது? ஒன்றையுமே சொல்ல முடியாது. உதாரணமா, ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்ற ஒரு படத்தை மட்டுமே எடுத்துக்கிட்டீங் கன்னாகூட, படத்தின் தயாரிப் பாளர் ஹீரோயின் அஞ்சலி தேவி அம்மா. அந்தப் படத்தில் அவங்களைத் தவிர மற்ற அத்தனைபேரும் நகைச்சுவைக் கலைஞர்கள்தான். கே.ஏ. தங்க வேலு, டி.ஆர்.ராமச் சந்திரன், சட்டாம் பிள்ளை வெங்கட்ராமன், பிரண்ட் ராமசாமி, பக்கிரிசாமி இப்படி தலைசிறந்த நகைச்சுவைக் கலைஞர்கள் அவங்கவங்க தனித்துவத்தோட நடிச்சிருந்தாங்க. இதுல என்ன சிறப்புன்னா ஒருத்தரு பாணியை இன்னொருத்தர் பின்பற்றவில்லை. எனக்கு அது கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டது.

ஒவ்வொரு நகைச்சுவை நடிகனோட தனித் துவத்தையும் நாம் சொல்லுகின்றபோது அது ஒரு தலைசிறந்த ஆய்வாக வருவதற்கு வாய்ப்பாக இருக்கும்னு ஆரம்பிச்சேன். அந்த ஆய்வுதான் கிட்டத் தட்ட நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு ‘தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை’என்கிற ஆய்வாக முழுமை பெற்றது. இன்னொரு முக்கியமான விஷயம், தாமொழியாம் தமிழ்மொழியில் ஆவுக் கட்டுரையை எழுதி சப்மிட் பண்றதுக்கு எனக்கு அனுமதி கொடுத்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டவன். ஒரு தொழில்முறைக் கலைஞன் பல்கலைக்கழகத்துக்குள் முழுநேர மாணவனாக இருந்து ஆய்வு செய்யலாம் என்று அனுமதி வழங்கிய முன்னாள் துணைவேந்தர் திருமலை, அவருக்கு அடுத்து வந்த துணை வேந்தர் பாஸ்கரன், முனைவர் பட்டத்தை நிறைவுசெவதற்குப் பரிபூரண ஒத்துழைப்பு தந்த இன்றைய துணைவேந்தர் பால சுப்ரமணியம், நெறியாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்."

மற்ற மொழிப்படங்களிலும் தமிழ் மொழிப் படங்களிலும் உள்ள நகைச்சுவைகளில் உள்ள வித்தியாசம் என்ன?

உலகத்திலேயே அதிக நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமே உள்ளனர். அதற்கு என்ன காரணம் என்றால், தமிழ் மொழி அவ்வளவு செழுமையான மொழி. ‘என்ன... தம்பி சிரிச்சிக் கிட்டே வர்றான்...’ அப்படின்னு சொன்னா அவன் அழுதுகிட்டே வர்றான்னு ஒரு அர்த்தம் கொடுக்கும். நகைச்சுவையா எப்படிப் பேசறதுங்கிறது தமிழ் மொழிக்கே தமிழ் இனத்துக்கே உரித்தான தனிச்சிறப்பான அம்சம்."

நீங்கள் செய்த ஆராய்ச்சியில் வியந்து பார்த்த நகைச்சுவை நடிகர் யார்?

அவர் வி.கே.ராமசாமி. தன்னுடைய கஷ்ட காலத்தில்கூட தன்னைத்தானே காமெடி பண்ணக்கூடிய தன்மை எல்லா நடிகர்கள்கிட்டேயும் இருந்தது. ஆனால் சுய கௌரவம் போகும்போதுகூட நகைச்சுவை உணர்வோடு விளங்கியவர் அவர் மட்டுமே. வி.கே.ராமசாமி ஒரு திரைப்பட நிறுவனம் நடத்தி நிறைய நஷ்டமாகி கடன் தொல்லையில் இருந்த போது, அவரோட இரண்டு வீடுகளும் ஏலத்துக்கு வந்து விட்டன.

கோர்ட்ல கேக்கறாங்க ‘மிஸ்டர் வி.கே.ஆர்.

