இது இட்லினு சொன்னா சத்தியமா சட்னி கூட நம்பாது... சென்னையில் நடந்த ருசிகர கண்காட்சி!


Posted by-Kalki Teamசென்னை: உலக இட்லி தினத்தை முன்னிட்டு சென்னையில் 2,200 விதவிதமான இட்லி வகைகளைக் கொண்டு வித்தியாசமான கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவாக இட்லி, சாம்பார் அறியப்படுகிறது. அரிசி, உளுந்து மாவைக் கொண்டு, ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படும் இட்லியானது, சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவு என்பது அதன் சிறப்பு.

ஆனால், இட்லி என்றாலே வட்ட வடிவத்தில் வெள்ளையாக பார்த்துச் சலித்தவர்களின் கண்களுக்கு விருந்தாக, வித்தியாசமான வடிவங்களில் விதவிதமான இட்லி வகைகளுடன் சென்னையில் ஒரு கண்காட்சி நடந்துள்ளது.

உலக இட்லி தினம்...

நாளை மறுதினம், அதாவது மார்ச் 30ம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தான் சென்னை புரசைவாக்கத்தில் இந்த இட்லிக் கண்காட்சி நடைபெற்றுள்ளது.

2200 இட்லிகள்...

இந்தக் கண்காட்சியை சென்னை கண்ணதாசன் நகரைச் சேர்ந்த இட்லி வியாபாரி இனியவன் நடத்தியுள்ளார். இந்தாண்டு சுமார் 2200 இட்லிகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. கடந்தாண்டு 1000 இட்லிகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கண்காட்சி...

கண்காட்சியை நீதிபதி வள்ளிநாயகம், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பார்வையாளர்கள் ஆர்வமுடன் வித்தியாசமான இந்த இட்லிக் கண்காட்சியை பார்வையிட்டனர்.

தேர்தல் விழிப்புணர்வு...

மே மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ராஜேஷ் லக்கானி உருவத்தினாலான இட்லியும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

அப்துல்கலாம்...

அது தவிர, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அன்னை தெரசா உருவம் என சமூகம் சார்ந்த பல விஷயங்களை முன்னிருத்தியும் பலதரப்பட்ட வகைகளில் இட்லிகள் செய்யப்பட்டிருந்தன.

ஊட்டச்சத்து இட்லி...

அதேபோல், சர்க்கரை நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து இட்லி, குழந்தைகளைக் கவரும் வகையில் பட்டாம்பூச்சி இட்லி, மிக்கி மவுஸ் இட்லி, மனித உடல் இட்லி உள்பட 100-க்கும் மேற்பட்ட வடிவிலான இட்லிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

நம்பிக்கை...

விதவிதமான இட்லி வகைகளைப் பார்வையிட்ட மக்கள், உடலுக்கு ஆரோக்கியமில்லாத பாஸ்ட் புட் வகைகளைத் தேடும் மக்களுக்கு இத்தகைய முறையில் ஆரோக்கியமாக இட்லிகளைச் செய்து தரலாம் என்ற நம்பிக்கையை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினர்.Post Comment

Post Comment