சென்னை 28 - 2 பூஜையுடன் ஆரம்பம்


Posted by-Kalki Teamவெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்து எதிர்பாராத விதத்தில் வெற்றி பெற்ற படம் சென்னை 28. எந்த நட்சத்திர அந்தஸ்தும் இல்லாமல், பெரிதாகக் கதை எதுவும் இல்லாமல் இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து வெளிவந்த இந்தப் படம் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அந்தப் படத்திற்குப் பின் அஜித் நடித்த மங்காத்தா படம் தவிர வெங்கட் பிரபுவுக்கு பெரிய வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதுவரை அவர் இயக்கிய 6 படங்களில் 2 படங்கள் வெற்றி பெற்றது. சரோஜா, கோவா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்கள் தோல்வியடைந்தன.அதனால் மீண்டும் தன்னுடைய நண்பர்களுடன் களம் இறங்க முடிவு செய்தார்.

சில வாரங்களுக்கு முன்பு சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். அதன் முதல் பார்வையாக மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க ராஜேஷ் கே.நாராயணன் ஒளிப்பதிவு செய்ய இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. முதல் பாகத்தில் நடித்துள்ள பெரும்பாலான நடிகர்கள் இப்படத்தில் நடிப்பார்கள் எனத் தெரிகிறது. குறுகிய காலத் தயாரிப்பாக இப்படத்தை விரைவில் முடித்து வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.


Post Comment

Post Comment