எதுக்காக உங்க ரெண்டு வீட்டையும் விக்கறீங்க?’வி.கே.ஆர். பதில் சொல்றார். ‘யுவர் ஆனர், எனக் கிருக்கிற கடனுக்கு இந்தத் தெருவையே விக்கணும். முடியல. அதனாலதான் என் ரெண்டு வீட்டையும் விக்கிறேன்.’ஜட்ஜுக்கு ஒரே சிரிப்பு. ‘கொஞ்சம் உள்ளே வாங்கோ’ன்னு கூப்பிட்டு, ‘உங்கள யார் வரச்சொன்னது?’ என்றார். ‘அட, எங்க லாயர்தாங்க வரச் சொன்னாரு’ என்றவரிடம், ‘சரி நாங்க பாத்துக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமா பணத்தைக் கட்டிடுங்க’ன்னு கையெழுத்து வாங்கிக்கிட்டு அனுப்பினார்.

எந்தத் தருணத்திலும் வி.கே.ஆர். தன் தரத்தையும் நகைச்சுவையையும் விட்டுக் கொடுத்ததே இல்லை."

இதே வகையில் வேறு ஆய்வு தொடர்றீங்களா?

என்னுடைய இந்த ஆவை மிகச்சீக்கிரம் ஒரு சிறந்த நூலாகக் கொண்டுவர இருக்கிறேன். முனைவர் பட்டமும் வாங்கியாச்சு. இது போதும் என்று நின்று விடாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது தான் ‘உடல்மொழியால் உலகை வென்ற தமிழ் நகைச்சுவை நடிகர்கள்’என்கிற ஆய்வுக் கட்டுரையை எழுதி முடித்திருக்கிறேன். அதை மிகச் சீக்கிரத்தில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சப்மிட் பண்ணப் போறேன்."

அது என்ன உடல்மொழியால்...?

உடல்மொழி (பாடிலேங்குவேஜ்) அப்படிங்கிற வார்த்தை பெருமளவு நம்மிடையே தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல்மொழி என்றால் என்னவென்று தெரியாமலே ‘அவருடைய பாடிலேங்கு வேஜ் ரொம்ப நல்லாருந்தது’ன்னு சொல்கிறார்கள். இவர்கள் சொல்வது பாடிலேங்குவேஜ் அல்ல. அப்படிப்பட்ட பாடிலேங்குவேஜை தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில்யாரெல்லாம் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்று என் பார்வையில் அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

உதாரணமா, ‘ஐயா உங்கள நினைச்சா உடனே வயித்துல பால் வார்த்த மாதிரி இருக்கு’அப்படின்னு சொல்ற மொழி தமிழ் மொழி. அதுதான் பாடிலேங்கு வேஜுடைய சரியான எடுத்துக்காட்டு. ஒரு செயல் நடப்பதற்கு முன்பாக உடல்காட்டிக் கொடுத்துவிடும். உதாரணமா, ‘இருவர் உள்ளம்’ படத்துல, எஸ்.வி.ரங்கா ராவ் அப்பா, அவருக்கு ரெண்டு பையங்க. மூத்த பையன் வேலவெட்டிக்குப் போகாத வக்கீல்,

எம்.ஆர்.ராதா. ரெண்டாவது பையன் ப்ளேபா சிவாஜி கணேசன். மூத்த பையனைக் கூப்பிடுவார் ரங்காராவ். ‘டே, வாடா இங்க.’ ‘அப்பா... கூப்பிட் டீங்களா?’அப்படின்னு பக்கத்துல போய் நிப்பாரு. உலகம் முழுவதும் பார்த்தீங்கன்னா அப்பா மகனைக் கூப்பிடும்போது மகன் அப்படித்தான் எல்லா இடத்திலயும் நிப்பான். எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு சாதாரண நகைச்சுவைப் பாத்திரம்தான் அந்தப் படத்தில். நானும் ஒரு சீனியர் ஆக்டர்தான்னு அந்த இடத்துல எம்.ஆர்.ராதா காட்டவேயில்லை. அதுதான் பாடிலேங்கு வேஜுடைய சரியான எடுத்துக்காட்டு."

>

Post Comment

(Press Ctrl+g        to toggle between Tamil and English)